இந்த டிசம்பர் 31 வந்தாலே ஆளாளுக்கு இந்த வருடத்தின் டாப் 10 பாட்டு, காமெடி, சினிமா, நியூஸுனு கிளம்பிறாங்க..!
டாப் 10-ங்கிற சம்பிரதாயத்தை மீறி டாப் 11 விஷயங்களின் லிஸ்ட் இது..! அத்தனை விஷயங்களையும் அரை பக்க 'நச்' விமர்சனத்தோட தொகுத்திருப்பது கூடுதல் சுவாரஸ்யம்..! எழுதியவருக்கு இந்த வருட பூச்செண்டு (இது ஞாநி ஸ்டைல்...!)
2009 - பொய்த் திரைகளை விலக்கிய ஆண்டு
எந்த ஒரு ஆண்டிலும் உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடையக் கூடிய, அவர்களின் மேம்பாட்டை உறுதி செய்யக்கூடிய, அமைதியை நோக்கிய பாதையில் ஒரு முன்னேற்றத்தை காட்டக் கூடியதாக ஒரு சில நிகழ்வுகளாவது இருக்கும். அப்படிப்பட்ட எந்த ஒரு நிகழ்வும் இல்லாத, ஒரு விதத்தில் ஏமாற்றமான ஆண்டாக முடிந்துள்ளது 2009.
2009ஆம் ஆண்டில் தமிழர்களையும், இந்தியர்களையும், உலக மக்களையும் பாதித்த முக்கியப் பிரச்சனைகளில் நம்மை ஆளும் சக்திகளின் உண்மைத் தோற்றம் வெளிப்பட்டதே இந்த ஆண்டின் சிறப்பு என்று கூறிலாம். அப்படிப்பட்ட 11 விடயங்களின் பகுப்பாய்வு இது.
1. பொருளாதாரப் பின்னடைவு – மாறியதா?
2008இல் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை - அதற்குக் காரணமான சந்தை சக்திகளே பெரும் பயன் அடையும் வகையில் - சமாளிக்க பல்வேறு ஊக்கத் திட்டங்களை எல்லா நாடுகளும் அறிவித்துச் செயல்படுத்தின. அதன் மூலம் தவறான செயல் முறைகளால் வீழ்ச்சியைச் சந்தித்த தங்களது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முயன்றன.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் இருந்து இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட முன்னேறிவரும் நாடுகள் வரை, தங்கள் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருக்கும் ஏற்றுமதியும், அதற்கான உற்பத்தியும் அடிவாங்கியதை தடுத்து நிறுத்தவும், அதே நேரத்தில் அதனால் ஏற்படும் வேலையிழப்பைத் தடுக்கவும் நிதி ஊக்கத் திட்டங்களைச் செயல்படுத்தின.
அரசுகளால் திவாலாகி வீழ்ந்த நிறுவனங்களையும் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும்தான் தூக்கி நிறுத்த முடிந்ததே தவிர, வேலையிழப்பையோ அல்லது உற்பத்தி வீழ்ச்சியையோ தடுக்க முடியவில்லை. ரொக்க இருப்பை உயர்த்தி, வட்டியைக் குறைத்து வாங்கும் சக்தியை அதிகரிக்க முயற்சித்தன. வாங்கத்தான் ஆளில்லை. இன்றுவரை அந்த நிலையே தொடர்கிறது.
இதில் மாற்றம் ஏற்படாத நிலையில், குறியீடுகளை உயர்த்திய சிற்சில ஏற்றுமதிகளைக் காட்டி, பொருளாதாரப் பின்னடைவு நீங்கி தற்போது ஏற்றத்தை நோக்கிச் செல்கிறது என்று தத்தமது தேசத்து மக்களை அரசுகளும், அவர்களின் குரலைப் பாடும் ஊடகங்களும் புன்னகை ஏந்திய முகத்துடன் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் வேலையிழப்பும், வேலையின்மையும் இந்தக் குறியீடுகள் கொடுக்கும் விவரங்களை உடைத்து நிற்கின்றன. இங்கேயும் சரி, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகிலும் சரி, உண்மை நிலை இதுதான்.
தங்கள் நாட்டின் தொழில் நிறுவனங்கள் இயங்கத் தேவையான ஒப்பந்தங்களைப் பெற, தேசங்களின் தலைவர்கள் நாடு விட்டு நாடு பறந்து பேசுகின்றனர், ஒப்பந்தங்களைப் போடுகின்றனர். இந்தியாவின் மின் உற்பத்தித் திறனை உயர்த்த, 1,000 மெகா வாட்டிற்கும் அதிகமான மின் உற்பத்தித் திறன் கொண்ட அணு உலைகளை நிறுவ அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா நாடுகளின் பிரதமர்களும், நிறுவனங்களும் டெல்லியை நோக்கி படையெடுக்கின்றன. நமது பிரதமரும் அமெரிக்காவின் ‘நெருக்கடி’யை உணர்ந்தவராய் அந்நாட்டிற்கே சென்று ஒப்பந்தத்தை இறுதி செய்ய பேசிவிட்டு வந்துள்ளார்.
இந்த ஒப்பந்தங்களுக்களோடு, இரு நாடுகளுக்கு இடையிலான தந்திராபோய ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டதாக டெல்லி பெருமையுடன் பறைசாற்றியது. பராக் ஒபாமாவின் சீனப் பயணத்தில் அந்த நீர்க்குமிழி பொட்டென்று வெடித்தது.
விழுந்த நிறுவனங்களைத் தூக்கி நிறுத்துவதெப்படி? அவைகளின் சந்ததையை போஷாக்குடன் மீண்டும் வளர்ப்பது எப்படி? இதுதான் நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பின் அடிப்படையாக இருக்கிறது. நிறுவனங்களின் வீழ்ச்சி பொருளாதாரத்தை சாய்க்கிறது என்றால், அரசியலின் ஆதாரமும் அவைகளே என்றாகிறதல்லவா?
2. பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்
உலகத்தின் நலன் குறித்து ‘எப்போதும் கவலை’கொள்ளும் அமெரிக்காவின் தலைமையில், அதன் கூட்டாளிகளின் சிரத்தையுடனான பங்கேற்புடன் 2001ஆம் ஆண்டு செப்டம்பரில் துவங்கிய பயங்கரவாதத்திற்கு எதரான போர் முடிவின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அமெரிக்க அதிபராக புதிதாகப் பொறுப்பேற்ற பராக் ஒபாமா, போரை முடிவிற்கு கொண்டுவருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது... குறிப்பாக, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அந்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அவரும் அனைத்துக் காரணிகளையும் ஆழமாகப் ‘பகுப்பாய்வு’ செய்துவிட்டு, ஆஃப்கானிஸ்தானில் போரை முடித்து விடுகிறேன்... இன்னும் 18 மாதத்தில் என்று கூறினார். அதை முடிப்பதற்கு மேலும் 30,000 துருப்புகள் அனுப்பப்படுவார்கள் என்றும், தனது நேட்டோ கூட்டாளிகளும் தங்களின் படை எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கூட்டணியில் இந்தியாவையும் இணைப்பதற்கு பேச்சு நடந்ததாகவும் கூறப்படுகிறது!
பேரழிவு ஆயுதங்களை அழிக்கப்போவதாக 2003ஆம் ஆண்டு மார்ச்சில் பெரும் படையுடன் நுழைந்த ஈராக்கில் இதுவரை 12 இலட்சம் ஈராக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரம் அமெரிக்கப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் பேரழிவு ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை, பின்னாளில் ஜார்ஜ் புஷ் கூறினாரே ‘ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைப்படுத்த இந்தப் போர் என்று அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்ட ஈராக் அரசு நாட்டை நிர்வகிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கப் படையினருடன் சேர்ந்து இப்போது ஈராக் படையினரும், ஈராக்கியர்களைக் கொன்று கொண்டிருக்கின்றனர். ஈராக் தீவிரவாதிகளும் தங்கள் பங்கிற்கு சக்தி வாய்ந்த குண்டுகளை வெடித்து நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதலிற்கு காரணமானவர் என்று குற்றம் சாற்றப்படும் அல் கய்டா தலைவர் ஒசாமா பின் லேடன், அவருடைய சில கூட்டாளிகள், அவர்களுக்கு புகலிடம் அளித்துள்ள தாலிபான் தலைவர் முல்லா உமர் ஆகியோரை முடிக்க 10 ஆண்டுகளாக வீசாத குண்டுகள் இல்லை! பாறைகளைப் பொத்துக் கொண்டு பாய்ந்து வெடிக்கும் சக்தி வாய்ந்த குண்டுகள் பல்லாயிரக்கணக்கில் வீசப்பட்டன. ஆயினும் நடவடிக்கை முடியவில்லை. அவர்கள் கொல்லப்படவில்லை என்று செய்தியும் இல்லை. அவர்கள் இருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்துவதற்கும் சாட்சியுமில்லை. ஆனால் போர் தொடர்கிறது. ஆஃப்கானிஸ்தானத்திலும் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் காயமுற்றுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நேச நாட்டுப் படையினர் 1,500 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போர் கடந்த ஒராண்டிற்கு மேலாக ஆஃப்கான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு மாறியுள்ளது. ஒவ்வொரு நாளும் குண்டு வீச்சு, பயங்கரவாதிகளின் மறைவிடத்தை சரியாக கண்டுபிடித்து, ஏவுகணைகளைச் செலுத்தும் ஆளில்லா தாக்குதல் விமானங்களை அதிகம் பயன்படுத்தி கொன்று குவிக்கின்றனர். கொல்லப்படுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என்று ஊடகங்களின் உதவியுடன் உலக மக்கள் நம்ப வைக்கப்படுகின்றனர்.
தகவல் தொடர்புத் தொழில்நுட்பமும், அதன் பரவலும் அதிகமில்லாத இப்படிப்பட்ட நாடுகளில், மலைப் பகுதிகளில் வாழும் அப்பாவிகளின் உயிர் கிள்ளுக் கீரையாகிறது.
மனித உரிமை அமைப்புகள் மெளம் காத்து வருகின்றன. மெளனம் காப்பதை சிரத்தையும் செய்துகொண்டிருக்கிறது ஐ.நா.
3. இலங்கையில் தமிழினப் படுகொலை!
2001ஆம் ஆண்டு நியூயார்க் நகரின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பின்னர், தீர்வு காணவேண்டிய அரசியல் ரீதியானப் பிரச்சனைகளை கையாள்வதில் அரசுகளுக்கு ஒரு புதிய அணுகுமுறையை ‘மிகச் சுதந்திரமாக’க் கடைபிடிக்கத் துவங்கின என்று பன்னாட்டு இராஜ தந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
‘பயங்கரவாதம் என்ற சொல் மிகச் சாதாரணமான அரசியல் பயன்பாட்டுச் சொல்லானது. அரசிற்கு எதிரான இயக்கங்கள் - அவைகளின் நியாயம் எப்படிப்பட்டதாயினும் - அவைகளை தங்களுடைய ‘தேசத்தின் பாதுகாப்பை’க கருதி’ தங்களின் முழுப் படை மற்றும் ஆயுத பலத்தைக் கொண்டு - தேவைப்பட்டால் கூட்டிக் கொண்டு - அழித்தொழிக்கும் ஒரு சுதந்திரம் உலக நாடுகளின் அரசுகளுக்கு இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறையானது.
இந்த வசதியை அமெரிக்காவின் அதன் கூட்டாளிகளும்தான் பயன்படுத்த வேண்டுமா? நாமும் பயன்படுத்தினால் என்ன என்ற ஒரு பொது தர்க்கத்தைக் கூறி, ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க, அதனை மிக வசதியாக இந்தியா,சீனா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய வல்லாதிக்கங்களும் தங்களின் ‘நலனை’ உத்தேசித்து ஆதரவளிக்க, ’பயங்கரவாததிற்கு எதிரான போர்’ என்று கூறி ஈழத் தமிழினத்தின் ஒன்றரை இலட்சம் பேரை இனப் படுகொலை செய்தது சிறிலங்க அரசு.
மனித உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும் விடுத்த கூக்குரல் அனைத்தும் ஊடகங்களின் உதவியால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஐ.நா.வும் அதன் பொதுச் செயலரும் போரை நிறுத்துமாறு முனகினர். போர் நிற்கவில்லை. இனப் படுகொலை தொடர்ந்தது.
போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு திடீரென்று கண் திறந்த மேற்கத்திய நாடுகள், மானுடத்திற்கு எதிரான குற்றம், மனித உரிமை மீறல், போர்க் குற்றங்கள் என்று மட்டுமே கூறி, அதற்கு விசாரணை வேண்டுமென்று முழங்கினவே தவிர, இனப் படுகொலை நடந்ததை இருட்டடிப்புச் செய்தன.
அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் விவாதிக்க ஜெனிவாவில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டபோது, சொந்த நாட்டு மக்களை படுகொலை செய்த சிறிலங்க அரசை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தியா காத்தது. சிறிலங்காவை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற உதவியது.
விளைவு: போருக்குப் பின மீண்ட 3 இலட்சம் ஈழத் தமிழர்கள் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற வன்னி வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். மனித உரிமை மீறல்கள் அப்படமாக தொடர்ந்தது.
மனித உரிமை, போர்க் குற்றம் என்று ஒரு அறிக்கை வெளியிட்டு முழங்கிய அமெரிக்க அரசு, தனது பூகோள நலனை உத்தேசித்து இனப் படுகொலை சிறிலங்க அரசுடன் கைகோர்க்க புதிய அறிக்கை தயாரித்துதான் அதன் இராஜ தந்திரத்தின் உச்சக் கட்டம்.
4. சட்டீஸ்கரில் தொடரும் வன்னி!
உள்நாட்டில் தீர்வு காண முடியாத பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அரசுகளிடம் ‘வன்னி வழிமுறை’க்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களைக் கொண்டு வந்து, ஊடகங்களை முழுமையாக வெளியேற்றிவிட்டு, உலகத்திற்கு எந்தத் தகவலும் சென்று சேராமல் பார்த்துக் கொண்டு, சாட்சிகளற்ற இனப் படுகொலைப் போரை வன்னியில் அரங்கேற்றியதன் மூலம் - அடக்குமுறை உலகிற்கு ‘அற்புதமான’ ஒரு முன்னுதாரணத்தை அளித்தது இனவெறி சிறிலங்க அரசு.
சட்டீஸ்கரில் அந்த அணுகுமுறை பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாற்றுகின்றன. சட்டீஸ்கார் மாநிலத்தின் பஸ்தார் பகுதியிலுள்ள தாண்டிவாடா என்ற மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களைக் கைப்பற்ற - அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த - அங்கு வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களை சல்வா ஜுடும் என்று அடியாள் அமைப்பும், காவற்படைகளும் அடித்து துரத்தியதில் 3 இலட்சம் பழங்குடியினர் அடர்ந்த வனப் பகுதிகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு உணவும் குடிநீரும் கூட கிடைக்காத நிலை. காவற்படைகள் பழங்குடியின மக்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் ஆதாரமான காட்சிகள், தன்னை ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் தான் நாம் உள்ளோமா என்ற கேள்வியை எழுப்பின. கைக் குழந்தையின் விரல்கள் வெட்டப்பட்ட காட்சி குறுகிய எதிர்காலத்தில் உலகின் மனச்சாட்சியை உலுக்கும்.
அங்கு செல்ல முயற்சிக்கும் எவரையும் காவற்படையினர் அனுமதிப்பதில்லை. மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை என்று பெயரில் (ஆபரேஷன் கிரீன் ஹண்ட் என்பது அதன் பெயர் என்று மனித உரிமையாளர்கள் கூறுகின்றனர், ஆனால் உள்துறை அமைச்சர் அதனை மறுக்கிறார்) ஆதிவாசிகள் படுகொலை நடக்கிறது என்று மனித உரிமைப் போராளிகள் கூறுகின்றனர்.
அந்த மக்களுக்கு ஆதரவாக அப்பகுதியில் கடந்த 17 ஆண்டுகளாக சேவையாற்றிவரும் ஹிமான்சு குமார் என்ற காந்தியவாதி கடந்த 26ஆம் தேதிமுதல் காலவரையற்றப் பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
இரண்டாம் வன்னியின் மீது பன்னாட்டு பொது மன்னிப்புச் சபையின் பார்வை விழுந்துள்ளது.
5. தெலங்கானா
நமது நாட்டின் அரசியலில் ‘தேசியக் கட்சிகள்’ கடைபிடிக்கும், தங்களுக்குச் ‘சாதகமான முடிவை’த் தீர்வாக திணிக்கும் அரசியல் கலைக்கு மிகச் சிறந்த உதாரணம் தெலங்கானா தனி மாநிலமாக்கும் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும் அதனை தலைமையிலான மத்திய அரசு எடுத்த முடிவுமாகும்.
தெலங்கானா மக்களின் தனி மாநிலப் போராட்டத்தின் நியாயத்தை முற்றிலும் உணர்ந்துவிட்டது போல, தனி தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, அதற்கு ஆந்திர மாநிலத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் (!) குதித்ததைக் காரணம் காட்டி, “ஒத்த கருத்து ஏற்பட்டப் பிறகு முடிவெடுப்போம்” என்று மத்திய அரசு பல்டி அடித்தது.
ஆந்திர முதல்வராக இருந்த இராஜசேகர ரெட்டி விபத்தில் உயிரிழந்ததற்குப் பிறகு, அக்கட்சியினரிடையே செல்வாக்குள்ள அவருடைய மகனை முதல்வராக்குவதைத் தவிர்த்துவிட்டு, தங்களுக்கு அடக்கமான ஒரு ‘தலைவரை’ மாநில முதல்வராக்கிய காங்கிரஸ் தலைமை, தெலங்கானாவை பிரிப்பதன் மூலம், அம்மக்களின் ஆதரவைப் பெற்று தனது செல்வாக்கை நிரந்தரமாக்கிக் கொள்ளவும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரான கே. சந்திரசேகர ராவை - ஒரு காலத்தில் மாரி சென்னா ரெட்டியை காங்கிரஸிற்குள் இழுத்து முதல்வராக்கியதுபோல - கட்சிக்குள் இழுத்து, தெலங்கானாவில் கட்சியையும் பலப்படுத்திக் கொண்டு, அதன் மூலம் மத்திய அரசு அமைக்கத் தேவையான மக்களவை உறுப்பினர்களைப் பெற்று தனது ஆட்சிப் பலத்தை பெருக்கிக்கொள்கிற முடிவோடுதான் தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று அறிவித்தது.
அதற்கு எதிர்ப்பு வந்துவுடம், தான் உருவாக்கிய அப்பாவித் தலைமையால் அந்த எதிர்ப்பை கட்டுப்படுத்த இயலாத நிலையில், ‘ஒத்த கருத்தின் அடிப்படையில்’ என்று காங்கிரஸ் தலைமை மாற்றிப் பேசியது.
தெலங்கானாவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ராயலசீமா, கடலோர ஆந்திர அரசியல்வாதிகளின் ஆதரவு எப்படி கிடைக்கும்? தெலங்கானா ஒரு தனி மாநிலமாகக் கூடாது என்று அவர்கள் நினைப்பதனால்தானே அங்கு பிரச்சனை பெரிதானது? பிரச்சனையை நேர்மையாக எதிர்கொண்டு தீர்வு காண்பதைத் தவிர்த்துவிட்ட கிடப்பில் போடும் அறிவிப்பை வெளியிட்டது தெலங்கானா பகுதியில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்தியது.
புதிய மாநிலங்கள் உருவாக்கத்தை ‘பிரிவினைவாதம்’ என்று வர்ணித்துள்ளார் பிரதமர்! புதிதாக ஒரு மாநிலம் உருவாக்கும் பிரச்சனையையே கையாளத் திராணியற்ற நிலையில், இந்த நாட்டை எதிர்நோக்கும் அனைத்து சவால்களையும் சமாளிக்கும் திறன் காங்கிரஸிற்கு மட்டுமே உண்டு என்று காங்கிரஸ் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் ஜோக்கடித்தார்!
6. முல்லைப் பெரியாறு!
நாட்டை எதிர்கொள்ளும் எல்லா சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட காங்கிரஸ் கட்சியாலும் ஆட்சியாலும் ஏதும் செய்ய முடியாத பிரச்சனையாக உள்ளது முல்லைப் பெரியாறு.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று 2006ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத மன்மோகன் அரசு, அங்கு புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளாவுடன் பேசவேண்டும் என்று தமிழ்நாட்டிற்கு ஆலோசனை கூறியது. மத்திய ஆட்சியில் உள்ளவர்கள் எந்த ஆலோசனை கூறினாலும் அதற்கு எதிர்ப்புக் காட்டாத அரசியல் சாணக்கியரான தமிழ்நாட்டின் முதலமைச்சர், “ புதிய அணைக்கட்வதற்கான ஆய்வு நடத்த கேரள அரசிற்கு மத்திய அரசிற்கு அனுமதி அளித்திருக்காது என்று நம்புவதாக”க் கூறினார்!
அரசியல் ரீதியான சிக்கல் அல்லது பிரச்சனை என்பதே தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்தியக் கூடியது என்பது மட்டுமேயன்றி, சிக்கல் என்பதற்கு மக்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்ற அடிப்படையை ஏற்காத தமிழக முதல்வர், உனக்கு நான் சிக்கல் அல்ல, எனது ஆட்சிக்கு நீங்கள் சிக்கல் ஏற்படத்தக் கூடாது என்பதைப் பல்வேறு வழிகளிலும் - அறிக்கை, கடிதம், தொலைபேசிப் பாராட்டு என்று - ஒவ்வொரு நாளும் உணர்த்திவருவதால் தமிழக அரசு மைனாரிட்டியாக இருந்தாலும் பலமாக உள்ளது!
இதில் முல்லைப் பெரியாறு அணையென்ன, பாலாறு என்ன, ஈழத் தமிழரின் இனப் படுகொலைதான் என்ன? வரலாற்றில் இல்லாததா புதிதாக நடந்துவிட்டது என்ற ஒரு யோகியுன் அமைதியுடன் மெளனம் காத்து வருகிறார். சட்டப் பேரவையில் இச்சிக்கல்கள் தொடர்பான விவாதங்களைக் கூட தனது சாணக்கியத்தனத்தால் தவிர்த்துவருவது, ‘எப்பாடுபட்டாவது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்வது எப்படி’ என்பதை மற்ற மாநிலங்களின் முதல்வர்களுக்கு தனது அனுபவத்தால் மிகச் சரியான வழிகாட்டுதலை தமிழக முதல்வர் இந்த ஆண்டிலும் வழங்கியுள்ளார்.
7. அழிந்துக் கொண்டிருக்கும் இயற்கைச் சூழல்
வானிலை மாற்றத்தால் அல்ல, அது உலகளாவிய விவகாரம். நமது நாட்டில், அதுவும் தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் நாளுக்கு நாள் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றுலா தொடர்பான கட்டுமானங்களால், அது தொடர்பான வாணிபத்தால், பசுமையான இயற்கைச் சூழல் ஆண்டுக்கு ஆண்டு சுருங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பருவ காலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் ஆங்காங்கு பெரும் நிலச் சரிவு ஏற்பட்டு, இயற்கை சூழல் சீரழிந்து வருகிறது. நிலச் சரிவுகளால் இந்த மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்துப் பாதிக்கப்படுவதால் வரும் செய்திகளை மட்டுமே பார்த்துவரும் நமக்கு, மக்கள் புழக்கம் குறைவாக உள்ள இடங்களிலும் பெரும் அளவிற்கு ஏற்படும் நிலச் சரிவுகள், மண் அரிப்புகள் ஆகியனப் பற்றி அறியாமல் இருக்கிறோம்.
ஊட்டி, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் - ஒரு நேரத்தில் நடப்பட்ட யூகாலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, அதனால் பொதுவாக இருக்கக்கூடிய ஈரம் மண்ணில் இல்லாமல் போனதால், லேசான மழை பொழிந்தால் கூட, மேல் மண் அரித்துச் செல்லப்படுகிறது. இதன் காரணமாக மரங்களின் வேர்கள் பிடியற்றுப் போகின்றன. ஓரளவிற்கு பலமான காற்று வீசும் போதும், மழை பெய்வதாலும் மரங்கள் அப்படியோ வேரோடு பெயர்ந்து விழுந்துவிடுகின்றன. பொதுவாக காட்டுப் பகுதிகளில் மரங்களின் கீழ் பல்வேறு படர் தாவரங்கள் வளர்ந்திருக்கும், அவைகள் மரத்திலும் படர்வதுண்டு. ஆனால், யூகாலிப்டஸ் மரங்களை வளர்த்ததால் மண் ஈரமற்றுப் போய் அப்படிப்பட்ட படர் தாவரங்கள் ஏதும் வளர்வதில்லை. ஆங்கிலத்தில் கிரீப்பர்ஸ் என்று அழைக்கப்படும் பற்றுக் கொடித் தாவரங்கள் காட்டுப்பகுதிகளில் அதிகம் வளரும், இவைகளே மலையின் செங்குத்தான பாறைப் பகுதிகளில் தரையிலிருந்து வளர்ந்து பாறைகளில் வேர்விட்டு மேல் நோக்கிப் படரும். இதனால் நிலச்சரிவோ அல்லது பாறைகள் சரிவோ ஏற்படுவதில்லை. மண்ணையும் கல்லையும் இணைத்துப் பிடிக்கும் ஒரு பிணைப்பாக இவைகள் இருக்கும். இப்படிப்பட்ட தாவரங்கள் சபரிமலை செல்லும் மலைப் பாதையில் தொடர்ந்து காணலாம். ஊட்டி, கொடைக்கானலில் இவைகள் இல்லாத காரணத்தால், இம்மலைப் பகுதிகளில் மண் சரிவும், அதன் தொடர்ச்சியாக நிலச் சரிவும் ஏற்படுகிறது.
இந்த ஆண்டில் ஊட்டியில் மிக அதிகமான மழை பொழிந்ததன் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் - குடும்பம் குடும்பமாக உயிரிழந்துள்ளனர். காடுகளைக் காப்பதற்கான திட்டம் வகுத்துச் செயல்படுத்தாத ஒரு வனத் துறை நமது நாட்டில் செயல்படுவதை புரியவைத்தது.
இயற்கையை காப்பாற்ற வேண்டுமெனில் வனங்களைக் காக்க வேண்டும், வனங்களைக் காக்க அதன் உயிரியல் பரவலைக் காக்க வேண்டும் என்று உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள விழப்புணர்வு நமது நாட்டிலும் பரவ வேண்டும். அது மக்கள் இயக்கமாகப் பரவினால் மட்டுமே நாம் பெற்றுள்ள இந்த இயற்கைச் சூழலை காப்பாற்றித் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அரசுகளைப் பொறுத்தவரை, வனங்களைப் பற்றியோ, அதனை தொன்றுதொட்டு காப்பாற்றிவரும் பழங்குடியினர் பற்றியோ எந்த அக்கரையும் செலுத்தாது, அங்குள்ள இயற்கை மற்றும் கனிம வளங்களை பிடிங்குவதில் மட்டும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த முரண்பட்ட ஆளுமையின் விளைவே இன்று சட்டீஸ்கரில் உருவாகியுள்ள பெரும் பிரச்சனையாகும். ஆனால் அதனை மாவோயிஸ்ட், பயங்கரவாதம் என்றெல்லாம் கூறி திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன மத்திய மாநில அரசுகள்.
8. அமை'திக்' ஆன நோபல் பரிசு
நமது நாட்டில்தான் அரசியல், கலை, இலக்கியம், இசை, சினிமா என்று பல்வேறு துறையினருக்கு வழங்கப்படும் விருதுகள் சர்ச்சைக்குள்ளாகி, கேலிக் கூத்தாகி பல ஆண்டுகள் ஆகித் தொடர்கதையானது. ஒரு பக்கம் பெப்சி குளிர்பானத்தில் அந்நிறுவனம் கலக்கும் பூச்சி மருந்தின் அளவு மிக அதிகமானது, அது உடல் நலத்திற்குக் கேடானது என்று அறிவியல் பூர்வமான செய்தி வரும், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும், பிறகு அதற்கென்று அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு, ஆம், அதிக அளவில்தான் பூச்சி மருந்து கலக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையும் கொடுக்கும். நாடாளுமன்ற வளாகத்திலுள்ள சிற்றுண்டி சாலையில் அதனை விற்பதற்கு அவைத் தலைவர் தடையும் விதிப்பார்.
ஆனால் அந்த ஆண்டில் மத்திய அரசு அறிவிக்கும் பாரத விருதுகளில் இரண்டாம் நிலை விருது அந்நிறுனத்தின் முதன்மை செயல் அதிகாரிக்கு வழங்கப்படும். அதனை எந்த ஊடகங்களும் கேள்வி கேட்கவில்லை! இப்படிப்பட்ட முரண்பட்ட நிலைகள் இந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், உலக அளவில் மிகவும் போற்றப்படும் நோபல் பரிசு, இந்த ஆண்டு முதன் முறையாக சர்ச்சைக்குள்ளானது.
அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு வழங்கப்பட்டதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபராக இந்த ஆண்டின் துவக்கத்தில் பதவியேற்ற பராக் ஒபாமா, உலகில் அமைதி ஏற்படுத்துவதற்கு, உலகம் அறிந்துள்ள அளவில் எதுவும் செய்யாத நிலையில் அவருக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டது.
எந்த அடிப்படையில் பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று கேட்டதற்கு, நார்வேஜியன் நோபல் குழுவின் செயலரான கெயர் லண்ட்ஸ்டாட், இந்த ஆண்டில் ஒபாமாவின் செயல்பாட்டால் ஒரு ‘புதிய சர்வதேசச் சூழல்’ உருவாகியுள்ளது என்று கூறினார். அது என்ன புதிய சர்வதேச சூழல் என்று கேட்டதற்கு, நாடுகளுக்கிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும், அணு ஆயுதங்களைக் குறைக்கவும், அணு ஆயுதமற்ற உலகை உருவாக்குவும், அமைதியை ஏற்படுத்தவும் ஒபாமா ‘முயன்று’ வருகிறார்’ என்றும், எல்லா பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தி வருகிறார் என்றும் லண்ட்ஸ்டாட் பதிலளித்துள்ளார்!
இதனை ஒபாமாவின் சாதனைகள் என்றும் கூறிய லண்ட்ஸ்டாட், ஆல்பிரட் நோபலின் உயிலின்படியே தாங்கள் முடிவெடுத்ததாகவும் கூறினார்.
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம் ஆகியவற்றிற்கு நோபல் பரிசு பெற்றவர்களை, தங்கள் கண்டிபிடிப்புகளை நிகழ்த்தி 10 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகே - அதன் பயன் உலகறிய உணர்ந்த பின்னரே - நோபல் பரிசிற்கு தேர்வு செய்யும் குழு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு கூட நிறைவு செய்யாத, பன்னாட்டு அளவில் இதைச் சாதித்தார் என்று எதையும் கூற முடியாத ஒபாமாவிற்கு நோபல் பரிசை அளித்து, அங்கே கூட நம் நாட்டைப் போல் தானா? என்று இந்தியர்கள் கருதும் அளவிற்கு அதன் தரத்தை நோபல் பரிசுக் குழுத் தாழ்த்தியது இந்த ஆண்டின் ஒரு சோக நிகழ்வாகும்.
9. ஜோக்கான கோபன்ஹேகன் வானிலை மாநாடு
ஒபாமாவிற்கு நோபல் கொடுத்ததைவிட பெரும் நகைச்சுவையானது டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் நடந்த வானிலை மாற்ற மாநாடு.
இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் மனித நாகரிகம் சந்திக்கும் மிகப்பெரிய நெருக்கடி புவி வெப்பமடைதல் அதன் விளைவான குறுக்குமறுக்கான வானிலை மாற்றங்கள், அதன் விளைவான பஞ்சம், உணவுப்பற்றாக்குறை, கடல் நீர் மட்டம் அதிகரிப்பு ஆகியவையாகும்.
பல்வேறு விஞ்ஞான ஆய்வுகளின் தரவுகளை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு புவி வெப்பமடைதலுக்கு முதற்காரணமான உற்பத்தி நடவடிக்கைகள், கரியமில வாயு வெளியேற்றம் ஆகியவற்றைப் பெருமளவுக் குறைத்தல் போன்ற லட்சியங்களுடன் 1992ஆம் ஆண்டு ஐ.நா. வானிலை மாற்ற உச்சி மாநாடு பிரேசில் தலை நகர் ரியோ டி ஜெனீரியோவில் நடைபெற்றது.
இங்கு பெருமளவு கரியமில வாயு வெளியேற்றத்திற்கு காரணம் தொழிற்துறைநயில் முன்னேறிய பணக்கார நாடுகளே, எனவே அந்த நாடுகள் இதற்கான மருத்துவத்தை தாங்களே செய்ய வேண்டும், இதற்கான சட்டபூர்வ பிணைப்புத் தேவை என்றும் இங்கு முடிவெடுக்கப்பட்டது.
அதன் பிறகு 1997ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள கியோட்டோவில் இந்த சட்டபூர்வ பிணைப்பு உடன்படிக்கை ஏற்பட்டது. அதாவது 1990ஆம் ஆண்டு வெளியேறிய கரியமில வாயு அளவைக்காட்டிலும் 5% குறைவான அளவை 2012ற்குள் எட்டுவது என்பதே இதன் நோக்கம். இதன் மூலம் இந்த நூற்றாண்டின் முடிவில் புவி வெப்பம் 3.5 டிகிரி செல்சியஸ் அதிகமாவதைத் தடுக்க முடியும் அல்லது புவி வெப்பமடைதலின் விளைவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
கியோட்டோ உடன்படிக்கையில் அமெரிக்கா வெப்ப வாயு வெளியேற்றத்தை 7% குறைக்கவும், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே 8%, மற்றும் 6% குறைக்கவும் ஒப்புக்கொண்டன. மற்ற 21 தொழிற்துறை நாடுகளும் இதே அளவு குறைக்க ஒப்புக்கொண்டன.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உலக நாடுகள் தங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும். அதாவது 176 நாடுகளில் குறைந்தது 55 நாடுகள் ஒப்புதலைப் பெற்றால் போதுமானது. அப்போதுதான் கியோட்டோ உடன்படிக்கை சர்வதேச சட்டமாக இயங்க முடியும்.
1990ஆம் ஆண்டு கணக்கின்படி அமெரிக்காவும், ரஷ்யாவும் முறையே 36% மற்றும் 17% அளவு வெப்ப வாயு வெளியேற்றத்தில் பங்களிப்பு செய்துள்ளன. இதனால் இந்த இரு நாடுகளும் இந்த ஒப்பந்த நடைமுறைப்படுத்தலில் முக்கிய பங்கு வகிக்கவேண்டும்.
ஆனால் 2001ஆம் ஆண்டே புஷ் நிர்வாகம் இதனை நிராகரித்து சாவு மணி அடித்தது.
ஆனால், பிப்ரவரி 16, 2005ஆம் ஆண்டு 141 நாடுகள் கியோட்டோ உடன்படிக்கை வெப்பவாயு வெளியேற்ற குறைப்பு இலக்கிற்கு ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டன. உடன்படிக்கையும் நடைமுறைக்கு வந்தது.
ஆனாலும் வெப்பவாயு வெளியேற்ற குறைப்பு இலக்கிற்கு மிகவும் பின் தங்கிய நிலையில் 1990 நிலமைக்கு 5 விழுக்காடு அளவுக்கே குறைந்தது. அதாவது வெப்பவாயு வெளியேற்றம் ஆண்டொன்றிற்கு 7.2 பில்லியன் டன்கள் என்பது ஆண்டிற்கு 6.8 பில்லியன்களாக மட்டுமே குறைந்தது.
விஞ்ஞானிகள் மீண்டும் இது போதாது, எந்த விதத்திலும் போதாது என்று கதறினர். ஆனால் பணக்கார நாடுகளும், வளரும் நாடுகளும் காதுகளை அடைத்துக் கொண்டன.
இவ்வளவு முக்கியமான ஒரு விஷயம் மிகவும் சொதப்பலாகி, ஏழை நாடுகள் புவி வெப்பமயத்தின் முழு விளைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சந்தித்து வரும் நிலையில், வளரும் நாடுகளும், பணக்கார நாடுகளும் தொழிற்துறை நடவடிக்கைகளை நிறுத்தினால் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறிவந்தன. நாடாளுமன்றங்களில் அனல் மின் நிலைய, பெட்ரோலியக் கிணறு முதலாளிகளின் செல்வாக்கு அதிகரித்து கியோட்டோவை குழி தோண்டிப் புதைக்க திட்டமிட்டனர்.
கோபன் ஹேகன் வானிலை மாநாட்டில் இந்த சவ சடங்கு நிறைவடைந்தது. ஒப்பந்தம் என்ற பெயரில் எந்த வித கடப்பாடும் இன்றி, வெப்பவாயு வெளியேற்றத்தைக் குறைத்து ஏழை நாடுகளைக் காக்கும் எந்த வித அற நோக்கமும் இன்றி வேறொரு வகையில் மேலும் கார்பன் டிரேடிங், தொழில்நுட்ப விற்பனை என்று தங்கள் ஆதாயங்களைக் காக்கும் வெத்துக் காகித ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டது.
புவி வெப்பமடைதலுக்கு எந்த விதத்திலும் காரணமாகாத ஏழை நாடுகளின் பிரதி நிதிகள் கோபன்ஹேகன் மாநாட்டில் அவமானப்படுத்தப்பட்டனர்.
அமெரிக்கா எது செய்தாலும் அதற்குக் கண்மூடித்தனமாக ஜால்ரா அடிக்கும் இந்தியாவும் ஏதோ கோபன்ஹேகன் ஒரு மைல்கல்லின் ஒரு சிறிய நகர்த்தல் என்றேல்லாம் புருடா விட்டது.
கோபன்ஹேகன் தோல்வி, உலக வர்த்தக ஒப்பந்தம் போல் காணாமல் போகக்கூடிய இன்னொரு பெருந்தோல்வியின் ஆரம்பப்புள்ளி என்று மட்டும் நமக்கு தெரிகிறது. ஜோக்காகிப் போனது, மாநாடு அல்ல மனித வாழ்வு.
10. பி.டி. கத்தரிக்காய்
நமது நாட்டின் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது மரபணு மாற்றப்பட்ட விதைகள். மண் வளத்தைப் பெருக்கி விவசாயத்தை வளர்த்த நாட்டில் வீரிய விதைகளைக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்போம் என்கிற மேற்கத்திய வணிக விவசாய அணுகுமுறை இந்தியாவிற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
வீரிய விதைகள் உருவாக்குவதில் தொடங்கிய வேளாண் ஆய்வு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மையான வணிக பார்வைக்கு உள்ளாகியுள்ளது. பி.டி. காட்டன் என்ற பருத்தி, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் பயிரிடப்பட்டு, அது நல்ல மகசூலைத் தந்ததால், விவசாயிகள் பெரு மகிழ்ச்சியுடன் தொடர்ந்து பயன்படுத்த, அடுத்தடுத்த சாகுபடி பொய்த்து மட்டுமின்றி, மண்ணும் கெட்டு விவசாயமே கேள்விக்குறியானது. பல ஆயிரக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என்று பி.டி. காட்டன் குற்றம் சாற்றப்பட்ட நிலையில், அடுத்ததாக பி.டி. கத்தரிக்காயை - அரசின் ஆதரவுடனும், வேளாண் பல்கலை பேராசிரியர்களின் உதவியுடனும் - திணிப்பதில் வேகம் காட்டி வருகிறது மன்சாட்டோ.
பி.டி. கத்திரிக்காய் என்று கூறப்படும் மரபணு மாற்ற கத்தரி விதையை சாகுபடி செய்தால், அவைகளில் தண்டுப் புழு வராது என்று கூறி, அதைப் பயன்படுத்துமாறு விவசாயம் தெரிந்த விவசாயிக்கு அறிவுரை கூறப்படுகிறது. சமூக ஆர்வலர்களும், மனசாட்சியுடைய அறிவியலாளர்களும், விதை ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், “அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று மன்சாட்டோவிற்குச் சாதகமாக பேசும் சுற்றுச் சூழல் அமைச்சரைக் கொண்டுள்ள மத்திய அரசால் இந்தியாவின் உழவர் வாழ்விற்கு மேலும் ஒரு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
இதோடு மற்றொரு அபாயமும் எழுந்தது. அது தமிழக அரசிடமிருந்து உருவானது. வேளாண் பல்கலையில் பட்டம் பெற்றப் படிப்பாளிகள் மட்டுமே விவசாயம் தொடர்பான ஆலோசனைகளைக் கூற வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் சட்ட வரைவை தமிழக அரசு இயற்றியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உழவில் பிறந்து உழவிலேயே உழன்றுக் கொண்டிருக்கும் நமது நாட்டின் உழவனுக்கு வேளாண் பல்கலையில் படித்தவன் மட்டுமே ஆலோசனை வழங்க வேண்டுமாம். விவசாயம் எனும் மானுடத்தின் பூர்வீகத் தொழில் ஆய்வுக் கூடத்தில் கண்டு பிடிக்கப்பட்டதல்ல என்பதை எதிர்க்கட்சிகள் உணர்த்தியப் பின்பு பின்வாங்கியது தமிழக அரசு. சிறிது காலம் கழித்து வேறொரு வடிவில் மீண்டும் வந்து மிரட்டலாம்.
11. தமிழ் மீனவனின் வாழ்க்கைப் போராட்டம்!
இலங்கையில் ஈழத் தமிழினத்தை இனப் படுகொலை செய்த சிறிலங்கப் படைகள், கச்சத் தீவுக் கடற்பரப்பிற்கு அருகில் வந்த மீன் பிடிக்கும் தமிழ்நாட்டின் மீனவர்களை சுட்டுக் கொல்வது இந்த ஆண்டிலும் தடையற்றுத் தொடர்ந்தது.
நாகை, புதுக்கோட்டை, இராமேஸ்வரம் என்று தமிழ்நாட்டின் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் எங்கு மீன் பிடித்தாலும் வேகமான படகுகளில் வந்து அவர்களைத் தாக்கும் சிறிலங்கக் கடற்படையினர், சமீப காலமாக அவர்களைக் கண்ணியக் குறைவாக நடத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆடைகளைக் கழற்றச் சொல்வது, கிரீசைச் சாப்பிடச் சொல்வது, அவர்ளை குனியச் சொல்லி பிட்டத்தில் அடிப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, அவர்கள் பிடித்து வைத்த மீன்களைக் கவர்ந்து செல்வது, படகுகளை மோதி சேதப்படுத்துவது, வலைகளைக் கிழித்தெறிவது என்று நடுக் கடலில் தங்களின் காட்டுமிராண்டித்தனத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், எல்லையைக் காக்கும் இந்தியக் கடலோரக் காவற்படை இந்த ஆண்டிலும், ‘தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாத மனப் பக்குவத்துடன் தனது எல்லைப் பாதுகாப்புப் பணியை தொடர்கிறது. இந்த ஆண்டின் மேலும் ஒரு முன்னேற்றம், 12 கடல் மைல் தூரத்திற்கு மேல் சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்களை இந்தியக் கடலோரக் காவற்படையினர் அடித்து உதைத்துள்ளனர்!
12 கடல் மைல்களுக்கு மேல் சென்று நாட்டுப் படகு, இயந்திரப் படகு மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடை செய்யும் கடல் மீன் பிடித் தொழில் (முறைபடுத்துதல் மற்றும் ஆளுமை) சட்ட வரைவு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும், அது நடைமுறைக்கு வந்துவிட்டது போல் இந்தியக் கடலோரக் காவற்படை இப்படி ‘கண்ணிய’த்துடன் நடந்துகொண்டது.
கச்சத் தீவை திரும்பப் பெற்று தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முறையிட்டபோது, ‘அது முடிந்துபோன விடயம்’ என்று பதில் கூறி முடித்து வைத்தார் அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.
இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இராசா பேசுயபோது குறிக்கிட்ட மாநிலங்களைவத் தலைவர், இனப் படுகொலை என்ற வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு கூறி, சிறிலங்க அரசைக் காப்பாற்றுவது இந்தியர்களின் கடமை நிரூபித்தார்.
இப்படி மக்களைப் பாதித்த ஒவ்வொரு பிரச்சனையிலும் தமிழக, இந்திய அரசுகளும், உலக நாடுகளும், ஐ.நா.வும் இதுநாள்வரை போட்ட வேடங்களையெல்லாம் துகிலிறுத்திக் காட்டியது 2009ஆம் ஆண்டிம் பெருமையே!
நன்றி: தமிழ்வெப்துனியா.காம்