Tuesday, September 14, 2010

எங்கெங்கும் மலையாள வாசம்!

சில மாதங்களுக்கு முன் தமிழக அரசியலில் வந்த கட்டுரை. சில தகவல்கள் "அப்டேட்" செய்யப்படாமல் இருக்கலாம்.

இந்தியா பல்வேறு மாநிலங்களைக் கொண்ட நாடு. மத்தியில் அமையும் எந்தவொரு அரசாயினும் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாகவும் அதிகாரங்-களையும் சலுகைகளையும் பிரதிநிதித்து-வத்தையும் எந்தவொரு ஏற்ற இறக்கமோ பாகுபாடோ காட்டாமல் நியாயமான வகையில் பகிர்ந்து அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதுவே முறை. ஆனால் அவ்-வாறு நடக்கிறதா என்றால் இல்லை.

நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மாநிலங்களுக்குப் பெரிய அளவில் அதிகாரங்கள் இல்லை. மத்தியில்தான் அத்தனை அதிகாரங்களும் கொட்டிக் குவிந்துக் கிடக்-கின்றன. அதனால்தான் மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களது தயவு மாநில அரசுகளுக்குத் தேவைப்-படுகிறது. அத்தனை சர்வ வல்லமை வாய்ந்தது மத்திய அரசு. அதனால்தான் அந்தக் காலம் தொட்டே மாநில சுயாட்சிக்கு குரலெழுப்பப்பட்டு வருகின்றன. தி.மு.க.வின் நிறுவனர் அறிஞர் அண்ணா எழுப்பிய மாநில சுயாட்சி என்ற உரிமைக் குரலை, தி.மு.க. தலைவர் கலைஞர் அண்மையில்கூட எழுப்பியது இதனடிப் படையில்தான்.

ஆக, மத்தியில் குவிந்துக் கிடக்கும் அதிகாரங்கள் யார் வசம் உள்ளன என்ற ஆராய்ச்சி அவசியம். அதிலென்ன சந்தேகம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. பிரதமர் மன்மோகன்சிங். தவிர, சர்வ வல்லமை பொருந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா. இவர்கள்-தானே என்று கூட தோணலாம். அதுவல்ல விஷயம்.

ஒரு சினிமா பார்க்கிறோம். அதில் கதாநாயகன் கதாநாயகி உள்ளிட்ட நடிக நடிகையர்கள் மட்டுமே நமது கண்களுக்குத் தெரிகிறார்கள். உண்மையில் இவர்கள் மட்டும்தானா சினிமா? திரையில் காட்டப்படும் பிம்பங்கள் மட்டுமே இவர்கள்.

இவர்களை இயக்குவதும் திரைக்குப் பின்னே மூளையாக இருக்கும் இயக்குனரும் பிற தொழில்-நுட்பக் கலைஞர்களும்தான்.இவர்கள் எல்லாம் சட்டென்று நினைவுக்கு வந்துவிட மாட்டார்கள். ஆனால் உண்மையான சூத்திரதாரிகள் இவர்கள்தான்.

ஆளும் வர்க்கம் ஒன்று. அதிகார வர்க்கம் மற்றொன்று. ஆளும் வர்க்கம் என்பது ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள். அதிகார வர்க்கம் என்பது ஓய்வு பெறும் வயது வரை எப்போதும் நிலையாக பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஆட்சிப்பணியில் உள்ள அதிகாரிகள். ஆளும் வர்க்கத்தைக் கூட ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் மக்கள் மாற்றிவிடலாம். ஆனால் அதிகார வர்க்கத்தை நெருங்கக் கூட முடியாது. ஆளும் வர்க்கத்தை அறிந்த அளவுக்கு, அதிகார வர்க்கத்தைப்-பற்றி மக்கள் தெரிந்து வைத்துள்ளனரா என்றால் சந்தேகமே. உண்மையில் ஆளும் வர்க்கத்தைவிட அதிகார வர்க்கம்தான் மிகவும் பலம் வாய்ந்தது என்பதை விஷயமறிந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றுதான் கேரளா என்று யாராவது சொன்னால் அது தவறு என்று தாராளமாகச் சத்தியம் செய்யலாம். ஆளும் மற்றும் அதிகார வர்க்கம் என இரு மையங்களிலும் இன்று நாட்டிலேயே சர்வ வல்லமையுடன் கோலாச்சும் பவர்புல் லாபி பெற்ற ஒரே மாநிலம் கேரளாதான்.

மத்தியாரசு, மன்மோகன்சிங், சோனியா… இவையெல்லாம் அதிகார மையங்கள்தான். இந்த அதிகார மையங்களுக்குள் அமர்ந்து கொண்டிருப்பது அதிகார வர்க்கம் என்றழைக்கப்படும் அதிகாரிகள்தான். இந்த அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றுதான் இவர்கள் எல்லாம் தத்தமது பாணியில் செயலாற்றுகிறார்கள். இந்த அதிகார மையங்களில் இடம்பிடிப்பது என்பது, அத்தனை சாதாரண விஷயமாகி விடாது. சர்வ வல்லமை வாய்ந்த அதிகார மையங்கள் அனைத்துமே மலையாள அதிகாரிகளின் பிடியில்தான் உள்ளன.

பிரதமர் மன்மோகன்சிங்கின் அலுவலகம் கடந்த இருவாரங்களுக்கு முன்பு ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டது. அதில் மத்திய அரசின் கேபினட் செயலாளராக இருக்கும் சந்திரசேகரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாகக் கூறப்பட்டு இருந்தது. மலையாளியான இந்த சந்திரசேகர், ஒருவேளை பதவி நீட்டிப்புப் பெறமுடியாமல் போய் இருந்தாலும்கூட அந்த இடத்துக்கு மற்றொருவர் வந்திருப்பார். அவர் சுதாபிள்ளை. தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளராக இருப்பவர். இவரும் மலையாளி. இவரது கணவர் வர்த்தக அமைச்சக செயலாளராக இருக்கிறார். பெயர் கோபால் கிருஷ்ண பிள்ளை. இவரும் மலையாளி.

நாட்டில் நடக்கும் தீவிரவாத, குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து என்.ஐ.ஏ. எனப்படும் நேஷனல் இன்வெஸ்டிகேட்டிவ் ஏஜென்சி என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக ராதாவினோத் ராஜு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜம்மு-காஷ்மீர் மாநில கேடரைச் சேர்ந்தவர் என்றாலும் இவரும் ஒரு மலையாளி.

விவசாய அமைச்சகத்தின் செயலாளராக இருப்பவர் டி. நந்தகுமார் என்பவர். இவரும் மலையாளி. சட்ட அமைச்சகத்தின் செயலாளராக இருப்பவர் டி.கே.விஸ்வநாதன். இவரும் மலையாளி. சிவில் ஏவியேஷன் எனப்படும் விமான அமைச்சகத்தின் செயலாளராக இருப்பவர் மாதவன் நம்பியார். இவரும் மலையாளி.

ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை பதவியில் இருப்பவர் மாதவன் நாயரும் ஒரு மலையாளி.(இதன் தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணனும் மலையாளி தான்).

பிரதமர் அலுவலகத்திலும் மலையாள அதிகாரிகள்தான் அதிகம். கேபினட் செயலாளராக சந்திரசேகரின் பதவி நீட்டிப்போடு சேர்ந்து இன்னொருவருக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்-பட்டது. அவர் பெயர் டி.கே.ஏ.நாயர். இவரது பதவி என்ன தெரியுமா? பிரதமரின் முதன்மைச் செயலாளர். இவரைத் தாண்டித்தான் எதுவும் பிரதமருக்குப் போகும். அத்தகைய சக்திவாய்ந்த பதவியில் உள்ள நாயர், கேரளாக்காரர் என்பதை பெயரே சொல்லிவிடும்.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முதன்மை பதவி ஜனாதிபதி பதவி. ஜனாதிபதி மாளிகையிலும் கணிசமான மலையாள அதிகாரிகள். அவ்வளவு ஏன் ஜனாதிபதியின் செயலாளராக இருப்பவர் கிறிஸ்டி பெர்ணான்டஸ். இவரும் ஒரு மலையாளி.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது எத்தனை முக்கியமானது. அதில் உள்ள எம்.கே.நாராயணனைப் பற்றி அதிகம் கூற வேண்டாம். டெல்லியில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து உடல்கள் சிதறின. மும்பையில் அத்தனை பெரிய தீவிரவாத சம்பவம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் பந்தாடப்பட்டார். உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் பலரும் பலிகடா ஆக்கப்பட்டனர். ஆனால் உண்மையில் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய எம்.கே.நாராயணனை மட்டும் ஒன்றும் செய்துவிட முடியவில்லை.

எத்தனையோ தலைவர்கள் நாராயணனை நீக்க வேண்டுமென்று குரல் எழுப்பினர். ஆனால் இவர் மட்டும் பதவியில் நீடித்தார். காரணம், அவரது செல்வாக்கு அப்படி. இலங்கைப் பிரச்னையில் இவரது கருத்தின்படி மட்டுமே அனைத்தும் நடந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன். இவரும் மலையாளி. மிகவும் சக்திவாய்ந்த பதவிகளில் எம்.கே.நாராயணனும் சிவசங்கர் மேனனும் இருப்பதால், இலங்கைப் பிரச்னையில் என்ன சாதிக்க வேண்டுமோ அதை இவர்கள் சாதித்து முடிக்க முடிந்தது. (தற்போது வெளியுறவு செயலராக இருக்கும் நிருபமாவும், தேசிய பாதுகாப்பு ஆலோகசராக இருக்கும் சிவசங்கர் மேனனும் மலையாளிகளே). பார்லிமென்ட்டின் சக்தி வாய்ந்த சபை லோக்சபா. இந்தச் சபையின் செக்ரட்ரி ஜெனரலாக இருப்பவர் பி.டி.டி. ஆச்சாரி. இவரும் மலையாளி.

காங்கிரஸின் தலைமைப் பீடம் டெல்லியில் உள்ள 10, ஜன்பத் இல்லம். இங்குள்ள மூலவரான சோனியாவை அத்தனை சுலபமாகச் சந்தித்துவிட முடியாது. இவரைச் சந்திப்பதற்கு அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டுமென்றால் மூன்று பேர்தான் மனம் வைக்க வேண்டும். இவர்கள்தான் சோனியாவின் அந்தரங்கச் செயலாளர்கள். அந்த மும்மூர்த்திகள் பெயர் ஜார்ஜ், மாதவன் மற்றும் பிள்ளை. இந்த மூன்று பேருமே மலையாளிகள். சென்னையிலிருந்து கிளம்பி வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முதலில் தமிழ்நாடு இல்லத்தில் ரூம் போட்டுவிட்டு, அடுத்து செய்யும் வேலை , இவர்கள் மூன்று பேருக்கும் போன் போடுவதுதான். இவர்கள் மனம் வைத்தால்தான் அப்பாயின்ட்மென்ட் அளிக்க முடியும். அதந்பின்னர் சோனியாவை சந்திக்க முடியும்.

அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் பணி-யாற்றும் பெரும்பாலானோரும், மீடியா அலுவலகத்தில் பணியாற்றும் முக்கால்வாசிப் பேரும் மலையாளிகள்தான். எந்தச் செய்தியாயினும் இவர்கள் தயவு வைத்தால்தான் முடியும். இவ்வாறு டெல்லியில் உள்ள அதிகார மையங்களில் எங்கும் மலையாளி, எதிலும் மலையாளி என்பதுதுதான் தற்போதைய நிலவரம்.

இப்போது பதவியேற்ற அமைச்சரவையில்கூட தமிழகத்துக்கு சமூகநீதி,செய்தி ஒலிபரப்பு உள்ளிட்ட உப்புசப்பு இல்லாத இலாகாக்கள்தான் கிடைத்தன. ஆனால் கேரளாவுக்கு ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி போன்றவர்கள் சக்திவாய்ந்த கேபினட் பொறுப்புகளில் அமரவைக்கப்பட்டனர். இணையமைச்சர் பதவிகளாக இ.அகமது, கே.வி.தாமஸ், முல்லப்பள்ளி ராமச்ஸந்திரன் மற்றும் சசிதரூர் ஆகியோர் பதவியேற்றனர். தமிழகத்துக்குக் கிடைத்ததுபோல அல்லாமல் ரயில்வே, உள்துறை, வெளி-யுறவு போன்ற முக்கிய இலாகாக்கள் இவர்களுக்குக் கிடைத்தன. ஆக மலையாள ஆதிக்கம் தற்போது கொடிக் கட்டிப்பறக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். கடந்த வாரம் நாடாளு-மன்றத்தில் பி.சி.தாமஸ் என்பவர் எழுந்து முல்லைப்பெரியாறு அணைக்-குப் பதிலாகப் புதிய அணை கட்ட-வேண்டுமென பேசிக்கொண்டே போனார். பொதுவாக நீதிமன்ற விசாரணையில் இருக்கும் எந்தவொரு விஷயத்தையும் அவையில் விவாதிக்க மாட்டார்கள். ஆனாலும் முல்லைப்-பெரியாறு விவகாரத்தை இந்த கேரள எம்.பி.,பேசிக் கொண்டே போனார். அ.தி.மு.க. எம்.பி.க்கள் மட்டுமே எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். தி.மு.க. எம்.பி.க்கள் ஏதோ ஒப்புக்காக எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களோ தேமே என்று உட்கார்ந்திருந்தனர். தற்போதுகூட ஒரு செய்தி வந்துள்ளது. கேரளாவின் மூத்த தலைவர் கருணாகரனுக்கு கவர்னர் வாய்ப்பு வழங்க சோனியா பரிசீலித்து வருகிறாராம். அதிலும் கர்நாடகத்திலோ அல்லது தமிழகத்திலோ காலியாகும் கவர்னர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பாம். காரணம், என்ன தெரியுமா? அவர் அடிக்கடி கேரளா சென்று ஆயுர்வேத சிசிச்சை எடுப்பதற்கும், அவ்வப்போது குருவாயூர் கோயிலுக்குச் சென்று வருவதற்கும் ஏதுவாக இந்த ஏற்பாடாம். இதையெல்லாம் கேள்விப்பட்ட டெல்லியில் வசிக்கும் கேரள மக்கள், ‘தலஸ்தானத்து எல்லாம் ஞங்கள்தன்னே’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். அதாவது
டெல்லியில் எங்கள் ஊர் அதிகாரிகளின் கொடி பறக்கிறது என்று அர்த்தமாம்.

பி.கு: தற்போது தமிழக காவல்துறையின் தலைவராக (டிஜிபி) இருக்கும் லத்திகா சரணும், அடுத்து அந்த பதவிக்காக காத்திருக்கும் விஜயகுமார் (வீரப்பன் வேட்டை புகழ்) இருவரும் மலையாளிகளே.