Saturday, January 22, 2011

ஊழல் உயர விலை உயரும்!

வரப்பு உயர நீர் உயரும் என்பது போல், நம்நாட்டில் ஊழல் ஒருபக்கம் வளர வளர, விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. பெரியார் அடிக்கடி குறிப்பிடும் வெங்காயத்தின் விலை, அவரின் வாரிசுகளின் காலத்தில் விண்ணைத் தொட்டு நிற்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்த காய்கறியின் விலை தற்போது 25 சதவீதத்திலிருந்து 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களின் விலை உயர்வு, வரலாறு காணாத அளவில் 18 சதவீதத்தைத் தொட்டு நிற்கிறது. மக்களில் பெரும்பாலோர் கலைஞர் கொடுக்கும் ஒரு ரூபாய் அரிசியை மட்டும் சாப்பிட்டு வெந்த சோற்றை தின்போம், விதி வந்தால் சாவோம் என்று கிடக்கிறார்கள்.

ஆனால் அரசாங்கம் இதுகுறித்தெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விலைவாசி விரைவில் குறையும் என்று அறிக்கை விடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது. விலை உயர்வின் நுகத்தடியில் மக்கள் உழன்று கொண்டிருக்கும்போது, விலை உயர்வுக்கு ஒரு காரணமான பெட்ரோலியப் பொருட்களின் விலையை தங்கள் இஷ்டம்போல் கடுமையாக உயர்த்தி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள்.

கடந்த ஆறு மாதங்களில் பெட்ரோல் விலை 7 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டுமுறை உயர்த்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ரூ.2.94&ம் கடந்த 16&ம் தேதி நள்ளிரவில் ரூ.2.54&ம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.63.38. ஆறு மாதங்களுக்கு முன்பிருந்த விலையை விட இது ரூ.11 அதிகம்.

ஆறு மாதங்களுக்கு முன்பு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் பெட்ரோல் விலை மட்டும் தளர்த்தப்பட்டது. பெட்ரோலின் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் உயர்த்திக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ. அரசு இரண்டாவது முறையாக 2009 மே&ல் பதவியேற்றபோது, சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை பேரலுக்கு 70 டாலராக இருந்தது. பின்னர் அது 84 டாலராக உயர்ந்த போது, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 3 ரூபாய் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.3க்கு பதிலாக ரூ.7.44 உயர்த்தப்பட்டது. அதன்பின் தற்போது 90 டாலரை எட்டியுள்ள போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் 11 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வெறும் 6 டாலர் உயர்வுக்கு 11 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால்தான் இந்தியாவில் பெட்ரோலின் விலை உயர்த்தப்படுகிறது என்ற அரசின் வாதம் எவ்வளவு பொய்யானது என்பதை இது காட்டுகிறது.

இடதுசாரிகளின் ஆதரவோடு செயல்பட்ட கடந்த யு.பி.ஏ. அரசு ஆட்சி செய்த போது சர்வதேச சந்தையில் ஒரு பேரலின் விலை 140 டாலராக இருந்த போது, பெட்ரோலின் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், தற்போது 90 டாலராக உள்ள நிலையில் பெட்ரோலின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு நேரடியாக பொருட்களின் விலையை உயர்த்தும் என்பது தெரிந்தும், அரசு இதில் மெத்தனம் காட்டுகிறது. முதல் யு.பி.ஏ. அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை, குறிப்பாக பெட்ரோலின் விலையை, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்வது என்ற முடிவை எடுத்தபோது, இடதுசாரிகளின் நிர்பந்தத்தால், பெட்ரோலிய பொருட்களின் மீது அரசு விதிக்கும் இறக்குமதி வரியை சிறுகச் சிறுக குறைத்து பூஜ்யம் அளவிற்கு கொண்டுவருவது என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது அந்த வாக்குறுதியை மீறியுள்ளது.

அரசின் வரியைக் குறைக்காமலேயே பெட்ரோல் விலையின் மீது இருந்த அரசின் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது. இதனால்தான் இந்தக் கடுமையான விலை உயர்வு. டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெயின் மீதுள்ள கட்டுப்பாட்டையும் விலக்கிக் கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. கடுமையான எதிர்ப்பாலும், வரும் மே மாதத்தில் 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலாலும் இதை தற்காலிகமாக கைவிட்டுள்ளது. இப்பொருட்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போதே, டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் சமையல் எரிவாயுவின் விலையை ரூ.100&ம் உயர்த்த எடுத்த முடிவை மேற் சொன்ன தேர்தல்களை மனதில் வைத்து தள்ளிவைத்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர உயர, மத்திய&மாநில அரசுகளின் வருவாய் கூடுகிறது என்பதுதான்.

பெட்ரோலிய நிறு-வனங்களிடம் ஆண்டுக்கு ரூபாய் 8500 கோடியை தீர்வை வரியாக அரசு வசூலிக்கிறது. பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட அரசு தருவதாக தம்பட்டம் அடிக்கும் மானியத்தை விட இந்த வரி வருவாய் மூன்று மடங்கு அதிகமானது. உண்மையில் பெட்ரோலிய நிறு-வனங்களுக்கு மானியத்தை நமது மக்கள்தான் தருகிறார்கள்.

இவ்வாறு காமதேனுக்களாக அள்ளி வழங்கும் பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகளை ஆண்டுக்கு ரூ.9000 கோடி அளவிற்கு விற்று அரசு தன் கஜானாவை நிரப்பிக் கொள்கிறது. இந்நிறுவனங்களை பாதுகாப்பது போல் பாசாங்கும் செய்கிறது. ஏழை மக்களை வாட்டிவதைக்கும் இதே அரசு, பணக்காரர்கள் பயன்படுத்தும் விமானங்களின் எரிபொருளை, டீசல் விலையை விட மூன்று மடங்கு குறைவாக வழங்குகிறது. அரசாங்கத்தின் கரிசனம் யார் பக்கம் உள்ளது என்பது தெரிகிறதா? இருப்பினும், இந்த அரசால் இது சாமானிய மக்களின் அரசு என்றும் பறைசாற்றிக் கொள்ள முடிகிறது.

2 ஜி அலைக்கற்றை மோசடியில் சிலர் அடித்த கூட்டுக் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.1.76 லட்சம் கோடி. இதை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக கொடுத்திருந்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை பல ஆண்டுகளுக்கு உயர்த்தவேண்டிய தேவையே ஏற்படாது. இந்தக் கொள்ளைப் பணத்தின் மதிப்பு மொத்த தேசிய உற்பத்தியில் இரண்டு சதவீதமாகவும், அரசுக்கு ஓராண்டில் வரும் மொத்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்காகவும், பட்ஜெட்டில் சுகாதாரத்திற்காக அரசு ஒதுக்கும் தொகையைப் போல் எட்டு மடங்காகவும், கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையைப் போல் 50 சதவீதமாகவும் உள்ளது என்று சொல்கிறது ஒரு கணக்கு.

முதலில் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்குவதாக பாவனைக் காட்டிய காங்கிரஸ் அமைச்சர் கபில்சிபல், தற்போது 1.76 லட்சம்தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பறைசாற்றியுள்ளார். சி.ஏ.ஜி. குறிப்பிட்ட தொகையில் கடைசியில் இருந்த 10 பூஜியங்களை அவர் நீக்கியுள்ளார். இதைத்தான் ஊழலை பூஜ்யம் அளவிற்குக் கூட பொருத்துக்கொள்ள மாட்டோம் என்று சோனியா கூறுகிறாரோ, தெரியவில்லை! திட்டக்கமிஷனின் துணைத்தலைவர் அலு-வாலியா அரசின் இழப்பு மக்களுக்குத்தான் சென்றுள்ளது என்று சான்றளிக்கிறார். கூட்டணி நிர்பந்தங்களால்தான் விலை உயர்கிறது என்று ராகுல்காந்தி புதிதாய் கண்டுபிடித்துள்ளார். மொத்தத்தில் இந்த மேதைகளின் ஆட்சியில் ஊழலும் குறையாது, விலையும் குறையாது!

நன்றி: தமிழக அரசியல்