Thursday, November 25, 2010

இன்னொரு ஸ்பெக்ட்ரமா?

இலவச தொலைக்காட்சி, இலவச சமையல் எரிவாயு அடுப்பு என்ற வரிசையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு மாபெரும் திட்டமான இலவச விவசாய நீரிறைப்பான் (பம்பு செட்) திட்டம் (Free Pump Set Scheme) விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், அது உள்ளுர் நீரிறைப்பான் உற்பத்தியாளர்களுக்கு இடமளிக்காத புதிரான ஒரு திட்டமாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டின் விவசாயிகளில் தற்போது 19 இலட்சம் பேர் மின் இணைப்புடன் கூடிய நீரிறைப்பான்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 14 இலட்சம் விவசாயிகளுக்கு, அவர்கள் நீண்ட காலமாக பயன்படுத்திவரும் நீரிறைப்பான்களுக்குப் பதிலாக, புதிய நீரிறைப்பான்களை இலவசமாக அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தி்ற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரல் இணையத்தின் வாயிலாக கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டிருந்த அந்த ஒப்பந்த புள்ளிகள் கோரலில் வரையறுக்கப்பட்டிருந்த நிபந்தனைகளைக் கண்ட நீரிறைப்பான் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிலும் விவசாய பம்பு செட் தயாரிப்பில் (97%) முன்னணியில் இருக்கும் கோயம்புத்தூர் உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சியோடு கோபமும் வந்துள்ளது. காரணம்?

மின்சார பம்பு செட் என்றாலே நினைவுக்கு வருவது கோயம்புத்தூர்தான். இன்று நேற்றல்ல, பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் மாவட்டமாகத் திகழும் கோவையில்தான் விவசாய நீரிறைப்பான்கள் மட்டுமின்றி, மின் மோட்டார்களால் இயக்கப்படும் மாவரைத்தல் இயந்திரம் (வெட் கிரைண்டர்) உள்ளிட்ட பல பயன்பாட்டு்ச் சாதனைங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கின்றனர். அந்நிய நாட்டுத் தயாரிப்பான புல்லட் வாகனத்திற்கு டீசல் இயந்திரத்தை கண்டுபிடித்துப் பொருத்தி, அதன் பயன்பாட்டை பொருளாதார ரீதியாக உயர்த்திய இடமல்லவா கோயம்புத்தூர்? தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் விவசாய நீரிறைப்பான்கள் அனைத்தும் கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்டதுதான். அப்படியிருக்க கோயம்புத்தூரில் மின்சார நீரிறைப்பான்கள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகள் எவரும் பங்கேற்ற முடியாதவாறு அந்த நிபந்தனைகள் இருந்தன. இந்த ஒப்பந்த புள்ளிகள் கோரலில் தமிழ்நாடு மின்சார வாரியம் குறித்துள்ள நிபந்தனைகள் இவைதான்:

1. ஒப்பந்தப் புள்ளிகள் கோரலில் பங்கேற்கும் எந்தவொரு நீரிறைப்பான் தயாரிப்பு நிறுவனமும், ஆண்டிற்கு ரூ.30 கோடிக்கும் குறையாமல் வணிகம் (Turn -Over )செய்திருக்க வேண்டும்.

2. அந்த நிறுவனத்தின் அல்லது தொழிற்சாலையின் சொத்து மதிப்பு ரூ.15 கோடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

3. தொழிற்சாலையில் குறைந்தது 100 பேராவது பணியாற்றிட வேண்டும்.

4. ரூ.50 இலட்சத்திற்கு வங்கி உத்தரவாதம் பெற்றுத் தர வேண்டும்.

5. ரூ.10 இலட்சம் வங்கி வைப்பில் செலுத்தி ஒப்பந்தப் புள்ளியுடன் அளிக்க வேண்டும்.



இதைப் பார்த்தவுடன் சிறு தொழில் நிறுவனங்கள் மட்டுமல்ல, கோவையில் இயங்கிவரும் பெரு நிறுவனங்களும் ஒதுங்கிக்கொண்டன.

மேற்கண்ட நிபந்தனைகள் மட்டுமின்றி, ஒரு முக்கிய நிபந்தனையை தமிழ்நாடு மின்சார வாரியம் விதித்துள்ளது. அது என்னவெனில், இந்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரலில், தங்களுடைய தயாரிப்பான நீரிறைப்பான்களுக்கு இந்திய அரசின் தரச் சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ) மட்டும் பெற்றிருந்தால் போதாது, இந்திய அரசின் மின்சார சிக்கன வாரியத்தின் (Bureau of Electricity Efficiency) நட்சத்திரச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த நட்சத்திரச் சான்றிதழ் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று நீரிறைப்பான்களின் மின்சார சிக்கன திறனிற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. அதன்படி, நான்கு நட்சத்திர சான்றிதழ் பெற்ற நீரிறைப்பான் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இந்த ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்கலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.

அது மட்டுமல்ல, அரசின் ஒப்பந்தத்தைப் பெற்று நீரிறைப்பான்கள் விற்கப்பட்டாலும், அவைகள் விவசாய நிலங்களில் பொறுத்தப்பட்டு, ஒரு மாத காலத்தில் 35% மின் சேமிப்பு ஆகியிருந்தால் மட்டுமே நீரிறைப்பான்களுக்கான பணம் தரப்படும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது மின்சார வாரியம்!

இந்த நிபந்தனைகளையெல்லாம் பார்த்த சிறு உற்பத்தியாளர்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை ஒருவரும் ஒப்பந்தப் புள்ளியை அளிக்கவில்லை. ஒப்பந்தப் புள்ளி அளிக்க முதலில் 15ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவரும் அளிக்காததால், அது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படியும் ஒருவரும் ஒப்பந்தப் புள்ளி அளிக்கவில்லை.

உண்மையிலேயே, தமிழக அரசு மின் சேமிப்பில் அக்கறைக் கொண்டுதான் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்துள்ளதா என்று பார்த்தால், அதில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. உதாரணமாக ஒரு சிறு தொழில் நிறுவனம் தயாரிக்கும் 10 குதிரை சக்தி கொண்ட நீரிறைப்பான் ரூ.20,000 நிகர விலை ஆகிறது. இதே திறன் கொண்ட 4 நட்சத்திர சான்றிதழ் பெற்ற நீரிறைப்பான் விலை ரூ.32,000 ஆகிறது. அதாவது 40 விழுக்காடு விலை கூடுதல். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு சாதாரண நீரிறைப்பான் ஓடினால் ஆகும் மின்சாரம் 5.5 யூனிட் ஆகும். அதே ஒரு மணி நேரத்திற்கு 4 ஸ்டார் நீரிறைப்பான் ஓடினால் அதற்கு ஆகும் மின்சாரம் 5.25 யூனிட்டுதான். ஆக சேமிப்பு 5 விழுக்காடே. ஆனால் விலை 40 விழுக்காடு கூடுதல்!

இது தொடர்பாக கோவை மின்சார நீரிறைப்பான் மற்றும் உபரிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.வி.கருப்பசாமி பேசியபோது, 4 நட்சத்திர அளவிற்கு திறன் மேம்பாட்டை தங்களாலேயே செய்து தர முடியும் என்றும், அதற்குக் கூடுதலாக 10 விழுக்காடுதான் அதிக விலை ஆகும் என்றும் கூறினார்.

ஆக, கோவையில் இயங்கிவரும் சிறு, பெரு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பங்கேற்காத, பங்கேற்க இயலாத வகையில் ஒப்பந்தப் புள்ளிக் கோரலிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனை விதித்ததன் இரகசியம் என்னவென்பதுதான் இதுவரை புரியாத புதிராக உள்ளது.

ஏனெனில் கோவையில் இருந்து மட்டுமல்ல, அகமதாபாத் போன்ற நகரங்களில் இயங்கிவரும் பெரு நிறுவனங்களும் கூட இந்த ஒப்பந்தக் கோரலை நிராகரித்துவிட்டன!

இது இந்தியாவில் இயங்கிவரும் நீரிறைப்பான் நிறுவனங்கள் மட்டும் பங்கேற்கக்கூடிய ஒப்பந்தப் புள்ளியா அல்லது அயல் நாட்டு நிறுவனங்களும் பங்கேற்கக் கூடியதா என்பது குறித்து அந்த கோரலில் விவரம் ஏதும் இல்லை என்று கூறுகின்றனர்.

தமிழக மின்வாரியத்தின் இப்படிப்பட்ட பயங்கரமான ஒரு ஒப்பந்தப் புள்ளிக் கோரலின் பின்னணி என்ன என்பது எவருக்கும் புரியாமல் உள்ள நிலையில், இது சிறு தொழில்களை நசுக்கும் எண்ணத்துடன் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தமிழக மின் வாரியத்தின் இந்த ஒப்பந்தக்கோரலை எதிர்த்து நீரிறைப்பான் உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து போராட முடிவு செய்துள்ளதாக கசிந்த செய்தியை அடுத்து, தமிழக அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

தற்போது தங்கள் நிலத்தில் நீரிறைப்பான் பொறுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள பல இலட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களில் இரண்டு இலட்சம் விவசாயிகளை, அவர்கள் 4 நட்சத்திர நீரிறைப்பான்களை வாங்கிப் பொறுத்தினால், அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்குமாறு அந்த சுற்றறிக்கை கூறுகிறது. இது பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் நீரிறைப்பான் விற்பனைக்கு வழி செய்யும் சுற்றறிக்கையாகும்!

இந்த சுற்றறிக்கையை ஐ.எஸ.ஐ. சான்றிதழ் மட்டுமே பெற்று நீரிறைப்பான்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகளையும், 4 நட்சத்திர சான்றிதழ்களுடன் நீரிறைப்பான்களை உற்பத்தி செய்யும் சி.ஆர்.ஐ., டெக்ஸ்மாக்கோ போன்ற பெரிய நிறுவனங்களையும் பிரித்தாளும் முயற்சி என்று கோவை சிறு நீரிறைப்பான்கள் மற்றும் உபரி உற்பத்தியாளர்கள் சங்கம் பார்க்கிறது.

அதுமட்டமல்லாமல், இந்த சுற்றறிக்கை, விவசாயிகளின் உரிமையில் தலையிடுவதாகவும் உள்ளது. இந்த விதமான பம்பு செட்டை வாங்கினால்தான் இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று நேரடியாகவே மின் வாரியம் கூறியுள்ளது!

மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டு செயல்படும் எந்த ஒரு அரசும், அது செயல்படுத்தும் திட்டங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுவதாகச் செயல்படுத்தும். ஆனால் இந்த இலவச பம்பு செட் திட்டத்தை வேறு ஏதோ ஒரு உள் நோக்கத்துடனோ அல்லது உள் திட்டத்துடனோ தமிழக அரசு செயல்படுத்துகிறது என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படுகிறது.

ஒரு முகவரை வைத்து இந்த ஒப்பந்தத்தை அரசு முடித்துவிட நினைக்கிறது என்கிற ஐயப்பாடும் நிலவுகிறது. எதுவாயினும் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். 2ஜி அலைக்கற்றை ஊழல் வெளியாகவில்லையா, எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறதல்லவா? அப்போது உண்மை தெரியும்.

நன்றி: தமிழ்வெப்துனியா

Monday, November 22, 2010

திமுகவின் இன்னொரு முகம்

கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையாக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி விசாரிக்கப் போக.. அது இந்தியாவின் ஜனநாயக அமைப்பை கேலிக்கூத்தாக நினைக்குமளவுக்குப் போகும் என்று மன்மோகன்சிங்கும் அவருடைய அல்லக்கைகளுமே நினைத்திருக்க மாட்டார்கள்.

நீரா ராடியா என்ற அந்த இந்தியாவின் தலைசிறந்த புரோக்கரின் கைகளுக்குள் சிக்கியிருக்கும் அரசியல்வியாதிகள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என்று பட்டியலிட்டால் பக்கம் போதாது போலிருக்கிறது..

அம்மணியின் திருவாய் ஜம்முதாவி எக்ஸ்பிரஸை போல நிறுத்தாமல் பேசியிருக்கிறது..! இந்தியாவின் அடுத்த அரசை அமர வைக்கும் முழுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காரணத்தால்தான், இந்த அம்மணியின் ரேடியோ ஒலிபரப்பு நான் ஸ்டாப்பாக இருந்திருக்கிறது.

முதலில் இந்த டேப்புகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது..? யார் டேப்புகளை பதிவு செய்தது..? எப்படி இந்த டேப்புகள் வெளியில் லீக் ஆனது என்பதையெல்லாம் விசாரித்தால் பின்னணியில் காங்கிரஸ் கட்சியே இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.



ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் நடந்துள்ளது என்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்திய பின்பே சிபிஐ இந்த வழக்கை தானே எடுத்து விசாரிக்கத் துவங்கியிருக்கிறது. அப்போது அமைச்சராகவே இருந்தாலும் இவரைத் தொடர வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்பட்டு ராசாவின் பேச்சை டேப் செய்யும் அனுமதி பிரதமர் அலுவலகத்தில் இருந்துதான் சிபிஐக்கு கிடைத்திருக்கிறது.

ஸோ.. தன்னுடைய கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் முக்கியப் புள்ளியாகத் திகழும் கேபினட் அமைச்சரான ராசாவின் பேச்சுக்கள் அனைத்தும் டேப் செய்யப்படுகின்ற சூழலில்தான் தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது.

ஐந்து கட்டங்களாக நடந்து முடிந்த 15-வது லோக்சபா தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு கடந்தாண்டு மே 13 அன்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 16 அன்று நடந்தது. காங்கிரஸ் கூட்டணி வெற்றியடைந்த செய்தியும் அன்றைக்கே கிடைத்தது.

இந்தக் களேபரத்துக்கிடையில் இலங்கையில் இனவாத சிங்களப் பேரரசின் கொடும் தாக்குதலினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி தமிழ் ஈழ மக்கள் செத்து மடிந்தார்கள். மே 18-ம் தேதியன்று பிரபாகரன் இறந்ததாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டுவிட்டது. அன்றோடு தமிழ் ஈழத்துக்கான நான்காம் கட்டப் போரும் முடிவுக்கு வந்தது.

மே 19-ம் தேதியன்று தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டணி ஆட்சி பற்றி விவாதிக்க டெல்லி செல்கிறார். தனது குடும்பத்தினரை எப்பாடுபட்டாவது அமைச்சரவையில் இடம் பெற வைத்தே தீருவது என்கிற ஒரு அம்சக் கோரிக்கையோடு சோனியாவையும், மன்மோகனையும் சந்தித்துப் பேசுகிறார்.

எத்தனை சீட்டுக்கள் என்பதில்கூட காங்கிரஸுக்கு பிரச்சினையில்லை. ஆனால் யார், யாருக்கு என்பதில்தான் அவர்களுக்கு தலைவலி.. அத்தனை சொந்தங்களையும் கொண்டு போய் நிறுத்தி “இவங்க எல்லாருமே என் குடும்பந்தான்.. ஒருத்தருக்கு கொடுத்து, இன்னொருத்தருக்குக் கொடுக்கலைன்னா கோச்சுக்குவாங்க. என் மனசு தாங்க முடியாது” என்றெல்லாம் சீன் போட்டு அழுதார் கலைஞர்.

மே 20-ம் தேதியன்று மன்மோகன்சிங் டில்லி அரண்மனைக்குச் சென்று தற்போதைய ராணியிடம் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கேட்டு விண்ணப்பத்தினை சமர்ப்பித்தார். அங்கேயே அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதினால் மன்மோகன் வீடு திரும்புவதற்குள், மே 22 அன்று அவர் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

மன்மோகன்சிங் விண்ணப்பம் கொடுத்த 20-ம் தேதியில் இருந்து அரியணை ஏறிய 22-ம் தேதிவரையிலுமான காலக்கட்டத்தில் இந்த நீரா ராடியா என்னும் புரோக்கரின், எண்ணற்ற சித்துவேலைகள் மர்ம தேசமான டெல்லி அரசியலில் புகுந்து விளையாடியிருக்கிறது.

இந்த டேப்புகள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. நாங்கள் இப்படி எதையும் பேசவில்லை. சி.பி.ஐ. பொய்யாக இந்த டேப்புகளைத் தயாரித்துள்ளது என்று இந்த டேப்பில் சிக்கியுள்ள அரசியல்வியாதிகள் யாரும் இதுவரையில் முன் வந்து கூறவில்லை.
மாறாக உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டும், பயத்தையும் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்து மழுப்பியபடியே நடமாடி வருகிறார்கள். அ.ராசாவோ, கனிமொழியோ இதுவரையில் இது பற்றி எனக்குத் தெரிந்து எதையும் கூறவில்லை. இது போலியானது என்றால் அவர்கள் தாராளமாக இந்நேரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். போயிருக்கலாம்.

ஆனால் சகல செல்வாக்கும் உடைய அவர்கள் மெளனமாக இருப்பதைப் பார்க்கின்றபோது, நிச்சயம் இந்த பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்கள் அனைத்தும் உண்மையானவைகள்தான் என்று 200 சதவிகிதம் நம்ப வேண்டியிருக்கிறது. நானும் நம்புகிறேன்.

இடையில் நீரா ராடியா லண்டனில் இருந்தபடியே இந்த டேப்புகளை இனியும் வெளியிடக் கூடாது என்று கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அது தள்ளுபடியானதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

ஸோ.. இனிமேல் இந்த டேப்புகளை சம்பந்தப்பட்ட நபர்கள்தான் பேசியிருக்கிறார்கள் என்கிற நம்பகத்தோடு மேலும் சில விஷயங்களைப் பற்றி இங்கே பேசுவோம்..!

முதலில் வீர்சிங்வியிடம் என்ன சொல்கிறார் நீராராடியா? மன்மோகன்சிங்கின் முந்தைய ஆட்சிக் காலத்தில் அனில் அம்பானிக்குக் கிடைத்த சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும். இதனை முகேஷ் அம்பானி டிவி நிகழ்ச்சியில் தான் பேசப் போகும் விஷயத்தில் மறைமுகமாகச் சொல்ல வேண்டும். அது தொடர்பான கேள்விகளைத்தான் வீர் சிங்வி கேட்க வேண்டும்.. இது முகேஷ் அம்பானிக்காக, நீரா ராடியா செய்யும் லாபி..!

ஆனால் இதில் கேலிக்குள்ளாகும் விஷயம் வீர் சிங்வி நடத்திய அந்த விவாதத்தை முகேஷ் அம்பானி உள்ளிட்ட அறிவுஜீவிகளெல்லாம் இந்தியத் திருநாட்டின் வளர்ச்சியைப் பற்றி கவலையுடன் விவாதிக்கிறார்கள் என்று அப்பாவி ரசிகர்கள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைத்தான்..!

மே 21 காலையில் கனிமொழியுடன் பேசும் ராடியா தி.மு.க. கொடுத்திருக்கும் பட்டியலை காங்கிரஸ் ஏற்க மறுத்தது பற்றித் தெளிவாகச் சொல்கிறார். மூன்று கேபினட், நான்கு இணை அமைச்சர்கள் ஓகே. ஆனால் கேபினட் அமைச்சர்கள் யார், யார் என்ற குழப்பத்தை நீங்களே முடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் காங்கிரஸ் சொல்லியிருக்கிறது..!

இதில் எங்கே தமிழ்நாட்டின் நலன் இருக்கிறது.. திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் குடும்பப் பிரச்சினைதானே தெரிகிறது..?

மே 22-ல் பர்கா தத்துடன் பேசும் ராடியா, தி.மு.க. கேட்கும் இலாகாக்களை பட்டியலிடுகிறார். இதில் சாலை போக்குவரத்து, மின்சாரம், நிலக்கரி, சுகாதாரம், ரயில்வே என்று லம்ப்பான மேட்டர்களையே கேட்டிருப்பது தெரிகிறது.. அதிலும் தயாநிதி மாறன் தனக்காக நிலக்கரி, சுரங்கத் துறையைக் கேட்டிருக்கிறார்..

இது மட்டும் கிடைத்திருந்தால், கனிமொழியும், அவரது தாயாரும் இப்போதும் செய்து வரும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் தொழிலில் கை வைத்திருக்கலாம். ஒருவேளை கனிமொழிக்கு இப்படி தங்களது தொழிலில் தலையிட்ட நினைத்ததால்தான் மாறன்மேல் கோபம் வந்ததோ..?

பர்காதத் தான் ஒரு பத்திரிகையாளர் என்பதையும் மறந்து இந்தக் கேடு கெட்ட ஆட்சியாளர்களின் பதவியேற்புக்கு உதவிகளைச் செய்துள்ளார். அதுவும் எப்படி..?

மாறன், கனிமொழி, அ.ராசா, டி.ஆர்.பாலு சகிதமாக வந்ததால் கலைஞரிடம் தனியாக நாலு வார்த்தைகூட பேச முடியவில்லை என்பது பிரதமரின் அங்கலாய்ப்பாம்.. டி.ஆர்.பாலு வேண்டாம் என்பது பிரதமரின் அவா. ஆனால் இதனை அவரால் அப்போது வெளிப்படுத்த முடியவில்லை என்பது பர்கா தத்தின் மில்லியன் டாலர் தகவல்..!

எப்படி பேசுவார்..? டி.ஆர்.பாலு வேண்டாம் என்றோ,. ராசா வேண்டாம் என்றோ அவர்களை வைத்துக் கொண்டே பேச முடியுமா..? அதுதான் தயக்கம். இந்தத் தயக்கத்திற்காக கனிமொழியின் வேண்டுகோளை ஏற்று ராடியா பர்கா தத்திடம் பேச, பர்கா தத் மீண்டும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசி நேரம் வாங்கித் தருகிறேன். அல்லது குலாம் நபி ஆசாத்தைத் தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்கிறார்.

ம்.. இந்தம்மா 24 மணி நேரமும் டிவிலதாம்பா தெரிஞ்சாங்க.. இவங்களுக்கு எப்படி இந்த புரோக்கர் தொழிலுக்கெல்லாம் நேரம் கிடைச்சதோ தெரியலையே..?

அடுத்த போன் ராசாவுக்குப் பறக்கிறது.. “டி.ஆர்.பாலுதான் பிரச்சினை. அதனால்தான் மினிஸ்ட்ரி பெர்த் இன்னமும் பைனல் ஆகாமல் இழுத்தடிக்கிறது..” என்கிறார் ராடியா. பதைபதைக்கிறார் ராசா. “உடனே இதை தலைவரிடம் சொல்ல வேண்டும். நாங்க சொல்ல முடியாது. நீங்களே இதை எப்படியாவது தலைவர் காதுக்கு போன்லயாவது சொல்லிருங்களேன்.. இல்லாட்டி ரகசியக் கடுதாசியையாவது கொண்டுபோய் கொடுங்களேன்” என்கிறார் ராசா. அப்படியேகூட, “அ.ராசாகூட எங்களுக்குப் பிரச்சினையில்லை. டி.ஆர்.பாலுகூடத்தான் பிரச்சினைன்னு சொல்லச் சொல்லுங்க..” என்று கூச்சநாச்சமில்லாமல் பதறுகிறார்.

உஷ்.. அப்பா.. இந்த மொள்ளமாரி, முடிச்சவிக்கியெல்லாம் ஏதோ கூவம் ஆத்துக் கரையோரமெல்லாம் இல்லப்பா. நிசமா அ.ராசா மாதிரியான ஆளுங்கதாம்பா அவங்க..! பாவம் டி.ஆர்.பாலு..! தனக்கு லைன் கிளியர் ஆக வேண்டும் என்பதற்காக ராசா எவ்ளோ துடிக்கிறார் பாருங்க..!

அடுத்த போன் கனிமொழிக்கு.. இடையில் அகமது பட்டேலிடம் ராடியா போனில் பேசியிருக்கிறார். அப்போது அவருக்கு அகமது படேலிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல் சாலை போக்குவரத்து கட்டுமானத் துறை பாலுவுக்கோ, மாறனுக்கோ கிடையாது என்பது..

இதைத்தான் கனியிடம் சொல்கிறார் ராடியா. கனி மறுக்கிறார். “யார் சொன்னது இது? என்னிடமோ அப்பாவிடமோ யாரும் இதைச் சொல்லவில்லை..” என்று மறுக்கிறார். ஆனால் “யாரோ சென்றிருக்கிறார்கள். சொல்லியிருக்கிறார்கள்..” என்கிறார் ராடியா. ஸோ.. தாத்தாவை யார் கண்காணிப்பில் வைத்திருப்பது என்பதிலேயே அங்கே போட்டி நடந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது. இந்த டேப்பிலேயே நமக்குத் தெரிய வந்துள்ள இன்னொரு விஷயம்.. தாத்தாவும் காது கேளாதோர் சங்கத்தில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்துவிட்டார் என்ற சோகச் செய்திதான் அது. வெல்கம் தாத்தா..!

அப்போது டெல்லியில் தங்கியிருந்த ராஜாத்தி அம்மாவை ராடியா நேரில் சென்று சந்திக்கிறார். அங்கேயும் ஏதோ சதித் திட்டம் தீட்டி அதனைச் செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள் என்பதை இவர்களின் அடுத்தடுத்த பேச்சுக்களில் தெரிகிறது.

இந்த இடத்தில் ஒரு தகவல். ராஜாத்தியம்மாளுக்கு நீரா ராடியாவை அறிமுகப்படுத்தி வைத்தது பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனான கெளதமின் மனைவிதான் என்கிறார்கள். இவர்தான் இப்போதைக்கு ராஜாத்தியம்மாளின் பண விவகாரத்தை டீல் செய்து, கூடவே சுற்றுக்கும் விட்டு வருகிறார் என்பது தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களுக்கு முன்பே தெரிந்த விஷயம்தான்..!

கனியிடம் பேசி முடித்துவிட்டு உடனேயே பர்காவுக்கு போன் அடித்து சாலை போக்குவரத்துத் துறை மாறனுக்கோ, பாலுவுக்கோ இல்லை என்று பிரதமர் மறுத்துவிட்டதைச் சொல்கிறார் ராடியா. கூடவே காங்கிரஸ் தரப்பில் இருந்து தி.மு.க.வுடன் யார் பேசுகிறார்கள் என்பதே தெரியவில்லை என்று கனியிடம் பேசியதையே சொல்கிறார் ராடியா..

அன்றைய மதிய நேரத்தில் ராடியாவிடம் இருந்து அ.ராசாவுக்கு போன் பறக்கிறது. அழகிரியைப் பற்றி அவருடைய செல்ல மருமகன் தயாநிதி மாறன் டில்லியில் என்னென்ன வத்தி வைப்புகளை பற்ற வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி ராடியா சொல்கிறார். அஞ்சாங்கிளாஸு தாண்டாதவரு.. இங்கிலீஷ் தெரியாது.. அவர் ஒரு கிரிமினல் அப்படீ, இப்படீன்னு தயாநிதி மாறன் செஞ்சோற்றுக் கடனை அடைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இங்கே ராசாவும் அழகிரியிடம் மாறன் பற்றி தான் ஏற்கெனவே பேசிவிட்டதாகச் சொல்கிறார். ஆக, ராடியாவிடமிருந்து நியூஸை வாங்கி அழகிரியிடம் போட்டுக் கொடுத்துவிட்டு தனக்கான ஆதரவை அழகிரியிடமும் பெற்றுக் கொண்டிருக்கிறார் ராசா என்றே நம்ப முடிகிறது.

அடுத்த பத்து நிமிடத்தில் கனிமொழிக்கு போன்.. கனி கேட்கின்ற முதல் கேள்வியே ங்கொய்யால வகையானது.. “பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தயாநிதி மாறன் போகிறாரா இல்லையா?” என்று கேட்கிறார் கனி. கலைஞர் டெல்லியில் இருந்தபோதெல்லாம் கனிமொழி, ராசா, தயாநிதி, பாலு நால்வரும்தான் கூடவே போய் வந்து கொண்டிருந்தார்கள். ஒரே கட்சிதானே.. ஒரே பேமிலிதானே..? பேசிக்கவே மாட்டாங்களா.. குடும்பப் பிரச்சினைல சண்டைன்னா அதை குடும்பத்துக்குள்ள வைச்சுக்க வேணாமாய்யா..! இப்படியா பப்ளிக்காக்குறது..?

அவங்களுக்காக.. அவங்க தலைமுறைக்காக ஒரு மனுஷன் நடக்க முடியாத காலத்துலேயும் தவழ்ந்தாவது போய் பிச்சை கேட்டு அழுதுகிட்டிருக்காரு.. அவரைப் பார்த்தா பாவமா தெரியலையா இவங்களுக்கு..?

வெறுப்பாகப் பேசுகிறார் கனிமொழி. “அவர் போறாரா இல்லையான்னு தெரியலை. ஆனா போயிட்டு வந்து அப்பாகிட்ட அகமது படேல் கூப்பி்டடாரு போனேன்னு சொல்வாரு..” என்கிறார் கனி. ஆக மொத்தம், தயாநிதியின் வளர்ச்சி சிஐடி காலனி வீட்டுக்கு என்றைக்குமே உறுத்தலாகத்தான் உள்ளது..

22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மன்மோகன்சிங் தனது 19 சகாக்களுடன் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுவிட்டார். அன்றைய இரவு மீண்டும் கனிமொழியிடம் பேசுகிறார் ராடியா. கனிமொழி இப்போது இன்னொரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார். அது ராசா மீண்டும் மந்திரியாக வேண்டும் என்பதில். “இனிமேல் அப்பாவுடன் யார் பேச வருவதானாலும் அவர்கள் இவரைப்(அ.ராசா) பற்றி எதிராகப் பேசக் கூடாது.” என்று ராடியாவிடம் உறுதியாகக் கூறுகிறார் கனிமொழி.

ஆக.. தயாநிதி மாறனுக்கு எதிராக அழகிரியை டெல்லியில் வளர்க்க முடியாது.. ஆனால் ஆ.ராசாவை வளர்க்கலாம் என்று ராஜாத்தியம்மாளும், கனிமொழியும் நன்கு தி்ட்டமிட்டுத்தான் இதைச் செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்..! இதற்கிடையில் மே 22-ம் தேதியே கலைஞர் சென்னை திரும்பி விட்டார்.

23-ம் தேதி காலையில் பத்து மணிக்கு மீண்டும் கனிமொழிக்கு போன்.. இம்முறை ராடியா தெளிவாகச் சொல்கிறார் அழகிரி பற்றியும், ராசா பற்றியும் காங்கிரஸ் மேலிடத்தில் தான் தெளிவாக எடுத்துரைத்துவிட்டதாக..!

அழகிரியின் இந்தி, ஆங்கிலம் தெரியாத நிலையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக அவருக்குக் கீழ் இரண்டு மொழிகளும் தெரிந்த நபரை துணை அமைச்சராகப் போட்டுச் சமாளிக்கச் சொல்லுங்கள் என்று தனது பெரிய அண்ணனை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் கனிமொழி. கூடவே “அந்த ஆளு” என்று தயாநிதி மாறனை விளித்து அவருக்குத் தொலைத் தொடர்புத் துறை கிடைக்கக் கூடாது என்பதையும் மீண்டும் அறிவுறுத்துகிறார். மாறனுக்குப் பதவி கிடைப்பது தி.மு.க.விலேயே யாருக்கும் பிடிக்கவில்லை என்றும் ஒரு பிட்டைப் போடுகிறார் கனி.!

இந்த டேப்பில் பல தொடர்ச்சியானவைகள் இல்லை. நன்கு திட்டமிட்டு தேவையானவற்றை மட்டும்தான் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதே நாள் இரவில் வீர்சிங்வியைத் தொடர்பு கொள்கிறார் ராடியா. தயாநிதி மாறனை எடுத்துக் கொள்ளும்படி பிரதமருக்கே நிர்ப்பந்தம் வந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ராடியா. இப்படி நிர்ப்பந்தம் கொடுப்பது ஸ்டாலினும், அவரது அக்காள் செல்வியும் என்கிறார் ராடியா. இதென்னாங்கடா புது குழப்பம்னு யோசிச்சா.. நமக்குத்தான் தலையே சுத்துது..!

ஸ்டாலினுக்கு அழகிரியின் வளர்ச்சி நிச்சயம் ஆபத்தானதுதான். ஆகவே அவர் பதவியில் இல்லாமல் இருந்தால்தான் தனக்கு நல்லது என்று நினைக்கிறார். செல்விக்கோ தனது மகன் போன்ற தயாநிதி மாறனை விட்டுக்கொடு்க்க முடியாத நிலைமை. அந்த மகன் மட்டும் இல்லாவிடில் தான் இன்னமும் ராயப்பேட்டையில் துணிக்கடையில் பில்தான் போட்டுக் கொண்டிருந்திருக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால்தான் பாசப்பிணைப்பில் செல்வியும், ராஜதந்திரவகையில் ஸ்டாலினும் தயாநிதி மாறனுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.. ம்.. இந்த மாறன்களுக்கு மச்சம் எங்கிட்டுத்தான் இருக்குன்னு தெரியலை சாமிகளா..!

ஆனால் ராடியா சொல்லியிருப்பதுபோல் 600 கோடி ரூபாயை தயாளு அம்மாளுக்கு மாறன்கள் கொடுத்திருந்தால், அது முன்னதாகவே சன் டிவியில் பங்கு பிரிக்கும்போது நடந்தததன் தொடர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்போது தயாளு அம்மாவுக்கு மிகக் குறைவான தொகையைத்தான் பங்காக கொடுத்தார்கள் என்று ஏக கோபத்தில் இருந்தார்கள் கோபாலபுரத்து குடும்பத்தினர்.. ஓகே.. எப்படியோ வந்து சேர்ந்திருந்தால் சரிதான்..!

இதற்கிடையில் 23-ம் தேதி இரவு சென்னை கோபாலபுரத்தில் குடும்பத்தினர்களுக்குள் நடந்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில் பாலுவை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு அழகிரி தனக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கலைஞரிடம் நேருக்கு நேராகக் கேட்டு உறுதிமொழி வாங்கிவிட்டுச் சென்றார்.

வாசலில் நின்று கொண்டிருந்த பாலுவிடம் “ஸாரி பாலு..” என்று ஒரு வார்த்தையில் பாலுவின் பதவி கனவில் ஒரு டன் மண்ணையள்ளிப் போட்டுவிட்டு சிட்டாகப் பறந்தார் அழகிரி.. இதுவெல்லாம் தெரிந்துதான் ராசா மறுநாள் காலை ராடியாவிடம் பேசும்போது உறுதியாகச் சொல்கிறார் கேபினட் பெர்த்தில் அழகிரி உறுதியென்று....!

அந்தச் சமயத்தில் அமைச்சரவை விரிவாக்கம் ஏன் இவ்ளோ லேட்டு என்று பத்திரிகைகள் மாய்ந்து, மாய்ந்து கட்டுரைகள் எழுதித் தள்ளியபோது தி.மு.க.வால்தான் தாமதம் என்ற செய்தி காங்கிரஸால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. அப்படியாவது தி.மு.க. சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வரட்டுமே என்றுதான்..!

இந்த இடைவெளியில் பாலுவுடனும், அ.ராசாவுடனும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல் பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கைகூட வெளியிட்டார். நம்மால் தாமதம் என்று அவர்கள் சொல்லக் கூடாதே என்பதால்தான்..!

அ.ராசாவின் பெர்த் 23-ம் தேதி இரவில் உறுதியாகிவிட்டதாக ராடியாவும் சொல்கிறார். அழகிரியைப் பற்றி மாறன்களின் பற்ற வைப்புகள் அவருக்கே தெரியும் என்பதை ராசா மீண்டும் இங்கே தெளிவாக்குகிறார்.

ராடியா என்னும் அரசியலில் இல்லாத வெறும் புரோக்கர் பெண், இத்தனை அல்லல்பட்டு ஒருவரை மத்திய அமைச்சரவையிலேயே சேர்க்க முடிகிறது என்றால் இவரது செல்வாக்கு என்ன என்பதையும், எதற்காக என்பதையும் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

“நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறையப் பெற வேண்டியிருக்கிறது.” என்று ராடியா ராசாவிடம் சொல்வதைப் பார்க்கும்போது இதுவெல்லாம் நன்கு திட்டமிட்டுத்தான் நடந்தேறி உள்ளது என்று சந்தேகத்திடமில்லாமல் நான் நம்புகிறேன்..!

கூடவே அமைச்சருக்கு அனைத்து வகையிலும் உறுதியாக இருப்பதைப் போல ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டலிடம் ராசா சார்பில் சமாதானம் பேசியிருப்பதையும் சொல்கிறார் ராடியா. இதற்கு ராசா சொல்கின்ற பதிலைப் பாருங்கள்.. “இன்னும் அஞ்சு வருஷம்கூட என்கூடத்தான் அவர் வேலை பார்த்தாகணும். இதையும் அவர்கிட்ட சொல்லிருங்க” என்கிறார் ராசா.. அசத்தல் சினிமா டயலாக்..! செத்தான்டா வில்லன்..!

எப்படியோ இந்தத் திருடர்கள் இத்தனை உள்ளடி வேலைகளையும் செய்த பின்பு மே 28-ம் தேதியன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..!

இதன் பின்பும் நிச்சயம் சி.பி.ஐ. போன் பேச்சுக்களை பதிவு செய்திருக்கும்.. அதனால்தான் இன்றைக்குக்கூட ஆடிட்டர் ஜெனரலின் குற்றச்சாட்டுக்களை ஒரு ஆதாரமாக தான் எடுத்துக் கொள்ள முடியாது என்றும், தங்களிடம் இப்போது இருக்கும் ஆதாரங்களே போதுமானது என்றும் சிபிஐ கூறியிருக்கிறது.

ஆனால் இந்த டேப்புகளை கோர்ட்டில் தாக்கல் செய்யும் சாக்கில் யார் இதனை வெளியில் விட்டது என்பதை விசாரிக்கவே வேறு ஒரு சி.பி.ஐ. வர வேண்டும் போல் தோன்றுகிறது.

இது தி.மு.க.வுக்கும் தெரியாமலில்லை. அவர்களே இது போன்ற சித்து வேலைகளில் சிறந்தவர்கள். இந்தியாவிலேயே டெலிபோனில் ஒட்டுக் கேட்பது எப்படி என்பதை செய்து காட்டியவர்கள் தி.மு.க.வினர்தான். அவர்களுக்கே ஆப்பு வைப்பது போல ஒரு பக்கம் டேப்புகள் லீக். இன்னொரு பக்கம் கூட்டணி உறுதி.. பதவி விலக நிர்ப்பநதம்.. கோர்ட்டில் மனு தாக்கல்.. ஊழலே நடக்கவில்லை என்று அமைச்சரவையின் சார்பில் மனு தாக்கல். ஆனால் அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ ஊழல் நடந்திருக்கிறது என்று மனு தாக்கல் என்று நாடே கலவர பூமியாக இருக்கிறது..

ம்.. ஒண்ணும் புரியலை.. இதுக்கெல்லாம் தலைமைப் பொறுப்பில் மன்மோகன்சிங் என்னும் பிரதமர் இருக்கிறார்.. இவர் எதுக்காக இந்தப் பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லை. தனக்குக் கீழுள்ள ஒரு துறை ஊழல் நடக்கவில்லை என்கிறது. இன்னொரு துறையோ நடந்துள்ளது என்கிறது.. இந்தச் சூழலில் குற்றவாளிகள் நிச்சயம் தப்ப முடியாது என்று வீர ஆவேசம் காட்டுகிறார். இப்படிச் சொல்லிவிட்டு அடுத்த நாள் தி.மு.க.வுடனான தங்களது கூட்டணி பலமானதாகவும், உறுதியாகவும் இருக்கிறது என்கிறார்..!

ஆக மொத்தம்.. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்.. நீ அழுவுற மாதிரி அழுவு என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொடுக்கிறது காங்கிரஸ்.. தி.மு.க.வும் வேறு வழியில்லாமல் இதனை அப்படியே பாலோ செய்து கிளிசரின் போடாமலேயே பூணூல், பார்ப்பு, பார்ப்பான், தலித், சூத்திரன், மனு தர்மம் என்று புளுத்துப் போன புழுக்கைகளை கை நிறைய அள்ளி தன் மேலேயே வாரி இறைத்துக் கொள்கிறது..!

இந்த நாடகம் எப்போ முடிஞ்சு, அடுத்த நாடகம் எப்போ தொடங்கும் என்று கேள்வியுடன் நாமும் அடுத்த ஊழலுக்காகக் காத்திருக்கிறோம்..! காத்திருப்போம்..!


------------------------------------------


இந்தியாவின் தலைசிறந்த தொழில் அதிபர்களில் ஒருவராகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ரத்தன் டாட்டா, தயாநிதி மாறனுக்கு தொலைத்தொடர்புத் துறை கிடைக்கக் கூடாது என்று நீரா ராடியா மூலமாக லாபி செய்ததாகக் குறிப்பிட்டிருந்தேன்.

நீரா ராடியாவுடனான, ரத்தன் டாட்டாவின் பேச்சு அடங்கிய விவரங்கள் இன்றுதான் கிடைக்கப் பெற்றன. அதனைப் படித்தால் இன்னுமொரு பூதமும் இதில் அடங்கியிருப்பது தெரிய வந்தது.

கனிமொழிக்கும், அ.ராசாவுக்கும் இடையிலான நெருக்கம் கடந்த இரண்டாண்டுகளாகவே மீடியாவில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அத்தனை மீடியாக்களும் சொல்லி வைத்தாற்போல் தலை, கை, கால் அமைத்து தினமும் ஒரு புது செய்தியைச் சொல்லி வந்தார்கள்.

இவர்கள் இருவருக்குமான இந்த நெருக்கம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபரான ரத்தன் டாட்டாவிடம், இந்தியாவின் மிகச் சிறந்த புரோக்கரான நீரா ராடியா உரையாடியிருப்பதைப் பார்க்கின்றபோது கலைஞரும், கனிமொழியும், அவர்தம் குடும்பத்தினரும் ஏன் இன்னமும் மெளனமாக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

ஜெயலலிதா திருச்சிக் கூட்டத்தில் பேசும்போது, "மகளின் மனம் கவர்ந்தவர்" என்று ஒரு வார்த்தை போட்டதற்காக ஜெயலலிதாவின் ஜாதகத்தையே பிட்டு பிட்டு வைத்த பாசத்தந்தையான கலைஞர், இந்த சி.டி. பேச்சைக் கேட்டுவிட்டும், படித்துவிட்டும் எப்படி அமைதியாக இருக்கிறார் என்றும் தெரியவில்லை.

ஒருவேளை ரத்தன் டாட்டாவும், நீரா ராடியாவும் பூணூல் பரம்பரையில் வந்தவர்கள் இல்லை என்பது தாத்தாவுக்குத் தெரிந்துவிட்டதா.?

அல்லது இந்த வதந்தியைத் திட்டமிட்டு கிளப்பிவிட்டதே தயாநிதி மாறன்தான் என்று ராடியா சொல்லியிருப்பதால் இதற்காக தயாநிதி மாறனின் குடும்பப் பின்னணியைத் கவிதை எழுதித் தாக்க முடியாது. அது தன் குடும்பத்தையே தாக்கியது போலாகி, குடும்பச் சண்டை பகிரங்கமாகிவிடும் என்று நினைத்து தாத்தா அமைதியாகிவிட்டாரோ..?

இந்த டேப்புகள் வெளியானதில் கனிமொழிக்கும், ராசாவுக்கும் கிடைத்திருக்கும் ஒரேயொரு ஆறுதல் இதுதான்.. அவர்கள் இருவருக்கும் இடையில் எதுவுமே இல்லை என்று நீரா ராடியாவே கனிமொழியிடம் கேட்டு சொல்லிவிட்டதால் மீடியாக்காரர்களே தயவு செய்து உங்களது தவறான அந்த எண்ணத்தை இனிமேலாவது மாற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி:உண்மைத்தமிழன்