Sunday, May 22, 2011

எதையும் தாங்கும் இதயம்

இந்த அளவுக்கு மோசமான ஒரு சோதனையை திமுக இதுவரை சந்தித்ததே இல்லை என்கிற அளவுக்குக் கனிமொழியின் கைது அந்தக் கட்சியை அனைத்து மட்டங்களிலும் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. ஆ. ராசாவின் கைது, கலைஞர் தொலைக்காட்சியில் சோதனை, முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் விசாரிக்கப்பட்டது, என்று ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் வந்தபோதுகூடத் தனது நெஞ்சுரத்தையும், எதையும் சந்தித்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையையும் இழக்காத திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு ஆடிப் போயிருக்கிறார் என்பதை விட இடிந்து போயிருக்கிறார் என்பதுதான் உண்மை.

÷முந்தைய நிகழ்வுகளின்போது பதவி பலம் துணிவைக் கொடுத்தது. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், காங்கிரஸ் தனக்குத் துணை நிற்கும் என்றும், நீதித்துறைகூடத் தனது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கும் என்றும் கருணாநிதி கருதினார் என்றுகூட அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அவர் நம்பினார் என்பதைவிட அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்பதுதான் உண்மை.

÷""தலைவரே, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பணம் முறையாகப் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. நமது ஐந்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு இலவசத்தால் பயனடையாத குடும்பமே தமிழகத்தில் கிடையாது. குறைந்தபட்சம் திமுக 80 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களிலும் வெற்றி பெற்று விடும்'' என்று அவரை நம்ப வைத்தவர்கள் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் மட்டுமல்ல, அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட மாநில புலனாய்வுத் துறை அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும்கூட.

÷""நீதிபதி சைனியின் உறவினர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் மூலம் அவரைச் சரிக்கட்டியாகிவிட்டது. சந்தேகம் ஏற்படாத வகையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க அவர் சம்மதித்துவிட்டார்'' என்றுகூட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உறுதி அளித்திருந்தாராம். மூத்த வழக்கறிஞர் ஜேட்மலானியை கனிமொழிக்காக வாதாட ஒப்பந்தம் செய்ததிலேயேகூட ஊழல் நடந்ததாகவும், ஜேட்மலானி வாதிட்டதாலேயே வழக்கு ஜெயிக்கவில்லை என்றும்கூட கூறப்படுகிறது.

÷1977-ல் எம்.ஜி.ஆரின் அதிமுகவிடம் தோற்றுப் போய் ஆட்சி இழந்தபோதும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து மிகப்பெரிய தேர்தல் தோல்வியைச் சந்தித்தபோதும் கருணாநிதியால் கட்சியை நிலைகுலையாமல் காப்பாற்ற முடிந்தது. அதற்குக் காரணம், அவருக்கு வயதும் துணிவும் சாதகமாக இருந்தன. இப்போது முதுமை ஒரு புறமும், முன்பு போலப் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று செயல்பட முடியாமல் உடல்நலக் குறைவு இன்னொரு புறமும் கருணாநிதியை முடக்கிப் போட்டிருக்கிறது. போதாக் குறைக்குக் குடும்பப் பிரச்னைகள் வேறு.

÷""தலைவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரத்தில், தனது மனைவி மக்களைப் பற்றிக் கவலையே படாமல் கட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இப்போது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் அவர் குடும்பத்தைப் பற்றிய கவலையில் மூழ்கி இருக்கிறார். 2001 தேர்தலில் "இதுதான் எனது கடைசித் தேர்தல்' என்று அறிவித்தது போல, அவர் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியலிருந்து விலகி இருந்தால் இன்று அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது'' என்று சிஐடி காலனி வீட்டில், கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு கூடியிருந்த முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் கூறியதைத் தொண்டர்கள் பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.

÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் நடந்த முறைகேடுகள் பற்றிய விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்து வருவதால் ஆ. ராசாவின் நிலைமை மேலும் தர்மசங்கடமாகிறது. கலைஞர் தொலைக்காட்சிப் பிரச்னை, கனிமொழி கைதுக்குப் பிறகு என்னவாகும் என்பதை உடனடியாகச் சொல்ல முடியவில்லை. அதிகாரத்தை எல்லாம் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு தான் அளித்துவிட்டதாகக் கூறி தயாளு அம்மாள் தப்பித்துக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. 60% பங்குகளை வைத்திருக்கும் ஒருவர் தனக்குத் தொடர்பே இல்லை என்று பிரச்னையிலிருந்து நழுவ முடியுமா என்று கேள்வி எழுப்புகிறது சி.பி.ஐ.

÷இனி அடுத்த கட்டமாகக் கலைஞர் தொலைக்காட்சி முடக்கப்படக் கூடும். முன்பு ஜெ.ஜெ. டிவியை முடக்குவதற்காகக் கூறப்பட்ட எல்லா காரணங்களும் இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள்.

÷மிகவும் மோசமான நிலையில் இருப்பது கருணாநிதி குடும்பத்தில் காணப்படும் குழப்பம்தான். "கனிமொழிக்காகக் கட்சியை ஏன் காவு கொடுக்க வேண்டும்?' என்கிற கேள்வியுடன் மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்றும், "20% பங்கு வைத்துக் கொண்டிருக்கும் எனது மகள் சிறையிலும், 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாளும் குடும்பமும் ஸ்பெக்ட்ரம் பணத்தை அனுபவிப்பது என்ன நியாயம்?' என்று ராஜாத்தி அம்மாள் தரப்பும் கருணாநிதியைத் தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது.

÷""இத்தனை பிரச்னைக்கும் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று கட்சியினர் மத்தியில் பரவலாக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பும், தயாநிதி மாறன் எப்படியாவது ஆ. ராசாவை அகற்றிவிட்டுத் தான் மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராவதற்குச் செய்த பின்னணி வேலைகளும்தான் இத்தனைக்கும் காரணம் என்று கூறி வருத்தப்படாத கட்சிக்காரர்களே கிடையாது.

÷""ஆ. ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்'' என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர். ""2009 மக்களவைத் தேர்தலுக்கு ஆ. ராசா கொடுத்த பெரும் பணம்தான் திமுக கூட்டணி தமிழகம் (27), புதுவை (1) இடங்களில் வெற்றி பெறக் கை கொடுத்தது. கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கும் ஆ. ராசாவிடமிருந்துதான் பணம் பெற்றுக் கொண்டார்கள். அது ஏன்? இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்கள் செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது?' ராசா கைதானபோது கவலைப்படாதவர்கள், அவருக்கு ஜேட்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும் என்று நினைக்காதவர்கள் இப்போது கனிமொழிக்கு ஒன்று என்றால் மட்டும் துடிதுடித்துப் போகிறார்களே, அது என்ன நியாயம்?'' என்று கேள்வி எழுப்பினார் அந்த ராசாவின் நண்பர்.

÷""ராசா ஒரு "தலித்' என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்று தலைவர் சொன்னபோது அதை நாங்கள் நம்பினோம். இப்போதுதான் தெரிகிறது, ராசா ஒரு தலித் என்பதால்தான் தலைவர் அவரைப் பலிகடா ஆக்கப் பார்த்திருக்கிறார். தனது மனைவியும் மகளும் நிரபராதிகள், ஒன்றும் தெரியாதவர்கள் என்றும், ஆ. ராசாதான் அத்தனை தவறுகளுக்கும் காரணம் என்றும் நீதிமன்றத்தில் வாதாட எப்படி மனம் வந்தது?'' தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத, கடந்த திமுக ஆட்சியில் பொறுப்பான பதவி வகித்த "தலித்' ஒருவரின் குமுறல் இது.

÷""தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது கருணாநிதிக்கு எப்போதுமே உதட்டளவுப் பாசம்தான் இருந்திருக்கிறது. இதற்கு நேர் எதிராக முதல்வர் ஜெயலலிதாவைப் பாருங்கள். சீனியர்கள் பலர் இருந்தும்கூட, தாற்காலிக பேரவைத் தலைவராக குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவிலிருந்து அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த செ.கு. தமிழரசன் மூலம் பதவிப் பிரமாணம் செய்ய வைத்து நிஜமாகவே ஒரு புரட்சியைச் செய்து காட்டி இருக்கிறார் முதல்வர். இதை கருணாநிதி நிச்சயமாகச் செய்திருக்க மாட்டார்'' என்று கருத்துத் தெரிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கணிப்பின்படி, ஆ. ராசா அப்ரூவராகக் கூடும்.

÷இன்றைய நிலையில் திமுக மத்திய அமைச்சரவையில் தொடருமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் திமுகவைக் கழற்றி விடுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இரண்டுமே நடக்காது என்கிறார்கள் தில்லியிலுள்ள அரசியல் நோக்கர்கள்.

÷""ஆட்சியையும் இழந்துவிட்ட நிலையில் திமுகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்சப் பாதுகாப்பு மத்திய அரசில் அங்கம் வகிப்பதுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் திமுகவுக்கு என்ன லாபம் ஏற்பட்டுவிடப் போகிறது. நிலைமை மேலும் மோசமாகக் கூடும். அந்தத் தவறைக் கருணாநிதி ஒருநாளும் செய்யமாட்டார்'' என்பதுதான் பரவலான கருத்து.

÷காங்கிரஸýம் சரி, திமுகவைத் தனது கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு, காமன்வெல்த் போன்ற ஊழல்களில் சிக்கி இருக்கும் நிலையில் திமுகவை ஊழல் என்று காங்கிரஸ் கூறுவது "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற கதையாகத்தான் இருக்கும்.

÷""தமிழகத்தில் அதிமுக ஆட்சியுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ள நிச்சயமாகக் காங்கிரஸ் தலைமை விரும்பும். அதற்காக, திமுகவை வெளியே அனுப்பிவிட்டு அதிமுகவுடன் உடனடியாகக் கைகோர்க்குமா என்பது சந்தேகம்தான். பலவீனமான திமுகவின் தோழமையும், வலிய நேசக்கரம் நீட்டும் அதிமுகவின் ஆதரவும் கிடைத்தால் காங்கிரஸýக்குக் கசக்கவா செய்யும்? அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருப்பதால், இப்போதைக்கு உறவில் மாற்றம் இருக்காது. ஆனால், திமுகவுக்கு அதனால் எந்தவித லாபமும் இருக்காது. இதுதான் நிலைமை'' என்று கணிக்கிறார்கள் தில்லி அரசியல் பார்வையாளர்கள்.

÷திமுகவின் நிலைதான் என்ன? என்ன செய்வது என்று சிந்திக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறது திமுக. எந்தக் கருணாநிதியால் பல சோதனைகளைக் கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றப்பட்டதோ, அதே கருணாநிதியின் குடும்பப் பாசத்தால் திமுக இப்போது நிலைகுலைந்து போயிருக்கிறது.

கருணாநிதியை விலக்கி நிறுத்திவிட்டுக் கட்சித் தலைமையிடத்து திமுகவை வழிநடத்தக் கூடிய திறமை யாருக்குமே இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை.

திமுக சார்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல் விவாதங்களில் பங்கேற்க நடிகை குஷ்பு அனுப்பப்படுகிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி ஆட்சியைப் பிடித்த கட்சி இப்போது சுயமரியாதையை முற்றிலுமாக இழந்து, "விதிவிட்ட வழி' என்கிற பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய நிலைமை.

÷இதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்ததால்தானோ என்னவோ, அறிஞர் அண்ணா தனது தம்பிகளிடம் "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று வலியுறுத்தினார்? என்னே அண்ணாவின் தீர்க்க தரிசனம்!

-தினமணி

Monday, May 16, 2011

சொல்லியா தரவேண்டும்?

வாக்காளப் பெருமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வரலாறு காணாத அளவில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்கு "தினமணி' வாசகர்களின் சார்பில் வாழ்த்துகள்.

தேமுதிக என்கிற கட்சி தொடங்கப்படாமல் இருந்திருந்தால், ஒருவேளை 2006-லேயேகூட அதிமுக வெற்றிபெற்று தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த பெருமையும்கூட இப்போது அவருக்குக் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், இந்த ஐந்தாண்டு இடைவெளியேகூட ஒருவகையில் பார்த்தால் அவருக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும். தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன என்பதைச் சிந்தித்துச் சீர்தூக்கி, மக்களால் நிராகரிக்கப்பட்ட கடந்த திமுக ஆட்சியின் தவறுகளைத் தவிர்த்து, ஒரு நல்லாட்சியைத் தலைமையேற்று நடத்தும் பக்குவத்தை இந்த இடைவெளி அவருக்கு நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும்.

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ராஜாஜியும் பெரியாரும் மிக நெருங்கிய நண்பர்கள். "ஆச்சாரியாரே' என்று ராஜாஜியைப் பெரியாரும், "நாயக்கரே' என்று பெரியாரை ராஜாஜியும் அழைத்து உரையாடும் அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கம் இருந்ததை உலகறியும்.
ஒரு கூட்டத்தில் இருவரும் கலந்துகொண்டு அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்களாம். அப்போது, ஒருவர் ஏதோ ஒரு பிரச்னை பற்றிக் கூறிய கருத்துகள் ராஜாஜிக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த தனது நண்பர் பெரியாரிடம், அந்தப் பேச்சாளரின் கருத்துகளுக்கு எதிரான வாதங்களை முன்வைத்துப் பேசும்படி கேட்டுக் கொண்டாராம் ராஜாஜி.

அடுத்தாற்போல பேசிய பெரியார், தனக்கு முன் பேசியவரின் அத்தனை கருத்துகளையும் தர்க்க ரீதியாக விமர்சித்துப் பேசி, அவரது வாதங்களை உடைத்தெறிந்தார். பேசிவிட்டுத் தனது இருக்கையில் வந்தமர்ந்ததும், "ஆச்சாரியாரே, எதற்காக என்னை அந்தக் கருத்துகளை விமர்சித்துப் பேசச் சொன்னீர்கள்?' என்று கேட்டாராம் பெரியார். அதற்கு ராஜாஜி ""அதைத்தானே நீங்கள் பிட்டுப் பிட்டு வைத்துப் பேசினீர்கள். அதற்காகத்தான் சொன்னேன்'' என்று பதிலளித்ததாகக் கூறுவார்கள்.

ஜெயலலிதா தலைமையில் இன்று ஆட்சிப் பொறுப்பேற்கும் அதிமுக அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்குப் பட்டியல் எதுவுமே போடத் தேவையில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவையில் நடந்த ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான விலைவாசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி, திருச்சி, மதுரையில் நடந்த பொதுக்கூட்டங்களிலும், தனது தேர்தல் பிரசாரத்தின்போதும் அவர் பேசிய பேச்சுகளை ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்தாலே போதும், இந்த அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதும், என்னென்ன செய்யக்கூடாது என்பதும் அவருக்குத் தெரிந்துவிடும்.

கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்குவதில் தொடங்கி, மின் தட்டுப்பாடு, மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளைச் சீர்படுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறையை உண்மையிலேயே மக்களின் நல்வாழ்வுக்குத் சேவைசெய்யும் துறையாக மாற்றுவது, காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னைக்குத் தீர்வு, இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து அவர்கள் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பது, தெருவுக்குத் தெரு காளான்களாகி இருக்கும் "டாஸ்மாக்' கடைகள், கல்விக் கொள்ளை, உயர் கல்வியில் நடக்கும் ஊழல்கள் என்று தமிழகத்தை எதிர்நோக்கும் அத்தனை பிரச்னைகளையும் கடந்த ஓராண்டாக எல்லா கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதா பேசி வந்திருக்கிறார் என்பதால், புதிதாக அவருக்கு எதையும் நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை.
அமோக வெற்றிக்குப் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும், தனது தனிப்பட்ட பேட்டிகளின்போதும், ஜெயலலிதாவின் பேச்சில் நிறையவே மாற்றம் காணப்படுகிறது. "நான்' என்கிற வார்த்தைகள் குறைந்து "நாங்கள்' என்கிற வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது கவனத்தை ஈர்த்தது. "நான்', "எனது' என்கிற வார்த்தைகளை ஒரு முதல்வர் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல, முடிந்தவரை தவிர்ப்பது அவரது பெருமைக்குப் புகழ் சேர்க்கும். கடைசிவரை எம்.ஜி.ஆர். தனது அரசு என்று கூறிக்கொள்ளாமல், "உங்களது அண்ணாவின் அரசு' என்று குறிப்பிடுவார் என்பதை நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

மக்கள் மத்தியில் ஜெயலலிதா என்று சொன்னாலே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் ஆட்சி என்கிற கருத்து இருக்கிறது. நிர்வாகத்திலோ, காவல்துறை தனது கடமையைச் செய்வதிலோ, ஆளும் கட்சி அமைச்சர்களோ, தொண்டர்களோ தலையிடுவதை அனுமதிக்காத நிர்வாகம் ஜெயலலிதாவுடையது என்பது எதிர்பார்ப்பு மட்டுமல்ல, உண்மையும்கூட. கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்களிலிருந்து, கவுன்சிலர்கள்வரை நடத்திய அதிகாரத் துஷ்பிரயோகங்களும், சட்ட வரைமுறை மீறல்களும், அவர்களது தலைமையில் நடந்த கட்டப் பஞ்சாயத்துகளும், நிச்சயமாக ஜெயலலிதா தலைமையிலான இந்த ஆட்சியில் தொடராது என்று நம்பலாம்.

ஜெயலலிதா தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்கிறது. முதன்முறையாக, சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகளைக் கவனிக்க ஒரு தனித்துறை அமைக்கப்பட்டு அதற்கு ஓர் அமைச்சரும் நியமிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர் ஒருவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும், உதகையைச் சேர்ந்தவர் சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சராகவும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மீன்வளத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சரியான நபர்கள் சரியான துறைக்கு, முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டம் படித்த ஒருவர் சட்டத்துறை அமைச்சராக்கப்படவில்லை என்பது மட்டும்தான் ஒரு சின்ன நெருடல்.

கடந்த ஆட்சியில் நடந்த பல தவறுகள் திருத்தப்பட வேண்டும். தவறான திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் நிராகரிக்கப்படத்தான் வேண்டுமா? கோயம்பேடு பஸ் நிலையத்துக்குக் காட்டப்பட்ட கருணை ஏன் புதிய தலைமைச் செயலகத்துக்கும் காட்டப்படக் கூடாது?

சரித்திரத்தில் தனது பெயர் நிலைபெற வேண்டும் என்பதற்காக, முந்தைய ஜெயலலிதா அரசு கட்ட இருந்த தலைமைச் செயலகத் திட்டத்தைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுக் கருணாநிதி அரசால் கட்டப்பட்டதுதான் புதிய தலைமைச் செயலகம். தேவையில்லாமல் பல கோடி ரூபாயை விழுங்கி அரைக்கோள வடிவில் விதானம் அமைக்கப்பட்டிருப்பது பணவிரயம். ஆனாலும், மக்களின் வரிப்பணமல்லவா விரயம் செய்யப்பட்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தாமல் இருப்பது என்ன நியாயம்? புதிய தலைமைச் செயலகம், தலைமைச் செயலகமாகத் தொடர்ந்தால் முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டியது என்று கூறுவார்கள் என்பதைவிட இன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெருந்தன்மையைப் பறைசாற்றி அவருக்குப் புகழ் சேர்க்கும் என்பதும் நிஜம்தானே?

ஒரு சில அனுபவசாலிகளும், பல புதியவர்களும் அடங்கிய இளமைப் பொலிவுடன்கூடிய அமைச்சரவை பதவி ஏற்கிறது. இதேபோல, செயல்திறம் மிக்க, நேர்மையாளர்கள் தலைமைச் செயலராகவும், செயலர்களாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுவதைப் பொறுத்துத்தான் நல்லாட்சி அமையும் என்பதை மூன்றாவது முறையாகப் பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்குச் சொல்லியா தரவேண்டும்?
துதிபாடிகளைச் சற்று தள்ளியே இருக்கச் செய்து, தேவையில்லாத விளம்பரங்களுக்கும், பாராட்டு விழாக்களுக்கும் முந்தைய முதல்வர்போல ஆசைப்படாமல், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அதை ஆரோக்கியமான விமர்சனமாக ஏற்றுக்கொண்டு அந்தத் தவறுகளைத் திருத்த முற்படும் ஆட்சியாக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.
இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள்!

-தினமணி தலையங்கம்