Sunday, December 19, 2010

அடடே! தமிழ் மீடியாவுக்கு ரோசம் வந்துவிட்டதே

தமிழ் ஊடகங்களில் சமீபமாக பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலை
அனைவரும் வரிந்து கட்டி எழுதுகிறார்கள். குமுதம்
ரிப்போர்ட்டர், தமிழக அரசியல், ஜூனியர் விகடன் போன்ற புலனாய்வு பத்திரிக்கைகள் எல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிராக எழுத ஆரம்பித்து விட்டன.இன்னும் சொல்லப் போனால், நேற்று (18.12.2010) வந்த ஜு.வியில் மொத்த 48 பக்கங்களில் 23 பக்கங்கள் ஸ்பெக்ட்ரம் செய்திகள் மட்டுமே!! ஜூவியில் கடந்த இரு வாரங்களாக ஆளும் கட்சி மீது உக்கிரமான அனல் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

குடும்பச் சண்டை காரணமாக சன் டிவியும் 'ஜேஜே' என்று ஸ்பெக்ட்ரம் பற்றி செய்தி வாசிக்கிறது. ஆனால் தமிழ் நாளேடுகளில் தினமணி மட்டுமே ஆரம்பம் முதல் ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதி வந்தது. தினமலர் இப்போது எழுத ஆரம்பித்து விட்டது. ஆனால் பாமரர்களின் பத்திரிக்கை எனப்படும் தினத்தந்தி இந்த உலகத்தில் தான் இருக்கிறதா? என்று தெரியவில்லை. எப்படி எல்லாம் இருந்த தினத்தந்தி இன்று முரசொலியின் மறு பதிப்பாக வந்து கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலத்துக்கு வந்த போதே வட இந்திய ஊடகங்கள் ராசாவையும் திமுகவையும் உரித்து உப்புக்கண்டம் போட்டு விட்டன. 

பத்திரிக்கைகளில் வருவது ஒரு பக்கம் இருந்தாலும் நாடு நகரமெல்லாம் ஸ்பெக்ட்ரம் அலைதான் வீசுகிறது. அலுவலகங்கள், பேருந்து, ரயில், டீக்கடை, வீடு, சலூன், கல்யாண வீடு, சாவு வீடு, ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக், பிளாக்குகள், எஸ்.எம்.எஸ், கிராமங்கள், சிறு நகரம் என்று தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஸ்பெக்ட்ரம் பற்றி பேசாதவர்கள் இருக்க முடியாது. நம்மிடமே சுவிட்சர்லாந்து, டென்மார்க், துபாய், சீனா, ஆஸ்திரேலியா நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தொடர்பு கொண்டு ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி விசாரிக்கிறார்கள் 

ஆனால் அனைவரிடமும் ஒரு தார்மீக கோபமும் அடுத்த தேர்தலில் திமுக தூக்கி எறியப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

Saturday, December 18, 2010

இந்த ஆண்டு அதிக மழை ஏன்?

இந்தியத்தாய் தன் மக்களுக்காய் விடும் கண்ணீரில் தமிழ் நாடு மிதக்கிறது. ஊழலிலே மிகப் பெரிய ஊழலைச் செய்த தமிழர்களை நினைத்து நினைத்து, இந்தியத் தாய் அழுது கொண்டிருக்கிறாள். அக்கண்ணீர் தான் தமிழ் நாட்டில் மழையாய்ப் பொழிகிறது.

* * * * * *

கோடிகளில் குளித்து, பணப்படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் ஊழல்வாதிகளே !

ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு “அம்மா பசிக்கிறதே?” என்று அடிவயிற்றிலிருது கதறும் சிறார்களைப் பாருங்கள் ! சாலையோரம் குப்பைக் கூளங்களுக்கு இடையே படுத்துறங்கும் மக்களைப் பாருங்கள் ! வயிறு காய்ந்து, ஒட்டி, பேசக்கூட திராணியற்ற ஏழைகளைப் பாரீர் கொடுங்கோலர்களே !

இந்திய நீதிபதிகளே, மக்கள் உங்களைத்தான் கடவுளாய் பார்க்கின்றார்கள். கைவிட்டு விடாதீர்கள்.

- பஞ்சரு பலராமன்




நன்றி: அனாதி