இலவச தொலைக்காட்சி, இலவச சமையல் எரிவாயு அடுப்பு என்ற வரிசையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு மாபெரும் திட்டமான இலவச விவசாய நீரிறைப்பான் (பம்பு செட்) திட்டம் (Free Pump Set Scheme) விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், அது உள்ளுர் நீரிறைப்பான் உற்பத்தியாளர்களுக்கு இடமளிக்காத புதிரான ஒரு திட்டமாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டின் விவசாயிகளில் தற்போது 19 இலட்சம் பேர் மின் இணைப்புடன் கூடிய நீரிறைப்பான்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 14 இலட்சம் விவசாயிகளுக்கு, அவர்கள் நீண்ட காலமாக பயன்படுத்திவரும் நீரிறைப்பான்களுக்குப் பதிலாக, புதிய நீரிறைப்பான்களை இலவசமாக அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தி்ற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரல் இணையத்தின் வாயிலாக கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டிருந்த அந்த ஒப்பந்த புள்ளிகள் கோரலில் வரையறுக்கப்பட்டிருந்த நிபந்தனைகளைக் கண்ட நீரிறைப்பான் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிலும் விவசாய பம்பு செட் தயாரிப்பில் (97%) முன்னணியில் இருக்கும் கோயம்புத்தூர் உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சியோடு கோபமும் வந்துள்ளது. காரணம்?
மின்சார பம்பு செட் என்றாலே நினைவுக்கு வருவது கோயம்புத்தூர்தான். இன்று நேற்றல்ல, பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் மாவட்டமாகத் திகழும் கோவையில்தான் விவசாய நீரிறைப்பான்கள் மட்டுமின்றி, மின் மோட்டார்களால் இயக்கப்படும் மாவரைத்தல் இயந்திரம் (வெட் கிரைண்டர்) உள்ளிட்ட பல பயன்பாட்டு்ச் சாதனைங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கின்றனர். அந்நிய நாட்டுத் தயாரிப்பான புல்லட் வாகனத்திற்கு டீசல் இயந்திரத்தை கண்டுபிடித்துப் பொருத்தி, அதன் பயன்பாட்டை பொருளாதார ரீதியாக உயர்த்திய இடமல்லவா கோயம்புத்தூர்? தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் விவசாய நீரிறைப்பான்கள் அனைத்தும் கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்டதுதான். அப்படியிருக்க கோயம்புத்தூரில் மின்சார நீரிறைப்பான்கள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகள் எவரும் பங்கேற்ற முடியாதவாறு அந்த நிபந்தனைகள் இருந்தன. இந்த ஒப்பந்த புள்ளிகள் கோரலில் தமிழ்நாடு மின்சார வாரியம் குறித்துள்ள நிபந்தனைகள் இவைதான்:
1. ஒப்பந்தப் புள்ளிகள் கோரலில் பங்கேற்கும் எந்தவொரு நீரிறைப்பான் தயாரிப்பு நிறுவனமும், ஆண்டிற்கு ரூ.30 கோடிக்கும் குறையாமல் வணிகம் (Turn -Over )செய்திருக்க வேண்டும்.
2. அந்த நிறுவனத்தின் அல்லது தொழிற்சாலையின் சொத்து மதிப்பு ரூ.15 கோடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
3. தொழிற்சாலையில் குறைந்தது 100 பேராவது பணியாற்றிட வேண்டும்.
4. ரூ.50 இலட்சத்திற்கு வங்கி உத்தரவாதம் பெற்றுத் தர வேண்டும்.
5. ரூ.10 இலட்சம் வங்கி வைப்பில் செலுத்தி ஒப்பந்தப் புள்ளியுடன் அளிக்க வேண்டும்.
இதைப் பார்த்தவுடன் சிறு தொழில் நிறுவனங்கள் மட்டுமல்ல, கோவையில் இயங்கிவரும் பெரு நிறுவனங்களும் ஒதுங்கிக்கொண்டன.
மேற்கண்ட நிபந்தனைகள் மட்டுமின்றி, ஒரு முக்கிய நிபந்தனையை தமிழ்நாடு மின்சார வாரியம் விதித்துள்ளது. அது என்னவெனில், இந்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரலில், தங்களுடைய தயாரிப்பான நீரிறைப்பான்களுக்கு இந்திய அரசின் தரச் சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ) மட்டும் பெற்றிருந்தால் போதாது, இந்திய அரசின் மின்சார சிக்கன வாரியத்தின் (Bureau of Electricity Efficiency) நட்சத்திரச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த நட்சத்திரச் சான்றிதழ் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று நீரிறைப்பான்களின் மின்சார சிக்கன திறனிற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. அதன்படி, நான்கு நட்சத்திர சான்றிதழ் பெற்ற நீரிறைப்பான் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இந்த ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்கலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.
அது மட்டுமல்ல, அரசின் ஒப்பந்தத்தைப் பெற்று நீரிறைப்பான்கள் விற்கப்பட்டாலும், அவைகள் விவசாய நிலங்களில் பொறுத்தப்பட்டு, ஒரு மாத காலத்தில் 35% மின் சேமிப்பு ஆகியிருந்தால் மட்டுமே நீரிறைப்பான்களுக்கான பணம் தரப்படும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது மின்சார வாரியம்!
இந்த நிபந்தனைகளையெல்லாம் பார்த்த சிறு உற்பத்தியாளர்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை ஒருவரும் ஒப்பந்தப் புள்ளியை அளிக்கவில்லை. ஒப்பந்தப் புள்ளி அளிக்க முதலில் 15ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவரும் அளிக்காததால், அது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படியும் ஒருவரும் ஒப்பந்தப் புள்ளி அளிக்கவில்லை.
உண்மையிலேயே, தமிழக அரசு மின் சேமிப்பில் அக்கறைக் கொண்டுதான் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்துள்ளதா என்று பார்த்தால், அதில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. உதாரணமாக ஒரு சிறு தொழில் நிறுவனம் தயாரிக்கும் 10 குதிரை சக்தி கொண்ட நீரிறைப்பான் ரூ.20,000 நிகர விலை ஆகிறது. இதே திறன் கொண்ட 4 நட்சத்திர சான்றிதழ் பெற்ற நீரிறைப்பான் விலை ரூ.32,000 ஆகிறது. அதாவது 40 விழுக்காடு விலை கூடுதல். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு சாதாரண நீரிறைப்பான் ஓடினால் ஆகும் மின்சாரம் 5.5 யூனிட் ஆகும். அதே ஒரு மணி நேரத்திற்கு 4 ஸ்டார் நீரிறைப்பான் ஓடினால் அதற்கு ஆகும் மின்சாரம் 5.25 யூனிட்டுதான். ஆக சேமிப்பு 5 விழுக்காடே. ஆனால் விலை 40 விழுக்காடு கூடுதல்!
இது தொடர்பாக கோவை மின்சார நீரிறைப்பான் மற்றும் உபரிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.வி.கருப்பசாமி பேசியபோது, 4 நட்சத்திர அளவிற்கு திறன் மேம்பாட்டை தங்களாலேயே செய்து தர முடியும் என்றும், அதற்குக் கூடுதலாக 10 விழுக்காடுதான் அதிக விலை ஆகும் என்றும் கூறினார்.
ஆக, கோவையில் இயங்கிவரும் சிறு, பெரு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பங்கேற்காத, பங்கேற்க இயலாத வகையில் ஒப்பந்தப் புள்ளிக் கோரலிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனை விதித்ததன் இரகசியம் என்னவென்பதுதான் இதுவரை புரியாத புதிராக உள்ளது.
ஏனெனில் கோவையில் இருந்து மட்டுமல்ல, அகமதாபாத் போன்ற நகரங்களில் இயங்கிவரும் பெரு நிறுவனங்களும் கூட இந்த ஒப்பந்தக் கோரலை நிராகரித்துவிட்டன!
இது இந்தியாவில் இயங்கிவரும் நீரிறைப்பான் நிறுவனங்கள் மட்டும் பங்கேற்கக்கூடிய ஒப்பந்தப் புள்ளியா அல்லது அயல் நாட்டு நிறுவனங்களும் பங்கேற்கக் கூடியதா என்பது குறித்து அந்த கோரலில் விவரம் ஏதும் இல்லை என்று கூறுகின்றனர்.
தமிழக மின்வாரியத்தின் இப்படிப்பட்ட பயங்கரமான ஒரு ஒப்பந்தப் புள்ளிக் கோரலின் பின்னணி என்ன என்பது எவருக்கும் புரியாமல் உள்ள நிலையில், இது சிறு தொழில்களை நசுக்கும் எண்ணத்துடன் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தமிழக மின் வாரியத்தின் இந்த ஒப்பந்தக்கோரலை எதிர்த்து நீரிறைப்பான் உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து போராட முடிவு செய்துள்ளதாக கசிந்த செய்தியை அடுத்து, தமிழக அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
தற்போது தங்கள் நிலத்தில் நீரிறைப்பான் பொறுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள பல இலட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களில் இரண்டு இலட்சம் விவசாயிகளை, அவர்கள் 4 நட்சத்திர நீரிறைப்பான்களை வாங்கிப் பொறுத்தினால், அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்குமாறு அந்த சுற்றறிக்கை கூறுகிறது. இது பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் நீரிறைப்பான் விற்பனைக்கு வழி செய்யும் சுற்றறிக்கையாகும்!
இந்த சுற்றறிக்கையை ஐ.எஸ.ஐ. சான்றிதழ் மட்டுமே பெற்று நீரிறைப்பான்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகளையும், 4 நட்சத்திர சான்றிதழ்களுடன் நீரிறைப்பான்களை உற்பத்தி செய்யும் சி.ஆர்.ஐ., டெக்ஸ்மாக்கோ போன்ற பெரிய நிறுவனங்களையும் பிரித்தாளும் முயற்சி என்று கோவை சிறு நீரிறைப்பான்கள் மற்றும் உபரி உற்பத்தியாளர்கள் சங்கம் பார்க்கிறது.
அதுமட்டமல்லாமல், இந்த சுற்றறிக்கை, விவசாயிகளின் உரிமையில் தலையிடுவதாகவும் உள்ளது. இந்த விதமான பம்பு செட்டை வாங்கினால்தான் இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று நேரடியாகவே மின் வாரியம் கூறியுள்ளது!
மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டு செயல்படும் எந்த ஒரு அரசும், அது செயல்படுத்தும் திட்டங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுவதாகச் செயல்படுத்தும். ஆனால் இந்த இலவச பம்பு செட் திட்டத்தை வேறு ஏதோ ஒரு உள் நோக்கத்துடனோ அல்லது உள் திட்டத்துடனோ தமிழக அரசு செயல்படுத்துகிறது என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படுகிறது.
ஒரு முகவரை வைத்து இந்த ஒப்பந்தத்தை அரசு முடித்துவிட நினைக்கிறது என்கிற ஐயப்பாடும் நிலவுகிறது. எதுவாயினும் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். 2ஜி அலைக்கற்றை ஊழல் வெளியாகவில்லையா, எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறதல்லவா? அப்போது உண்மை தெரியும்.
நன்றி: தமிழ்வெப்துனியா
No comments:
Post a Comment