Tuesday, June 21, 2011

ஐபில் கிரிக்கெட்டும் ஸ்பெக்ட்ரம் ஊழலும்!

என்னடா இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு விழுகிறதே என்று பார்க்கிறீர்களா? இன்னும் ஸ்பெக்ட்ரம் பூதம் எங்கெல்லாம் நிறைந்திருக்கிறது என்று தெரியவில்லை?
தற்போது எந்த ஐபிஎல் போட்டியும் இல்லாத சூழலில் கலைஞர், இசையருவி, சிரிப்பொலி சேனல்களில் மானாவாரியாக "சென்னை சூப்பர் கிங்க்ஸ்" விளம்பரம் வருகிறதே கவனித்தீர்களா? காரணம் ஒருவர். அவர் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசன். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர், முரசொலி மாறனின் நீண்ட கால நண்பர், கருணாநிதி குடும்பத்துக்கு சம்பந்தி உறவு, சொல்லிவைத்தது போல் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் (தமிழ்நாட்டில் மட்டும்) விஷம் போல் ஏறும் சிமெண்ட் விலையின் நாயகன், சிமெண்ட் மாபியாவின் தலைவர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும் இன்னொரு சிமெண்ட் அதிபருமான ஏ.சி.முத்தையாவின் பரம எதிரி.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணம் பல்வேறு வழிகளில் ஷாகித் பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த குற்றச்சாட்டில் கனிமொழி திகார் ஜெயிலில் இருக்கிறார். அப்படி வந்த 214 கோடி ரூபாயை கடனாத்தான் பெற்றோம், வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டோம் என்பது கனிமொழி மற்றும் சரத் குமார் ரெட்டி தரப்பின் வாதம். ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதாக வெடித்து ராசா ராஜினாமா செய்து, கைதாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் அந்த 214 கோடி திருப்பி கொடுக்கப்பட்டது. எப்பேர்பட்ட கோடீஸ்வரனாக இருந்தாலும் ஒரே நாளில் அவ்வளவு பணத்தை புரட்ட முடியாது அல்லவா? அப்போது உதவிக்கு வந்தவர்கள் தான் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனும், அண்ணாமலை பல்கலைகழக வேந்தர் ராமாசாமி செட்டியாரும். இது சம்பந்தமாக சில நாட்களுக்கு முன் "சிக்கலில் இரண்டு தமிழக கோடீஸ்வரர்கள்" என்ற தலைப்பில் ஜுனியர் விகடனில் ஒரு கட்டுரை வந்தது.

இதையும் மோப்பம் பிடித்துவிட்ட சி.பி.ஐ சீனிவாசன் தரப்பிடம், ஏது அவ்வளவு பணம்? எதற்காக கலைஞர் டிவிக்கு கொடுத்தீர்கள்? என்று விசாரித்ததாக தெரிகிறது. அதற்கு அவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் எங்கள் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக கொடுத்ததாக தெரிவிக்கிறார். அந்த விளக்கத்தை சி.பி.ஐ ஏற்றுக் கொண்டதா என்று தெரியவில்லை. எப்படா இந்தியா சிமெண்ட்ஸ் விளம்பரம் கலைஞர் டிவியில் வந்தது? என்று பார்த்தால், அந்த நிறுவனம் உரிமை கொண்டாடும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளம்பரம் கலைஞர் டிவியில் வகைதொகை இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த காலகட்டமும், முதல் ஐ.பி.எல் ஏலம் நடந்த காலகட்டமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இருக்கிறதே? மதுரைத் தம்பி ஏதாவதொரு ஐ.பி.எல் அணியை ஏலம் எடுக்க ஆசைப்பட்ட செய்தி பத்திரிக்கைகளில் வந்ததே? எதையும் வளைக்கத் துடிக்கும் ஆக்டோபஸ் குடும்பம் எப்படி பணம் கொழிக்கும் ஐபிஎல்லை விட்டு வைத்தது? அப்படி என்றால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தில் தான் சென்னை ஐ.பி.எல் அணி ஏலம் எடுக்கப்பட்டதா? போன்ற அதிகபிரங்கித்தனமான கேள்விகள் உங்களுக்கு தோன்றினால் அதற்கு இந்த கட்டுரையின் ஆசிரியர் எந்த வகையிலும் பொறுப்பு ஆக மாட்டார்.

Sunday, June 5, 2011

திமுக தோற்றது ஏன்?

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு என்றுமே தோல்வி இல்லை. 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்திருப்பதற்கு காரணம் தி.மு.க. தான் என்று சொன்னது தி.மு.க.வை அல்ல. திரு.மு.கருணாநிதி என்பவரைத்தான். அவரது பெயரை சுருக்கினால் தி.மு.க. தானே!

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி திருக்குவளை மு.கருணாநிதி என்று சுருங்கிப் போனதால் வந்த விளைவுதான் இந்த படுதோல்வி.

உடனே, தி.மு.க.வின் உடன்பிறப்புகளுக்கு ரத்தம் கொதிக்கலாம். கட்சியை வளர்த்ததே கலைஞர்தான். அவரைப் போய் சொல்லுகிறாயே என்று வாயில் வந்ததை எல்லாம் வெளியே துப்புவதற்கு முன்பு....

கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு, துப்புங்கள்.

தி.மு.க. 1949ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அதை உருவாக்கிய ஐம்பெரும் தலைவர்கள் அறிஞர் அண்ணா. நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், மதியழகன், ஈ.வி.கே.சம்பத். இந்த ஐந்து பேர் தான் கட்சியை தொடங்கியவர்கள். அதில் பேராசிரியர் அன்பழகனும் இல்லை. கலைஞர் கருணாநிதியும் இல்லை. கட்சி தொடங்கப்பட்ட சில நாட்கள் கழித்து தான் தி.க.விலிருந்து விலகி, தி.மு.க.வில் கருணாநிதி தன்னை இணைத்துக் கொண்டதாக திராவிட வரலாற்றில் தெளியவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க.வை தனக்குப் பிறகு கட்டி காப்பாற்ற கருணாநிதி வருவார் என்றும் அண்ணா நினைத்திருக்க மாட்டார். தி.மு.க. மீது அழியாத கறையை கருணாநிதி ஏற்படுத்துவார் என்பதையும் அண்ணா நினைத்திருக்க மாட்டார்.

கலைஞர் கருணாநிதி. 14 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்தவர். கருணாநிதி ஒரே நாளில், தி.மு.க.வின் கோபுர உச்சிக்கு வந்துவிடவில்லை. ஆனால், தி.மு.க. என்ற கோபுரம் கட்டிய ஒவ்வொரு கற்களிலும் கருணாநிதி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க. தொடங்கிய போது, அவர் ஒரு சாதாரண தொண்டர். தி.க.வில் பற்றுக் கொண்டவர். பெரியார் நடத்தும் குடியரசு இதழில் வேலை பார்த்தவர். பின்னர் சினிமா பக்கம் சென்று கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தவர்.

தி.மு.க.வின் முதல் கூட்டம் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் நடந்த போது, சேலம் மார்டன் தியேட்டர்ஸில் கருணாநிதி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் அவருடம் இருந்த கவிஞர் கண்ணதாசனும், தி.மு.க.வின் முதல் கூட்டத்தை பார்க்கவும் அண்ணாவின் பேச்சை கேட்கவும், ரயில் ஏறி வந்தனர். கூட்டம் முடிந்ததும் அன்று இரவு, பத்தோடு பதினொன்றாக அண்ணாவை சந்தித்துவிட்டு வந்தவர்தான் கருணாநிதி. சில நாட்களில் அவருக்கு தி.மு.க.வின் பிரசாரக் குழுவில் இடம் கிடைத்தது. காரணம், திராவிடக் கழகத்தில் மேடைப் பேச்சாளராக வலம் வந்தவர் என்பதை அண்ணா அறிந்திருந்தார்.

கட்சியில் இணைத்துக் கொண்ட பிறகு, தி.மு.க.வில் அண்ணாவை அடுத்து பம்பரமாக வேலை செய்தவர் கருணாநிதி மட்டுமே.

அண்ணாவைப் போல அடுக்கு மொழியில் பேச...

அண்ணாவைப் போல கரகர குரலில் பேச...

அண்ணாவைப் போல மக்களின் அன்றாட பிரச்னைகளை நுணுக்கமாக பேச...

கருணாநிதியால் மட்டுமே முடிந்தது.

அண்ணாவின் கூட்டத்துக்கு கூடும் கூட்டத்திற்கு அடுத்தபடியாக, கருணாநிதிக்கு கூட்டம் கூட தொடங்கியது. கட்சியின் ஐம்பெரும் தலைவர்கள் எல்லாரும் சென்னையை மையமாக கொண்டு அரசியல் செய்தார்கள். ஆனால், கருணாநிதி மட்டும் தான் தமிழ்நாட்டின் எல்லா பகுதிக்கும் சென்று அரசியல் செய்தார். சினிமாவுக்கு வசனம் எழுதி புகழ் பெற்றிருந்தால், அவருக்கு மற்ற தலைவர்களை விட வரவேற்பு இருந்தது மறுக்க முடியாத உண்மை.

தி.மு.க.வில் சோழ மண்டல தளபதியாக இருந்தாலும், அண்ணாவின் தம்பிகளில் ஆறாவது ஏழாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. ஒரே வருடம் தான், 1950வது வருடத்திலேயே, அண்ணாவின் தளபதியாக மாறினார் கருணாநிதி. சில நேரத்தில் அண்ணாவை கூட நெருங்க முடியாது. எந்த நேரத்திலும் கருணாநிதியை அணுகிவிடலாம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் கருணாநிதி கெட்டிக்காரர்.

கூட்டத்துக்கு கூட்டம் வசூல் வேட்டை நடத்தி, அண்ணாவை மெய் சிலிர்க்க வைப்பார். கட்சிக்குள் பிரச்னை வரும்போது, அண்ணாவிடம் சொல்லாமலே சமாளித்துவிட்டு, பிறகு அண்ணாவிடம் சொல்லுவார். கிட்டத்தட்ட அண்ணாவுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் தான் ஒரு தூதராக, பாலமாக தன்னை காண்பித்துக் கொண்டார்.

முதல் முறையாக தி.மு.க. தேர்தலில் போட்டியிடப் போகிறது. அக்கூட்டத்தில் அண்ணாவுக்கு முன்பாக பேசி, அரங்கத்தை அதிர வைத்தார். அதுதான், கருணாநிதியை, கட்சிக்கு யார் என்று காட்டியது. அக்கூட்டத்தில், கருணாநிதியை அண்ணா வானாளவ புகழ்ந்து தள்ளிவிட்டார்.

அப்படி என்ன பேசிவிட்டார்.

வாழ்வு மூன்று எழுத்து.

வாழ்வுக்கு தேவையான பண்பு மூன்று எழுத்து.

பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து.

அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து.

காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து.

வீரம் செல்லும் களம் மூன்று எழுத்து.

களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து

அந்த வெற்றிப்பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் அண்ணா மூன்று எழுத்து.

-இதுதான் அன்றைக்கு ஹைலைட்.

அரசியலில் இருந்துக் கொண்டே, சினிமாவுக்கு அவர் எழுதிய வசனங்கள் அவரை இன்னும் பிரகாசிக்கச் செய்தன.

1957ம் ஆண்டு நடந்தத் தேர்தலில், கருணாநிதி போட்டியிட்டத் தொகுதி குளித்தலை. அவர் எதிர்பார்த்த தொகுதி, நாகப்பட்டினம். ஆனால், அவர் சளைத்தாரா. குளித்தலையில் தி.மு.க. தலைகள் என்று கணக்கெடுத்தால், பத்து கூட தேறாது. அத்தேர்தலில் தி.மு.க. 15 தொகுதிகளில் தேறியது. அதில் ஒருவர் கருணாநிதி.

அன்றிலிருந்து 2011 வரை அவரது தனிப்பட்ட தேர்தல் வாழ்க்கையில் தோல்வியே இல்லை. தேர்தல் பணியில், பிரசாரத்தை விட எல்லா வழிமுறைகளையும் கையாளக் கற்று கொண்டிருந்தார் கருணாநிதி. 1959ம் ஆண்டு சென்னையில் நடந்த மாநகராட்சித் தேர்தலில், தி.மு.க. 90 இடங்களில் போட்டியிட்டது. இதில் 20 முதல் 25 பேர் ஜெயிக்கலாம் என்று அண்ணா கருதியிருந்த நேரத்தில், கருணாநிதியும் கண்ணதாசனும் களத்தில் இறங்கி 45 பேரை ஜெயிக்க வைத்தனர். ஆனால், கருணாநிதிக்கு மட்டும் அண்ணா கனையாழி பரிசளித்தார்.

சில வருடங்களில், இந்தி போராட்டம். இந்திய அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எத்தனையோ பேர் தீக்குளித்தனர். ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தனர். அவர்கள் எல்லாரையும் விட கருணாநிதிக்கு தான் பெரிய பெயர் கிடைத்தது.

இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கருணாநிதிக்கு பாளையங்கோட்டை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த பாளையங்கோட்டை சிறை தண்டனை தான் கருணாநிதிக்கு தி.மு.க.வில் பெரும் வரவேற்பை கொடுத்தது. அண்ணாவின் முதல் தளபதியாக வலம் வரத்தொடங்கினார்.

ஆனால், அண்ணாவுக்கு இணையாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள மாட்டார். ஏன் தெரியுமா. அண்ணாவுக்கு இணை என்று தன்னை நினைத்து அரசியலில் தோற்றுப் போனவர் சம்பத். அந்த பாடத்தை கருணாநிதி உணர்ந்திருந்தார்.

கட்சியில் தனக்கு எதிர் கோஷ்டிகள் எக்கசக்கமாக இருந்தாலும், அவர்களை எதிரியாக பாவிக்காமல், அவர்களை கோபித்துக் கொள்ளாமல் சாதுர்யமாக இருந்து பழகி, அண்ணாவிடம் நல்ல தொண்டனாகவே முன்னிறுத்திக் கொண்டவர் கருணாநிதி. அண்ணாவும், கருணாநிதியிடம் கோபத்தை காண்பித்தாலும், அவரை அரவணைத்துக் கொள்வார்.

காரணம், நிதி வசூலிப்பதில் கருணாநிதிக்கு இணை கருணாநிதி. நிதி வசூலிக்க கருணாநிதி போகாத இடம் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களுக்கு சென்று கூட்டத்தை கூட்டி வசூலித்துவிடுவார். தேர்தல் நிதியா... பத்து லட்சம் அண்ணா கேட்டால், 11 லட்சத்தை தருவார் கருணாநிதி.

1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. கருணாநிதிக்கு பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத்துறை கிடைத்தது. கட்சியில் மட்டுமல்ல, அரசு அதிகாரத்திலும் கருணாநிதியின் வேகம், மற்ற அமைச்சர்களை கிடுகிடுக்க வைத்தது.

1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அறிஞர் அண்ணா கண் மூடினார். தி.மு.க. தொடங்கிய நாளிலிருந்து அண்ணாவுக்கு அடுத்த தலைவராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். அவர்தான் கட்சியின் பொதுச் செயலாளர்.

'தம்பி வா... தலைமையேற்க வா..: என்று அண்ணாவே நாவலரை அழைத்தவர். ஆனால், அவரா அடுத்த முதல்வராக வந்தார். கருணாநிதி களத்தில் குதித்தார். வென்றார். முதல்வரானார். 45 வயதுதான், தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, அதுவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்த முதல் முதல்வர் கருணாநிதி.

அன்று முதல் கட்சியின் நாடியும் அவரே. நரம்பும் அவரே. எல்லாமும் அவரே. அவர்தான் தி.மு.க.வின் உயிராகவும் மாறினார். ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து, மக்களையும் கவர்ந்தார். தி.மு.க. உறுப்பினர்கள் என்று அல்லாது, தி.மு.க. அபிமானிகள் என்ற கூட்டத்தை உருவாக்கவும் செய்தார். அரசு ஊழியர்கள், பொதுமக்களில் பலர் தி.மு.க. ஆதரவாளர்களாக மாற்றியத்தில் கருணாநிதிக்கு பெரும் பங்குண்டு.

ஆனால், அண்ணாவிடம் பாடம் படித்த கருணாநிதி, அண்ணா வழி நடக்கவில்லை. பெரியார் போல நடந்து கொண்டார்.

பெரியார் எந்த பொறுப்பையும் யாருக்கும் தரமாட்டார். அதனால், அடுத்த நிலை தலைவர்கள் உருவாகவே முடியவில்லை. அதன் காரணமாகத்தான், கருணாநிதி தி.க.விலிருந்து விலகி அண்ணா ஆரம்பித்த தி.மு.க.வுக்கு வந்தார்.

ஆனால், அண்ணா எப்படி நடத்தினார். எல்லாருக்கும் பொறுப்புக் கொடுத்தார். எல்லாரையும் அரவணைத்தார். அதனால் தானே, கருணாநிதி வளர் முடிந்தது. முதல்வராக முடிந்தது. தனது அதிகார முடிவால், தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆரை தூக்கி எறிந்தார்.

1977ம் ஆண்டு ஆட்சி பொறுப்பு போனதும், கட்சியை கலகலக்கவில்லை. கட்டுக்கோப்பாய் தி.மு.க. இருந்தது. கட்சியை தாங்கிப்பிடித்தவர் கருணாநிதி மட்டுமே. 1977ம் ஆண்டில், கருணாநிதியை விட்டு எம்.ஜி.ஆரை நோக்கி ஓடியவர்கள் பலர். தான் முதல்வராக வருவதை தடுத்த நாவலர் கூட எம்.ஜி.ஆர். பக்கம் சென்றுவிட்டார்.

14 வருடங்கள் கழித்து, 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. இரண்டு ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார் கருணாநிதி. மீண்டும் 2001ல் தோல்வி. 2006ல் மீண்டும் ஆட்சி.

இப்படி தி.மு.க.வை ஆறுமுறை அரியணை ஏற்றி, அதில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. இச்சாதனையை எந்த அரசியல் தலைவரும் நிகழ்த்தியது கிடையாது.

72 ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இருக்கிறார்.

ஐந்து முறை முதல்வராக இருந்தவர்.

அரசியல் சாணக்கியர் என்று மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்டவர்.

தி.மு.க.வை ஆரம்பித்த போது, மேடைக்கு எதிரே இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தவர் கருணாநிதி. ஆனால், 1969ம் ஆண்டுக்கு பிறகு நாற்பது ஆண்டுகளாக தி.மு.க.வின் காவல் தெய்வம் கருணாநிதி மட்டுமே. கருணாநிதியின் அரசியலும் தமிழ்நாட்டின் வரலாறும் ஐம்பது ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்தவை. அவர் இல்லாமல் அந்த ஐம்பது

ஆண்டு கால வரலாற்றை தமிழ்நாட்டில் எழுதவே முடியாது.

எத்தனை சறுக்கல்கள்... எத்தனை இடையூறுகள்... இப்படி ஒரு சோதனைகள் வேறு எந்த தலைவருக்காவது நிகழ்ந்திருந்தால், அவர் அரசியலை விட்டு வெளியேறி இருப்பார் அல்லது வெளியேற்றப்பட்டு இருப்பார்.

ஆனால், கருணாநிதி அரசியலில் வெளியேறவும் இல்லை. வெளியேற்றவும் முடியவில்லை. காரணம், அவரது தன்னம்பிக்கை. அவரது திறமை.

தி.,மு.க.வின் எல்லா பெருமைக்கும் காரணமான கருணாநிதியே, இன்று தி.மு.க.வின் சிறுமைக்கு காரணமாகி இருக்கிறார் என்றால் அது தவறேதும் இல்லை.

2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்தித்திருக்கிறது.

இதற்கு என்ன காரணம் என்று விவாத மண்டபத்தில் கேள்வி எழுப்பி இருந்தோம்.

1. ஊழல்

2. மின்வெட்டு

3. விலைவாசி உயர்வு

4. குடும்ப ஆட்சி

5. ரவுடியிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து

6. கனிமொழி.

ஆனால், தி.மு.க.வின் இந்த அளவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு, மேற்கூரிய ஆறு காரணிகள் சிறு சிறு கூறுகள் மட்டுமே.

தி.மு.க.வின் படுதோல்விக்கு முழு காரணம் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி மட்டுமே என்று தமிழ் லீடர் கருதுகிறது.

எத்தனை பெரிய அரசியல்வாதி. 70 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை கலக்கிக் கொண்டிருப்பவர். ஐந்து முறை அரசாங்க இயந்திரத்தை இயக்கியவர். இவருக்கா தெரியாது, 2011ம் ஆண்டில் நடக்கும் தேர்தலில் தி.மு.க. தோற்கப் போகிறது என்பது கருணாநிதிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததுமே, தி.மு.க. கொண்டு வந்த நலத்திட்டங்கள் எல்லாம் நல்லத்திட்டங்கள். இலவச டிவி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கேஸ் ஸ்டவ், கலைஞர் மருத்துவ திட்டம்.... இப்படி வந்த திட்டங்களால் தி.மு.க.வை யாரும் தோற்கடிக்க முடியாது என்ற நினைப்பு வந்தது தப்பில்லை.

ஆனால், தி.மு.க. தோற்கடிக்கப்பட்டுவிட்டதே எப்படி?

கருணாநிதி என்ற தி.மு.க.வின் தூண் தான் இந்த தோல்விக்கு ஒட்டு மொத்த பொறுப்பு!

கருணாநிதி என்பவர் தமிழ்நாட்டின் மன்னர். அவர் ஆட்சியை எப்படி நடத்த வேண்டும். தனது ஆட்சிக்கு பங்கம் வரக்கூடாது. குறிப்பாக தனக்கும் தனது குடும்பத்துக்கும் அவச்சொல் வந்துவிடக்கூடாது என்று கருதி ஆட்சி புரிந்திருக்க வேண்டும்.

சாணக்கியரின் நீதி நூல் எனப்படும் அர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது.

பாகம்:1- அத்தியாயம் 17:

அருகிலுள்ள எதிரிகளிடம் இருந்தும் தூரத்திலுள்ள எதிரிகளிடம் இருந்தும் தன்னை காத்துக் கொள்ளும் மன்னனே நாட்டை காப்பாற்றத்தக்கவன். முதலில் மனைவியிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் மன்னன் தன்னை காத்துக் கொள்ள வேண்டும்.

-இது கருணாநிதி அறியாதவரா?

அதே அத்தியாயத்தில், "மன்னன் தன் பிள்ளைகளை அவர்கள் பிறந்தது முதலே, கண்காணிக்க வேண்டும். ஏனென்றால், அரச குமார்கள் நண்டு போன்றவர்கள். பெற்றவர்களையே விழுங்கிவிடுவார்கள். அரச குமார்களை இஷ்டம் போல இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்குமாரு செய்வது உயிருடன் கொல்வதற்கு சமம், என்கிறார் சாணக்கியர்.

-அதுதான் இன்று தி.மு.க.வில் நடந்துக் கொண்டிருக்கிறது.

பாகம்-8- அத்தியாயம்-4:

மக்களிடம் கலகம். அரச குடும்பத்தில் கலகம் இரண்டில் அரச குடும்பத்தில் கலகமே கொடியது. மக்களிடையே ஏற்படும் கலகத்தில் அவர்கள் தலைவனை வசப்படுத்திக் கொள்வதின் மூலமாகவும் கலகத்துக்கான காரணங்களை ஆராய்ந்து அதை விலக்குவதாலும் கலகத்தை ஒழித்துவிட முடியும். கலக்கார மக்கள் தங்களிடம் பரஸ்பரம் உள்ள பகையால், மன்னனுக்கு உதவியே செய்வார்கள்.

ராஜ குடும்பத்தில் கலகம் ஏற்பட்டால், அது மக்களின் துன்பத்துக்கும் அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடும். இந்த கலகத்தை நீக்குவதற்கு இருமடங்கு சிரமப்பட வேண்டியிருக்கும் என்கிறார் சாணக்கியர்.

இன்று தி.மு.க.வுக்கு என்ன நடந்தது. தி.மு.க.வுக்கு அவப்பெயர் எப்படி வந்தது. முழுக்க முழுக்க குடும்பத்தால் தான். அந்த குடும்பத்தால், நடக்கும் கூத்துக்கள் ஒவ்வொன்றையும் கருணாநிதி அனுமதித்ததால்...

ஒரு தலைவன், ஒரு வாரிசை கொண்டு வரலாம். ஆனால், கருணாநிதியின் எத்தனை வாரிசுகள் அரசியலில் கோலோச்சின.

ஸ்டாலின். இவரை மக்கள் ஏற்றுக் கொண்டதாகவே வைத்துக் கொள்வோம்.

ஸ்டாலினுக்கு தலைவராக தகுதி இருக்கிறதோ இல்லையோ, அவரை தலைவராக்க முயற்சிகள் நடந்தன.

ஆனால், ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி வெளிப்பட்ட போது, அவரை அடக்கி வைத்திருக்க வேண்டும். அடுத்து பேரன் தயாநிதி மாறனுக்கு மத்தியில் பதவி. அதன் பின்னர், கனிமொழிக்கு எம்.பி. பதவி. அடுத்து அழகிரிக்கு மத்தியில் பதவி. இப்படி குடும்பத்தினரை கொண்டு வந்து தி.மு.க.வை அழிக்க முற்பட்டது சரியான செயல்பாடா?

கட்சியில் கருணாநிதியை யாராலும் எதிர்க்க முடிந்ததா? அவருக்கும் இருக்கும் துணிச்சலும், சாதுர்யமும் யாருமே எதிர்க்க முடியவில்லை. எதிர்த்தவர்கள் எல்லாம் செல்லாக் காசாக்கியவர் தானே கருணாநிதி.

ஆனால், அழகிரி எதிர்த்த போது என்ன செய்தார் கருணாநிதி.

தயாநிதி மாறன் எதிர்த்த போது என்ன செய்தார் கருணாநிதி.

குடும்பத்தினர் எதிர்த்த போது, மண்டியிட்ட காரணம் என்ன?

கண்கள் பனித்தது: இதயம் இனித்தது. ஆனால் அதிகாரமும் ஆட்சியும் மக்களுக்கு கசந்ததே? அது புரியாமல் போனதே கருணாநிதிக்கு.

இதைவிட ஓர் உண்மை கருணாநிதிக்கு புரியாமல் போனதை ஏற்கவே முடியாது.

அதுதான் 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்.

2006ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுக்குள் நடந்த இடைத்தேர்தலில், பணத்தை வாரி இறைத்து தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த பாணியை கடைப்பிடித்து, 2009ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகள் 28. அ.தி.மு.க. 12 தொகுதிகளை பிடித்தது.

தமிழ்நாட்டில் இருக்கும் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 12 தொகுதிகளை பிடித்தது மட்டுமல்ல... வடசென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய ஆறு தொகுதிகளில் தி.மு.க. பெற்ற வாக்கு வித்தியாசங்களை கருணாநிதி அலசி ஆராயவில்லையா?

இந்த ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க.வைவிட சற்று கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் தான் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. குறிப்பாக வடசென்னையில் 19 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசம். மத்திய சென்னையில் 33 ஆயிரம் வாக்கு வித்தியாசம். ஸ்ரீபெரும்புதூரில் 24 ஆயிரத்து 675 ஓட்டுக்கள். நாகப்பட்டினத்தில் 46 ஆயிரத்து 745 ஓட்டுக்கள். சிவகங்கையில் 2 ஆயிரத்து 851 ஓட்டுக்கள்.

இந்த ஆறு தொகுதிகளில் தே.மு.தி.க. வாங்கி ஓட்டுக்கள் இங்கே மாறி இருந்தால், அ.தி.மு.க. 18 தொகுதிகளை வெற்றி பெற வாய்ப்பு. அப்படிப் பார்த்தால், 2009ம் ஆண்டு நடந்தத் தேர்தலில் தி.மு.க. 22, அ.தி.மு.க. 18 என்ற நிலை ஏற்பட்டிருக்கும். இது தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றி இல்லை.

அடுத்து, 2010ம் ஆண்டு பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவு என்ன சொன்னது?

தி.மு.க. : 77,669

பா.ம.க. : 41,285

அ.தி.மு.க.: 26,787

தே.மு.தி.க: 11406

-இதுதான் கட்சிகளின் ஓட்டு பெற்ற நிலவரம்.

அதாவது, தி.மு.க. பெற்ற ஓட்டுக்களை விட எதிர்கட்சிகள் வாங்கிய ஓட்டுக்களை சேர்த்துப் பார்த்தால், 79 ஆயிரத்து 478 ஓட்டுக்கள் வருகின்றன. ஆளும் கட்சிக்கு எதிராக, எண்ணற்ற நல்லத்திட்டங்களை செய்தும், கிட்டத்தட்ட 80 ஆயிரம் ஓட்டுக்கள் எதிராக விழுந்திருக்கின்றன.

இதிலே இன்னொரு விஷயம்தான் முக்கியம். பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு தி.மு.க. செய்த செலவு 46 கோடி ரூபாய். எல்லா நலத்திட்டங்களையும் செய்து 46 கோடி கொடுத்து பெற்ற வெற்றி. இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரியாதது அல்ல.

இந்த நிலைமையில் ஸ்பெக்டரம் ஊழலுடன், குடும்ப சுமை கொண்ட அரசியல் நடத்திக் கொண்டிருந்த கருணாநிதிக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று வெறி பிடித்தது போல பேட்டிக் கொடுக்கிறார் என்றால், அவரை என்னவென்று சொல்வது?

இதையெல்லாம் அறிந்துக் கொள்ள முடியாத சாணக்கியரா நீங்கள் கருணாநிதி?

119 தொகுதிகளில் போட்டியிட்டு, 110 இடங்களை பிடித்துவிடுவோம் என்று உளவுத்துறை சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த சாணக்கியரா நீங்கள் கருணாநிதி?

உங்களை சுற்றி இருந்த அமைச்சர்களே, நம்பிக்கை இல்லாத சூழலிலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்துடும் என்று நீங்கள் உங்களையே தேற்றிக் கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்ட சாணக்கியரா நீங்கள் கருணாநிதி.

சாணக்கியராக இருந்த நீங்கள், 2006ம் ஆண்டு முதல் சறுக்கத் தொடங்கிய விளைவுதான் இது.

அதுவும், பதவி ஆசையில் சக்கர நாற்காலியில் அமர்ந்த போதே நீங்கள் கட்சியிலிருந்து ஒதுங்கி இருந்தால், உங்களை யாரும் ஏமாற்றி இருக்க மாட்டார்கள்.

நீங்களும் ஊழல் குடும்பத்தின் தலைவன் என்ற அவப்பெயர் பெற்றிருக்க மாட்டீர்கள்.

என்ன செய்வது?

அறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சி தி.மு.க. அழியக் கூடாது என்று நினைத்தால்,

முதலில் நீங்கள் தலைவர் பதவியை தூக்கி எறியுங்கள்.

இரண்டாவது கட்சியில் பதவியில் இருக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றுங்கள்.

வேண்டுமானால், ஸ்டாலினை மட்டும் வைத்துக் கொள்ள கட்சியிடம் அனுமதி கேளுங்கள்.

இதை செய்யாவிட்டால், தி.மு.க.வுக்கு, 2016ம் ஆண்டு நடக்கும் அடுத்தத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை இல்லை! இல்லை!

கடைசியாக,

இத்தேர்தலில் தி.மு.க. இன்னொரு பாடத்தையும் உணர வேண்டும். தி.மு.க.வில் உறுப்பினர்கள் இல்லாமல் அபிமானிகளாக வந்த பொதுமக்கள் ஏராளம் ஏராளம். அந்த ஏராளத்தில் இருக்கும் வாக்கு வங்கி என்பது சாதாரணமானது அல்ல. அவர்கள் எல்லாம் தி.மு.க.வை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்றால், தி.மு.க.வில் இருக்கும் குடும்ப ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்பது தான் பெரும்பாலான வாசகர்களின் கருத்துக்களாக இருந்தது.

நன்றி: தமிழ்லீடர்

Thursday, June 2, 2011

மாறனின் தகிடுதத்தங்கள்

ஏர்செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல் தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார்.

இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பி.எஸ்.என்.எல்.லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. கணக்கிட்டுள்ளது.

இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது. இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.

இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.

இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.

ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.

இது குறித்து விசாரித்த சி.பி.ஐ. இது தொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ.

என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து தி.மு.க. தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.

தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன்.

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐ.எஸ்.டி.என். இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களைவிட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச் சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.

டிஜிடல் தகவல்களைக் கொண்டு போய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.

இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசாகூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.

வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

சி.பி.ஐ. இது குறித்து புகார் கூறியும்கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ.

சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும்கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அது குறித்து தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

தயாநிதி மாறன் செய்ததாக கூறப்படும் இந்த பகிரங்க மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நிச்சயமாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி உள்ள நிலையில், ராசாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அவரை பதவியை விட்டே ஓட வைத்த காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு தயாநிதி மாறன் விவகாரத்தில் மட்டும் பெருத்த மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

தயாநிதி மாறனின் குடும்ப வர்த்தக நோக்கத்துக்காக இந்த தனி இணைப்பகம் பயன்பட்டது என்ற மோசடியை சி.பி.ஐ. எப்படி, எதனால் விசாரிக்க நேரிட்டது என்பது தனிக்கதை. அதைத் தெரிந்து கொள்வதற்கு, சில சம்பவங்களை நினைவு கூர்வது அவசியம்.

திமுக தலைவர் மு. கருணாநிதியின் அக்கா பேரனான தயாநிதி மாறன் 2004 ஜூன் முதல் 2007 மே வரையில் மத்திய அரசில் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கருணாநிதி குடும்பத்தில் ஹிந்தி மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்த அவர்தான் கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் இடையில் கண்களாகவும் காதுகளாகவும் - தொடர்பாளராக - செயல்பட்டார். இளமையும் துடிப்பும் மிக்க தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தார். அந்தக் கூட்டணியில் திமுகவின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்பட்டது.

அப்போது மாறன் எவ்வளவு செல்வாக்குடன் திகழ்ந்தார் என்பதற்கு சான்று வேண்டுமா? டி.டி.எச். நிறுவனத்தில் ரத்தன் டாடாவுக்கு இருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பங்கைத் தங்களுடைய குடும்ப நிறுவனத்துக்குத் தர வேண்டும், இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரத்தன் டாடாவையே மிரட்டினார் என்று பேசப்பட்டது. அத்தோடு மட்டும் அல்ல, நான் மிரட்டினேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது என்று கூடுதலாக வேறு மிரட்டியிருக்கிறார்.

அப்படி இருந்த மாறன் திடீரென கோபுரத்திலிருந்து குப்பைமேட்டுக்கு வந்துவிட்டார். எல்லாம் குடும்ப ஊடகங்கள் மிதமிஞ்சிய கர்வத்தில் செய்த கோளாறுதான். தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் யார் என்று வாசகர்களிடையே கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி, அதில் கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க. அழகிரிக்கு மு.க. ஸ்டாலினைவிட செல்வாக்கு மிகவும் குறைவு என்று முடிவை வெளியிட்டது.

இந்த முடிவு வெளியான 9.5.2007-ல் மதுரையில் மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. கலாநிதி மாறனின் தினகரன் பத்திரிகை அலுவலகத்துக்குள் அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி, பொருள்களைச் சேதப்படுத்தி வன்முறையில் இறங்கியது. அதில் அப்பாவிகளான 3 பேர் உயிரிழந்தனர்.


கருணாநிதி உடனே அழகிரிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தயாநிதி மாறனை மத்திய அரசிலிருந்து விலக்கினார். அந்த நேரத்தில்தான் மத்தியப் புலனாய்வுக் கழகம்(சி.பி.ஐ.) தயாநிதி மாறன் தன்னுடைய குடும்ப வியாபார நோக்கத்துக்குப் பயன்படுத்திய இந்த தனி இணைப்பகம் குறித்த தகவல்களைச் சேகரித்தது.

மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2007 செப்டம்பர் மாதமே சி.பி.ஐ. பரிந்துரைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கடந்த 44 மாதங்களாக சி.பி.ஐ. இந்த விஷயத்தில் கும்பகர்ண தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

தயாநிதி மாறன் துறைக்கு ஆ. ராசா அமைச்சரானார். ஆ. ராசாவிடம் ஒப்புதல் பெற்று மேல் நடவடிக்கைக்கு வழி செய்யுமாறு தொலைத் தொடர்புத் துறை செயலருக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியது.

இதற்கிடையே 2009-ல் மக்களவை பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்ததால் கருணாநிதியின் குடும்பத்தில் சமாதானக் கொடி ஏற்றப்பட்டது. மகன்களுக்கும் அக்கா பேரன்களுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தி மீண்டும் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டினார் கருணாநிதி. அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் இக்காட்சியைக் காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது, கண்கள் பனிக்கின்றன என்று உருகினார் கருணாநிதி. ஒரு வேளை சி.பி.ஐ.யின் அந்த கடிதத்தைக் காட்டித்தான் அக்கா பேரன்களை வழிக்குக் கொண்டு வந்தாரோ என்னவோ?

2009 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொலைத் தகவல் தொடர்புத் துறையைப் பெற தயாநிதி மாறன் முயற்சி செய்தார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார், இன்றுவரை அந்தப் பதவியில் நீடிக்கிறார்.

குடும்பத்துக்குள் பூசல் தணிந்துவிட்டபடியால் சி.பி.ஐ. கடிதமும் கவனிக்கப்படாமல் தொலைத் தகவல் தொடர்புத் துறையில் எங்கோ தூங்குகிறது. 2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் காரணமாக 2010 நவம்பரில் ஆ.ராசா பதவியை ராஜிநாமா செய்தார். கபில்சிபல் அத்துறை அமைச்சரானார். அன்றிலிருந்து கபில் சிபலும் சி.பி.ஐ.யின் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சும்மாவே இருக்கிறார்.

ஜவுளித்துறை அமைச்சர் என்ற வகையில் தயாநிதி மாறனும் கபில் சிபலோடு சேர்ந்து மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கிறார். சி.பி.ஐ. கடிதம் எழுதி 44 மாதங்களாகியும் ஒரு நடவடிக்கையும் இல்லை.

எங்காவது ஊழல் நடந்தால் கணமும் தாமதிக்காமல் மிகத் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்று ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டும் யோகாசன குரு பாபா ராம்தேவுக்குக் கடிதம் எழுதுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

தயாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் சோனியா காந்தியோ இன்னமும் ஒருபடி மேலேபோய், ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது - அதாவது மற்றவர்களின் ஊழலை - சகித்துக் கொள்ளவே முடியாது என்பதை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.

ஊழலுக்கு எதிராக சோனியா விடுத்துள்ள போர்ப் பரணியும், காலதாமதம் செய்யாமல் ஊழலை ஒழித்தே தீருவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் செய்துள்ள கர்ஜனையும் நம்மை விலா நோகச் சிரிக்க வைக்கின்றன.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியவரை எதிரில் வைத்துக் கொண்டே இவர்கள் செய்யும் அட்டகாச அறிவிப்புகளைக் கண்டு வேறு என்னதான் செய்வது?

பின்குறிப்பு: தயாநிதி மாறன் கடந்த சில நாள்களில் சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தனித்தனியே சந்தித்து நீண்டநேரம் ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. ஊழல் செய்தவரைப் போலவே இவர்களுக்கும் வெட்கம் இல்லை என்று தெரிகிறது.

நன்றி : தினமணி