மிகவும் தந்திரமான பண விவகாரம் ஒன்றில் போயஸ் கார்டன் கால் வைத்திருப்பதாக அறிய முடிகின்றது. கரணம் தப்பினால் பாதாளத்தில் வீழ்த்திவிடக் கூடிய விவகாரம் இது. அப்படியிருந்தும் இதில் ஏன் காலை விடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
இது நடராஜன் (சசிகலா) தொடர்பான வெளிநாட்டு பண விவகாரம். இன்டர்நேஷனல் கனெக்ஷன் ஜாஸ்தியாக உள்ள, ட்ரிக்கியான விஷயம்.
நடராஜனுக்கும் அ.தி.மு.க.-வுக்கும் தொடர்பு கிடையாது என்றும், சசிகலா விவகாரங்களில் நடராஜன் தலையிட முடியாது என்றும் வெளியே கூறப்பட்டு வந்தாலும், நடராஜனுக்கு கட்சியிலும், ஆட்சியிலும், கார்டனிலும் சகல விதமான தொடர்புகளும் இருந்தது நிஜம். (கட்சியிலேயே இல்லை என்று கூறப்பட்ட நடராஜனை தற்போது கட்சியில் இருந்து நீங்கியிருக்கிறார் ஜெயலலிதா!) அந்தக் குடும்பத்தினரின் பண விவகாரங்களில் பிரதான மூளையாகச் செயற்பட்டதே நடராஜன்தான்.
இவர்களது பண விவகாரம் இரண்டு விதமாக ஹேன்டில் செய்யப்பட்டது. லோக்கலில் வாங்கப்பட்ட சொத்துகள், பினாமி பதிவுகள், எட்சட்ரா விவகாரங்களை எல்லாம் பணத்தை சம்பாதித்த குடும்பத்தினரே கவனித்துக் கொள்ள, வெளிநாட்டு முதலீடுகளைக் கவனித்துக் கொண்டது, நடராஜன்தான்.
இந்த வெளிநாட்டு முதலீடுகள் எப்படி செய்யப்பட்டன? நாங்கள் எழுதப்போவது சிலரை கோபப்படுத்தலாம். ஆனால், ரியல் மேட்டர் நாங்கள் கூறப்போவதுதான். இதை எழுதுவதா வேண்டாமா என்றுகூட நாம் ஒரு தடவைக்கு பல தடவை யோசித்ததுண்டு. எப்படியோ இதில் கூறப்படும் சில விஷயங்கள் சீக்கிரம் வெளியாகத்தான் போகின்றன என்பதால், சில விஷயங்களை எழுதலாம்.
‘நடராஜனின் அரசியல்’ என்று தமிழகத்தில் அறியப்பட்ட அரசியலைவிட, அவரது நிஜ அரசியல் மிக ஆழமானது. நடராஜன் என்ற தனி மனிதர் வீழ்ந்தால், தமிழகத்திலுள்ள முக்கிய ‘இன உணர்வு’ அமைப்புகள் சில ஒரேயடியாக கவிழ்ந்துவிடும் என்ற அளவுக்கு ஆழமானது என்பது உங்களுக்கு தெரியுமா?
நாம் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், விஷயத்தைச் சொல்கிறோம். இன உணர்வு அமைப்புகள் சிலவற்றின் வைட்டமின் ‘ப’னா வழங்குனரே நடராஜன்தான். இவற்றுக்கும், வெளிநாடுகளிலுள்ள ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையேயுள்ள லிங்க்கும் நடராஜன்தான். ஆனால், அதை நீங்கள் எந்த விதத்திலும் நிரூபிக்க முடியாது. காரணம், இதில் தொடர்புடைய பணம் எதற்கும் இந்தியாவில் பதிவுகள் ஏதுமில்லை.
குறிப்பிட்ட சில அமைப்புகள் சட்டமன்றத் தேர்தலில் ஒருவித இன்டைரக்டான காரணம் சொல்லி அ.தி.மு.க.-வை ஆதரித்ததையும், ஆனால், அப்படி ஆதரித்த அமைப்புகளை ஜெயலலிதா பெரிதாக தன்னை நெருங்காதவாறு பார்த்துக் கொண்டதையும் நீங்கள் இந்த இடத்தில் கனெக்ட் பண்ணிப் பார்க்கலாம். தன்னை வலிய வந்து ஆதரித்த சிலருடன் தனது போட்டோ வெளியாவதையே முதல்வர் விரும்பவில்லை என்பதன் பின்னணியிலுள்ள காரணம், அந்த அமைப்பின் பைனான்சிங் எங்கிருந்து வருகின்றது என்பது அவருக்கு தெரிந்திருந்ததுதான்!
இப்போது உங்களுக்கு இதுவரை புரிந்திராத சில விஷயங்கள் புரிந்திருக்கும், இல்லையா? அதை விடுங்கள். அது வேறு விதமான அரசியல். நாம் சொல்ல வருவது என்னவென்றால், நடந்தவை எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு வலுவான காரணம் உள்ளது என்பதைத்தான்.
சசிகலா குரூப்பின் பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படும்போது, நடராஜன் வெளிநாடு செல்ல வேண்டியது அவசியம். அப்போது வெளிநாடுகளில் உள்ள இன உணர்வு அல்லது ஈழ விடுதலை அமைப்புகளின் பேனரில்தான் அவரது பயணம் இருக்கும். கொஞ்சம் ரிவர்சில் போய் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், இது புரியும்.
இந்த வெளிநாட்டு முதலீடு இரு பிரிவுகளாக நடைபெறும்.
முதலாவது, இந்தியாவில் இருந்து அரபு நாடுகள் சிலவற்றுக்கு பணம் செல்லும். தமிழக வி.ஐ.பி. அரசியல்வாதிகளில், கட்சி பேதமின்றி யாரைக் கேட்டாலும் தெரிந்திருக்கக்கூடிய 3 நபர்கள் இந்தக் காரியத்தைச் செய்து கொடுப்பார்கள். குவைத் ராஜா என்பது ஒரு பிரபலமான பெயர். இவர் எல்லா ஆட்சிகளிலும் பணம் அனுப்பிக் கொடுக்கும் நபர்.
மற்றையவர் அப்துல்லா என்று அழைக்கப்படும் ஒருவர் (இவர் இஸ்லாமியரே கிடையாது என்பது வேறு விஷயம்) மூன்றாவது நபர் ஒரு கேரளா முஸ்லிம். அவர் தமிழகத்தை விட்டு வெளியேறி சில வருடங்களாகின்றன. இப்போது அரபு நாடு ஒன்றில் ரெசிடென்ஸ் விசா பெற்று வசிக்கிறார். அரபு எமிரேட்ஸ் மற்றும் கேரளாவில் இருந்து ஆபரேட் பண்ணுகிறார். இந்த நபருக்கு பெயர் கிடையாது. (அதாவது என்னவென்று யாருக்கும் தெரியாது). ‘கேரளா பாய்’ என்றே ஹவாலாக்காரர்கள் அழைப்பார்கள்.
2002-ம் ஆண்டு தொடக்கத்தில், ஸ்ரீலங்காவில் யுத்த நிறுத்தம் அமலுக்கு வந்தது. அப்போது ஈழ விடுதலை அமைப்புகளின் பண விவகாரங்களிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவரை அவற்றைக் கவனித்து வந்தவர்களிடமிருந்து, பொறுப்புக்கள் கைமாறின் புதியவர்கள் டீல் பண்ணத் தொடங்கினார்கள். அப்படியான கட்டத்தில் நடராஜனுக்கு இந்த நெட்வேர்க்குடன் தொடர்பு ஏற்பட்டது.
முதலாவது ஸ்டெப்பாக நெட்வேர்க் மூலம் அரபு நாடுகளுக்கு ஹவாலா முறையில் பணம் செல்வதற்கு நாம் மேலே குறிப்பிட்ட மூவரும் உதவுவார்கள் (ஒன்றாக அல்ல, வெவ்வேறாகத்தான்)
அதன்பின் இரண்டாவது பிரிவினர் அதை டேக்-ஓவர் செய்துகொள்ள, பணம் ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு செல்லும் என்பதுடன் நிறுத்திக் கொள்வோம்.
இந்த விவகாரத்தின் சைட்-கிக், இன உணர்வு அமைப்புகளுக்கு தமிழகத்தில் செய்யப்படும் பைனான்ஸிங். நாம் கேள்விப்பட்டவரை மொத்தம் 5 பார்ட்டிகளுக்கு பணம் போகின்றது. தமிழகத்தில் இன உணர்வாளர்களின் அரசியல் நடத்துவதற்கு நடராஜன் செய்யும் லாபி அபாரமானது. ஆனால், அது வெளியே தெரிவதில்லை. நடராஜனுக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், இதெல்லாம் பொலபொலவென்று சரியும்.
இந்த வலைப் பின்னலுக்குப் பின்னால் இந்திய உளவுத்துறை றோ சிறிதுகாலம் ஓடிப் பார்த்தது. ஆனால், அவர்களால் எந்த முனையையும் பிடிக்க முடியவில்லை. கைவிட்டு விட்டதாக கேள்வி.
சி.பி.ஐ. இதில் தலையை விடாமல், ஒதுங்கியே உள்ளது.
மத்திய உட்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மற்றொரு உளவுத்துறையான ஐ.பி. (The Intelligence Bureau) மட்டும் ஒரு பைல் மெயின்டெயின் பண்ணுகிறது. அவர்களும் எந்தளவில் இதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இப்போது. சசிகலா வெளியேற்றத்தின் பின், சசிகலா குடும்பத்தினர் எந்தளவுக்கு ஆதாயம் அடைந்தார்கள் என்று கண்டுபிடிக்க அதிகாரபூர்வமற்ற ஆபரேஷன் ஒன்று தொடங்கியுள்ளது. நாம் தேலே குறிப்பிட்ட சிக்கலான விவகாரத்தில் பணம் போன பாதைகளைக் கண்டுபிடிக்க, மாநில உளவுப் பிரிவை இறக்கிவிடும் திட்டம் ஒன்று உள்ளதாகத் தெரியவருகின்றது.
இப்போதே சொல்கிறோம், எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மாநில உளவுப் பிரிவால் இதில் ஒரு நூலைக்கூட பிடிக்க முடியாது. வேண்டுமானால், அரபு நாடு வரை போகலாம். ஆனால், பணம் அங்கு இல்லை. மேற்கே சென்றுவிட்டது. அரபு நாட்டுக்கு வெளியே பணம் செல்லும் பாதையில் இத்தாலிய மாஃபியா கனெக்ஷன் எல்லாம் உள்ளது.
“மாநில உளவுத்துறை இதற்குள் ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா?” என்று சர்வதேச உளவு வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த ஒரு வரிப் பதில், “It will be just a harmless joke”
அது உண்மைதான். நம்ம கியூ பிராஞ்ச் ஆட்கள் அணில் ஏறவிட்டு, அண்ணாந்து பார்த்துவிட்டு வரத்தான் முடியும்!
- ரிஷி, விறுவிறுப்பு.காம்