இது மாணவர்களைக் குறைசொல்லும் கட்டுரையல்ல. இன்றைய கல்விமுறை எந்த அளவு தனியார் பெருமுதலாளிகளின் கல்வி வியாபாரத்துக்கு தோன்றாத் துணையாக உள்ளது… பெற்றோர்களின் மூடத்தனம் எந்த அளவு உச்சத்தில் உள்ளது என்பதைச் சொல்லவே!
இத்தனை சிக்கலான சூழலில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்…
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட கல்வியில் முன்னணியில் இருந்தவை சென்னை – வேலூர் மாவட்டங்கள்தான்… தென் தமிழகத்தில் எப்போதும்போல திருநெல்வேலி!
வசதி படைத்த பிள்ளைகளுக்கு ஊட்டி, ஏற்காடு கான்வென்டுகள்!
ஆனால் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு திடீரென கரூர், நாமக்கல் மாவட்டங்களில் கல்வி வியாபாரம் களைகட்ட ஆரம்பித்தது. யாரைப் பார்த்தாலும் அல்லது யார் சொல்லக் கேட்டாலும், எஸ்ஆர்வி, வெற்றி விகாஸ், வித்யா விகாஸ், பாவை, பிஜிபி, எஸ்கேவி, எக்ஸல்… என ஏகப்பட்ட பள்ளிகள்.
இந்த பள்ளிக் கட்டடங்களைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள். ஏதோ பன்னாட்டு தொழிற்சாலை வளாகத்தைப் போல அத்தனை பிரமாண்டம். ஒவ்வொரு பள்ளிக்கும் நான்கைந்து பிராஞ்சுகள் வேறு. நாமக்கல்லில் ஒன்று, ராசிபுரத்தில் ஒன்று, திருச்செங்கோட்டில் ஒன்று, காரமடை சாலையில் ஒன்று என வளைத்து வளைத்து கட்டியிருக்கிறார்கள்.
ராசிபுரம் பாலத்தைத் தாண்டியதும், அருமையான வயல்கள் ஆயிரம் ஏக்கரை வளைத்து மிகப்பெரிய கட்டடத்தைக் கட்டியிருக்கிறார்கள். அந்த பிரமாண்ட கட்டடங்களையொட்டி, பச்சைப் பசேல் நெல் வயல்கள், வேர்கடலை சாகுபடி, கரும்புத் தேட்டங்கள்…
இந்தப் பக்கம் கரூரிலும் இதற்கு நிகராக தனியார் பள்ளிகள். வீனஸ், வேலம்பா, கேவிபி, சேரன்… என அங்கும் 30-க்கும் மேற்பட்ட பெரிய தனியார் பள்ளிகள்.
இன்றைக்கு சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த கல்வி தொழிற்சாலைகளில் போய் தள்ளிவிட்டு வந்துவிடுவதில் குறியாக உள்ளனர். இதற்காக இவர்கள் படும் பாடுகள், சேர்த்த பிறகு இவர்களை அந்தப் பள்ளிகள் படுத்தும் பாடுகள் இருக்கிறதே… கொடுமை!
கடவுள் குறித்த மூடத்தனத்தை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டதைப் போல, இந்தக் கல்வி மூடத்தனத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வரமாட்டாரா என வாய்விட்டுக் கதறுவீர்கள் ஒரு முறை அனுபவப்பட்டால்!
இந்தப் பள்ளிகளில் சேர படும் பாட்டை முதலில் பார்ப்போம்…
கீழ்வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு இவர்கள் வைக்கும் தேர்வைப் பார்த்தால் ஐஐஎம்முக்காக நடத்தப்படும் CAT தேர்வு கூட தோற்றுப் போகும்… அத்தனை ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்ட்டு!!
எட்டாம் வகுப்பு சேர வரும் ஒரு பையனுக்கு வெக்டார்ஸ் பற்றி கேள்வி. அவன் இதற்கு முன் கேள்விப்பட்டிராத பல பாடங்களிலிருந்து தேர்வுத் தாள் தயாரித்திருப்பார்கள். இப்படித் தயாரிப்பது தவறு என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன… தெரியும். ஆனால் இப்படியெல்லாம் கஷ்ட்ட்டமான கேள்வியை வைக்கக் காரணம்… அதிகபட்ச பேரத்துக்காகவே.
உதாரணத்துக்கு…. கரூரில் XXX என்று ஒரு பள்ளி. இதில் உங்கள் பிள்ளையை 9-ம் வகுப்பு சேர்க்க வேண்டும் எனப் போகிறீர்கள். அவர்கள் வைத்த உலக மகா தேர்வில் பையன் தேறாமல் போகிறான். அப்போதுதான் உங்களுக்கு எப்படியாவது இந்த உலகத் தரமான பள்ளியில் பையனை / பெண்ணை சேர்த்துவிட்டால் போதும்… அத்தோடு அவன் வாழ்க்கையே பெட்ரோமாக்ஸ் லைட் போட்ட மாதிரி ஜெகஜ்ஜோதியாக இருக்கும் என்று தீர்மானித்து விடுகிறீர்கள்.
அடுத்து உள்ளூரில் உள்ள ஏதாவது ஒரு கட்சிப் பிரமுகரிடம் போவீர்கள்… ‘நான் இன்னார்… என் பக்கத்துத் தெருவில் உங்க கட்சி வட்டச் செயலாளர் எனக்கு வேண்டப்பட்டவர்… என் பையனுக்கு சீட் வேணும்… கொஞ்சம் பாத்துப் பண்ணிக்குடுத்தா நல்லாருக்கும்….’ என கெஞ்ச ஆரம்பிப்பீர்கள்.
அவரும் அங்கிருந்து போன் செய்வார்…. ‘நம்மாளுதாங்க… கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க’ என்பார். உடனே நம்பக்கம் திரும்பி, செலவு கொஞ்சம் ஓவரா ஆகும்… ஓகேன்னா தரச் சொல்றேன். எனக்கு எதுவும் நீங்க தர வேண்டாம்… ஸ்கூல்ல கேக்குறதைக் கொடுத்துடுங்க,” என்பார்.
“ஆகட்டும் சார்…. எப்படியாவது புரட்டி கட்டிடுவேன்..”
பையன் அப்போதே எஞ்ஜினீயர் அல்லது டாக்டராகி கால் மேல் கால்போட்டு சம்பாதிக்கும் கனவில் மூழ்கிவிடும் பெற்றோர், கடன் வாங்கி, நகையை விற்று எட்டாம் வகுப்புக்கு மட்டும் விடுதிக்கும் சேர்த்து 6 மாதங்களுக்கு கட்டும் கட்டணம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் வரும். அடுத்த ஆறு மாதங்களுக்கு இன்னொரு 60 ஆயிரம். புத்தகம் – சீருடைக்கு தனியாக சில ஆயிரங்கள். அப்புறம் அந்தப் பிள்ளையை விடுதியில் சேர்க்கும் முதல் நாளன்று, ஏதோ தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு சீர் செய்வது போல கட்டில், மெத்தை, தலையனை, வாளிகள், பெட்டிகள், தின்பண்டங்கள்…
ப்ளஸ் ஒன் சேரும் பிள்ளை / அல்லது பையனுக்கு இந்த செலவு இருமடங்காக இருக்கும்.
அதன் பிறகு வாரம் ஒரு முறை சென்னையிலிருந்தோ மதுரை – கோவையிலிருந்தோ போய் வந்துகொண்டிருக்க வேண்டும். எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கும். பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வரும்வரை.
அதன் பிறகு பள்ளிகள் காட்டும் சுயரூபம் வேறு மாதிரி இருக்கும்.
அதுவரை உங்கள் பையன் நன்றாகப் படிக்கிறான். திருப்திகரமான மதிப்பெண்… என்றெல்லாம் தொடர்ந்து வீட்டுக்கு கடிதங்கள் வரும் பள்ளி தாளாளரிடமிருந்து. அரையாண்டு தேர்வு முடிவு வந்ததும்… இந்த கடிதத்தின் தொனி தலைகீழாக மாறிப் போகும்!
‘அவசரம்… உடனே வந்து தாளாளர், செயலர் அல்லது தலைமையாசிரியரைப் பார்க்கவும்’ என்று ஒற்றை வரியில் தந்தி வரும்… செல்போன், இமெயில் சமாச்சாரங்கள் பெருகிவிட்ட இந்த நேரத்திலும், இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் தந்தியைத்தான் உபயோகிப்பார்கள் இந்த படுபாவிகள். உளவியல் தாக்குதல்!
தூக்கம் தொலைத்து அடித்துப் பிடித்துக் கொண்டு நாமக்கல்லுக்கோ கரூருக்கோ மட்ட மத்தியானம் போய் நின்றால்.. ‘என்னங்க இவ்ளோ லேட்டா வர்றீங்க… கரஸ்பாண்டன்ட் வீட்டுக்குப் போயிட்டார்… திரும்ப நாளைக்குதான் வருவார்… எதுக்கும் நான் தகவல் சொல்றேன்… மாலையில் ஒரு வாட்டி வந்து பாருங்க’ என்பார் அங்குள்ள உதவியாளர். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது அப்படி. அவரைத் திட்டி என்ன ஆகப் போகிறது. மாலை வரை பிள்ளையோடு பேசலாமா என்றால்… ‘ம்ஹூம், அவர்களுக்கு வகுப்பு இருக்கிறது. விசிட்டிங் அவர்ஸ் கிடையாது. நாளைக்குதான்,’ என்பான் கிராதகன்.
இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்து என்னத்தடா கிழிச்சிங்க என்று கேட்கும் திராணியின்றி, கரூர் அல்லது ராசிபுரத்தில் உள்ள லாரி ஷெட்டுகள், பெட்ரோல் பங்குகள், புழுதி பறக்கும் பஸ் நிலையங்களைப் பராக்குப் பார்த்துவிட்டு மீண்டும் மாலையில் போனால், அமர்த்தலாக உட்கார்ந்திருப்பார் கரஸ்பாண்டன்ட்!
தயங்கிக் தயங்கி பெற்றோர் உள்ளே நுழைந்ததும், அந்த ஆண்டிறுதி நாடகத்தின் அதிரடி க்ளைமாக்ஸை இப்படி ஆரம்பிப்பார் அந்த ஆசாமி!
எதிரில் உள்ள லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இப்படியும் அப்படியும் தட்டிக் கொண்டு, உதட்டை நான்கு முறை சுழித்து… “ம்ம்… என்னங்க இது… உங்க பிள்ளை இப்படி கவுத்திட்டானே… ரொம்ப மோசம்… தேர்றது கஷ்டம்.. ம்ம்… என்ன பண்ணப் போறீங்க… எங்க ரிசல்ட்டையே கெடுத்துடுவான் போலிருக்கே… வெளிய அனுப்பிடலாம்னு செக்ரட்டரி கூட சொல்றார்… எங்க ஸ்கூல் பேருதான் முக்கியம்… ”
“சார் சார்… என்ன சார் இப்படி சொல்றீங்க… நீங்கதானே சொன்னீங்க… எப்படி படிச்சாலும் பரவால்ல நாங்க குறைஞ்சது 1000 மார்க்குக்கு உத்தரவாதம்னு… இப்படி சொன்னா எப்படி… அவனைத்தான் நம்பியிருக்கோம்… என்ன வேணும்னாலும் செய்யறோம்” என்ற கதற ஆரம்பிப்பார்கள் பெற்றோர்.
வழிக்கு வந்துவிட்டார்கள் என்பது புரிந்ததும், அடுத்த அதிரடியை சாவகாசமாக ஆரம்பிப்பான் அந்த கிராதகன்!
“சரி.. ஒரே ஒரு வழியிருக்கு. நீங்க என்ன பண்றீங்க… ஒரு நாலு மாசம் உங்க பையன் / பெண்ணை கூட்டிட்டுப் போய், பக்கத்துல எங்காவது ஒரு ரூம் எடுத்து தங்கி பார்த்துக்க முடியுமா… கூடவே ட்யூஷனுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. ஒவ்வொரு சப்ஜெக்டும் தனித்தனியா இந்தப் பள்ளி் ஆசிரியர்களே கூட இருக்காங்க. இதுக்கு நீங்க தயாராக இருந்தா சொல்லுங்க..”
-’அடப்பாவி… அட்மிஷனப்போ நீ சொன்னதென்ன… இப்போ பேசறதென்ன… சென்னையிலிருந்து வேலையை விட்டுட்டு, நாங்க நாலு மாசம் இங்க தங்கியிருக்க முடியுமா…. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லியாடா’ -என்று கேட்கும் தைரியமோ, அதற்கான யோசனையோ கூட இல்லாமல் மண்டையை ஆட்டுவார்கள் பெற்றோர்கள்.
அடுத்த வாரமே, ஹாஸ்டலிலிருந்து மீண்டும் தனி வீட்டுக்கு மாறுவார்கள் மாணவர்கள். ஏதோ ஒரு பையனுக்கு, அல்லது பெண்ணுக்கு இந்த நிலை என்று நினைத்துவிட வேண்டாம். தொன்னூறு சதவீதத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகளுக்கு இதே ட்ரீட்மெண்ட்தான்.
ராசிபுரத்தைச் சுற்றிச் சுற்றி எக்கச்சக்கமாய் புதுப் புது ப்ளாட்கள் முளைத்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு கையில் பையனை அல்லது பெண்ணை அழைத்துக் கொண்டு ராசிபுரம் தெருக்களில் பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்து பாருங்கள்… ‘வாங்க சார்.. ஸ்டூடன்ட்டா…. வீடுவேணுமா… சிங்கிள் பெட்ரூம்… ரூ 7000 வாடகை… டபுள் பெட்ரூம் கூட இருக்கு… அதுக்கு ரூ 10000 ஆகும். ஓகேவா?’ என்று அடுத்தடுத்து குரல்கள் கேட்கும்.
ஏதோ ஒரு வீட்டைப் பிடித்து, இவர்களுக்காகவே ப்ளாக்கில் விற்கும் கேஸ் கனெக்ஷன் வாங்கி தற்காலிக தனிக்குடித்தனத்தை அங்கு ஆரம்பித்தாக வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிவரை போய் வர ஷேர் ஆட்டோ உண்டு!
அடுத்து ட்யூஷன்… ஒரு பாடத்துக்கு ரூ 6000. தமிழ் தவிர மற்ற 5 பாடங்களுக்கும் சேர்த்து ரூ 30000!
ஒரு நான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான்… எல்லாமே பக்கா செட்டப் என்பது புரியும். மாணவனை வெளியில் அனுப்பும் பள்ளி, வீடுதரும் ‘பினாமி ஹவுஸ் ஓனர்கள்’, ட்யூஷன் எடுப்பவன், கேஸ் விற்பவன், ஷேர் ஆட்டோ ஓட்டுபவன், எல்லாருக்குமிடையே ஒரு பிரிக்கமுடியாத உறவு இருப்பது புரிய வரும்…
புரிந்து என்ன பயன்… பல்லைக் கடித்துக் கொண்டு கடைசி தேர்வு வரை ராசிபுரம் வாசியாகவே, கரூர்வாசியாகவோ காலத்தைத் தள்ளுவார்கள் பெற்றோர்.
ரிசல்ட் நாளன்று பையன் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்ததைக் கொண்டாட வாயில் ஸ்வீட்டை வைக்கும்போது, நடந்ததை நினைத்தால் ரொம்பவே கசக்கும்!
இது யாரோ ஒருவரின் தனிப்பட்ட அனுவபம் அல்ல… பலரது அனுபவங்களின் சாம்பிள்!
எனக்குத் தெரிந்த ஒரு அரசு மருத்துவர் தனக்கு நேர்ந்தே இதே அனுபவத்தைச் சொல்லி முடித்தபோது அழுதேவிட்டார்!
ஒரு முறை ராசிபுரத்தின் அந்த பிரபல பள்ளிக்குச் சென்றிருந்தோம் உறவுக்கார பெண்ணைக் காண.
பள்ளி ஹாஸ்டல் பகுதி கட்டடத்தின் ஓரத்தில் எங்கள் காரை நிறுத்தினோம். ஒரு சில நிமிடங்களுக்குள் ஒரு பெரும் மாணவிகள் கூட்டம் அத்தனை ஜன்னல்களிலும் எட்டிப் பார்த்தது.
‘அங்கிள் டிசிதானே வாங்க வந்தீங்க… தயவு செய்து கூட்டிட்டுப் போயிடுங்க… நேத்துகூட மூணு பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்க… ஒரு பெண் தற்கொலை பண்ணிக்குச்சு. எங்க பேரன்ட்ஸுக்கு தகவல் சொல்ல முடியுமா… இந்த நம்பருக்கு கொஞ்சம் போன் பண்றீங்களா…’ என்று அடுத்தடுத்து கேட்டு துண்டுச்சீட்டுகளைத் தூக்கி எறிந்தனர். உடனே வாட்ச்மேன் ஓடிவர, அந்த மாணவிகள் தலைகள் மாயமாகிவிட்டன.
அந்த சீட்டுகளை எடுத்துக் கொண்டோம்.
கலாய்க்கிறார்களா… கவலையில் சொல்கிறார்களா என்று தெரியாமல் பள்ளி வளாகத்துக்கு வெளியே இருந்த ஒரு கடையில் பேச்சுக் கொடுத்தோம்…
“ரொம்ப கொடுமை நடக்குது சார்… இப்ப துண்டுச் சீட்டு வீசின பசங்கள்லாம் தனியா வீடு எடுத்து படிக்க முடியாத நிலையில் உள்ளவங்க. அவங்களை படுத்தி எடுப்பாங்க இந்த பள்ளியில். ஏன் இன்னும் வெளிய போகாம இருக்கீங்க… போங்க என்பார்கள். ஆனால் அவங்க பேரன்ட்ஸால வர முடியாததால மாணவ மாணவிகளுக்கு வேறு வழி தெரியாம இந்தக் கொடுமையை சகிச்சிட்டு படிக்கிறாங்க…” என்றபோது, அதிர்ந்து போனோம்.
இரண்டு நம்பர்களுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னபோது, ‘ஆமா சார், எங்களையும் தனி வீடு பார்க்கச் சொன்னாங்க. ராமநாதபுரத்தில் இருந்து வந்து அப்படியெல்லாம் பாத்துக்க முடியல. ‘பிள்ளைகளை 1000 மார்க் வாங்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. கடைசி நேரத்தில் எங்களை நிர்பந்தம் செஞ்சா எப்படி?’ன்னு கேட்டுட்டுதான் வந்தோம். பெயிலானா எங்களைக் குறை சொல்லாதீங்கன்னு சொல்லி அதோட விட்டுட்டாங்க. எதுக்கும் வந்து பாக்குறோம் சார்,” என்றார்கள். வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை!
‘என்னங்கடா நடக்குது… இந்த கொள்ளைக்காரனுங்களை தட்டிக்கேட்க ஆளே இல்லையா?’
ம்ஹூம்… இல்லை!
-வினோ
நன்றி: என்வழி