Friday, August 6, 2010
ஒரு காவல் கதை - என்கவுன்டர்
கசங்கிய அழுக்கேறிய சட்டை. பரிதாபமான தோற்றத்தோடு ஆட்டுக்கால் சூப் விற்றுக் கொண்டிருந்தவரின் அருகே சூப் குடித்துக் கொண்டு கூட்டம் நிற்கத்தான் செய்தது. அவரின் தோற்றம் அழுக்காய் இருந்தாலும், அவர் விற்கும் சூப் சுவை குறைந்து விடுமா என்ன ?
நான்கு சக்கரங்கள் பொருத்திய வண்டிக் கடையில் சூப் வியாபாரம் செய்து கொண்டிருந்த முனியாண்டிக்கு வயது அறுபது இருக்கும். முகத்தில் முதுமையின் சாயல்கள் நன்றாகவே தெரிந்தன. இருபது வருடங்களாக அன்றாட உணவுக்காகவே போராட்டம் நடத்திய களைப்பு அவரின் தோற்றத்தில் தெரிந்தது.
‘என்ன பெரிதாக வந்து விடப்போகிறது சூப் விற்பதில் லாபம் ?’ ஆனால் முனியாண்டிக்கு வேறு தொழில்கள் செய்து பழக்கமில்லை. சுவையான சூப் கிடைக்கும் என்ற பெயர் பரவி விட்டதால் இவர் கடையை தேடி வந்து சூப் சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆனாலும் தொழிலை விஸ்தரிக்கும் அளவுக்க பெரிதாக வருமானமில்லை.
சூப் குடிக்க வருபவர்களின் உறவு, முனியாண்டியிடம் சூப்புக்கு காசு கொடுப்பதோடு முடிந்து விடும் அல்லவா ? வேறு என்ன உறவு இருக்க முடியும் ? அவருக்கு பொருளாதார உதவி செய்து அவரது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் வராததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அவரவர் வாழ்க்கையை போராட்டமாக இருக்கும் போது, சூப் விற்பவனின் வாழ்க்கையை பற்றி யோசிக்க யாருக்கு நேரம் இருக்கிறது.
“அய்யா நம்ம பாண்டிய போலீஸ் சுட்டுக் கொன்னுடுச்சுய்யா“ என்று அலறியபடி வெங்கடேசன் ஓடி வந்ததைப் பார்த்து முனியண்டிக்கு நெஞ்சில் கடப்பாறையை இறக்கியது போல இருந்தது. தடுமாறி விழப் போனவரை அருகே சூப் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பிடித்துக் கொண்டனர்.
“ அய்யா வேணான்டா. சொல்றதக் கேளுடா. ஒன் வாழ்க்கையே தெச மாறிப் போயிடுண்டா“ என்று பாண்டியிடம் முனியாண்டி மன்றாடியபோது, 25 வயதுப் பாண்டி “வாய மூடுப்பா. போலீஸ் என்னவோ கண்டுபிடிச்சு மயிறப் புடுங்கிடுவாங்கன்ன…“ “இப்ப பாத்தியா ? இன்னையோட இருபது நாளாகுது. தெனாவட்டா ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கானுங்க. என்னப் பாத்து பொட்டப் பயன்னு நெனைக்க மாட்டான் ? “
இந்த காரசார விவாதத்தின் பின்னணி, பாண்டியின் தம்பி, முனியாண்டியின் இளைய மகனின் மரணம். பாண்டியின் தம்பி முருகன், ஒரு சில்லரைத் தகராறில் 35 இடங்களில் வெட்டுப் பட்டு சாலை முழுக்க தன் ரத்தத்தை சிதற விட்டுப் பிணமானான்.
கொலைகாரர்களை போலீஸ் கைது செய்யாமல் உலவ விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆத்திரத்தில்தான் முனியாண்டியிடம் வாதம் செய்து கொண்டிருந்தான் பாண்டி.
“அவனுங்கள பழிக்குப் பழி வாங்குனாத்தான் என் மனசு ஆறும்ப்பா. நான் சும்மா விடமாட்டேன். “ என்று கறுவியபடி வெளியே சென்றான் பாண்டி. ஓரு பத்து நாள் போனா சரியாயிடும் என்று மனதிற்குள் முனகிக் கொண்டே, மாலை சூப் கடை வைப்பதற்கான ஆயத்தங்களில் இறங்கினார் முனியாண்டி.
இரண்டு நாட்களில் தன் மகன் பாண்டி, இளைய மகனின் கொலைக்கு காரணமான இரண்டு பேரை சந்தையில் வைத்து கொலை செய்தான் என்ற செய்தி முனியாண்டியை மனம் உடைந்து போகச் செய்தது. அத்தோடு, பாண்டியின் உறவை முறித்துக் கொண்டு, அவனோடு பேசுவதை நிறுத்தி விட்டார் முனியாண்டி.
குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டு, சேலம் சிறையில் இருந்த பாண்டிக்கு சிறைக்குள் நட்பு வட்டாரம் பெருகியது. “அண்ணே, வெளியப் போனதும், இந்த சம்பவத்த செஞ்சு குடுங்கன்னே. தலைவரு நல்லா கவனிச்சுக்கிடுவாரு. “ என்று அடுத்த கொலைக்கான அச்சாரம் கிடைத்த போது, இயல்பாக ஏற்றுக் கொண்டான் பாண்டி.
பணம் கொட்டியது. பெரிய மனிதர்களின் சகவாசம் கிடைத்தது. புதிதாக சுமோ ஒன்று வாங்கினான். வெளியே எங்கு சென்றாலும் பத்து பேர் இல்லாமல் செல்வதில்லை. சுமோ சீட்டுக்கு கீழே பத்து இருபது வீச்சரிவாள்கள் இருக்கும். சிறையில் ஏற்பட்ட பழக்கத்தை வைத்து, புதிதாக கைத்துப்பாக்கி ஒன்று வாங்கினான். போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக பேசத் தொடங்கினர்.
“பாண்டி. அய்யா வீட்டுல பங்ஷன் வச்சுருக்காரு. பாத்து கவனிச்சுக்கிட்டன்னா, பின்னாடி யூஸ் ஆகும்“ என்று தல்லாக்குளம் ரைட்டர் வந்து சொன்னபோது, அருகில் இருந்த எடுபிடியை அழைத்து, ரெண்டு லட்ச ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.
பாண்டி வற்றாத அமுத சுரபியானான்.
கழுத்தில் 8 பவுனக்கு தங்கச் சங்கிலி. பாண்டியின் சுமோ வந்தால் என்னமோ ஏதோ என்று மதுரை மக்கள் அலறுகிற அளவுக்கு பிரபலமானான். மதுரை தாண்டி, தமிழகம் முழுவதும் பாண்டியின் புகழ் பரவியது. இரண்டு ஸ்கார்ப்பியோக்கள், நான்கு சுமோக்கள் என்று பெரிய பணக்காரனைப் போல பாண்டி வலம் வந்தாலும், முனியாண்டி தள்ளு வண்டியில் சூப்தான் விற்றுக் கொண்டிருந்தார். தன் பேச்சைக் கேட்காக மகனிடம் பேச மாட்டேன் என்று அப்படி ஒரு பிடிவாதம்.
“அண்ணே வக்கீல் லயன்ல இருக்காருன்னே. “
“எந்த வக்கீல்டா“
“நம்ம சேகர் சாருன்னே“
“குடு“
“என்ன பாண்டி நல்லா இருக்கியா ? “ என்று நலம் விசாரித்த சேகர், பிரபலமான வக்கீல். பெரிய தலைவர்களுக் கெல்லாம் வக்கீலாக இருப்பவர்.
“நல்லா இருக்கேன்னே. நீங்க நல்லா இருக்கீங்களா ? “
“இருக்கேன். இருக்கேன். ஒரு சம்பவம் செய்யணுமே ! “
“சின்னதா பெரிசாண்ணே ? “
“ஒனக்கு எது பெருசு ? நீ நெனச்சா எல்லாம் சின்னதுதான். “
“சொல்லுங்கண்ணே. “
“ கே.கே.நகர்ல ஒருத்தன் இருக்கான். குமார்னு பேரு. எதுக்கும் மசிஞ்சு வர மாட்டேங்குறான். தலைவரையே எதுத்துப் பேசிட்டான்னா பாரேன்.“
“மெறட்டிப் பாக்கட்டான்னே ? “
“அதெல்லாம் ஒத்து வர மாட்டான் பாண்டி. சம்பவம் செஞ்சடுன்னு நான் சொல்றேன்னா, காரணம் இல்லாமயா இருக்கும் ? ஐஞ்சு ரூபா கொடுத்துடுறேன். யாராவது பசங்கள அனுப்பு. இன்னைக்கே அனுப்பு“
“சரிண்ணே“
கே.கே.நகரில் பட்டப் பகலில், அந்தப் படுகொலை நடந்த போது, நகரமே ஆடித்தான் போனது. அந்தக் குமார் நடு வீதியில் இறந்து கிடந்ததைப் பார்ப்பது யாராக இருந்தாலும் பயத்தை கட்டாயம் ஏற்படுத்தும் வகையில் அந்தக் கொலை நடந்தது.
காலப் போக்கில் வக்கீல் சேகருக்காக மட்டும் ஐந்து கொலைகள் செய்தான் பாண்டி. போலீசின் தேடுதல் வேட்டை தீவிரமாகவும், சிறிது நாட்கள் ஆந்திராவுக்குச் சென்று விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே, சேகரிடமிருந்து அழைப்பு.
“பாண்டி… என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்“
“இல்லண்ணே. போலீஸ் டார்ச்சர் தாங்க முடியலே. அதான் ஆந்திராவுக்குப் போய் ரெண்டு மாசம் இருந்தேன். “
“பாண்டி, அயனாவரத்துல ஒரு சம்பவம் செய்யணும். “
“அண்ணே. போலீஸ் டார்ச்சர் ரொம்ப அதிகமாயி டுச்சுண்ணே. கொஞ்ச நாள் அப்ஸ்காண்டிங்ல இருக்கலாம்ணு பாக்கறேன். ஒரு ஆறு மாசம் போகட்டும்ணே. “ என்றதை சேகர் ஏற்கவில்லை.
“என்னா பாண்டி. இருவது வருஷமா ஃபீல்டுல இருக்க. நீயே இப்படி சொன்னா எப்படி ? அவசரம்னு தானே ஒங்கிட்டே வர்றேன்“
“இல்லண்ணே. சூடு கொஞ்சம் தணியட்டும். யாரோ புது டிஜிபி போட்ருக்காங்கள்லாம். ரொம்ப ஸ்டிட்டாமே ? “
“பாண்டி. நாந்தான் பாத்துக்கறேன்றேன்ல. எதுக்கு கவலப் பட்ற ? “
“இல்லண்ணே. கொஞ்ச நாள் போகட்டுண்ணே. அப்பொறம் நானே சம்பவம் செஞ்ச குடுக்கறேன். “ என்று சொல்லி விட்டு, லைனில் காத்திருக்காமல் பாண்டி போனை கட் பண்ணியது சேகரை ரொம்பவே ஆத்திரப் படுத்தியது.
ரவுடிப்பய… …. என்ன திமிரு இவனுக்கு என்று மனதிற்குள் கறுவினார் சேகர்.
பாண்டியின் இருப்பிடம் பற்றி கண்ட்ரோல் ரூமுக்கு வந்த அநாமதேய அழைப்பை
அடுத்து, பாண்டி தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தது போலீஸ்.
மதுரையில் பிடிக்கப் பட்ட பாண்டியும், அவன் கூட்டாளியும் ரகசியமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
“ யோவ் நந்தகோபால். எங்கய்யா இருக்க ? “ என்ற உயர் அதிகாரியின் குரலைக் கேட்டதும் விறைப்படைந்தார் இன்ஸ்பெக்டர் நந்தகோபால்.
“சார். ரவுண்ட்ஸ்ல இருக்கேன் சார். “
“சரி. பாண்டிய செக்யூர் பண்ணி க்யூ ப்ரான்ச் சேப் ஹவுஸ்ல வச்சிருக்காங்க. யூ டேக் ய டீம் வித் யூ. டேக் கஸ்டடி ஆப் ஹிம் அன்ட் பினிஷ் ஹிம். டோன்ட் லீவ் எனி ட்ரேசஸ் அன்ட் தேர் ஷுட் நாட் பி எனி மிஸ்டேக்ஸ். யூ அண்டர்ஸ்டேன்ட் ? “ என்றதற்கு “எஸ் சார். வெரி வெல் சார்“ என்ற பதிலளித்து விட்டு, உயர் அதிகாரி இணைப்பை துண்டிக்கும் வரை காத்திருந்தார் நந்தகோபால்.
பழைய மகாபலிபுரம் சாலையில், சென்னையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஆளரவமற்ற தனிமையான பங்களாவுக்கு, தன்னுடன் ஒரு எஸ் ஐயும், இரண்டு ஏட்டுக்களையும் அழைத்துக் கொண்டு எங்கே என்று சொல்லாமல் புத்தம் புதிய பொலீரோ ஜீப்பில் கிளம்பினார் நந்தகோபால். மறக்காமல் பிஸ்டலை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார்.
இரவு 12 மணியைத் தாண்டியிருந்ததால் ரோட்டில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஏற்கனவே அந்த பங்களா வாசலில் வேறோரு ஜீப் நின்று கொண்டிருந்தது.
பங்களா வாசலில், இடுப்பில் பிஸ்டலை மறைத்து வைத்திருந்த சபாரி அணிந்த ஒருவர், நந்தகோபாலைப் பார்த்ததும் விறைப்பாக சல்யூட் அடித்தார்.
“சார். சிசிபிலேர்ந்து இன்ஸ்பெக்டர் அஷோக்கும், அவரோட டீமும் வந்துருக்காங்க சார். அக்யூஸ்ட் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கான் சார் என்ற அந்தக் காவலரின் பேச்சுக்கு தலையசைத்தபடி முதல் மாடி ஏறினார் நந்தகோபால்.
கால்களில் சங்கிலி போட்டு ஜன்னல் கம்பியோடு இணைக்கப் பட்டு தரையில் உட்கார்ந்திருந்தான் பாண்டி. இவனா இவ்ளோ பெரிய ரவுடி என்று மனதிற்குள் ஏற்பட்ட எண்ணத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அவன் செயின ரிலீஸ் பண்ணுங்கைய்யா“ என்று யார் என்று குறிப்பிடாமல் பொதுவாகச் சொன்னதை தங்களிடமே சொன்னது போல பாவித்து, மூன்று கான்ஸ்டபிள்கள் வேகமாக ஓடி, பாண்டியை ஜன்னலோடு பிணைத்திருந்த சங்கிலியை மட்டும் அவிழ்த்து, அந்தச் சங்கிலியின் இன்னொரு முனையை கையில் பிடித்துக் கொண்டார்கள். பாண்டியின் கைகள் பின்னால் கைவிலங்கிடப் பட்டன. பாண்டியோடு கூட இருந்தவனும், அதே போல கட்டப் பட்டான். பாண்டியும் அவன் கூட்டாளியும் பொலீரோ ஜீப்பின் பின்புறம் தரையில் உட்காரவைக்கப் பட்டனர்.
“சார் ரிமாண்டா சார்“ என்று பாண்டி கேட்டதை நந்தகோபால் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. நள்ளிரவில் ஜீப்பில் அழைத்து செல்வதைக் கண்டதும் பாண்டிக்கு லேசாக புரிய ஆரம்பித்தது.
“சார். என்கவுன்டரா சார். ரிமாண்ட் பண்ணிடுங்க சார். குண்டாஸ் கூட போடுங்க சார். என்கவுன்டர் வேண்டாம் சார். ரெண்டு பொண்டாட்டி சார் எனக்கு. கெஞ்சிக் கேக்கிறேன் சார்.“ என்ற பாண்டியின் எந்த புலம்பல்களையும், நந்தகோபால் காதில் விழாதது போல அமைதியாக இருந்தார்.
பாண்டி கூட இருந்தவன் “அய்யோ சார் விட்டுடுங்க சார்“ என்று கத்த ஆரம்பித்தான். பிஸ்டலை எடுத்து அவன் நெற்றிப் பொட்டில் வைத்த நந்தகோபால் “சத்தம் வந்துச்சு, இங்கேயே சுட்டுடுவேன்“ என்று கூறியதற்குப் பிறகு, மூச்சு சத்தம் கூட வரவில்லை.
ஆளரவமற்ற குறுக்கு சாலையில் வண்டி நிறுத்தப் பட்டது. “எறக்குங்கய்யா அவங்க ரெண்டு பேரையும்“ என்ற உத்தரவைக் கேட்டதும், ஜீப்பின் பின் கதவு திறக்கப் பட்டு, இரண்டு பேரும் இறக்கப் பட்டனர். ஜீப் என்ஜின் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது.
ஜீப்பின் லைட் வெளிச்சத்திற்கு இரண்டு பேரும் அழைத்து வரப்பட்டனர். “அய்யா. தயவு செஞ்சு விட்டுடுங்கய்யா. அய்யா கெஞ்சிக் கேக்குறோம்யா.. விட்டுடுங்கய்யா “ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிஸ்டலை எடுத்து இரண்டு பேரின் நெஞ்சிலும் சுட்டார் நந்தகோபால்.
இருவரின் உடலையும் பொலீரோ ஜீப்பில் ஏற்றி, கிழக்கு கடற்கரைச் சாலைக்கு நந்தகோபால் சென்ற போது, அங்கே, சிசிபி இன்ஸ்பெக்டர் ஒரு புதிய ஸ்கார்ப்பியோ ஜீப்பை, பாதி சாலை மீதும், பாதி சாலையை விட்டு இறக்கியும் நிறுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்.
“என்ன சார் முடிஞ்சுதா ? “
“ம். ஓவர். பாடிய எந்தப் பொசிஷன்ல வைக்கலாம் ? “
“சார். ஸ்கார்ப்பியோ லேர்ந்து, ஒரு டென் ஃபீட் தள்ளி வைக்கலாம் சார். அப்போதான் அட்டாக் பண்ணிட்டு ஓடுன மாதிரி இருக்கும்“
“ஆல்ரைட். அப்படியே பண்ணிடுங்க. கமிஷனருக்கும் கண்ட்ரோல் ரூமுக்கும் நான் இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துடுறேன்“ என்று செல்போனை எடுத்தபடி ஓரமாகச் சென்றார் நந்தகோபால்.
பாண்டியின் உடலையும், அவன் கூட்டாளியின் உடலையும், ஓடிப் போய் விழுந்தது போல உத்தேசமான ஒரு வாகில் கிடத்தி விட்டு, நந்தகோபால் அருகில் சென்று “சான் எவ்ரிதிங் ஓவர் சார்“ என்று கூறினார் சிசிபி இன்ஸ்பெக்டர்.
“குட் வொர்க்“
“சார். கேலன்ட்ரி மெடல் இல்லேன்னா ஆக்சலரேட்டட் ப்ரோமோஷன் கெடைக்குமா சார்“
“ஒண்ணும் ப்ராப்ளம் இல்லேன்னா கெடைக்கும். இந்த ஹ்யூமன் ரைட்ஸ் தேவடியாப் பசங்க ஏதாவது கூப்பாடு போட்டுகிட்டு இருப்பானுங்க. அதான் பிரச்சினை. இல்லேன்னா கமிஷனரே, ஹோம் செக்ரட்ரிகிட்ட பேசி வாங்கித் தந்திடுவாரு“
“பிரபல ரவுடி சுட்டுக் கொலை. கூட்டாளியுடன் போலீசைத் தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சிக்கையில் என்கவுன்டிரில் கொலை“ என்று தலைப்புச் செய்திகள் அலறின. சம்பவ இடத்தை பார்வையிட்ட கமிஷனர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “போத் ஆர் நொட்டோரியஸ் ரவ்டீஸ். அவங்க ரெண்டு பேரும், வச்சிருந்து துப்பாக்கிய எடுத்து ஃபயர் பண்ண ட்ரை பண்ணாங்க. நம்ப காப்ஸ் செல்ப் டிஃபென்ஸ்ல சுட்டதுல, போத் டைட்“
ப்ரெஸ் மீட் முடிந்ததும் கிடைக்கப் போகும் கவரை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு நிருபர் “சார் ரெண்டு பேர் மேலயும் எத்தனை கேஸ் இருந்துச்சு“ என்று கேட்டதற்கு, “போத் வேர் வெரி டேஞ்சரஸ். தே ஹேவ் மோர் தன் 20 கேசஸ்“ என்று கூறி விட்டு, ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.
பாண்டி இறந்ததிலிருந்து ஒரு வாரம் சூப் கடை போடவில்லை முனியாண்டி. வீட்டில் சோகம் வெளியேறாமல் சுவர்களெங்கும் ஒட்டிக் கொண்டிருந்தது. உதவி கமிஷனர் முராரி அழைப்பதாக ஒரு போலீஸ்காரர் முனியாண்டியை காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.
முனியாண்டியை எதிரில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார் முராரி.
“இந்தா பாருங்க பெரியவரே. நாளைக்கு ஆர்டிஓ விசாரணை இருக்கு. பத்மான்னு ஒரு
ஆர்டிஓ உங்கள விசாரிப்பாங்க. அங்க போய் கண்டதையெல்லாம் பேசக் கூடாது என்ன ?. பாண்டி சாகும்போது அவன் கழுத்துல 8 பவுன் செயின் இருந்துச்சு. அத குடுத்துர்றேன். “
“அப்புறம் பாண்டி வச்சுருந்த ஒரு வீட்ட நாங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி சீஸ் பண்ணோம். அதுல இருக்க பொருள்லாம் எடுத்துக்கங்க. புரியுதா ? ஆர்டிஓ அம்மா என்ன சொல்றாங்களோ அதை கேட்டுக்கணும்“ என்று முனியாண்டியிடம் கூறியது அறிவுரையா, மிரட்டலா என்று முனியாண்டிக்குப் புரியவில்லை.
“மவனே போயிட்டான். அப்பொறம் என்னங்கய்யா ? “ என்று அவருக்கு பதிலளித்து விட்டு, முராரிக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினார் முனியாண்டி.
“ காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, பாண்டியும், அவன் கூட்டாளியும் ஒரு ஸ்கார்ப்பியோ ஜீப்பில் வேகமாக வந்தனர். காவல் ஆய்வாளர் நந்தகோபாலும், காவல் ஆய்வாளர் அஷோக்கும், பாண்டியின் வாகனத்தை நிறுத்த முயற்சி மேற்கொண்ட போது, நிற்காமல் செல்ல பாண்டி முயற்சித்ததால், குறுக்கே புகுந்து காவல் துறை அதிகாரிகள் தடுத்த போது தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பாண்டி சுட முயற்சிக்கையில், ஆய்வாளர் நந்தகோபால் சமயோசிதமாக செயல்பட்டு, தன்னுடைய கைத்துப்பாக்கியால் இருவரையும் தற்காப்புக்காக சுட்டதில், இருவரும் மரணமடைந்தனர். ஆய்வாளர் நந்தகோபால் சமயோசிதமாக செயல்படாவிட்டால், அங்கே இருந்த காவல் அதிகாரிகளுக்கு பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆகையால் திறமையாக செயல்பட்டு இரண்டு பயங்கர குற்றவாளிகளை தற்காப்புக்காக சுட்டுக் கொன்ற, ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் ஆய்வாளர் அஷோக் மற்றும் அவர்களுடன் இருந்த அனைத்து காவல் துறையினருக்கும், குடியரசுத் தலைவரின் வீரதீரச் செயலுக்கான விருதும், ஒரு படி பதவி உயர்வும் வழங்க பரிந்துரை செய்யப் படுகிறது“ என்று தனது அறிக்கையை அரசுக்கு அளித்தார் ஆர்டிஓ பத்மா.
நன்றி: படைப்பு இணையம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Is it true story?
OK , Story is good, What is the moral of this story? We are seen in this kind of encounter in Tamil cinema. In this story is showing how the criminals created by situations. Who is the responsible for this kind of situation.
Post a Comment