Saturday, August 14, 2010

இந்த நாட்டுக்கு சுதந்திரம் ஒரு கேடா?

63ஆவது சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகின்றன. அதிகாரத்தின் வழி சிந்திக்கப் பழகியிருக்கும் மக்களும் பெட்டிக்கடையில் துளிர்விடும் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்கின்றனர். பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் அது கண்டிப்பாக அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்கு. குழந்தைகளுக்கோ அது மிட்டாய் கிடைக்கும் தினம். ஊடகங்களில் சுதந்திர தினத்திற்காக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தேசியப் பெருமிதத்தின் முகமூடியை வைத்து முத்திரைப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. சிறப்பு நிகழ்ச்சிகளில் சுதந்திர தினத்தின் அருமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வானொலியிலும், வானொளியிலும் ரஹ்மானின் வந்தேமாதரம் கீறல் விழாமல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர். எல்.சி.டி தொலைக்காட்சி துல்லியமாகத் தெரியும் சந்தையில்தான் வானொலிப் பெட்டி கூட வாங்க வழியில்லாத மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதிகரித்துவரும் ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பில் சைக்கிள்களின் விற்பனை குறையவில்லை. கணினிப் புழக்கம் கூடிவரும் நாளில் கால்குலேட்டர் கூட இல்லாமல் கைக்கணக்கு போடுபவர்கள்தான் அதிகம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களை அரசின் உதவியுடன் வளைத்துப்போடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். வாழ்வாதாரமான விளைநிலங்கள் கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கோ குண்டடிபட்டுச் சாவதற்கு சுதந்திரம். கச்சா எண்ணெயின் விலை உயர்வை வைத்து உள்நாட்டில் கொள்ளையடிப்பதற்கு அம்பானிக்கு சுதந்திரம். வாங்கிய கந்துவட்டிக் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகளுக்கு இருக்கும் சுதந்திரம். மத்திய அரசிடமிருந்து மானியம் பெறுவது உரத்தொழிற்சாலைகளின் சுதந்திரம். அதிக விலையில்கூட உரங்கள் கிடைக்காமல் அல்லாடுவது விவசாயிகளின் சுதந்திரம். கல்வியை வணிகமாக மாற்றி சுயநிதிக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். அரசுப்பள்ளிகள் மூடப்படுவதால் எழுத்தறிவிலிகளாக இருப்பது உழைக்கும் மக்களின் சுதந்திரம்.

அப்பல்லோ முதலான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மேட்டுக்குடியினருக்கு சுதந்திரம். அரசு மருத்துவமனைகளில் எந்த வசதியுமில்லாமல் சித்திரவதைப் படுவது சாதாரண மக்களின் சுதந்திரம். அரசிடமிருந்து எல்லாச் சலுகைகளையும் பெற்று தொழில் துவங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். அதே நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயரில் அடிமையாக வேலைசெய்வது தொழிலாளர்களின் சுதந்திரம். பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடைவதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகர்களுக்கும் சுதந்திரம். தமது ஓய்வூதியத்தை சிட்பண்ட்டில் போட்டு ஏமாறுவதில் நடுத்தர வர்க்கத்திற்கு சுதந்திரம். விண்ணைத் தொடும் ரியல் எஸ்டேட் விலை உயர்வினால் கொள்ளை இலாபம் பார்ப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். ஒண்டுக் குடித்தனத்தில் கூட குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுவது பெரும்பான்மை மக்களின் சுதந்திரம். உயிர்காக்கும் மருந்துகளை பலமடங்கு விலையில் விற்பதற்கு மருந்து நிறுவனங்களுக்கு சுதந்திரம். மருந்து வாங்க முடியாமல் உயிரைத் துறப்பது ஏழை மக்களின் சுதந்திரம்.

இந்த முரண்பாடுகளின் அளவுகோலே உண்மையான சுதந்திரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் போது நாட்டு மக்களின் வாழ்நிலையோ சுதந்திரத்தின் பொருளை விளக்குகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவின் ஆட்சியதிகாரம் தரகு முதலாளிகளிடம் மாற்றித் தரப்பட்டது. இந்த அதிகார மாற்றத்தையே சுதந்திரம் என்று கொண்டாடுவது ஏமாளித்தனமில்லையா?

1 comment:

Unknown said...

Your written about our independence,this all about our people how straggle in the freedom India. I want to remind you,you are also get freedom to write in freedom India, It is not possible in before freedom in India. This kind of freedom we get it everyday in our India.