Sunday, February 6, 2011

ஆ.ராசா அப்பாவியும் அல்ல, நீரா ராடியா நமீதாவும் அல்ல

இப்போதும், இனி எப்போதும் ஸ்பெக்ட்ரம் என்பது இந்திய அரசியல் வரலாற்றின் ஊழல் அளவுமானி. சமகாலத்தில் மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு பகல்கொள்ளை முன்னெப்போதும் நடந்தது இல்லை. அலைபேசி இணைப்புகளுக்கான இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகளை விற்றதில் 1.76 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குற்றச்சாட்டு. இது மிக ஆதாரப்பூர்வமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஊழலை சாத்தியப்படுத்திய ஆ.ராசா, மத்திய மந்திரி பதவியில் இருந்து கட்டாயமாக பதவி விலகச் செய்யப்பட்டு, இப்போது சி.பி.ஐ யால் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். ஆ.ராசாவின் பெயர் மற்றொரு சுற்று ஊடகங்களில் சூடாக அடிபட தொடங்கியிருக்கிறது. ஆனால், ராசா மட்டும்தான் குற்றவாளியா? கருணாநிதி மட்டும்தான் சூத்திரதாரியா? சொல்லப்போனால் இவர்கள் யாவரும் பலியாடுகளே! இந்த மாபெரும் சூறையாடலை நிகழ்த்திய பெரும் முதலாளிகள், சத்தமில்லாமல் அடுத்த கொள்ளைக்குத் தயாராகிவிட்டார்கள்.

நிறம் மாறும் ஊழல்

25 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் என்றால் அதன் அளவு லட்சங்களில், கோடிகளில் இருந்தது. ஆனால் அண்மைக்கால ஊழலில் தொடக்கப்புள்ளியே ‘இத்தனை ஆயிரம் கோடி’ என்பதில்தான் ஆரம்பிக்கிறது. எண்பதுகளில் இந்தியாவில் தனியார் மயம் வீச்சோடு இறக்கிவிடப்பட்ட பின்புதான் ஊழலின் பருமன் நினைக்கவியலாத் தொலைவுக்கு உயர்ந்திருக்கிறது. ஹவாலா, ஹர்சத் மேத்தா, தெல்கி, சத்யம் என பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் சூறையாடப்பட்டது. 50 கோடி ஊழல், 100 கோடி ஊழல் எல்லாம் ஊடகங்களுக்கு இப்போது செய்தியே இல்லை என்பது ஒரு பக்கம் இருக்க, மக்களின் மனங்களுக்கே ‘இதெல்லாம் ஒரு மேட்டர்’ இல்லை.

கடந்த தேர்தலில் 1000 ரூபாய் வாங்கிக்கொண்டு வாக்களித்த மக்கள் இந்தத் தேர்தலில் ‘கூட கொஞ்சம் போட்டுக்கொடுங்க’ என பேரம் பேசும் அளவுக்கு ‘வளர்ந்திருக்கிறார்கள்’! அண்ணாச்சி கடையில் ஹமாம் சோப்பு வாங்கிக்கொண்டு ‘எதுவும் ஆஃபர் இருக்கா?’ என கேட்டு வாங்குவது போல, மக்கள் அரசியல்வாதிகளிடம் பேரம் பேசுகின்றனர். இதன் சாராம்சமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது, ‘எனக்கு 1000 ரூபாய் தந்தால், நீ 1 லட்சம் கோடி கொள்ளையடிப்பதை ஏற்றுக்கொள்வேன்’ என்பதுதான். தன்னளவில் ஊழல் மயமாகியிருக்கும் மக்கள், அதிகாரத்தின் ஊழலை எதிர்க்கும் தார்மீக தகுதியை இழந்து நிற்கின்றனர். இது மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட பாத்திரம் அல்ல. இந்த சீரழிந்த அரசியல் வடிவம், திட்டமிட்டே மக்களை ஊழல்படுத்தியிருக்கிறது. அதனால்தான் எவ்வளவு பெரிய ஊழலும், அயோக்கியத்தனமும் பரபரப்பு வட்டத்தைத் தாண்டி வெளியே செல்வது இல்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமா?

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை

கடந்த காலங்களில் தொடங்கி இப்போது வரை, ஊடகங்களால் அதிகம் Corrupt செய்யப்பட்டிருக்கும் சொல், ஊழல். மாநகராட்சி அதிகாரி 500 ரூபாய் லஞ்சம் வாங்குவதும் ஊழல், ஆ.ராசா ஒன்றேமுக்கால் லட்சம் கோடி அடித்தாலும் ஊழல் என்றால், இதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது? ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் இல்லை. இது ஒரு பகல்கொள்ளை. கண்ணுக்கு நேராக, ஆதாரங்களுடன் நிகழ்த்தப்பட்ட பொருளாதார சூறையாடல்.

இது ஒரு பக்கம் இருக்க, மக்களின் மனம், ஊழல் என்றால் அது அரசியல்வாதியுடன் மட்டுமே தொடர்புடையது என்றே புரிந்து கொள்கிறது. அப்படித்தான் ஊடகங்கள் போதிக்கின்றன. ‘கருணாநிதி குடும்பம் சகிதமாக அரசியல் செய்து கொள்ளை அடிக்கிறார்’ என்று திரும்பத் திரும்பப் பேசுகிறோம். இதே அளவுக்கு கலாநிதி மாறனின் சன் குழும கொள்ளைகள் பேசப்படுவது இல்லை. மாறாக அப்படிப் பேசும்போது, ‘அவர் ஒரு தொழில் செய்கிறார். அதில் முன்னேறுகிறார். இதில் என்ன கொள்ளை இருக்கிறது?’ என மத்தியதர வர்க்க மனநிலையுடன் முதலாளிகள் அங்கீகரிக்கப்படுகின்றனர். அரசியல்வாதிகளின் ஊழல் பற்றி கவர்ச்சிகரமாக பேசும் ஊடகங்கள், முதலாளிகளின் ஊழலில் அத்தகைய கவர்ச்சி அம்சத்தை சேர்க்க வழியில்லை என்பதால் ஒதுக்கி விடுகின்றன. ‘முதலாளி தொழில் செய்பவர், அரசியல்வாதியே ஊழல் செய்பவர்’ என்ற இந்த சித்திரம் உண்மையா?

இது ஒரு முழுப்பொய். ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆ.ராசா யாருக்காக நிகழ்த்தினார்? 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் வகையில் ஸ்பெக்ட்ரம் பேரம் நடத்திய எந்த பெருநிறுவன முதலாளியும் இதுவரை விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படவில்லையே ஏன்? ஏனெனில், அரசியல்வாதிகள், நீதிமன்றம், சி.பி.ஐ., பாராளுமன்றம்… அனைவருக்கும் எஜமானர்கள், முதலாளிகள்தான். அவர்களால் பலியிடப்பட்டிருக்கும் பலியாடுதான் ஆ.ராசா. தங்கள் எஜமானரை தண்டிக்கும் தைரியம் சி.பி.ஐ.க்கோ, நீதிமன்றத்துக்கு, அரசுக்கோ கிடையாது. அதனால்தான் 1.76 லட்சம் கோடி ரூபாயை ஏமாற்றிய நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து ‘குத்தக்காசு’ வசூலித்து பெருந்தன்மையாக மன்னித்துவிட்டனர்.

ஊடக அரசியல்

இந்தியாவின் தேசிய ஊடகங்களுக்கு எப்போதுமே தென்னிந்தியர்கள் மீது காழ்ப்பு உண்டு. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், திராவிட நாடு கோரிக்கை என இதற்கு காரணங்கள் பல. ஈழத் தமிழினத்தை சிங்கள பேரினவாதம் அழித்ததை ‘தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக’ பார்த்ததும் இதே மனோபாவம்தான். இந்த நிலையில் நாட்டின் மிக முக்கியத் துறைகளில் ஒன்றான தகவல் ஒளிபரப்புத்துறைக்கு தென்னிந்தியர் ஒருவர் அமைச்சராக இருப்பதும், அவர் ஒரு தலித்தாக இருப்பதும் எப்படி அவர்களுக்குப் பொறுக்கும்?

அதனால்தான் Times now, CNN-IBN போன்ற தொலைக்காட்சிகள் ‘ஆ.ராசாவை அப்புறப்படுத்தியது நாங்கள்தான்’ என உரிமையுடன் உரிமை கோருகின்றனர். தங்களால் மரியாதைக்கு உரியதாக பார்க்கப்படும் ஓர் இடத்தில் இருந்து தீண்டத்தகாத ஒருவரை அப்புறப்படுத்தி, அதன் புனிதத்தை காப்பாற்றிவிட்ட பெருமிதத்தை அவர்களிடம் காண முடிகிறது. இதன் பின்னால் அவர்கள் மறைமுகமாகச் சொல்லவருவது, ‘தலித்கள் அதிகாரத்துக்கு வந்தால் மிக மோசமாக ஊழல் செய்வார்கள்’ என்பதே.

நீரா ராடியா என்ன நமீதாவா?

தேசிய ஊடகங்கள் இவ்விதம் இருக்க, தமிழ்நாட்டு ஊடகங்கள் இதை எப்படி அணுகுகின்றன? முழுக்க, முழுக்க அரசியல் கறைபடிந்த தமிழக ஊடகங்கள் ஆ.ராசாவை தேர்தல் மெட்டீரியலாக மட்டுமே கன்வர்ட் செய்கின்றன. வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தலின் தீனி, சர்வ நிச்சயமாக ஆ.ராசாதான். தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசும் அஸ்திரமாக ஸ்பெக்ட்ரமும், ஆ.ராசாவும் பயன்படுத்தப்படும் சாத்தியங்கள் முழுவதுமாய் உண்டு. மக்கள் பணம் 1.76 லட்சம் கோடி ரூபாயை சுருட்டிய இந்த மக்கள் விரோத பொருளாதார குற்றவாளிகளைத் தண்டிக்கக்கோரி எந்த தமிழ் ஊடகமும் கோரவில்லை. மாறாக, ஆ.ராசா கைது தேர்தல் கூட்டணியை எவ்விதத்தில் மாற்றும் என்றே ஜோதிடம் கூறுகின்றன.

நீரா ராடியா என்னும் அரசியல் புரோக்கரின் வலைப்பின்னல் யூகிக்க முடியாத இடங்களில் எல்லாம் நீண்டிருக்கிறது. ரத்தன் டாடா தொடங்கி, பர்கா தத் வரை அரசியல், ஊடகத்துறைகளின் அனைத்து இடங்களிலும் தரகு லாபி செய்யும் நீரா ராடியாவிடம்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலின் மையச்சரடு இருக்கிறது. ஆனால் தமிழ் ஊடகங்கள் நீரா ராடியாவை ஒரு நமீதா போலவே சித்தரிக்கின்றன. எத்தனை மோசடி இது?

ஆ.ராசா அப்பாவியா?

தலித், பெருமுதலாளிகளின் பலியாடு என்றெல்லாம் சொல்வதால் ஆ.ராசா அப்பாவியாகிவிட முடியாது. ஒரு காலத்தில் முற்போக்கு அம்சங்களோடு தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்த திராவிட இயக்கத்தின் இன்றைய நிலைக்கு ஆ.ராசா ஒரு சோறு பதம். தி.மு.க.வின் இன்றைய பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறுநில மன்னனாகவே இருக்கின்றனர். உடனே ‘இது அதிமுகவுக்கும் பொருந்தும். அவர்கள் மட்டும் யோக்கியமா?’ என சிலர் ஆரம்பிக்கக்கூடும். இதுதான் தி.மு.க.வின் விளக்கமும் கூட.

‘நாங்கள் மட்டுமா ஊழல் செய்தோம்? அந்தம்மா செய்யாத ஊழலா?’ என எதிரியின் அயோக்கியத்தனத்தை நினைவூட்டி தனது கயமைக்கு அங்கீகாரம் கோருகிறார் கருணாநிதி. ஆ.ராசாவும், ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் எந்தமுறை பின்பற்றப்பட்டதோ, அதே முறையைதான் நாங்களும் பின்பற்றினோம்’ என்று முன்னால் சென்றவரை கைகாட்டுகிறார். இவர் தெரிந்தே செய்த பாவிதான். அதனால் ஆ.ராசா மன்னிக்கப்பட வேண்டியர் அல்ல, தண்டிக்கப்பட வேண்டியவர்.

ஆனால் ஆ.ராசா கைது என்பதை, ஏதோ அநீதிக்கு தண்டனை கிடைக்கத் தொடங்கியிருப்பதன் முதல்படி போல சித்தரிப்பது அறியாமை மட்டுமல்ல, அது ஒரு மோசடி. தனியார்மயம் அமுலில் இருக்கும்வரை இந்த சூறையாடலை யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது! ஏனெனில் இந்த மொத்த ஊழலையும் நிறுவனமயப்படுத்தி, மக்களை ஊழல்படுத்தி, ஊழலுக்கு சமூக அங்கீகாரம் பெற்றுத் தந்திருப்பது தனியார்மயம்தான். அதுவரை தண்டனைகள் என்பவை ‘இந்த அமைப்பில் நீதி கிடைக்கும்’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் மயக்க மருந்தாக இருக்குமே தவிர நோய் தீர்க்கும் மருந்தாக இருக்காது!

- அதிரூபன்
பொங்குதமிழ்

No comments: