Tuesday, January 26, 2010

மொய்...! மொய்...!

கல்யாண வீட்டில் மொய் எழுதுவது என்ற கலாச்சாரம் மெதுவாக அருகி வரும் நிலையில், மொய் பற்றிய ஒரு சுவாரஸ்யமான பதிவை படிக்க நேர்ந்தது.. இதோ...

மொய்...!

முன்னலாம் கல்யாண வீடுகள்ல ஒவ்வொரு வேலையையும் செய்யறதுக்குனு சொந்தக்காரங்கள்ல சில நிபுணர்கள் இருப்பாங்க.

ஸ்டோர் ரூம் பாத்துக்கிறதுக்குனு ஒருத்தர் இருப்பார். சமையல் காரங்க சொன்ன அளவவிட கொஞ்சம் அதிகமாவேதான் நாம பொருட்கள் எல்லாம் வாங்கிப் போடுவோம். அத அளவா வேணுங்கும்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணி கால்வாசிப் பொருட்கள மிச்சம் பண்ணி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாங்க இந்த ஸ்டோர் கீப்பர்ஸ்.

அப்புறம் பந்தி பரிமாறுவதும் ஒரு கலை. வரிசையா ஒவ்வொரு ஐட்டமா வச்சிட்டுப் போறதுதானன்னு சாதாரணமா நெனச்சுட முடியாது. பந்தியில பொதுவா யாருமே என்ன வேணும்னு கேட்கிறதுக்கு தயங்குவாங்க. அவங்க முகக்குறிய வச்சே என்ன வேணும்னு கேட்டுப் பரிமாறுறதுல இருந்து, எவ்வளவு பேர் சாப்பிட்டாங்க, இன்னும் எவ்வளவு பேர் வருவாங்க, என்னென்ன ஐட்டம் தீந்து போச்சு, பத்தலன்னா ரெடி மேடா என்ன செய்யலாம்? இப்படி முடிவெடுக்கிற வல்லமை படைச்ச ஆளுங்க தான் இதுக்கெல்லாம் லாயக்கு.

அடுத்தது பந்தல், மேளம், போக்குவரத்து வசதி, லைட் செட், மேடை அலங்காரம் இப்படி அததுக்குனு இருக்கிற ஆளுங்களப் பிடிச்சி சேர்க்கிறதுக்கு நல்ல வெளிவட்டார தொடர்பு இருக்கிற ஆளு வேணும். கடைசி நேரத்துல எது வேணும்னாலும் இவருகிட்ட சொன்னா போதும் எங்க இருந்தோ, எப்படினோ தெரியாது ஆனா கேட்டது கிடைச்சிடும். எப்பவும் கல்யாணம் முடிஞ்சு மண்டபத்த விட்டு கடைசியா போற ஆளு இவராத்தான் இருப்பாரு.

ஆனா இப்போ இந்த மாதிரி எல்லா வேலைகளையும் அவுட்சோர்சிங் பண்ணிடறாங்க. சமையல் + பரிமாற ஒரே காண்ட்ராக்ட். யூனிஃபார்ம போட்டுகிட்டு அவங்களும் மெசின் மாதிரி வேலைய முடிச்சிட்றாங்க. அப்புறம் மண்டபம் + மேடை + பந்தல் எல்லாம் ஒரே கணக்கில் வந்துடுது. எதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஆனா எல்லா வேலையும் இப்படி அவுட்சோர்சிங்க்ல போனாலும் இன்னமும் சொந்தக்காரங்களே பாத்துக்கிட்டு இருக்கிற வேலை இந்த மொய்யெழுதுறது மட்டும்தான். பண விசயமாச்சே… நம்மாளுங்க உசாராத்தான் இருப்பாங்க

தாலி கட்டின அடுத்த நொடியே மண்டப வாசல்ல ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒரு டேபிள் சேர இழுத்துப் போட்டு மாப்பிள்ளை & பொண்ணு வீட்டு ஆளுங்க உக்காந்துடுவாங்க. பொண்ணு வீட்டு மொய், மாப்பிள்ள வீட்டு மொய் ரெண்டும் கலந்துடக் கூடாதுனு கொஞ்சம் உசாரா எதிர் கோஷ்டி பக்கம் போற ஆளுங்கள நோட் பண்ணிகிட்டே இருக்கனும். நாற்பது பக்க நோட்டெல்லாம் போய் இப்போ அர குயர் நோட்டு வந்துடுச்சு. ஒரு ஆள், பெயர் + தொகை எழுதிகிட்டே வர இன்னொரு ஆள் பணத்த வாங்கி ஒரு மஞ்ச பைக்குள்ள போட்டுக்குவாரு.(இந்த மஞ்ச பை எப்போதான் மறையும்?) எங்க வீட்டு விசேசங்கள்ல எப்பவும் எல்லா வேலைகள்லையும் கை வச்சிட்டாலும் இந்த மொய்யெழுதுற வேலைல இப்போ கடசியா ரெண்டு மூனு கல்யாணத்துலதான் உக்காந்தேன். எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும். அத அந்த மொய்நோட்டுல காலத்தால் அழியாச்சின்னமா வைக்கனுமாங்கறதுதான். ஆனா பழைய மொய் நோட்டுகளப் பாத்த பின்னாடி என் கையெழுத்து எனக்கே அழகா தெரிஞ்சது. அப்புறம் துணிச்சலா உக்காந்தாச்சு. இப்ப போன மாசம் தங்கச்சி (சித்தப்பா பொண்ணு) கல்யாணத்துல மொய் எழுத உக்காந்தப்ப அத ஒரு பதிவா போடுவேன்னு நெனைக்கல

மொத பேரு எழுதும்போதே கஷ்டமாப் போச்சு. பேர ஏழுமலை னு சொன்னா எனக்கு ஏழுமலைனு எழுத வர மாட்டேங்குது. Ezumalai னு எழுதப் போறேன். மொத பக்கம் ஒரு இருபது பேர் எழுதின பின்னாடிதான் தமிழ் கொஞ்சம் தானா வர ஆரம்பிச்சுது. இனிமே அப்பப்போ தமிழ்ல பேனா எடுத்து எழுதனும்.

ஆனா கிராமத்து ஆளுங்க இன்னமும் தமிழோடதான் இருக்காங்க. பேர் சொல்லும்போது ஒருத்தர் ஆவன்னா திருஞானம் னு சொன்னார். நானும் ‘ஆவன்னா திருஞானம்’னே தான் எழுதினேன். அவரு தம்பி ஆவன்னா தலையெழுத்துப்பா ன்னாரு. தலையெழுத்தா? இவருக்கு தலையெழுத்து கூட தெரிஞ்சிருக்குமோனு பாத்தா இனிசியல தான் தலையெழுத்துனு சொல்றாருனு புரிஞ்சது. அப்புறம் அவர் பேர ஆ. திருஞானம்னு ஒழுங்கா எழுதியாச்சு. தலையெழுத்த அதாங்க இனிசியல இன்னமும் தமிழ்ல சொல்ற ஆளுங்களும் இருக்காங்க.

இன்னொருத்தர் பேர சொல்லிட்டு ‘முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்’னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது அவர் அடப்புக்குள்ள ( இந்த மாதிரி அடைப்புக்குறிக்குள்ள:-) ) போட சொல்றாருன்னு. நாந்தான் இன்னும் ப்ராக்கெட்டுக்குள்ள போட்டுட்டு இருக்கேன்

இன்னொரு பாட்டி வந்தாங்க. ‘யாரு சின்னபுள்ளயோட சின்ன மவனா? நல்லாருக்கியா கண்ணு’னு கேட்டுட்டு சுருக்குப் பையில இருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டு தாத்தா பேர்ல எழுதீருனு சொல்லிட்டாங்க. நான் காலேஜ் சேந்த பின்னாடி எங்க வீட்டுக்குப் போறதே எப்போவாதுதான். சொந்த கிராமத்துக்குப் போய் பல வருசமாச்சு. சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். இவங்களே எந்த பாட்டி, அம்மா வழி சொந்தமா, அப்பா வழி சொந்தமானு ஒன்னும் புரியல. இதுல தாத்தா பேருக்கு நான் எங்க போறது? தாத்தா பேரு என்னனு அவங்க கிட்டவே கேட்கிறதுக்கும் தயக்கமா இருந்துச்சு. எப்பவும் ஒரு மூலைல அமைதியா இருந்தாலும் அப்பப்போ என் மூளையும் வேலை செய்யும். ‘தாத்தாவோட முழுப் பேரு (என்னமோ பாதிப் பேரு எனக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி) என்னம்மாயி?’ னு கேட்டேன். (அந்த பாட்டி எனக்கு அம்மாயி முறையா அப்பாயி முறையானும் தெரியல) நல்லவேளை பாட்டிக்குத் துணையா வந்த ஒரு அக்கா தாத்தாவோட முழுப் பேர சொல்லிக் காப்பாத்திட்டாங்க. அப்புறம் ஊர்ப்பேரயும் நான் கேட்டதும் ‘ஒம் பேரன் ஊர் பேரு கூட தெரியாத மாதிரி கேக்குது பாரு’னு சொல்லி சிரிச்சுட்டு அந்த அக்காவும் கைவிரிச்சுட்டுப் போய்ட்டாங்க. எனக்கும் ஒரு வழியும் தெரியல. தாத்தா பேருக்கு முன்னாடி அம்மா சொந்த ஊரையும், பின்னாடி அப்பா சொந்த ஊரையும் போட்டுட்டேன். ரெண்டுல ஒரு ஊராதான் கண்டிப்பா இருக்கும்

அப்புறம் ஒருத்தர் வந்தாரு. ‘பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது…’ னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.

அப்புறம் இப்போ புதுசா இன்னொன்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பணத்த ஒரு கவருக்குள்ள போட்டு வெளிய ஊரு பேரு எல்லாம் தெளிவா எழுதிக் கொடுத்துட்றாங்க. நமக்கும் அது வசதிதான். ஆனா என்ன… உள்ள பணம் இருக்குதான்னு கொஞ்சம் பாத்துக்கனும் அப்படிதான் ஒருத்தரு வந்தாரு கையில ஒரு ஏழு கவரோட. தம்பி அமவுண்ட் கரெக்டா இருக்கானு பாத்துக்கப்பானு பக்கத்துலையே நின்னுட்டாரு. கவருக்கு வெளிய குறிச்சிருந்த தொகையும் உள்ள இருக்கிற பணமும் சரியா இருக்கானு ஏழு கவர்லையும் சரி பாத்துட்டு சரியா இருக்குண்ணே னு சொன்னேன். போகும்போது கேட்டாரு. இது மாப்பிள்ள வீட்டு மொய் தான னு. அத மொதல்லையே கேட்டிருக்கலாம்ல? ‘இது பொண்ணு வீட்டு மொய்ணே மாப்பிள்ள வீட்டு மொய் அந்தப்பக்கம்’னு சொல்லி அனுப்பிட்டேன். அவர் கிட்ட ஆமான்னு சொல்லியிருந்தா சித்தப்புக்கு ஒரு அமவுண்ட் லாபம் தான் ஆனா விட்டுட்டேன்…

நன்றி: அருட்பெருங்கோ

2 comments:

Shunmugavel.P said...

Really Great. This is type of Stories to motivate Ilam Thalaimraikku.... Really Great

Thanks

Sathiyadev said...

Really so nice post elango