Monday, February 1, 2010

இது பயண கட்டுரை அல்ல

சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து சேலத்திற்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. வேறு வழியின்றி ஒரு சேலம் அரசுப் பேருந்தில் (முன்னாள் அண்ணா!) ஏறி அமர்ந்தோம். நீண்ட தூரத்திற்கு ஓடும் கோவை அரசுப் பேருந்துகள் (அதாங்க முன்னாள் சேரன்!) அனைத்தும் புது பேருந்துகளாக மாறிவிட்ட நிலையில், சேலம் பேருந்துகள் மட்டும் இன்னும் அரதப் பழசானவையே ஒடிக் கொண்டிருக்கின்றன. ஏன் என்று தெரியவில்லை?

பேருந்தில் இருந்த ஒரு தொலைக்காட்சியில் யாருக்குமே புரியாத அதிக சத்தத்துடன் ஒரு படத்தின் கிளைமாக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் கழித்து அந்த படம் "குணா" என்று அறிந்தோம்.

அது முடிந்த பிறகு 70, 80, 90 களில் வந்த பிரபலமாகாத பாடல்கள் பாதி ஒடுவதும் பின் அது வேறு பாடலின் பாதியில் இருந்து தொடர்வதுமாக இருந்தது. ஆனால் என்ன பாடல் என்றே புரியவில்லை. அந்த அழகில் இருந்தது Audio System. இந்த லட்சணத்தில் காதை கிழிக்கும் சத்தம் வேறு. போகப்போக நடுவில் விளம்பரங்கள் வேறு வர ஆரம்பித்தன. எந்த பேருந்தில் ஏறினாலும் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இல்லை என்பதால் ஆரம்பத்தில் நாம் கண்டு கொள்ளவில்லை. கவனித்த பின் தான் தெரிந்தது பேருந்தில் ஏதோ ஒரு தனியார் தொலைக்காட்சி ஓடுவது போல் தெரிந்தது. ஆனால் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது (5 மணி நேரமும் இதே தான் நடந்து கொண்டிருந்தது).

ஒரு பாடல் ஓடிக் கொண்டிருக்கும், திடீரென்று டி. ராஜேந்தர் நடித்த பிரபலமாகாத ஒரு படத்தின் காட்சி ஓடும். பிறகு யார் நடித்து இருக்கிறார்கள் என்றே தெரியாத ஒரு பாட்டு பாதியில் இருந்து ஓடும்.. இப்படி சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு போய்க் கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் விளம்பரங்கள் மட்டுமே ஒட ஆரம்பித்தது. அதிலும் இதுவரை கேள்விப்பட்டிராத சோப்பு, தேங்காய் எண்ணெய் இன்ன பிற இத்யாதி விளம்பரங்கள்.பயணிகள் அனைவரும் பொறுமையிழந்து தொலைக்காட்சியை அணைக்க சொல்லி சத்தம் போட்டும் ஓட்டுனர் நிறுத்த மறுத்துவிட்டார். ஆமை வேகத்தில் நகர்ந்த நெடிய பயணத்தில் காசு கொடுத்து விளம்பரம் பார்த்த தலையெழுத்தோடு சேலத்தில் வந்து இறங்கிய போது தலைவலி வரவேற்றது.