புதிய ரயில் பட்ஜெட்டை பார்த்தவுடன் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறுபக்கம் வருத்தமாகவும் இருக்கிறது.
முதலில் மகிழ்ச்சி - தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 6 பாசஞ்சர் ரயில்களில் 2 கோவைக்கு (கோவை - பொள்ளாச்சி, கோவை - ஈரோடு), 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 3 கோவைக்கு அல்லது கோவை வழியாக (கோவை - திருப்பதி, கோவை - சென்னை துராந்தோ, மங்களூர் - திருச்சி). இடையில் எங்குமே நிற்காமல் கோவை சென்னை இடையே ஓடப்போகும் துராந்தோவை பகலில் ஓட்டினால் கட்டுபடியாகுமா என்று தெரியவில்லை.
தமிழகத்தில் சென்னைக்கு பிறகு கோவைக்கு இந்த பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தி இருப்பது தெரிகிறது. சில மாதங்களில் நடைபெற இருக்கும் தமிழ் செம்மொழி மாநாடு களைகட்ட தமிழக அரசின் தனிப்பட்ட வேண்டுகோளின் படி இந்த அறிவிப்புகள் இருக்கலாம்.
மற்றபடி "சேலம் - கரூர், திருநெல்வேலி - தென்காசி, திண்டுக்கல் - பொள்ளாச்சி உள்ளிட்ட பாதைகள் இந்த ஆண்டு திறக்கப்படும்" என்ற பலவருட அறிவிப்பு இந்த ஆண்டும் வந்திருக்கிறது.
இதற்கு மேல் சென்னை தவிர்த்த தமிழ்நாட்டின் பல கோரிக்கைகளை பற்றி உருப்படியாக எதுவும் இல்லை. ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டின் போதும் மலையளவு தமிழ்நாட்டின் கோரிக்கைகள் விடுக்கப்படுவதும் அதில் கடுகளவு மட்டுமே நிறைவேற்றப்படுவதும் தொடர்கிறது.
கட்டணங்கள் உயரவில்லை என்று சொல்லிக் கொண்டே சத்தமில்லாமல் சர்வீஸ் சார்ஜ், தத்கல், சூப்பர் பாஸ்ட் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் கோபமூட்டும் விஷயம் தமிழக டெல்டா மாவட்டங்கள் மழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப்பாதை சிறந்த உதாரணம்.
ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க ஆய்வு செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி ரயில் பாதை அமைந்தால் "போட் மெயில்" திரும்பவும் இயங்குமா? ("போட் மெயில்" என்னும் ரயில் ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில் இருந்து கொழும்பு வரை இயக்கப்பட்டது. அதாவது சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரயிலிலும், பிறகு தனுஷ்கோடியில் இருந்து தலை மன்னார் வரை படகிலும், அதன் பின் மன்னாரிலிருந்து கொழும்பு வரை மற்றோரு ரயிலிலும் பயணம் நடைபெறும். பிறகு காலப்போக்கில் அது தனுஷ்கோடியோடு நிறுத்தப்பட்டதும், தனுஷ்கோடி புயலில் சிக்கி இந்த ரயிலோடு அழிந்ததும் வரலாறு. அந்த காலத்தில் சென்னையில் எடுக்கும் ஒரு டிக்கெட்டை வைத்துக்கொண்டு கொழும்பு வரை பயணிக்கலாம் என்பது சுவாரஸ்ய தகவல்)
தலைப்புக்கான பதில் "என்னைக்கு கிடைச்சிருக்கு!"
2 comments:
boat mailla porathuku passport ellam devaiya devai illya?
Boat mail-nu onu irkune intha articala padicha praguthaan theriyuthu
Post a Comment