Tuesday, February 16, 2010

யாமிருக்க பயமேன்

விஜய் தொலைக்காட்சியில் "யாமிருக்க பயமேன்" என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. பழனியை மையமாக கொண்ட கதை என்று சொல்லப்படுகிறது. நிகழ்ச்சி முன்னோட்டத்திலேயே நவபாஷாணம், சித்தர் மர்மம் என்று எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் கூட்டுகிறார்கள்.

மகாபாரதம், ராமாயணம், கிருஷ்ண லீலை, அம்மன் தொடர்கள் என்று ஒரே கதையை பல சேனல்களில் திரும்ப திரும்ப பார்த்த நமக்கு முருகனைப் பற்றிய தொடர் சற்று வித்தியாசமாக, சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்பலாம். புதிதாக அறிந்தும், தெரிந்தும் கொள்ள நிறைய தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


முன்பு தூர்தர்ஷனில் வரும் ராமாயணம், மகாபாரதம் தொடர்களை அப்படியே தமிழ் டப்பிங் செய்து ஒளிபரப்புவார்கள். அதில் நடிகர்களின் வாய் அசைவுக்கும், வசனத்திற்கும் சம்பந்தமே இருக்காது. அதே போல் நடிகர்களின் முக தோற்றத்திற்கும், கதாபாத்திர இயல்புக்கும் சம்பந்தம் இருக்காது. அது மாதிரி எல்லாம் இல்லாமல் இந்த தொடர் சற்று “Realistic” க்காக இருக்கும் என்று நம்புவோம்.

விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் தென்படும் ஆங்கில மோகம் இதில் இருக்காது என்பது ஒரு ஆறுதல் செய்தி (அப்படி இருந்தால் தமிழ்க் கடவுள் மன்னிப்பாரா என்று தெரியவில்லை!) எல்லாவற்றுக்கும் மேல் விஜய் டிவி இந்த தொடரை கடைசி வரை கொண்டு செல்லும் என்றும் நாம் முருகனை வேண்டிக் கொள்வோம். முருகனுக்கு டி.ஆர்.பி ரேட்டிங்கை கூட்ட தெரியுமா என்று கேட்காதீர்கள்!

நேரம்: இரவு 7.30 மணி. பாவம்! கோவணம் கட்டிய பழனியப்பனுக்கு எதற்கு "ப்ரைம் ஸ்லாட்" என்று நினைத்திருப்பார்கள் போல.

கனகவேல் காக்க..!

No comments: