Wednesday, March 3, 2010

போட் மெயில் (Boat Mail)

முந்தைய பதிவில் போட் மெயில் என்னும் ரயிலைப் பற்றி எழுதியிருந்தோம். நண்பர்கள் சிலர் அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த பதிப்பு.

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை - தூத்துக்குடி பயண நேரம் 22 மணி நேரம் (இப்போது முத்துநகர் எக்ஸ்பிரஸில் 12 மணி நேரம் ஆகிறது). பின்பு பயணிகள் தூத்துகுடியில் இருந்து கொழும்பு வரை படகில் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்ட பிறகு, இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை இயக்கப்பட்டது. தனுஷ்கோடியில் இருந்து தலை மன்னார் வரை படகில் 19 கிலோமீட்டர் பயணம். பின்பு தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரை ரயிலில் பயணம். கொழும்பு வரை செல்ல மொத்தமாக எழும்பூரிலேயே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

இலங்கைத் தீவும் இந்தியாவும் ஒரே ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்ததால் கடவுச்சீட்டு (Passport) தேவைப்படவில்லை. சுதந்திரத்திற்கு பின் இந்த ரயில் சேவை தனுஷ்கோடியோடு நிறுத்தப்பட்டது.

இப்பொது தெற்கு ரயில்வே என்று சொல்லப்படும் அப்போதையை தென் இந்திய ரயில்வே தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள மண் திட்டுகளில் மேல் ரயில் பாலம் கட்ட திட்டம் போட்டது, ஆனால் அந்த காலகட்டத்தில் முதலாம் உலகப் போர் வெடித்ததால் திட்டம் கைவிடப்பட்டது. 1964-ல் ஏற்பட்ட பெரும்புயலில் தனுஷ்கோடி சிக்கியபோது, அங்கு நின்றிருந்த இந்த ரயிலும் தண்டவாளமும் முற்றிலுமாக கடலில் அழிந்து போனது சோக வரலாறு.

போட் மெயில் இயங்கிய அதே காலகட்டத்தில் தான் இப்போது சென்னை - புதுடெல்லி இடையே ஓடிக்கொண்டிருக்கும் கிராண்ட் ட்ரங்க் (Grand Trunk) எக்ஸ்பிரஸ், பாகிஸ்தானின் லாகூரிலிருந்து நம்ம மேட்டுப்பாளையம் வரை அப்போது ஓடியது என்று தெரியுமா?

No comments: