தமிழ் நாடு காவல்துறையின் அராஜக அடக்குமுறைக்கு மற்றுமொரு உதாரணம் சனிக்கிழமை நடந்த புதிய சட்டமன்ற திறப்புவிழா! பிரதமர், சோனியா மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக சென்னையே அரை நாள் முழுவதும் ஸ்தம்பிக்கவைக்கப்பட்டது.
அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஜி.எஸ்.டி சாலை, வாலாஜா சாலை, சேம்பியர்ஸ் சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளானர்கள் என்று சொல்வது அவர்கள் பட்ட கஷ்டங்களை குறைத்து மதிப்பிடுவது ஆகும். அனுபவித்தால் தான் அந்த வேதனை தெரியும்.
உச்சமாக வி.ஐ.பி கன்வாய் வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே சாலையை கடப்பதற்கு கூட யாரும் அனுமதிக்கபடவில்லை. பாதுகாப்பு என்ற பெயரில் லட்சக்கணக்கான பொதுமக்களை சுடும் வெயிலில் வாட்டி வதைத்தது போலீஸ். பல இடங்களில் ஆத்திரத்திற்கு உள்ளான பொதுமக்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று கம்பீரமாக பேட்டி குடுக்கும் அதிகாரிகளுக்கு அப்படி ஏதும் செய்யப்படவில்லை என்று தெரியுமா? பாதசாரிகள் நடக்க ஒழுங்கான நடைபாதைகளே இல்லாத ஊர் சென்னை. சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசலால் பிதுங்கி வழியும் சென்னை சாலைகளை பல மணி நேரத்திற்கு அடைத்து விட்டு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறது போலீஸ். "போக்குவரத்து மாற்றங்கள் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்கள் அண்ணா சாலையை பயன்படுத்தவில்லை. அதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை" என்று கூசாமல் பொய் சொல்கிறது இன்றைய 'தினகரன்'.
தினம்தினம் கருணாநிதியோ, ஸ்டாலினோ போகும்போது சில நிமிடங்களுக்கு போக்குவரத்தை நிறுத்தி ஒழுங்குபடுத்தி பெரிய அளவில் நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் காவல்துறையால், ஏன் அப்படி ஒரு ஏற்பாட்டை செய்யமுடியவில்லை. பிரதமரின் பாதுகாப்பு முக்கியம் தான், அதற்காக ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை ஸ்திம்பிக்க வைக்க காவல்துறைக்கு என்ன உரிமை இருக்கிறது.
சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரு ஹெலிகாப்டர் மூலம் ஓமந்தூரார் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள தீவுத்திடல் மைதானத்திற்கு பிரமுகர்களை அழைத்து சென்றிருக்கலாமே? சாதாரணமாக நமக்கே இந்த யோசனை தோன்றும் போது, படித்த அனுபவம் உள்ள திறமை வாய்ந்த அதிகாரிகளுக்கு இதுபோல் சுலபமான பல யோசனைகள் தோன்றியிருக்க வேண்டுமே?
மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? ஆட்சியாளர்களான அரசியல்வாதிகளை குளிர்வித்தால் போதும் என்ற ஆணவப்போக்கு தான் காரணமா? அதிகாரிகள் அவர்களது மனசாட்சிக்கு பதில் சொல்லட்டும் ("அப்படி ஒன்று இருந்தால் தானே, அதையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டுத் தானே அரசாங்க வேலைக்கே மனு போடுகின்றோம்" என்று அசரிரீ கேட்கிறதா....!)
No comments:
Post a Comment