Sunday, July 22, 2012

சீக்கியர்களும் தமிழர்களும்

சீக்கியரான மன்மோகன்சிங் தான் இன்றையப் பிரதமர். பொதுத் துறைக்கு முதல் உரிமை அளித்த நேரு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கையைத் தனியார் மயமாக்கி, சந்தைப் பொருளாதாரமாக மாற்றி வரும் மத்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் சக்திமிக்க மான்டேகு சிங் அலுவாலியா மற்றொரு சீக்கியர். பிரதமர் அலுவலகத்தில் இந்திய ஆட்சி அதிகாரத்தையே ஆட்டிப் படைக்கும் நிர்வாகத் தளத்தில் இருக்கும் உயர் அலுவலர்கள் பெரும்பான் மையோர் சீக்கியர்கள். அடுத்த நிலையில் இருப்ப வர்கள் மலையாளிகள். இதனால்தான் பிரதமர் அலுவலகத்தை பஞ்சாபி-மலையாளி அலுவலகம் (Prime Minister Office (PMO) - Punjabi, Malayali Office)) என்று தில்லி அரசியல்-ஊடக வட்டாரத்தில் குறிப்பிடுகிறார்கள். எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. நடப்பதெல்லாம் கனவா அல்லது நாட்டு நடப்பா? என்று அய்யுறத் தோன்றுகிறது.

1984ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல்களையும், படுகொலைகளையும் சற்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் புதுதில்லியில் பிரதமர் இல்லத்தில் மெய்க்காப்பாளர் களாகப் பணியாற்றிய பியந்த் சிங், சத்வந்த் சிங் இருவரும் பிரதமர் இந்திரா காந்தி மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். இறந்து போகிறார் இந்திரா காந்தி. உடலை மருத்துவச் சோதனை செய்த போது, துப்பாக்கி ரவைகள் இந்திரா காந்தியின் உடலைத் துளைப்பதற்கு முன்பே அதிர்ச்சியால் இறந்து போனார் என்று இறப்பு ஆய்வறிக்கை கூறுகிறது.

தில்லியிலும் தில்லியைச் சுற்றிலும் காங்கிரசாரால் தூண்டப்பட்டு அப்பாவி சீக்கியப் பெண்கள், முதியோர், குழந்தைகள், ஆண்கள் எனப் பாகுபாடின்றித் தாக் கப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பின்னாளில் மத்திய அரசால் நடத்தப்பட்ட நீதி விசாரணையில் ‘தூண்டப்பட்டுத்தான் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன’ என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தில்லியைச் சார்ந்த பல காங்கிரசுத் தலைவர்கள் இந்த ஆணையத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்படுகின்றனர். இன்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தாயை இழந்த துயரத்தில் இருந்த நேருவின் பேரப்பிள்ளை இராஜிவ் காந்தி - “ஒரு பெரு உருவம் சாயும் போது, புவி அதிரத்தான் செய்யும்” (When a

giant falls the earth tremors) என்று அவ்வன்முறை நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டார். பல ஊடகச் செய்தி யாளர்களும், மக்களாட்சி முறையை நேசிப்பவர்களும் இச்செய்தியைக் கேட்டு அதிர்ந்தனர். தாயை இழந்த தனையன் இந்தியாவின் பிரதமராக ஒரே நாளில் உயர்த்தப்பட்டார். அவருக்கு இருந்த ஒரே தகுதி “விமான ஓட்டி” (Pilot) என்பதே ஆகும்.

இந்நிகழ்வுகளுக்குப் பின்பு சீக்கியர்கள் மேலும் கொதித்தெழுந்தார்கள். நீதிக்கான நெடிய பயணத்தைத் தொடங்கினார்கள். இளைஞர்கள் தீவிரவாதிகளாக உருவெடுத்து ஆயுதம் தாங்கிச் சண்டையிடத் தொடங்கினர். அமைதியான மக்களாட்சி முறையில் ஏன் இந்த அவலங்கள்? ஏன் இப்படிப்பட்ட கொடிய செயல்கள் என்பவை பற்றிப் பல வினாக்கள், ஆய்வு கள், கட்டுரைகள், கருத்துகள் வெளிப்படத் தொடங்கின. பெரும்பான்மையான அரசியல் நோக்கர்களும், ஆய்வாளர்களும் சீக்கியர்கள் பிரச்சினையில் காங்கிர சுத் தலைமையும், அரசும் அவசரக் கோலத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டன. குறுகிய அரசியல் பாதைக்காக சீக்கியர்களை ஒட்டுமொத்தமாகப் பகைத் துக் கொண்டன என்றும் குற்றம் சாட்டினர்.

இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் சீக்கியர் களுக்குத் தனித்த இடம் உண்டு. நாம் வெள்ளை யர்களை எதிர்த்துப் போராடிய போது, இந்திய மாநிலங் களிலேயே, அதிக அளவில் பஞ்சாபியர்கள்தான் தூக்கி லிடப்பட்டனர். மொத்தத் தூக்கிலிடப்பட்டோரில் 80 விழுக்காட்டினர் சீக்கிய இளைஞர்கள் என்று புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன.

எனவேதான் காங்கிரசுக் கட்சியைப் பற்றி ஆய்வு செய்வோர் காந்தியார் நுழைவிற்கு முன்பும், பின்பும் சீக்கியர்கள் நாட்டிற்காக அளித்த அர்ப்பணிப்பு, தியாகம் அளவிட முடியாதவை என்று குறிப்பிடுகிறார்கள். ஜெனரல் டயரைக் கண்டு நாடே நடுங்கிய போது, அவரின் எச்சரிக்கையை மீறி, ரௌலட் சட்டத்திற்கு எதிராக சீக்கியர்கள் அணி திரண்டார்கள். பல கூட்டங்களை நடத்தினர். இந்த நிகழ்வுகளைக் கண்டு கோபம் கொண்ட வெள்ளை இனவெறியன் டயர், ஜாலியன் வாலாபாக் படுகொலையை 1919ஆம் ஆண்டில் ஏப்ரல் 13ஆம் நாள் அரங்கேற்றினான். இதன் பின்புதான் காங்கிரசுக் கட்சி மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கியது.

பொதுவாக, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தின் மீது குறிப்பாக, சீக்கியர்கள் மீது அச்சம் கொண்டுதான் வெள்ளை யர்கள் ஆட்சி செய்தார்கள். விடுதலைப் போரின் ஆரம்பக் கட்டத்தில் பல சீக்கியப் போராளிகள் வெள் ளையர்களைத் தாக்கிவிட்டுப் பொற்கோயிலுக்குள் பதுங்கிக் கொண்டார்கள். வெள்ளையரின் காவல் துறையோ, பொற்கோயிலுக்குள் சென்று சீக்கிய இளைஞர் களைக் கைது செய்து சீக்கிய இன மக்களின் உணர்வுகளில் காயம் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் செயல்பட்டது. கொட்டும் பனியில், நடுங்கும் குளிரில் இரகசியக் காவல் துறையினர் பொற்கோயிலில் இருந்த போராளிகள் வெளியேவரும் போதுதான் அவர்களைக் கைது செய்யும் நடவடிக் கைகளை மேற்கொண்டனர். பிறகு நீதிமன்றத்தின் வழியாக மரண தண்டனை, நாடு கடத்தல் போன்ற தண்டனைகளை வழங்கினர். இப்படிப்பட்ட அறிவும், தந்திரமும் இணைந்த அரசியல் அணுகுமுறையைத் தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ((British Diplomacy) கடைப்பிடித்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடு கின்றனர்.

ஆனால், விடுதலை பெற்ற இந்தியாவில் உரிமைக் காகப் போராடிய, போராடுகிற பல இன, மொழி சார்ந்த மக்களைச் செருக்கோடு அடக்கி ஆள அதிகார வர்க்கம் முற்பட்டது. தில்லியின் அதிகார போதையில் ஆட்டம் போடும் உயர் அலுவலர்கள் மக்கள் உரிமைகளை அடக்குவதுதான் தங்களின் கொள்கைத் திட்டம் என்று மாற்றினர். பிரதமர் நேரு காலத்திலேயே இதற்குக் கால்கோள் இடப்பட்டது. இதனால்தான் நேதாஜியின் பேரன் சுகதா போஸ் அண்மையில் எழுதிய “மேதகு மன்னரின் எதிரி - சுபாஷ் சந்திர போசும், பிரிட்டிஷ் பேரரசிற்கு எதிரான இந்தியாவின் போராட்டமும்” (His Majesty’s Opponent - Subhash Chandra Bose and India’s Struggle Against British Empire) என்ற நூலில், “காந்தியாரின் துணைத் தளபதிகளாக இருந்த ஜவகர்லால் நேருவும், வல்லபாய் பட்டேலும் காந்தியினுடைய நல்லெண்ணத்தை இனிமேல் ஏற்க முடியாது என்ற அளவில் இருந்தனர். காங்கிரசுக் கட்சியினுடைய இயந்திர கதி அரசியல்வாதிகள், பிரி வினை ஏற்பட்டாலும் பிரிட்டிஷ் அரசின் ஒற்றையாட்சி முறையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்தான் குறியாக இருந்தார்கள். இதைப்பற்றி, தன்னுடைய ஆமாம் சாமிகள் எல்லாம் இல்லை சாமி என்று கூறும் மனிதர்களாக மாறிவிட்டார்கள்” (But the Mahatma’s erstwhile political lieutenants, Jawharlal Nehru and Valla Bhai Patel, were no longer prepared to listen to his good council. The machine politicians of Congress party where now keen to grasp with the helm of unitary centre of the Britishraj, even if the price to be paid was partition. Gandhi is said to have lamented in 1947 that all his “Yes-men” had turned into “No-men”) என்று கவலையோடு காந்தியார் குறிப்பிட்டதாக சுகதா போஸ் பதிவு செய்துள்ளார்.

விடுதலை பெற்ற இந்தியாவில் ஒற்றையாட்சி முறையின் அதிகாரக் குவிப்பு அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டதால்தான் பிரதமர் இந்திரா காந்தி 1975ஆம் ஆண்டு உள்நாட்டில் அவசரகாலச் சட்டத்தை (MISA) அறிவித்து, விடுதலைக்குப் போராடிய - போராடிச் சிறை சென்ற பெருந்தலைவர்களான, ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன் றோரைச் சிறையில் அடைத்தார். இதன் காரணமாக மத்திய அரசில் இடம் பெறுவோர்க்குத் தொலை நோக்குப் பார்வை என்பது முற்றிலுமாகத் தொலைந்து போனது. மாநிலக் கட்சிகளின் செல்வாக்கை இழக்கச் செய்வதற்கு மத்திய அரசு தனது அதிகார மய்யங் களைத் தவறாகப் பயன்படுத்தி மாநிலக் கட்சிகளைப் பிளப்பது, மாநிலக் கட்சிகளுக்கு எதிராக வன்முறை யாளர்களைத் தூண்டுவது என்ற போக்கும் வளரத் தொடங்கியது.

குறிப்பாக, இந்தியாவின் முதல் மாநிலக் கட்சியான அகாலி தளக் கட்சிக்கு எதிராக, சீக்கிய மதகுரு என்று தன்னைப் போற்றிக் கொண்ட பிந்தரன் வாலேவை காங்கிரசுக் கட்சி தூண்டியது. இந்திரா காந்தியின் மற்றொரு பிள்ளை சஞ்சய் காந்தியும், பஞ்சாப் மாநிலத் தின் அன்றைய காங்கிரசு முன்னணித் தலைவரான கியானி ஜெயில் சிங்கும் இணைந்து பிந்தரன் வாலேவை அகாலி தளத்திற்கு எதிராகத் தூண்டினர்; வளர்த்தனர். ‘புலிவாலைப் பிடித்த நாயர்’ கதை போன்ற நிலைக்கு, காங்கிரசு தள்ளப்பட்டது. சீக்கியர் மத்தியில் அதிதீவிரவாதக் கருத்துகளைப் பரப்பிய சில ஆண்டுகளிலேயே பிந்தரன் வாலே காங்கிரசிற்கு எதிராகக் களம் அமைக்கத் தொடங்கினர். “காலிஸ் தான்” தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். பொற்கோயிலுக்குள் தன் ஆதரவாளர்களுடன் குடி புகுந்தார்.

பிந்தரன் வாலேவின் செல்வாக்கைக் கண்டு காங்கிரசு அஞ்சத் தொடங்கியது. செருக்கு நிறைந்த தில்லியின் அதிகாரவர்க்கம் உடனடியாகப் பொற் கோயிலுக்குள் இராணுவத்தை அனுப்ப முடிவு செய்தது. ஏறக்குறைய 150 ஆண்டுகள் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியில் பொற்கோயிலுக்குள் காவல் துறையை அனுப்ப அஞ்சினர். ஆனால் காங்கிரசு ஆட்சி 1984 சூன் 3ஆம் நாள் பொற்கோயிலுக்குள் இராணுவத்தை அனுப்பியது. பதுங்கியிருந்த பிந்தரன் வாலே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே 3 நாட்கள் நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பொற்கோயிலின் வளாகத்தில் இரத்தக் கறை படிந்த அத்தியாயத்தைக் காங்கிரசு தொடங்கியது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு மத்திய அரசு ‘நீல நட்சத்திர நடவடிக்கை’ (Operation Blue Star) என்றே மாறியது. இதன் காரணமாக சீக்கியர்கள் உலக அளவில் கொதித்தெழுந் தனர். பஞ்சாப் தீப்பற்றி எரிந்தது. முதன் முறையாக இராணுவத்தில் கட்டுப்பாட்டுடன் பணியாற்றிய சீக்கிய வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியேறினர். பல ஆய்வாளர்கள், நடுநிலையாளர்கள், ஊடகச் செய்தியா ளர்கள் மத்திய அரசின் தவறான போக்கினால்தான் இந்நிகழ்வு நடந்தது எனக் குற்றம் சாட்டினர். “இந்தியா டுடே” இதழ், “பத்து அரசியல் அவமானங்கள்” (Top Ten Disgraces) என்ற தலைப்பில் பொற்கோயில் நடவடிக்கையை விமர்சனம் செய்தது. இதன் விளைவுதான் இந்திரா காந்தியின் படுகொலையாகும்.

இராஜிவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்பும் பஞ்சாபில் கலவரங்கள் அடங்கவில்லை. இராஜிவின் மறைவிற்குப் பிறகு 1991ஆம் ஆண்டில் சிறுபான்மை காங்கிரசு அரசை அமைத்து பிரதமரான நரசிம்மராவ், மீண்டும் பஞ்சாபில் காங்கிரசு ஆட்சி உருவாவதற்கு மாக்கியவல்லியின் அரசியல் கொள்கையைப் பின் பற்றினார். நரியின் தந்திரத்தையும், சிங்கத்தின் வன்மத்தையும் பெற்றதனால், இவரை “நரி-சிம்மராவ்” என்று இவரின் எதிரிகள் கூறினர்.

1992ஆம் ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரசு தனது தேர்தல் பரப்புரை யின்போது, நேரு, இந்திராகாந்தி, இராஜிவ் படங் களைச் சுவரொட்டிகளிலோ, துண்டறிக்கைகளிலோ வெளியிடவே இல்லை. நேரு மரபுவழிக் குடும்ப அரசியலை காங்கிரசு பின்பற்றாது என்று பஞ்சாபில் ஓர் அரசியல் நாடகம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாபில் காங்கிரசு வெற்றி பெற்று, பிந்த் சிங் முதல்வராகப் பொறுப்பேற்றர். உடனடியாகத் தீவிரவாதிகளை அடக்குவேன் என்று அவர் கூறினார். இதன் பின்பு சீக்கிய இளைஞர்கள் பலர் காணாமல் போயினர். மீண்டும் தீவிரவாதம் தலை தூக்கியது. 1995ஆம் ஆண்டில் தலைமைச் செயலக வளாகத்திலேயே தற்கொலைப் படைத் தாக்குதலில், முதல்வர் பிந்த் சிங் கொல்லப்பட்டார். பாதுகாப்புப் பணியாளர்கள் 17 பேர் உயிரிழந்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றிய சீக்கிய இளைஞர்களும் இறந்துவிட்டனர். முதல்வர் பிந்த் சிங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இறுதியாகத் தற்கொலைப் படைத் தாக்குதலில் நேரடியாகப் பங்கு பெற்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பல்வந்த் சிங் ரஜோனாவிற்கு 2012ஆம் ஆண்டு சண்டிகர் நீதி மன்றம் தூக்குத் தண்டனை அளித்தது. இவ்வழக்கில் ரஜோனா குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அரசு அளித்த சாட்சியங்களை மறுத்தோ, எதிர்த்தோ வாதாட அவர் விரும்பவில்லை. அவர் சார்பில் எந்த வழக்கறிஞரையும் வாதாடவும் நியமிக்கவில்லை. நீதிமன்றம் இவருக்காக வாதாட அளித்த வழக்கறி ஞரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ரஜோனா நீதிமன் றத்தில் அளித்த வாக்குமூலத்தில் “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட (தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உயிர்நீத்தவர்கள்) திலவாரும் மற்ற சிலரும் இந்நிகழ்விற்காக உயிர்த் தியாகம் செய்த போது நான் மட்டும் குற்றம் செய்யவில்லை என்று சொல்வதற்கு என் மனச்சாட்சி இடம் அளிக்கவில்லை” (He said his consciences would not permit him to deny his role in the killing when Dilawar and others sacrificed their lives for it) என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்வந்த் சிங் ரஜோனாவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்த போது, இவர் கைப்பட பஞ்சாபிய மொழியில் எழுதிய கவிதையைக் கைப்பற்றினர். அக்கவிதை வரிகளில் : “என்னுடைய தோழர்களின் வலியை ஒரு கவிதையாக நான் வடிப்பேன் என்ற நம்பிக்கையில் இறந்திருக்கிறார்கள். நான் அமைதி யாக இருந்துவிட்டால் அவர்களுடைய ஆவி அமைதி யடையாது ((My comrades died in the hope that I rendered their pain into a song; if I keep quite their souls will not be at peace).

பொற்கோயிலுக்குள் இராணுவத்தை அனுப்பிய தன் வழியாக சீக்கியர்களின் உணர்வுகளை மத்திய அரசு காயப்படுத்திவிட்டது. இந்திராவின் மரணத் திற்குப் பிறகு, சீக்கியர்களை எரித்தது, முடமாக்கியது; சீக்கியர்களின் உடல்களை நடுத்தெருவில் வீசியது, இறுதிச்சடங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறை களைக்கூடத் தடை செய்ததுடன் பெண்கள் அவமானப் படுத்தப்பட்டார்கள். இளைஞர்களின் ஆண்மை அகற்றப்பட்டது. சீக்கியர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. எனவே நான் தலைமை நீதிபதியைப் பார்த்துக் கேட்கி றேன். “யார் பயங்கரவாதிகள்? இந்தச் செயலில் ஈடுபட்டவர்களா? அல்லது அவற்றைத் தடுத்தவர் களா? மனித வெடிகுண்டுகளாக மாறி, தியாகங் களைத் தங்களுக்குள் செய்து கொண்டு ஒடுக்கு முறையையும், அநீதியையும் எதிர்த்துப் போராட வேண்டும். தன் நாட்டுக் குடிமக்களையே அரசு கொன்று குவித்துள்ளது. பஞ்சாபின் முதல்வர் பிந்த் சிங் போலி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அனுமதி அளித்தார்; ஆட்களைக் கடத்துவதற்கு உதவி செய்தார். கமுக்கமாக எரியூட்டினார். இந்தக் குற்றங்களுக்கு இதுவரை அவருக்குத் தண்டனை வழங்கப்படவில்லை” என, பல்வந்த் சிங் ரஜோனா தனது தரப்பு வாதமாக முன்வைத்தார். இந்த நிகழ்வுகளைத் தொகுத்து “இந்து நாளிதழ்”, 2012 மார்ச் 29 அன்று ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதியவர், யுக் மொகித் சவுத்ரி என்ற மும்பையைச் சேர்ந்த புகழ் பெற்ற வழக்கறிஞர் ஆவார். இறுதியாக “இதுவரை, சிந்திய இரத்தம் போதும், பழிவாங்குதலுக்காக மேலும் இரத்தம் சிந்த வேண்டும் என்பதற்காக மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது, என்றும் இவ்வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்றுதான், பொற்கோயிலுக்குள் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட உயர் அதிகாரிகளுள் ஒருவரான வைத்யா 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி சீக்கிய தீவிரவாத அமைப்பான காலிஸ்தான் போர்ப்படையினரால் சுடப்பட்டு இறந்தார். சுகதேவ் சிங் சுக்கா, ஹரிஜிந்தர் சிங் ஜின்டா ஆகிய இரு சீக்கிய இளைஞர்கள் 1992இல் நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கத் தூக்கிலிடப்பட்டனர். இந்த இருவரும் தாங்கள் வைத்யாவைக் கொலை செய்ததை ஒத்துக்கொண் டாலும், அதைக் குற்றமாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். மேலும் இராணுவ அதிகாரி வைத்யாதான் பெரும் குற்றத்தை இழைத்தார். மரணம் ஒன்றுதான் அவர் கொடுங்குற்றத்திற்குச் சரியான தண்டனை என்று நியாயப்படுத்தி நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

இத்தகைய பின்னணியில், அண்மையில், ரஜோனாவிற்குத் தூக்குத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்த போது, பஞ்சாப் மீண்டும் போர்க்கள மானது. பஞ்சாபினுடைய அகாலிதள முதல்வர் பாதல் உடனடியாகக் குடியரசுத் தலைவரைச் சந்தித்துத் தூக்கு தண்டனையை நிறுத்தச் சொன்னார். காங்கிர சின் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் தூக்குத் தண்டனையை ரஜோனாவிற்கு வழங்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியலுக்கு அப்பால் பஞ்சாபே ஒன்றிணைந்து தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரியது.

சீக்கியர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா? உச்சநீதிமன்ற-உயர்நீதிமன்றங்களின் எதிர்ப்புகளுக்கு இடையேயும் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலைச் சந்தித்து தூக்குத் தண்டனையைத் தடுத்து நிறுத்தக் கோர லாமா? குடியரசுத் தலைவரும் அதை ஏற்கலாமா? உடனடியாகத் தடுத்து நிறுத்தலாமா? என்ற பல கேள்விகள் தற்போது அரசியல் அரங்கில் எழுப்பப் படுகின்றன. ஆனால், சீக்கியர்கள் அரசியலைக் கடந்து, பொறுப்பேற்றிருக்கிற பதவிகளுக்கு அப்பால் ஒன்றி ணைந்து செயல்படுகிறார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

1984ஆம் ஆண்டு பொற்கோயிலுக்குள் சென்று இராணுவ நடவடிக்கையை மத்திய அரசு மேற் கொண்டதற்காகக் குடியரசுத் தலைவராக இருந்த கியானி ஜெயில் சிங் மன்னிப்புக் கோரினார். அகாலிதக் என்ற அமைப்பினர் அளித்த மதத் தண்ட னையையும் ஏற்றார். இந்திரா காந்தி மறைவிற்குப் பின் சீக்கியர்கள் மீது ஏவப்பட்ட கலவரங்களை ஆய்வு செய்த ஆணையத்தின் நீதி விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அளித்தபோது, 2005இல் பிரதம ராக இருந்த மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். “சீக்கிய சமுதாயத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிடமும் எவ்விதத் தயக்கமுமின்றி மன்னிப்புக் கோருகிறேன். இந்திய அரசியல் சட்ட நெறிகளையும், இந்தியா ஒரு நாடு என்று அழைக்கப்படுகிற கருத்திற்கும் எதிராக அமைந் ததுதான் 1984இல் நடைபெற்ற நிகழ்வாகும்” (I have no hesitation in apologising not only to the Sikh community but the whole Indian nation because what took place in 1984 is the negation of concept of nationhood and what is enshrined in our Constitution) என்றும் குறிப்பிட்டார். இதற்குப் பிறகுங் கூட சீக்கியர்கள் அமைதியைக் கடைபிடிக்கிறார்களா என்றால், இல்லை.

2009ஆம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ப. சிதம்பரம், தில்லி காங்கிரசு அலுவலகத்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித் தார். அப்போது ஜெர்னயில் சிங் என்ற செய்தியாளர், சீக்கியர்களைக் கொன்று குவித்த வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறையே (CBI) விரைந்து நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லையே, ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு உள்துறை அமைச்சர் உரிய பதிலை அளிக்கவில்லை என்பதற்காக, சிதம்பரத்தின் மீது அவர் செருப்பை வீசினார். தொலைக்காட்சியில் இந்நிகழ்வினைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி யுற்றனர். ஆனால் பதவிச் சுகத்திற்காக மான உணர் வை விட்டுக் கொடுக்கும் மாண்புமிகு ப. சிதம்பரம் இந்த நிகழ்வு ஏதும் நடைபெறாதது போலவே நடந்து கொண்டார். அச்செய்தியாளர் மீது காவல்துறையின் எவ்வித நடவடிக்கையும் வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.

சீக்கியர் என்றால் பயம். தமிழன் என்றால் வதை. சீக்கியனுக்கு நீதி. தமிழனுக்கு அநீதி. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மையான கட்சிகள், ஒரே குரலில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோ ரைத் தூக்கிலிட வேண்டாம் என்று வேண்டுகோள் மேல் வேண்டுகோள் வைக்கின்றன.

இராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இந்த மூவரும் தற்கொலைப் படைத் தாக்குதலோடு தொடர்பில்லாதவர்கள். இவர்கள் இந்தக் கொலை யைப் பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று திரும்ப திரும்பக் கூறி வருகிறார்கள். மேலும், இவர்கள் தூக்குத் தண்டனையை நிறுத்துமாறு கருணை மனுக் களைக் கையொப்பமிட்டுக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால், பல்வந்த் சிங் ரஜோனா எந்தக் கருணை மனுவையும் அனுப்பாமலேயே-குடியரசுத் தலைவர் அவருடைய தண்டனையை உடனடியாக நிறுத்துகிறார்.

இங்கு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் மூவரின் தூக்குத் தண்டனை தள்ளிப் போடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான தமிழர் களைப் பொறுத்தவரை யாருக்கும் தூக்குத் தண்ட னை வழங்கக் கூடாது என்பதுதான் நிலைப்பாடாகும்.

மத்திய அரசோ சீக்கியர்களை அணைக்கிறது; தமிழர்களை அழிக்கத் துடிக்கிறது. இதை என்று உணர்வார்களோ தமிழர்கள்!

-நன்றி: கீற்று.காம்

Sunday, May 27, 2012

நாமக்கல்லும் பிராய்லர் கோழிகளும்… மனப்பாட மாணவர்களும்!


இது மாணவர்களைக் குறைசொல்லும் கட்டுரையல்ல. இன்றைய கல்விமுறை எந்த அளவு தனியார் பெருமுதலாளிகளின் கல்வி வியாபாரத்துக்கு தோன்றாத் துணையாக உள்ளது… பெற்றோர்களின் மூடத்தனம் எந்த அளவு உச்சத்தில் உள்ளது என்பதைச் சொல்லவே!


இத்தனை சிக்கலான சூழலில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்…

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட கல்வியில் முன்னணியில் இருந்தவை சென்னை – வேலூர் மாவட்டங்கள்தான்… தென் தமிழகத்தில் எப்போதும்போல திருநெல்வேலி!

வசதி படைத்த பிள்ளைகளுக்கு ஊட்டி, ஏற்காடு கான்வென்டுகள்!

ஆனால் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு திடீரென கரூர், நாமக்கல் மாவட்டங்களில் கல்வி வியாபாரம் களைகட்ட ஆரம்பித்தது. யாரைப் பார்த்தாலும் அல்லது யார் சொல்லக் கேட்டாலும், எஸ்ஆர்வி, வெற்றி விகாஸ், வித்யா விகாஸ், பாவை, பிஜிபி, எஸ்கேவி, எக்ஸல்… என ஏகப்பட்ட பள்ளிகள்.

இந்த பள்ளிக் கட்டடங்களைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள். ஏதோ பன்னாட்டு தொழிற்சாலை வளாகத்தைப் போல அத்தனை பிரமாண்டம். ஒவ்வொரு பள்ளிக்கும் நான்கைந்து பிராஞ்சுகள் வேறு. நாமக்கல்லில் ஒன்று, ராசிபுரத்தில் ஒன்று, திருச்செங்கோட்டில் ஒன்று, காரமடை சாலையில் ஒன்று என வளைத்து வளைத்து கட்டியிருக்கிறார்கள்.

ராசிபுரம் பாலத்தைத் தாண்டியதும், அருமையான வயல்கள் ஆயிரம் ஏக்கரை வளைத்து மிகப்பெரிய கட்டடத்தைக் கட்டியிருக்கிறார்கள். அந்த பிரமாண்ட கட்டடங்களையொட்டி, பச்சைப் பசேல் நெல் வயல்கள், வேர்கடலை சாகுபடி, கரும்புத் தேட்டங்கள்…


இந்தப் பக்கம் கரூரிலும் இதற்கு நிகராக தனியார் பள்ளிகள். வீனஸ், வேலம்பா, கேவிபி, சேரன்… என அங்கும் 30-க்கும் மேற்பட்ட பெரிய தனியார் பள்ளிகள்.

இன்றைக்கு சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த கல்வி தொழிற்சாலைகளில் போய் தள்ளிவிட்டு வந்துவிடுவதில் குறியாக உள்ளனர். இதற்காக இவர்கள் படும் பாடுகள், சேர்த்த பிறகு இவர்களை அந்தப் பள்ளிகள் படுத்தும் பாடுகள் இருக்கிறதே… கொடுமை!

கடவுள் குறித்த மூடத்தனத்தை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டதைப் போல, இந்தக் கல்வி மூடத்தனத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வரமாட்டாரா என வாய்விட்டுக் கதறுவீர்கள் ஒரு முறை அனுபவப்பட்டால்!

இந்தப் பள்ளிகளில் சேர படும் பாட்டை முதலில் பார்ப்போம்…

கீழ்வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு இவர்கள் வைக்கும் தேர்வைப் பார்த்தால் ஐஐஎம்முக்காக நடத்தப்படும் CAT தேர்வு கூட தோற்றுப் போகும்… அத்தனை ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்ட்டு!!

எட்டாம் வகுப்பு சேர வரும் ஒரு பையனுக்கு வெக்டார்ஸ் பற்றி கேள்வி. அவன் இதற்கு முன் கேள்விப்பட்டிராத பல பாடங்களிலிருந்து தேர்வுத் தாள் தயாரித்திருப்பார்கள். இப்படித் தயாரிப்பது தவறு என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன… தெரியும். ஆனால் இப்படியெல்லாம் கஷ்ட்ட்டமான கேள்வியை வைக்கக் காரணம்… அதிகபட்ச பேரத்துக்காகவே.

உதாரணத்துக்கு…. கரூரில் XXX என்று ஒரு பள்ளி. இதில் உங்கள் பிள்ளையை 9-ம் வகுப்பு சேர்க்க வேண்டும் எனப் போகிறீர்கள். அவர்கள் வைத்த உலக மகா தேர்வில் பையன் தேறாமல் போகிறான். அப்போதுதான் உங்களுக்கு எப்படியாவது இந்த உலகத் தரமான பள்ளியில் பையனை / பெண்ணை சேர்த்துவிட்டால் போதும்… அத்தோடு அவன் வாழ்க்கையே பெட்ரோமாக்ஸ் லைட் போட்ட மாதிரி ஜெகஜ்ஜோதியாக இருக்கும் என்று தீர்மானித்து விடுகிறீர்கள்.

அடுத்து உள்ளூரில் உள்ள ஏதாவது ஒரு கட்சிப் பிரமுகரிடம் போவீர்கள்… ‘நான் இன்னார்… என் பக்கத்துத் தெருவில் உங்க கட்சி வட்டச் செயலாளர் எனக்கு வேண்டப்பட்டவர்… என் பையனுக்கு சீட் வேணும்… கொஞ்சம் பாத்துப் பண்ணிக்குடுத்தா நல்லாருக்கும்….’ என கெஞ்ச ஆரம்பிப்பீர்கள்.


அவரும் அங்கிருந்து போன் செய்வார்…. ‘நம்மாளுதாங்க… கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க’ என்பார். உடனே நம்பக்கம் திரும்பி, செலவு கொஞ்சம் ஓவரா ஆகும்… ஓகேன்னா தரச் சொல்றேன். எனக்கு எதுவும் நீங்க தர வேண்டாம்… ஸ்கூல்ல கேக்குறதைக் கொடுத்துடுங்க,” என்பார்.

“ஆகட்டும் சார்…. எப்படியாவது புரட்டி கட்டிடுவேன்..”

பையன் அப்போதே எஞ்ஜினீயர் அல்லது டாக்டராகி கால் மேல் கால்போட்டு சம்பாதிக்கும் கனவில் மூழ்கிவிடும் பெற்றோர், கடன் வாங்கி, நகையை விற்று எட்டாம் வகுப்புக்கு மட்டும் விடுதிக்கும் சேர்த்து 6 மாதங்களுக்கு கட்டும் கட்டணம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் வரும். அடுத்த ஆறு மாதங்களுக்கு இன்னொரு 60 ஆயிரம். புத்தகம் – சீருடைக்கு தனியாக சில ஆயிரங்கள். அப்புறம் அந்தப் பிள்ளையை விடுதியில் சேர்க்கும் முதல் நாளன்று, ஏதோ தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு சீர் செய்வது போல கட்டில், மெத்தை, தலையனை, வாளிகள், பெட்டிகள், தின்பண்டங்கள்…

ப்ளஸ் ஒன் சேரும் பிள்ளை / அல்லது பையனுக்கு இந்த செலவு இருமடங்காக இருக்கும்.

அதன் பிறகு வாரம் ஒரு முறை சென்னையிலிருந்தோ மதுரை – கோவையிலிருந்தோ போய் வந்துகொண்டிருக்க வேண்டும். எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கும். பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வரும்வரை.

அதன் பிறகு பள்ளிகள் காட்டும் சுயரூபம் வேறு மாதிரி இருக்கும்.

அதுவரை உங்கள் பையன் நன்றாகப் படிக்கிறான். திருப்திகரமான மதிப்பெண்… என்றெல்லாம் தொடர்ந்து வீட்டுக்கு கடிதங்கள் வரும் பள்ளி தாளாளரிடமிருந்து. அரையாண்டு தேர்வு முடிவு வந்ததும்… இந்த கடிதத்தின் தொனி தலைகீழாக மாறிப் போகும்!

‘அவசரம்… உடனே வந்து தாளாளர், செயலர் அல்லது தலைமையாசிரியரைப் பார்க்கவும்’ என்று ஒற்றை வரியில் தந்தி வரும்… செல்போன், இமெயில் சமாச்சாரங்கள் பெருகிவிட்ட இந்த நேரத்திலும், இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் தந்தியைத்தான் உபயோகிப்பார்கள் இந்த படுபாவிகள். உளவியல் தாக்குதல்!

தூக்கம் தொலைத்து அடித்துப் பிடித்துக் கொண்டு நாமக்கல்லுக்கோ கரூருக்கோ மட்ட மத்தியானம் போய் நின்றால்.. ‘என்னங்க இவ்ளோ லேட்டா வர்றீங்க… கரஸ்பாண்டன்ட் வீட்டுக்குப் போயிட்டார்… திரும்ப நாளைக்குதான் வருவார்… எதுக்கும் நான் தகவல் சொல்றேன்… மாலையில் ஒரு வாட்டி வந்து பாருங்க’ என்பார் அங்குள்ள உதவியாளர். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது அப்படி. அவரைத் திட்டி என்ன ஆகப் போகிறது. மாலை வரை பிள்ளையோடு பேசலாமா என்றால்… ‘ம்ஹூம், அவர்களுக்கு வகுப்பு இருக்கிறது. விசிட்டிங் அவர்ஸ் கிடையாது. நாளைக்குதான்,’ என்பான் கிராதகன்.

இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்து என்னத்தடா கிழிச்சிங்க என்று கேட்கும் திராணியின்றி, கரூர் அல்லது ராசிபுரத்தில் உள்ள லாரி ஷெட்டுகள், பெட்ரோல் பங்குகள், புழுதி பறக்கும் பஸ் நிலையங்களைப் பராக்குப் பார்த்துவிட்டு மீண்டும் மாலையில் போனால், அமர்த்தலாக உட்கார்ந்திருப்பார் கரஸ்பாண்டன்ட்!

தயங்கிக் தயங்கி பெற்றோர் உள்ளே நுழைந்ததும், அந்த ஆண்டிறுதி நாடகத்தின் அதிரடி க்ளைமாக்ஸை இப்படி ஆரம்பிப்பார் அந்த ஆசாமி!

எதிரில் உள்ள லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இப்படியும் அப்படியும் தட்டிக் கொண்டு, உதட்டை நான்கு முறை சுழித்து… “ம்ம்… என்னங்க இது… உங்க பிள்ளை இப்படி கவுத்திட்டானே… ரொம்ப மோசம்… தேர்றது கஷ்டம்.. ம்ம்… என்ன பண்ணப் போறீங்க… எங்க ரிசல்ட்டையே கெடுத்துடுவான் போலிருக்கே… வெளிய அனுப்பிடலாம்னு செக்ரட்டரி கூட சொல்றார்… எங்க ஸ்கூல் பேருதான் முக்கியம்… ”

“சார் சார்… என்ன சார் இப்படி சொல்றீங்க… நீங்கதானே சொன்னீங்க… எப்படி படிச்சாலும் பரவால்ல நாங்க குறைஞ்சது 1000 மார்க்குக்கு உத்தரவாதம்னு… இப்படி சொன்னா எப்படி… அவனைத்தான் நம்பியிருக்கோம்… என்ன வேணும்னாலும் செய்யறோம்” என்ற கதற ஆரம்பிப்பார்கள் பெற்றோர்.

வழிக்கு வந்துவிட்டார்கள் என்பது புரிந்ததும், அடுத்த அதிரடியை சாவகாசமாக ஆரம்பிப்பான் அந்த கிராதகன்!

“சரி.. ஒரே ஒரு வழியிருக்கு. நீங்க என்ன பண்றீங்க… ஒரு நாலு மாசம் உங்க பையன் / பெண்ணை கூட்டிட்டுப் போய், பக்கத்துல எங்காவது ஒரு ரூம் எடுத்து தங்கி பார்த்துக்க முடியுமா… கூடவே ட்யூஷனுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. ஒவ்வொரு சப்ஜெக்டும் தனித்தனியா இந்தப் பள்ளி் ஆசிரியர்களே கூட இருக்காங்க. இதுக்கு நீங்க தயாராக இருந்தா சொல்லுங்க..”

-’அடப்பாவி… அட்மிஷனப்போ நீ சொன்னதென்ன… இப்போ பேசறதென்ன… சென்னையிலிருந்து வேலையை விட்டுட்டு, நாங்க நாலு மாசம் இங்க தங்கியிருக்க முடியுமா…. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லியாடா’ -என்று கேட்கும் தைரியமோ, அதற்கான யோசனையோ கூட இல்லாமல் மண்டையை ஆட்டுவார்கள் பெற்றோர்கள்.

அடுத்த வாரமே, ஹாஸ்டலிலிருந்து மீண்டும் தனி வீட்டுக்கு மாறுவார்கள் மாணவர்கள். ஏதோ ஒரு பையனுக்கு, அல்லது பெண்ணுக்கு இந்த நிலை என்று நினைத்துவிட வேண்டாம். தொன்னூறு சதவீதத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகளுக்கு இதே ட்ரீட்மெண்ட்தான்.

ராசிபுரத்தைச் சுற்றிச் சுற்றி எக்கச்சக்கமாய் புதுப் புது ப்ளாட்கள் முளைத்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு கையில் பையனை அல்லது பெண்ணை அழைத்துக் கொண்டு ராசிபுரம் தெருக்களில் பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்து பாருங்கள்… ‘வாங்க சார்.. ஸ்டூடன்ட்டா…. வீடுவேணுமா… சிங்கிள் பெட்ரூம்… ரூ 7000 வாடகை… டபுள் பெட்ரூம் கூட இருக்கு… அதுக்கு ரூ 10000 ஆகும். ஓகேவா?’ என்று அடுத்தடுத்து குரல்கள் கேட்கும்.

ஏதோ ஒரு வீட்டைப் பிடித்து, இவர்களுக்காகவே ப்ளாக்கில் விற்கும் கேஸ் கனெக்ஷன் வாங்கி தற்காலிக தனிக்குடித்தனத்தை அங்கு ஆரம்பித்தாக வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிவரை போய் வர ஷேர் ஆட்டோ உண்டு!

அடுத்து ட்யூஷன்… ஒரு பாடத்துக்கு ரூ 6000. தமிழ் தவிர மற்ற 5 பாடங்களுக்கும் சேர்த்து ரூ 30000!

ஒரு நான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான்… எல்லாமே பக்கா செட்டப் என்பது புரியும். மாணவனை வெளியில் அனுப்பும் பள்ளி, வீடுதரும் ‘பினாமி ஹவுஸ் ஓனர்கள்’, ட்யூஷன் எடுப்பவன், கேஸ் விற்பவன், ஷேர் ஆட்டோ ஓட்டுபவன், எல்லாருக்குமிடையே ஒரு பிரிக்கமுடியாத உறவு இருப்பது புரிய வரும்…

புரிந்து என்ன பயன்… பல்லைக் கடித்துக் கொண்டு கடைசி தேர்வு வரை ராசிபுரம் வாசியாகவே, கரூர்வாசியாகவோ காலத்தைத் தள்ளுவார்கள் பெற்றோர்.

ரிசல்ட் நாளன்று பையன் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்ததைக் கொண்டாட வாயில் ஸ்வீட்டை வைக்கும்போது, நடந்ததை நினைத்தால் ரொம்பவே கசக்கும்!

இது யாரோ ஒருவரின் தனிப்பட்ட அனுவபம் அல்ல… பலரது அனுபவங்களின் சாம்பிள்!

எனக்குத் தெரிந்த ஒரு அரசு மருத்துவர் தனக்கு நேர்ந்தே இதே அனுபவத்தைச் சொல்லி முடித்தபோது அழுதேவிட்டார்!

ஒரு முறை ராசிபுரத்தின் அந்த பிரபல பள்ளிக்குச் சென்றிருந்தோம் உறவுக்கார பெண்ணைக் காண.

பள்ளி ஹாஸ்டல் பகுதி கட்டடத்தின் ஓரத்தில் எங்கள் காரை நிறுத்தினோம். ஒரு சில நிமிடங்களுக்குள் ஒரு பெரும் மாணவிகள் கூட்டம் அத்தனை ஜன்னல்களிலும் எட்டிப் பார்த்தது.

‘அங்கிள் டிசிதானே வாங்க வந்தீங்க… தயவு செய்து கூட்டிட்டுப் போயிடுங்க… நேத்துகூட மூணு பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்க… ஒரு பெண் தற்கொலை பண்ணிக்குச்சு. எங்க பேரன்ட்ஸுக்கு தகவல் சொல்ல முடியுமா… இந்த நம்பருக்கு கொஞ்சம் போன் பண்றீங்களா…’ என்று அடுத்தடுத்து கேட்டு துண்டுச்சீட்டுகளைத் தூக்கி எறிந்தனர். உடனே வாட்ச்மேன் ஓடிவர, அந்த மாணவிகள் தலைகள் மாயமாகிவிட்டன.

அந்த சீட்டுகளை எடுத்துக் கொண்டோம்.

கலாய்க்கிறார்களா… கவலையில் சொல்கிறார்களா என்று தெரியாமல் பள்ளி வளாகத்துக்கு வெளியே இருந்த ஒரு கடையில் பேச்சுக் கொடுத்தோம்…

“ரொம்ப கொடுமை நடக்குது சார்… இப்ப துண்டுச் சீட்டு வீசின பசங்கள்லாம் தனியா வீடு எடுத்து படிக்க முடியாத நிலையில் உள்ளவங்க. அவங்களை படுத்தி எடுப்பாங்க இந்த பள்ளியில். ஏன் இன்னும் வெளிய போகாம இருக்கீங்க… போங்க என்பார்கள். ஆனால் அவங்க பேரன்ட்ஸால வர முடியாததால மாணவ மாணவிகளுக்கு வேறு வழி தெரியாம இந்தக் கொடுமையை சகிச்சிட்டு படிக்கிறாங்க…” என்றபோது, அதிர்ந்து போனோம்.

இரண்டு நம்பர்களுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னபோது, ‘ஆமா சார், எங்களையும் தனி வீடு பார்க்கச் சொன்னாங்க. ராமநாதபுரத்தில் இருந்து வந்து அப்படியெல்லாம் பாத்துக்க முடியல. ‘பிள்ளைகளை 1000 மார்க் வாங்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. கடைசி நேரத்தில் எங்களை நிர்பந்தம் செஞ்சா எப்படி?’ன்னு கேட்டுட்டுதான் வந்தோம். பெயிலானா எங்களைக் குறை சொல்லாதீங்கன்னு சொல்லி அதோட விட்டுட்டாங்க. எதுக்கும் வந்து பாக்குறோம் சார்,” என்றார்கள். வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை!

‘என்னங்கடா நடக்குது… இந்த கொள்ளைக்காரனுங்களை தட்டிக்கேட்க ஆளே இல்லையா?’

ம்ஹூம்… இல்லை!

-வினோ
நன்றி: என்வழி

Saturday, March 24, 2012

இலங்கை விவகாரம்… இரக்கமற்ற இந்திய மீடியாக்கள்!

இந்தியாவிலேயே அதிகமாக தேசியத்தைப் பேசுபவன், தேசியத்தை போதிப்பவன் தமிழன்தான் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் அந்தத் தமிழனைத்தான் இந்தியா தொடர்ந்து சோதித்துக் கொண்டே இருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, தமிழ் தலைவர்களின் கடும் அழுத்தத்தால் இந்தியா ஆதரித்தது, வட இந்திய ஆங்கில மீடியாக்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஏதோ சிங்கள இனவாத இலங்கையை, தமிழகத்தினர் அத்தனை பேரும் சேர்ந்து அழித்து விட்டது போலவும், தமிழகத்தின் நியாயமான போராட்டத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வந்து விட்டதைப் போலவும் இந்த போலி தேசியவாதிகள், தமிழக தலைவர்களையும், தமிழக கட்சிகளையும் விமர்சித்து எழுத ஆரம்பித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி கொடுத்த அழுத்தம், நெருக்கடி மற்றும் மிரட்டல்தான் காரணம் என்று இவர்கள் புரியாமல் எழுதி வருகின்றனர்.

வழக்கமாகவே ஈழப் பிரச்சினை என்றாலே வட இந்திய மீடியாக்களுக்கு வேப்பங்காயாக கசப்பது தெரிந்த விஷயமே. இலங்கை அரசு, இலங்கை ராணுவம், இலங்கைத் தரப்புக்கு ஆதரவான கருத்துக்களையே தொடர்ந்து வட இந்திய மீ்டியாக்கள், குறிப்பாக ஆங்கில மீடியாக்கள் பிரசுரிப்பது, ஒளிபரப்புவது வழக்கம்.


இலங்கைப் பிரச்சினை என்னவென்றே அவர்களுக்கு முழுமையாக புரியாமல் போனதே இதற்குக் காரணம். இதனால்தான் ஆரம்பத்திலிருந்தே இந்தப் பிரச்சினையை அவர்கள் சரிவர அணுகவில்லை. இது வரலாற்று உண்மை. ஆனால் வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், மிகுந்த ஞானத்துடனும், சமயோஜிதத்துடனும், தீர்க்கதரிசனத்துடனும் ஈழப் பிரச்சினையை அணுகியவர் இந்திரா காந்தி மட்டுமே.

இதனால்தான் இந்திரா காந்தியின் ஆசியோடு, எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார், பயிற்சியளித்தார், ஈழப் பிரச்சினையில் இந்த இரு தலைவர்களும், தமிழர்களுக்கு ஆதரவாக நின்றனர், தமிழர்களின் உணர்வுகளோடு கலந்திருந்தனர்.

இலங்கையில் எண்பதுகளில் இனப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபோது, அப்பிரச்சினை குறித்து ஒட்டு மொத்த தமிழ் பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்தில் ஆத்திரமும் வேதனையும் பொங்க குரல் எழுப்பிய போது, அதைக் கேட்டுக் கொண்ட இந்திரா அவர்கள் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?

இதோ சிறந்த பாராளுமன்றவாதி என்று புகழப்பட்ட இரா செழியன் சொல்கிறார்:

‘பிரதமர் இந்திரா அம்மையார் எங்களை அழைத்து, உங்கள் வேதனையை நான் உணர்கிறேன். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். செய்து விடுவோம். தனி ஈழம் அமைத்துத் தந்தால், பிரச்சினை தீர்ந்துவிடுமா? தமிழர்கள் துன்பமின்றி வாழ முடியுமா?’ என்று கேட்டார். அன்றைய முதல்வர் அமரர் எம்ஜிஆருக்கு அவர் அனுப்பிய செய்தியும் அதுவே. பங்களாதேஷை உருவாக்கித் தந்த அந்த பெருமாட்டிக்கு தனி ஈழம் அமைப்பது ஒரு பிரச்சினையே அல்ல. அந்த முடிவுக்கும் அவர் வந்துவிட்டிருந்தார், எம்ஜிஆர் அவர்களின் அணுகுமுறை காரணமாக. அவர் சொன்னதே இறுதி வார்த்தை எனும் அளவுக்கு காமன்வெல்த் அமைப்பில் பலமிக்க ஒரே தலைவராகத் திகழ்ந்தார் இந்திரா அவர்கள். ஆனால் காலம், அவரை பறித்துக் கொண்டது.”

இன்று வரை ஈழப் பிரச்சினையை சரியாகப் புரிந்து கொண்ட இந்தியத் தலைவர்கள் யார் என்றால் இந்த இருவரை மட்டுமே தமிழர்களால் நினைத்துப் பார்க்க முடிகிறது. இவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் சரியான கோணத்தில் சிந்திக்காமல் போனதாலும், சிந்திக்கத் தவறியதாலும்தான் ஈழப் பிரச்சினை வேறு வேறு ரூபத்தில் மாறிப் போய் இன்று ஒரு ‘தீவிரவாத’ இயக்கத்திடம் சிக்கி இலங்கை மீண்டுள்ளதாக ஒரு கருத்து வலுப்பட்டுப் போகக் காரணமாகி விட்டது. ஈழத்தில் நடந்தது ஒரு இனப் பிரச்சினை என்பது ஆங்கில மீடியாக்களுக்குப் புரிவதில்லை.

செர்பியா, போஸ்னியா, குர்து இன மோதல்கள், பாலஸ்தீன மோதல்கள், தைமூர் மோதல்கள் மட்டுமே அவர்களுக்கு இனப் பிரச்சினை. ஈழத்தில் நடந்தது ‘தீவிரவாதப் போர்’ என்பது அவர்களது கருத்து.

ஈழத் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற பார்வையுடன்தான் ஈழப் பிரச்சினையை பார்க்கின்றனரே தவிர, அந்தப் புலிகள் போராடியதே ஈழத் தமிழ் மக்களுக்காகத்தான் என்ற மனிதாபிமான கண்ணோட்டம் இந்த பத்திரிகைகளுக்கு இல்லை.

ஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது கொடூரமாகக் கொல்லப்பட்ட சிறார்கள், பெண்கள், முதியோர்கள், ஊனமுற்றோர்கள், எந்த அளவுக்கு சித்திரவதையை அனுபவித்தார்கள், எப்படியெல்லாம் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார்கள், எப்படியெல்லாம் கொடூரமாக கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து ஒரு சொட்டு கண்ணீரைக் கூட இந்த வட இந்திய மீடியாக்கள் சிந்தவில்லை – ஆனால் சானல் 4 தயாரித்த இலங்கையின் கொலைக்களம் வீடியோவைப் பார்த்து நானும் ஒரு சிங்களன் என்று கூறிக் கொள்ள வெட்கமாக, வேதனையாக உள்ளது என்று தனது மகன் கூறியதாக சொல்லி கண்ணீர் வடித்தார் சிங்களத்து சந்திரிகா குமாரதுங்கா.

மனித நேயம், மனித உரிமை குறித்த அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இலங்கையில் நடந்த கொடூரம் குறித்து நிச்சயம் துடித்துப் போவார்கள். உணர்வு இருப்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். சிங்களராகவே இருந்தாலும் கூட சந்திரிகா அதைத்தான் வெளிப்படுத்தினார், நாங்கள் செய்தது தவறு என்றார் வெளிப்படையாக.

ஆனால் எங்கேயோ சிரியாவில் நடந்த தாக்குதல்களைப் பற்றியும், இஸ்ரேல் அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது குறித்தும், ஈரானின் நிலை என்ன என்பது குறித்தும் மாய்ந்து மாய்ந்து செய்தி போட்டுத் தாளித்தெடுக்கும் ஆங்கில மீடியாக்களுக்கு, தமக்கு வெகு அருகே ஈழத்தில் நடந்து முடிந்த ஒரு மிகப் பெரிய இனப்படுகொலை குறித்து கவலைப்பட தோணவே இல்லை. பத்திரிகையாளர்களாக அதுகுறித்த குறைந்தபட்ச அக்கறை கூட அவர்களுக்கில்லை.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை -இந்த தீர்மானமே ஒரு வலுவான, உருப்படியான தீர்மானம் இல்லை, அதையும் கூட இந்தியா கடைசி நேரத்தில் திருத்தம் செய்து நீர்த்துப் போகச் செய்து விட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது – இந்தியா ஆதரிக்கக் கூடாது என்ற ரீதியில்தான் ஆங்கில மீடியாக்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன.

அதற்கு அவர்கள் சொன்ன காரணம், இலங்கையை நாம் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கு வசதியாகப் போய் விடும். அப்படி நடந்தால் இந்தியாவுக்குப் பேராபத்து என்ற ரீதியில் மறைமுகமாக மத்திய அரசை நெருக்கி வந்தன. ஆனால் ஈழப் படுகொலைகளுக்கு நிவாரணம் தேட வேண்டும், தமிழரை ஆதரிப்பதன் மூலமும் சீனாவுக்கு பெரும் நெருக்கடி தர முடியும், இந்துமாக்கடல் ஆதிக்கத்தை தக்க வைக்க முடியும் என்ற பார்வையே அவர்களுக்கில்லை.

இப்போது தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவைத் தெரிவித்து வாக்களித்ததை பெரும் எரிச்சலுடன் தங்களது செய்திகளில் காட்டி வருகின்றன ஆங்கில மீடியாக்கள். அதிலும் டைம்ஸ் ஆப் இந்தியா, ஒரு படி மேலே போய், ‘கருணாநிதி ஈழத் தமிழர்களைப் பிடித்த சாபம். இவரால்தான் இன்று சீனா, இந்தியாவுக்குப் பெரும் மிரட்டலாக உருவெடுத்துவிட்டது’ என்று மிகக் காட்டமாக சொல்லியுள்ளது.

சென்னை தனிமைப்பட்டுப் போனதாம் இந்தியாவிலிருந்து… அவர்கள் செய்தித் தலைப்பு இது!

இந்தியாவிலிருந்து தனிமைப்படும் எண்ணம் இந்தியத் தமிழருக்கில்லை. ஆனால் அந்த எண்ணத்தைத் தூண்டும் இந்த பிரிவினைவாத மீடியாக்களை பாரதம் எப்படி அனுமதிக்கிறது?

இலங்கையை நாம் பகைத்துக் கொண்டால் சீனா வந்து விடும், பாகிஸ்தான் வந்து விடும் என்று ஆங்கில மீடியாக்கள் பதறுகின்றன, துடிக்கின்றன.

ஈழத்தில் துடிக்கத் துடிக்க சிறார்கள் என்றும் கூட பாராமல் சிங்களர்கள் கொடூரமாக கொன்றழித்ததைக் கூட கண்டுகொள்ளா்மல், இந்தியா இலங்கையை ஆதரித்தபோதும் கூட இதுதானே நடந்தது. ஹம்பந்தோட்டா மூலம் சீனா, இலங்கைக்குள் பெரும் ஆதிக்கத்துக்கு அடிபோட்டுவிட்டதே… இதோ இப்போதும் நாச்சிக்குடாவில் இலங்கை அமைத்துள்ள கடற்படை தளத்தின் முழு கட்டுப்பாடும் சீனா வசம் உள்ளதே… அதாவது சீனத்து குறி எப்போதும் தென் தமிழகத்தை நோக்கி திரும்பி நிற்கிறதே… அது சரிதானா?

கச்சத்தீவு அருகே போனாலே சுட்டுத் தள்ளுகிறார்களே, இந்திய மீனவர்களை -அதாவது தமிழக மீனவர்களை. அது நியாயம்தானா..?

கச்சத்தீவில் சீன ராணுவம் நடமாட்டம் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருகிறதே, அதுகுறித்து நமது மீடியாக்களுக்குக் கவலை இல்லையா..? அது மட்டும் இந்தியாவுக்குப் பாதுகாப்பானதா…?

ஈழத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி தமிழர்கள் போராடிய காலத்தில் ஒரு சீனரையும் இலங்கையின் பக்கம் நம்மால் பார்க்க முடியவில்லை. பாகிஸ்தானால் உள்ளே வர முடியவில்லை. இந்தியாவின் எதிரிகள் யாரும் அங்கு ஊடுருவ முடியவில்லை. இந்தியா மிக மிக பத்திரமாகவே இருந்தது. ஆனால் இன்று… மாலத்தீவு, இலங்கை என எல்லா பக்கத்திலிருந்தும் சீனாவின் பயமுறுத்தல்… இந்த உண்மையை ஆங்கில மீடியாக்கள் மறந்தது ஏன்…?

உண்மையிலேயே இந்தியாவை நம்பகமான நண்பனாக இலங்கை நினைத்திருந்தால், நிச்சயம் அது சீனாவின் பக்கமோ, பாகிஸ்தான் பக்கமோ போயிருக்காது. ஆனால் இந்தியாவை மிரட்டிப் பணிய வைப்பதே சிங்கள இனவாதத்தின் நோக்கமாக உள்ளது. அதுதான் அவர்களை சீனாவின் பக்கம் போக வைத்துள்ளது. பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்ட வைக்கிறது. இந்தியா செய்யாத உதவியையா இந்த இரு நாடுகளும் இலங்கைக்கு செய்து விட்டார்கள்?

லங்கையின் உண்மையான நோக்கம், தமிழ் இனத்தை பூண்டோடு அழிப்பது, அதற்கு இந்தியாவின் கையையே பயன்படுத்துவது. இந்தியா மறுத்தால் அதன் பரம விரோதிகளிடம் நட்பு பாராட்டி வழிக்குக் கொண்டுவருவது.

இலங்கையின் இந்த கேவல புத்தி இப்போது கொஞ்சமாவது இந்திய அரசுக்கும் புரிய ஆரம்பித்திருப்பது ஏன் ஆங்கில மீடியாக்களும், தமிழகத்தில் தினமலர் போன்ற பத்திரிகைகளுக்கும் புரியவில்லை?

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் அரங்கேறிய தமிழினப் படுகொலையில் மற்ற நாடுகளை விட இந்தியாதான் பெருமளவில் உதவி செய்தது. இதை ராஜபக்சேவே வெளிப்படையாக சொல்லியுள்ளார். இந்தியாவுக்காக நாங்கள் போர் புரிந்தோம் என்று இந்தியாவை தமிழர்களிடம் நிர்வாணமாக்கி, உள்நாட்டு சண்டையை ஏற்படுத்த முனைந்த நரி ராஜபக்சே.

அத்தோடு நிற்கவில்லை அந்த ‘போர்க்குற்றவாளி’. இப்படிச் சொல்லிக் கொண்டே சீனா, பாகிஸ்தானுடனான உறவையும் அவர் வலுப்படுத்திக்கொண்டே வருகிறார். இப்படிப்பட்டவரை இந்தியா நம்ப வேண்டும் என்கின்றனவா இந்த சேனம் கட்டிய ஆங்கிலக் குதிரைகள்?

இலங்கை இப்படி செய்வது சரிதான், அப்போதுதான் இந்தியாவுக்கு ஆபத்து இருக்காது என்பதுதான் இந்திய மீடியாக்கள் நிலையா?

இதற்கெல்லாம் ஆங்கில மீடியாக்களிடம் நிச்சயமாக பதில் இருக்காது. இருந்தாலும் சொல்ல மாட்டார்கள். அவர்களது பேச்சையும், எழுத்தையும் பார்த்தால் இந்தியாவின் மானம் காப்பாற்றப்பட்டது சர்வேதேச அரங்கில் என்பதைவிட, முன்னாள் கலிங்கத்திலிருந்து போய் குடியேறி சிங்களராக மாறியவர்களுக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற பயம்தான் தூக்கலாக தெரிகிறது.

அவர்களுக்கும் முன்பே இலங்கையை மன்னர்களாக அரியணையிலிருந்து ஆண்டவர்கள் இந்த தமிழர்கள் என்பது மறந்து போனதா?

அகிம்சையை உலகுக்குக் கற்று கொடுத்த நாடு நமது இந்தியா. கவனிக்க… நமது இந்தியா. எந்த ஆங்கிலப் பத்திரிகைக்கும், இந்திக்காரனுக்கும் மட்டும் சொந்தமானதல்ல இந்த பாரத நாடு.

மகாத்மா காந்தியடிகளையும், புத்தரையும் பார்த்த பூமி இது. இங்கிருந்து போன பெளத்தம்தான் இன்று இலங்கையின் முக்கிய மதம். ஆனால் ஒரு பெளத்தன் செய்யும் காரியத்தைத்தான் சிங்களர்கள் செய்திருக்கிறார்களா என்பதை நடுநிலையோடு அலசிப் பார்க்க வேண்டும் ஆங்கில மீடியாக்கள். வீரப்போர் புரிந்து உயிரிழந்த தமிழ் பெண் போராளிகளின் மார்பகங்களை அறுத்துப் பார்க்கவா சிங்களர்களுக்கு போதித்தார் புத்தர்?

அட, செத்தவன் தமிழன் என்பதையெல்லாம் கூட மறந்து விடுவோம். சக மனிதனை இன்னொரு மனிதன் கொடூரமாகக் கொல்கிறான். அதைப் பார்த்து பிற மனிதர்கள் குறைந்தபட்சம் துடிப்பதும் கூடாதா? அதைத் தட்டிக் கேட்க ஒருவன் கிளம்பினால் அதை ஆதரிப்பதும் தவறா..?

இந்த விஷயத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளையும் தூக்கிச் சாப்பிடுகிறது தினமலர். ஒரு காலத்தில் கேரள எல்லையில் தமிழனின் உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த இந்த தமிழ்ப் பத்திரிகை, ஈழத் தமிழரின் காவலன் அமரர் எம்ஜிஆரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பத்திரிகை இன்று தமிழின விரோதியாக மாறிப் போனது எத்தனை பெரிய இழுக்கு? பார்ப்பணீயம், திராவிடம் போன்ற சர்ச்சைகளைத் தாண்டி தன்னை ஒரு தமிழ் நாளிதழாக உணருமா தினமலர்?

ஆங்கில மீடியாக்களே, தினமலர்களே… இனி உங்களுக்குத் தேவை செய்திகளோடு… கொஞ்சம் மனிதாபிமானமும்!!

-டாக்டர் எஸ் சங்கர் (என்வழி)

Friday, March 23, 2012

கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா? எதிர்ப்பதா?

1. அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) ‘டைனமோ’வில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். இது போன்ற பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது). டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் அணு மின்சாரம்.

யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.

2. சூரிய ஒளி (Solar) மின்சாரமும் இதே போன்றது தானா?

இல்லை. சூரிய ஒளியின் ஆற்றல் மூலம் வெப்ப நிலை தூண்டப்படும் பலகைகள் (Panels) சிறிய அளவில் மின்சாரத்தை உருவாக்கின்றன. அதன் மூலம் மின்கலன்களை (Batteries) மின்னூட்டம் (Charge) செய்ய முடியும். அந்த மின்கலன்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது.

3. கூடங்குளம் அணு உலையின் தொழில் நுட்பம் என்ன?

கூடங்குளம் அணு உலை இரசிய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும் போது சுமார் 2000 oC வெப்பம் உருவாகிறது. இது நீரின் கொதி நிலையான 100 oC -ஐ விட 20 மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது.

யுரேனியம் அணுவைப் பிளக்கும் போது அது வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன், புளுட்டோனியமாக மாறுகிறது. மேலும் கடுமையான கதிரியக்கமும் (Radiation) ஏற்படுகிறது. இந்த கதிரியக்கத்திலிருந்து பாதுகாப்பதற்குத்தான் கான்கிரீட் சுவர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன.

4. அணு உலைத் தொழிற்நுட்பத்தின் நன்மை மின்சாரம். அதனால் தீமைகள் உண்டா? அவை யாவை?

கண்டிப்பாகத் தீமைகள் உண்டு. அவை முதன்மையானது கதிரியக்கம் (Radiation). இந்த கதிரியக்கம் மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படும்.

இரண்டாவது - கழிவுகள். இந்த பிளக்கப்பட்ட யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியம் என்பது அணுகுண்டு செய்யப் பயன்படும் மூலப்பொருள். அணுகுண்டு ஏற்படுத்திய நாசங்களை நாம் ஏற்கனவே சப்பான் நாட்டின் கிரோசிமா, நாகசாகி நகரங்களில் பார்த்துவிட்டோம். இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது, எப்படிப் பாதுகாப்பது என்பதை உலக விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும்.

மூன்றாவது - விபத்துக்கள். மற்ற தொழிற்சாலைகளைப் போல் சிறிய அளவிலான விபத்துக்கள் என இதைக் கருத முடியாது. அணு உலையின் சிறிய விபத்தே மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்பு லட்சக் கணக்கில் இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரும். நாம் கற்பனை செய்வதை விட இழப்புக்கள் மிகமிக அதிகமானதாகவே இருக்கும்.

நான்காவது - சுற்றுப்புற சீர்கேடு. அணு உலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, அணு உலைளைக் குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும் கொட்டப்படுகின்றது. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன், அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.

ஐந்தாவது - பாதுகாப்பு. ஏறக்குறைய ஒவ்வொரு அணு உலையும் ஒரு அணு குண்டுக்குச் சமமானது. தீவிரவாதிகளாலோ அல்லது எதிரி நாட்டினராலோ தாக்கப்படும் அபாயம் உள்ளது. மடியில் அணு குண்டைக் கட்டிக்கொண்டு எப்படி நிம்மதியாக வாழ முடியும். அவ்வாறு தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். மேலும் பாதுகாப்புக் கருதி அப்பகுதி ராணுவமயமாக ஆக்கப்படுவதால் பொது மக்கள் சராசரி வாழ்க்கை வாழ முடியாமல் இடர்ப்பட நேரிடும்.

5. தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க அணு மின்சாரம் அவசியம் தானே?

கண்டிப்பாக இல்லை. முதலில் தமிழகம் மின் பற்றாக்குறை உள்ள மாநிலமே இல்லை. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு போதுமானது மட்டுமின்றி மிகுதியானதாகும். (தமிழ்நாட்டின் மின் தேவை 12,500 மெகாவாட்)

பொதுவாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமது மின் தேவையில் 65 விழுக்காட்டை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும். அத்துடன் மிகச் சிறு அளவை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளும். மீதி 35 விழுக்காட்டை மத்திய அரசு தனது மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும்.

மாநிலங்கள் தாங்கள் சொந்தமாக நடத்தும் மின் உற்பத்தி திட்டங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரம் தேவைக்கு மேல் மிகுதியாக உள்ள போது அவற்றை வெளியே விற்று லாபம் ஈட்டிக் கொள்ளலாம். இவ்வாறு 1992 வரை தமிழ்நாட்டின் மிகுதி மின்சாரத்தில் வருடத்திற்கு 3,500 கோடி ரூபாய் லாபம் கிடைத்துவந்தது.

ஆனால் 1992-ல் இந்திய நடுவண் அரசு (மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், மாண்டேக் சிங் அலுவாலியா நிதித் துறைச் செயலாளராகவும் இருந்த போது) மாநில அரசின் மின் திட்டத்திற்கான அனுமதிகளை முடக்கியது. ஆனால் தனியார் மின் ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது. அந்த தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநில அரசுகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கும்படி நிர்ப்பந்தித்தது. மேலும் மத்திய மின் தொகுப்பிலிருந்து கொடுக்கும் மின்சாரத்தின் அளவையும் குறைத்தது.

எடுத்துக்காட்டாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் எண்ணூர் மின் உற்பத்தித் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து பிடுங்கப்பட்டு வீடியோகானுக்குத் தாரைவார்க்கப்பட்டது. நெய்வேலியில் ST-CMS என்ற அமெரிக்க தனியார் தயாரிக்கும் மின்சாரத்தை யூனிட் ரூ.3.70-க்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் அருகிலுள்ள என்.எல்.சி-யில் மின்சாரம் யூனிட் விலை 1.72 காசு. இதன் மூலம் பெரும் நட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.

மேலும் தன் பங்குக்கு தமிழ்நாடு அரசும் பொது மக்களுக்கு வழங்கி வந்த மின்சாரத்தை போர்டு, குண்டாய், கணிணி (ஐடி) நிறுவனங்கள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் திருப்பிவிட்டன. பொது மக்களுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் முதலாளிகளுக்கு தடையற்ற மலிவான மின்சாரம் தருகின்றனா.

வீடுகளுக்கு எட்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்படுத்தும் அரசு தனியார் (ஐடி) நிறுவனங்களுக்கு 2 நிமிடத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டால் அதற்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கிறது. மேலும் வீட்டிற்கு யூனிட் ரூ.3.50-க்கு விற்பனை செய்யும் மின் வாரியம் ஐ.டி நிறுவனங்களுக்கு ரூ.2.50-க்குத் தான் கொடுக்கிறது. தமிழ்நாட்டின் 40% மின்சாரத்தை இந்த நிறுவனங்கள் தான் உபயோகிக்கின்றன.

நெய்வேலியிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றிற்குத் தரும் மின்சாரத்திலிருந்து தலா ஆயிரம் மெகாவாட்டை நமக்குத் தந்தாலே போதும். தமிழகத்தின் பற்றாக்குறை வெறும் 2,600 மெகாவாட்டுகள் மட்டுமே. மின் உற்பத்தியின் படி உபரி மாநிலமாக இருக்கும் தமிழகத்தின் மின்சாரம் இப்படி வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால் நாம் மின்வெட்டுப் பிரச்சினையில் மாட்டித் தவிக்கிறோம். நமக்கு அணு மின்சாரம் தேவையே இல்லை.

6. இந்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறீர்கள். ஆனால் எட்டு மணி நேர மின் வெட்டால் அவதிப்படுவது மக்கள் தானே. இப்போது கூடங்குளத்திலிருந்து வரும் மின்சாரம் நமக்குக் கிடைத்தால் இந்த மின் தடைப் பிரச்சினை குறையுமே?

கூடங்குளம் அணு உலையின் மொத்த உற்பத்தித் திறனே 1,000 மெகாவாட் தான். இரண்டாவது அணு உலை செயல்படத் துவங்கிய பின்னரே இன்னொரு ஆயிரம் மெகாவாட் கிடைக்கும். இதுவரை இந்தியாவின் அணு உலைகள் 100 விழுக்காடு உற்பத்தித் திறனை எட்டியதில்லை. அணு உலைகளின் உற்பத்தித் திறன் 50 விழுக்காட்டுக்குக் கீழ்தான். ஒரு வேளை 1,000 மெகாவாட் உற்பத்தி ஆவதாக எடுத்துக்கொண்டாலும், அதில் தமிழகத்தின் பங்கு வெறும் 280 மெகாவாட் மட்டுமே. இதில் மின் கடத்தல் பகிர்மானத்தில் இழப்பு (transmission) 30 விழுக்காடு போக 190 மெகாவாட்கள் மட்டுமே கிடைக்கும். அதிலும் தொழிற்சாலைகளுக்குப் போக வீட்டுக்கு வந்து சேருவது சொற்பமே. வெறும் 190 மெகாவாட்டிற்காக அணு உலை என்னும் பேராபத்தை வரவேற்பது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமம். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு வெறும் 3% மட்டுமே. கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டால் பாலாறும், தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் என்பது காங்கிரசின் வழக்கமான மாய்மாலம்.

7. நீங்களோ அணு உலைகள் பேராபத்து என்கிறீர்கள். ஆனால் விஞ்ஞானிகளோ பாதுகாப்பானது என்கிறார்களே இவற்றில் எது உண்மை?

அணு உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் அதிலிருந்து தினசரி வரும் கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. ஆனால் கூடங்குளம் அதைப் போன்று இல்லை. அங்கு சுமார் 7 கிலோ மீட்டருக்குள் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். மேலும் 20 கிலோ மீட்டருக்குள் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். கண்டிப்பாக கதிரியக்கத்தால் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

மேலும் விபத்து ஏற்படாது, இந்த அணு உலை பாதுகாப்பானது என்பதை வாய்மொழியாகச் சொல்கிறார்களே தவிர, அவை அறிவியல் பூர்வமாக இது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.

8. உண்மையில் உறுதி செய்யப்படவில்லையா? ஆனால் மத்திய அரசின் வல்லுநர் குழு பாதுகாப்பை உறுதி செய்ததே?

பாதுகாப்பு அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது தான் ஆணித்தரமான உண்மை. மத்திய அரசின் வல்லுநர் குழு தமக்குக் கொடுக்கப்பட்ட கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் அறிக்கையின்படி, அது பாதுகாப்பானது என்ற முடிவை எடுத்ததேயொழிய, எந்தவித ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் மத்திய அரசுக்கும், கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கும் ஒருபக்கச் சார்பாகவே நடந்து கொண்டார்கள்.

9. அப்படியானால் எந்த முறைகளில் அணு உலையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்?

முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டாவதாக இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

10. இந்த மூன்றுமே கூடங்குளம் அணு உலையில் பின்பற்றப்படவில்லை என்கிறீர்களா?

ஆமாம். நிச்சயமாக.

முதலில் அடிப்படையாகச் செய்ய வேண்டிய புவியியல் ஆய்வுகளே அணு உலை நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால் இந்த இடம் அணு உலைக்கு ஒரு சதவீதம் கூட ஏற்ற இடமல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும். மாறாக எரிமலைப் பாறைகள் மீது இந்த அணு உலையை அமைத்துவிட்டு இப்போது பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்!

11. என்ன இது? இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சாதாரணமாகக் கூறுகிறீர்கள்!

ஆமாம். அதிர்ச்சியடைய வேண்டாம். பொதுவாக அணு உலை அமைந்திருக்கும் தரை கெட்டியான பாறைகளால் உருவானதாக இருக்க வேண்டும். ஆனால் கூடங்குளத்தில் தரை அப்படி இல்லை. அங்கு இருப்பவை ஒழுங்கற்ற எரிமலைப் பிதுக்கப்பாறைகள்.

12. எரிமலைப் பாறைகளா?

ஆமாம்! கூடங்குளம் அணு உலைக்கு அடித்தளம் தோண்டும் போதுதான் அந்த உண்மை அவர்களுக்குத் தெரிந்தது. எனவே காங்கிரீட்டைக் கொட்டி அதன் மேல் அடித்தளத்தை அமைத்தனர்.

மேலும் பூ மியின் மேலோடு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தடிமனாக உள்ள இடங்களில்தான் அணு உலை அமைக்கப்பட வேண்டும். ஆனால் கூடங்குளம் அருகிலுள்ள பகுதிகளில் வெறும் 110 மீட்டர்கள் தான் புவியோடு தடிமன் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

13. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?

பூ மியின் அடியிலுள்ள மிகச் சூடான மாக்மா என்ற பாறைக் குழம்பு பூமியின் மேலோடு மெலிதாக உள்ள இடங்களில் வெடிப்பை ஏற்படுத்தி எரிமலையாக வெளிக்கிளம்பும். அது மேற்பரப்பையும், அதன் மீதுள்ள கட்டுமானங்களையும் குறிப்பாக அணு உலையையும் நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது.

14. இது தவிர வேறென்ன குறைபாடுகள் உள்ளன?

இரண்டாவதாக இயற்கைப் பேரிடர்களான சுனாமி, பூகம்பம் போன்றவை உருவாகும் வாய்ப்பு குறித்த ஆய்வும் நடத்தப்படவில்லை. அப்படி நடத்தியிருந்தால் கூடங்குளத்திலிருந்து வெறும் 90 கி.மி. தொலைவில் மன்னார் வளைகுடாவில் கடல் தரையில் எரிமலை முகவாய் (volcanic vent) இருப்பதை முன்னரே கண்டுபிடித்திருக்கலாம்.

மேலும் மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் வண்டல் குவியல்கள் இரண்டு பெரிய அளவில் உள்ளன. இவற்றின் பெயர் கிழக்குக் குமரி மற்றும் கொழும்பு வண்டல் குவியல்கள். இதோடு இந்திராணி நிலப்பிளவு என்னும் நீளமான நிலப்பிளவும் கடலுக்கடியில் காணப்படுகிறது. இதன் மூலம் கடலுக்கடியில் பூகம்பமும், அதனால் பெரும் சுனாமி அலைகளும் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ச்சியாளாகள் நிறுவியிருக்கிறார்கள்.

இதுபோக அவ்வப்போது கடல் அரிப்பு, கடல் உள்வாங்கல் ஆகிய நிகழ்வுகளும் கன்னியாகுமரிக் கடலோரத்தில் நடந்துள்ளது. இவையும் அணு உலையைப் பாதிக்கும் மிக முதன்மையான காரணிகளாகும்.

ஒரு சிறு திருத்தம். திரு. அப்துல்கலாம் அணு விஞ்ஞானி அல்ல. அவர் வானூர்திக்கான (auronautical) விஞ்ஞானி. அவருக்கு நிலவியல் (geology), கடலியல் (marine) தொடர்பான ஆராய்ச்சிகளோடு தொடர்பு கிடையாது. மேலும் அவர் அணுகுண்டுத் தொழிற்நுட்பத்திற்கு ஆதரவான கருத்துடையவா. பூகம்பம் வரும் என்றோ, சுனாமி வரும் என்றோ இதுவரை எந்த விஞ்ஞானிகள் முன்னறிவிப்புத் தந்திருக்கிறார்கள். வந்த பின்னர் தான் வந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டி அறிந்து சொல்வதில் நம் அறிவியல் துறை பெரும் தோல்வியையே கண்டுள்ளது.

16. அப்படியானால் அப்துல்கலாம் சமூக அக்கறையுடன் செயல்படவில்லை என்கிறீர்களா?

நிச்சயமாக. அணுகுண்டு வெடித்து அதைப் பார்த்து பரவசப்படும் ஒரு மனிதர், எவ்வளவு பெரிய அறிவாளியாக, விஞ்ஞானியாக இருந்தாலும் அவர் மக்கள் விரோதியே.

இந்தியா நல்லரசாக இருப்பதைவிட அதை வல்லரசாக ஆக்குவதற்காக கனவு கண்டவர் அப்துல்கலாம். அணு உலையைத் திறப்பதற்காக உடனடியாக ஓடோடி வந்து பார்வையிட்டு, அது பாதுகாப்பானது என்று கருத்துச் சொன்ன அவர், சொந்த ஊரான இராமேசுவரம் மீனவர்கள் காக்கை குருவியைப் போல சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கிறாரா?

சிங்கள அரசின் கலை நிகழ்வுக்கு நடிகை அசின், பாடகர் மனோ முதலானவர்கள் சென்றதற்கே உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் கண்டித்தனர். இலங்கை அரசை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புறக்கணியுங்கள் என்று தமிழக முதல்வர் தீர்மானமே நிறைவேற்றியுள்ளார். ஆனால் கொழும்பில் நடைபெற்ற சிங்கள அரசு விழாவில் அப்துல்கலாம் பங்கேற்று சிறப்பித்துள்ளார். நடிகை அசின் செய்தால் தவறு. அப்துல்கலாம் செய்தால் சரியா?

இலங்கையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட போது மறந்தும் ஒரு வார்த்தை கண்டிக்காத அப்துல்கலாம், கொழும்பு அரசு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தது என்ன நியாயம்? இதுதான் அவரது இன உணர்வு, மனித நேயம். அவர் உண்மை பேசுவார் என்று இனிமேலும் எப்படி நம்புவது?

17. சரி! புவியியல் ரீதியாக கூடங்குளம் இடம் தவறான தேர்வு என்கிறீர்கள். ஆனாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

முதலில் இந்த அணு உலை ஆந்திராவில் நாகார்சுனசாகரில் தான் அமைவதாக இருந்தது. ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் கர்நாடகாவில் கைக்கா என்ற இடத்தை முடிவு செய்தனர் . இதற்கு கர்நாடக அரசும் ஒப்புக்கொள்ளவில்லை. பின் கேரளாவில் பூதகான்கெட்டு என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக கடைசியில் தமிழ்நாட்டுக்குத் தள்ளிவிடப்பட்டது.

18. ஆக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் ஒப்புக்கொள்ள மறுத்த ஒரு திட்டத்தை தமிழ்நாட்டு மக்களின் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்கிறீர்களா?

ஆமாம். தமிழர்கள்தானே எந்த பாதிப்பு வந்தாலும் பொறுமையாக இருக்கும் இளித்தவாயர்கள்.

ஆனால் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் சமபங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும். தமிழகத்திற்கு பாலாறை, காவிரியை, முல்லைபெரியாறு நீரைக் கொடுக்க மறுக்கும் அந்த மாநிலங்களுக்கும் இங்கிருந்து மின்சாரம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இதைவிடப் பெரிய கொடுமை. இலங்கையின் கொழும்பு நகரத்திற்கு மின்சாரம் கொடுப்பதற்காக கடலுக்கடியில் மின் கேபிள்கள் போடப்பட்டு தயாராக உள்ளன. சிங்கள சகோதரர்களுக்கு எத்தனை மெகாவாட் கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

19. சரி! இந்த அணு உலைத் தொழில்நுட்பத்தில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா?

நிறைய உள்ளன. இந்த வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசியாவின் தொழில்நுட்பம் நிறைய குறைபாடுகளைக் கொண்டது. இதை நாம் சொல்லவில்லை. சப்பானில் புகுசிமா அணு உலை வெடித்தற்குப் பின் இரசிய அதிபர் தம் நாட்டு விஞ்ஞானிகளிடம் இரசிய அணு உலைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்த ஆணையிட்டார். அதன்படி ஆய்வு செய்த இரசிய விஞ்ஞானிகள் இந்த வி.வி.இ.ஆர் 1000 அணு உலைத் தொழிற்நுட்பம் குறித்த 31 குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தமட்டில் குளிர்விக்கும் தொழிற்நுட்பம் மிகவும் பலவீனமாக உள்ளது. கடல் நீரை உப்பகற்றி நன்னீராக்கி குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு உப்பகற்றும் இயந்திரங்கள் இசுரேல் நாட்டிலிருந்து டாட்டா நிறுவனத்தின் மூலம் தருவிக்கப்பட்டவை. இதைத் தவிர வேறு எந்த நீராதாரமும் இல்லை.

1989ம் ஆண்டு இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு எந்தக் காரணங்களைக் கொண்டும் அணு உலைகளைக் குளிர்விக்க ஒரே ஒரு நீராதாரத்தை மட்டும் நம்பியிருக்கக்கூடாதென்று வலியுறுத்திய போதும், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை.

ஒரு வேளை உப்பகற்றும் தொழிற்நுட்பத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் இசுரேல் நாட்டிலிருந்து தான் தொழில்நுட்ப நிபுணர்கள் வரவேண்டும். அணுஉலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீர் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். இந்த நீரின் அளவு 6 கோடி லிட்டராக இருக்கவேண்டும் என இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்திய போதும் கூட அங்கு வெறும் 1.2 கோடி லிட்டர் நீர் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது அணு உலை நிர்வாகத்தின் அசிரத்தையைக் காட்டுகிறது.

சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் வரும் காலங்களில் கூட உலையின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அப்துல்கலாம் போன்றவர்கள் திரும்பத்திரும்பச் சொன்னாலும் கூட ஒரு உண்மையை அவர்கள் தாங்களே ஒப்புக் கொண்டுள்ளனர். பேரிடர் காலங்களில் சமாளிக்கத் தேவையான ஜெனரேட்டர் முதலான உபகரணங்கள் கடல்மட்டத்திலிருந்து வெறும் 13 மீட்டர் உயரத்தில்தான் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே சுனாமி அலைகள் 13 மீட்டருக்குமேல் உயரமாக வந்தால் என்ன செய்வது என்ற கேள்விக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.

அதுபோன்று 5.2 ரிக்டர் வரையிலும் வரும் பூகம்பத்தால் பாதிப்பு இல்லை என்று சொல்கின்றனர். சமீபத்தில் குஜராத்தில் வந்த பூகம்பத்தின் அளவு 8 ரிக்டர். அப்படி கூடங்குளத்தில் ஏற்பட்டால் என்ன விளைவு என்பதையும் கூற மறுக்கின்றனர்.

20. கூடங்குளம் அணு உலை பற்றி இவ்வளவு குறைபாடுகள் சொல்கிறீர்கள். இவற்றை அரசாங்கத்திடமோ, நீதிமன்றத்திடமோ தெரிவித்தால் அவர்களே இத்திட்டத்தை நிறுத்திவிடமாட்டார்களா?

அதுதான் வேதனையான செய்தி. இந்தக் குறைபாடுகளை இந்திய அணுசக்தித் துறை கண்டு கொள்ளவோ, இது குறித்துப் பேசவோ தயாராக இல்லை. இதற்காக மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களோடு 2002 மே 20ல் உச்சநீதிமன்றத்தை நாடிய போது, வாதத்தை மறுக்க முடியாத தலைமை நீதிபதி பி.என். கிர்பால், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தாம் தலையிட முடியாதென்றும், மக்கள் சார்பின் வழக்குத் தொடர்ந்த காந்திகிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மார்க்கண்டனுக்கும், நாகர்கோவில் விஞ்ஞானி டாக்டர் லால் மோகனுக்கும் அபராதமும் விதித்தார். இதுதான் அரசின், நீதிமன்றங்களின் நிலைப்பாடு.

21. விபத்துக்கள் ஏற்படும் என்பதற்காக விமானம், இரயில் பயணங்களைத் தவிர்க்க முடியாது. ஒருவேளை விபத்து ஏற்பட்டாலும் கூட ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக சிலர் தியாகம் செய்வது தவிர்க்க முடியாது என்கிறார்களே?

விமான விபத்துக்களையோ, இரயில் விபத்துக்களையோ, அணு உலை விபத்துடன் ஒப்பிடக் கூடாது. விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். விபத்தின் பாதிப்புகள் தொடராது. ஆனால் அணு உலை விபத்தில் உயிரிழப்பு லட்சக்கணக்கில் ஏற்படும். பல லட்சம் பேர் கதிரியக்கத்தால் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் அந்தக் கதிரியக்கப் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். கண்ணிழந்து, உறுப்புகளை இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும். மொத்தத்தில் அணு விபத்து என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.

விபத்து ஏற்பட்டால் கூடங்குளத்திலிருந்து குறைந்த பட்சம் 140கி.மீட்டருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். விபத்திற்குப்பின் 77கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115கி.மீ. வரை 5 ஆண்டுகளுக்கும், 140கி.மீ. வரை ஓராண்டு காலத்திற்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக முடியாது. மொத்தத்தில் தென்தமிழகம் மக்கள் குடியிருக்க இயலாத நஞ்சுக்காடாகிவிடும்.

கூடங்குளம் மக்கள் போராடுவது தங்கள் சொந்த நலனுக்காக மட்டுமில்லை. நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்.

22. ஆனால் உலகெங்கும் அணு உலைகள் பாதுகாப்பாகத்தானே இயங்கி வருகின்றன. விபத்துகள் ஏதும் பெரிய அளவில் நடக்கவில்லையே?

யார் சொன்னது? இரசியாவில் 1986ம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது. இவ்வளவுக்கும் அப்போது அந்த அணுஉலை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. மூடப்பட்டிருந்தது. ஆனால் அந்த விபத்தின் காரணமாக 2004 வரை கிட்டத்தட்ட 9,85,000 போ புற்றுநோய் கண்டு உயிரிழந்ததாக இரசிய அரசே உறுதி செய்துள்ளது.

மேலும் செர்நோபில் உலையிலிருந்து 2700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இங்கிலாந்தில் அந்த அணுக்கதிர்வீச்சு உணரப்பட்டு 2,26,500 கால்நடைகளை உடனடியாகக் கொன்று புதைக்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது. மீன்கள், மிருகங்கள், மரங்கள் தண்ணீர் என ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் நஞ்சாக மாறிப் போயின.

சொனோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. இது மொத்த உலகத்தையே பாதித்த ஒரு விசயம் என்பதை இரசிய அதிபர் கோர்ப்பசேவ் நேர்மையாக ஒத்துக்கொண்டார்.

ஆனால் இந்த விபத்து நடந்த மறு ஆண்டுதான் அதாவது 1987ல்தான் இந்தியாவில் அணுஉலைகள் அமைக்க இரசியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு முன் 1979ல் அமெரிக்காவில் மூன்றுமைல் தீவு என்னுமிடத்தில் அணுஉலை ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்திலும் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்ததோடு அந்தப்பகுதி மீண்டும் பயன்படுத்தமுடியாத அளவிற்கு நஞ்சாக மாறியது.

சமீபத்தில் சப்பானில் புகுசிமாவில் நடந்த அணுஉலை விபத்தில் ஏற்பட்ட சேதங்களை தொலைக்காட்சியில் நாம் நேரடியாகவே பார்த்தோம். இவ்வளவுக்கும் அது அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்தது. இந்த புகுசிமா அணுஉலையை மூடுவதற்கு கிட்டத்தட்ட 75ஆயிரம் கோடி செலவாகும் என்றும் 45 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

23. ஒன்றிரண்டு விபத்துக்கள் நடக்கின்றன என்பதற்காக அணுஉலைகளே வேண்டாம் என்று சொல்லமுடியுமா? மற்ற நாடுகளில் அணு உலைகள் இயங்கத்தானே செய்கின்றன?

மூன்றுமைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின்னர் அமெரிக்காவும், 1986ல் செர்நோபில் விபத்துக்குப்பின் இரசியாவும் இது நாள் வரை தன் நாட்டில் ஒரு அணுஉலை கூட புதிதாகத் திறக்கவில்லை.

எல்லா நாடுகளுக்கும் யுரேனியம் விற்பதில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணுஉலை கூட கட்டப்படவில்லை.

சப்பானில் புகுசிமா விபத்திற்குப் பின் 28 அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு விட்டன. கட்டப்பட்டுக்கொண்டிருந்த 10 அணு உலைகளின் வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன.

செர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட உள்ளதாக அறித்துள்ளது. ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்து அதை மூடும் முடிவில் உள்ளன.

24. மற்ற நாடுகளை விடுங்கள். இந்தியாவில் உள்ள அணு உலைகள் நன்றாகத்தானே உள்ளன. குறிப்பாக கல்பாக்கம் அணுஉலை நன்கு செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது?

கல்பாக்கம் அணுஉலை ஒன்றும் பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. அதன் திறன் வெறும் 170 மெகாவாட்தான். 1987 மே 4ம் தேதி அதன் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகாலம் மூடப்பட்டுக்கிடந்தது. 300 மில்லியன் டாலர் செலவு செய்து அது சீரமைக்கப்பட்டது. 2002ம் ஆண்டு அக்டோபா 22ல் சோடியம் கதிர்வீச்சு ஏற்பட்டு அதைச் சரிசெய்ய 30 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. 1999 மார்ச் 26ல் 40 டன் எடையுள்ள கன நீர் கொட்டி அதைச் சுத்தம் செய்த தொழிலாளி உயிரிழந்தார். 2000 சனவரி 24 அன்று பெரும் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு அதை இந்திய விஞ்ஞானிகளால் சரிசெய்ய இயலாமல் வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கல்பாக்கம் அணு உலைக்கும் ஆபத்துக்கள் எந்த நேரமும் வரலாம். அதன் தென்கிழக்கே 104கி.மீல் 03051 என்ற எண் கொண்ட எரிமலை ஒன்று கடலுக்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது. அது வெடிக்கும்போது பெரும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இவை ஒருபுறம் இருக்க கல்பாக்கம் உலையின் கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதால் கடல் வெப்பம் 80டிகிரி வரை அதிகரித்து மீன் வளம் குறைந்தது. மீனவர்கள் இடம் பெயர்ந்தனர். அங்கு வசிக்கும் மக்கள் நோயால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அப்பகுதி மருத்துவர்கள் ஆதாரங்களுடன் விளக்குகிறார்கள்.

அதே போல் தாராப்பூர் அணு உலை கட்டப்படும் போது அங்கு இருந்த மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 700. இப்போதோ வெறும் 20 மட்டுமே. அப்பகுதியில் பிடிபடும் மீன்களில் கதிரியக்கம் இருப்பதை மும்பை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. 1989 செப்டம்பர் 10-ல் அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 700 மடங்கு கதிர்வீச்சு ஏற்பட்டது. அதை சரிசெய்ய ஆன செலவு 78 மில்லியன் டாலர் .

1995 பிப்ரவரி 3ம் தேதி ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் ஹீலியம் கன நீர் கசிவு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் உலை மூடப்பட்டது. சரி செய்ய ஆன செலவு 280 மில்லியன் டாலர் . எனவே அணு உலைகளால் பாதிப்புகள் இல்லை என்பது அப்பட்டமான பொய்.

25. ஒருவேளை விபத்துக்கள் நடந்தால் நம் அரசுகள் நம்மைக் காப்பாற்றாது என்று கூறுகிறீர்களா?

நிச்சயமாக, இந்த அரசுகள் போன 2004 சுனாமியின் போது எப்படி நம்மைப் பாதுகாத்தன என்பதைக் கண் முன்னால் பார்த்தோம். சுனாமி இந்தோனேசியாவைத் தாக்கி 5 மணி நேரம் கழித்தே இந்தியக் கடலைத் தொட்டது. இதை மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் விட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வெளிநாட்டு நிறுவனங்களை நம்பி இருந்ததுதான் இந்தியாவின் நிலை. இந்தியாவின் பேரிடர் மேலாண்மை உலகறிந்த செய்தி.

இந்திய அரசின் மக்கள் மீதான அக்கறைக்கு ஒரு எடுத்துக்காட்டு போபால் சம்பவம். போபாலில் கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் யூனியன் கார்பைடு (எவெரெடி) நிறவனத்திலிருந்து மீதைல் ஐசோ சயனைடு என்ற விசவாயு கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த 5000க்கு மேற்பட்ட மக்கள் உடனடியாக இறந்து போனார்கள். பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 20,000 பேர் இறந்து போனார்கள்.

காங்கிரசு தலைமையிலான அரசு உடனே என்ன செய்தது தெரியுமா, அந்த அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் அண்டர்சனை தனி விமானத்தில் ஏற்றி டெல்லி வழியாக அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 26 வருடங்கள் நடத்திய வழக்கில் அண்டர்சன் ஆஜராகவே இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்த பின்னரும் குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை. இதுதான் இந்திய அரசு மக்களைக் காக்கும் லட்சணம்.

இன்னும் தமிழர்கள் பிரச்சினை என்று வந்துவிட்டால் இந்தியாவிற்கு கொண்டாட்டமாகிவிடும். கேரள மீனவர்கள் சுடப்பட்டதால் இத்தாலி கப்பல் கேப்டனை கைது செய்பவர்கள், கப்பலை சிறைபிடிப்பவர்கள் இராமேசுவரம் மீனவர்கள் சுடப்படும் பொழுது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே.

26. இப்போது சமீபத்தில் விபத்து நட்டஈடு சட்டமெல்லாம் நிறைவேற்றினார்களே! அதில் கூட நியாயம் கிடைக்காதா?

அந்த சட்டமே அவர்களாகப் போட்ட சட்டமில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அவர்களைக் காப்பாற்றுவதற்காக அரசு நிறைவேற்றிய சட்டம். இதன் மூலம் இழப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பு 2500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும் அதிகபட்சமாக 2500 கோடியைக் கொடுத்துவிட்டு அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஒதுக்கிக் கொள்ளும். மீதியை நாம்தான் சுமக்க வேண்டும்.

கூடங்குளம் அணுஉலை விசயத்திலோ இன்னும் கொடுமை. விபத்து நடந்தால் அந்த இரசிய நிறுவனம் எந்தப் பொறுப்பும் ஏற்காது. எல்லாம் இந்திய அரசுதான் ஏற்கவேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது.

அது சரி! விபத்தே நடக்காது என்றால் நட்ட ஈடு சட்டம் எதற்கு என்பதுதான் விளங்கவில்லை.

27. இப்படியெல்லாம் பயந்தால் வரலாறு படைக்க முடியுமா? நாடு முன்னேறுவது எப்படி?

அஞ்சுவது அஞ்சாமை பேதமை. கண்டிப்பாக பெரு விபத்துக்கள் நடக்கும், பேரழிவுகள் ஏற்படும் என்று தெரிந்த பின்னரும் அதைத் தொடர்வது முட்டாள்தனம்.

நாட்டு முன்னேற்றத்திற்கு மின்சாரம் அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் மின்சாரம் தயாரிக்க பல நல்ல வழிகள் உள்ள போது அணு உலை மூலமாகத்தான் மின்சாரம் தயாரிப்போம் என்று பிடிவாதம் பிடிப்பதற்கு நாட்டு முன்னேற்றம் காரணம் அல்ல.

28. அப்படியானால் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைச் சமாளிக்க என்னதான் வழி என்று கேட்கிறார்களே?

அன்னியச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கான தடையற்ற மலிவு விலை மின்சாரம், உலக மயம் தோற்றுவிக்கும் நுகர்பொருள் கலாச்சாரம், கேளிக்கை விடுதிகள், முழுக்கக் குளிரூட்டப்பட்ட மால்கள், நகரிய வேடிக்கைகள் என்று பெரும்பான்மை மக்களாகிய நம்மைச் சுரண்டும், புறந்தள்ளும் ஒரு பாதையை வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அதற்கு மின் வினியோகம் செய்வதற்கு மட்டும் ஆலோசனையை நம்மிடமே கேட்பது அயோக்கியத்தனம். காற்றாலை, சூரிய ஒளி என மாற்றுவழிகள் குறித்து நாம் அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருப்பது இளிச்சவாய்த்தனம்.

29. பிற வழிகளில் மின்சாரம் தயாரித்தால் அதிக செலவாகும். அணுமின்சாரம்தான் மலிவானது. சுத்தமானது என்று சொல்கிறார்களே?

மின்சாரம் தயாரிப்பில் அதற்கான மொத்த செலவுகளையும் கணக்கிடவேண்டும். அணுஉலை கட்டுவதற்கான செலவு, அதை இயக்குவதற்கான செலவு, பிறகு அதை மூடுவதற்கான செலவு என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த உலைக்காக அரசு வழக்கும் 200 விழுக்காடு மானியத்தையும் கணக்கிட்டோமானால் அணு மின்சாரத்தின் விலை மிகவும் அதிகம்.

மேலும் இந்த அணு உலைகள் மற்ற திட்டங்களைப் போல் காலங்காலமாக பலன்தரக் கூடியவை அல்ல. இவற்றின் ஆயுள் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே. பின் இந்த உலைகளை மூடுவதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும்.

அணு மின்சாரம் சுத்தமானது என்று சொல்வது கேலிக்குரியது. கடல்நீரை ஒரு நாளைக்கு 32லட்சம் லிட்டர் உறிஞ்சி அதை உப்பு அகற்றி உலையைக் குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள். அந்த உப்புக் கழிவுகளை மீண்டும் கடலில்தான் கொட்டுவார்கள். குளிர்வித்த நீர் வெந்நீராக திருப்பி கடலில்தான் கொட்டப்படுகிறது. கடலில் கொட்டப்படும் வெந்நீரால் அப்பகுதி மீன்வளம் பாதிக்கப்படும். சுமார் 4 டிகிரி வெப்பம் உயாந்தாலே நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்க நேரிடும். அணு உலையின் கதிரியக்கச் செயல்பாடுகளால் சுற்றுப்புறமும் சீர்கெடும். மக்கள் நோய்க்கு உள்ளாவார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக ஆபத்தானது அணுக்கழிவுகள். அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறோம் என்பதை அணுஉலை நிர்வாகம் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

30. அணுஉலையின் விஞ்ஞானி சிரிகுமார் பானர்ஜி பேசுகையில் அணுக்கழிவு சிறிய அளவில் தான் இருக்கும். அதை மறுசுழற்சி செய்து ஆபத்தில்லாததாக மாற்றி எங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்துக்கொள்வோம் என்று கூறினாரே?

இதுதான் அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம். அவர் சொன்ன சிறிய அளவு என்பது எவ்வளவு தெரியுமா? சுமார் 30 முதல் 50 டன்கள். 30 ஆண்டுகளில் 1500 டன்கள் வரை இந்த அணுக்கழிவுகள் உருவாகும். உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரகசியமாக வேற்று நாட்டு கடலுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் புதைத்து வருகிறார்கள்.

அணுக்கழிவுகளை ஆபத்தில்லாததாக மாற்றுவதற்கு எந்த தொழில்நுட்பமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவற்றை பெட்டகங்களில் இட்டு பூமிக்குள் புதைப்பதுதான் இதுவரை நடைமுறையாக உள்ளது.

கூடங்குளம் அணுஉலையின் கழிவுகள் முதலில் இரசியாவிற்கு எடுத்துச் செல்லப்படும் என்று கூறினார்கள். பின் கல்பாக்கம் எடுத்துச் செல்வோம் என்று கூறினார்கள். இப்போது கூடங்குளத்திலேயே புதைப்போம் என்கிறார்கள். மிகப்பெரிய கதிரியக்கத்தை உருவாக்கும் அணுக்கழிவுகளை நம் நிலத்தில் புதைத்து நஞ்சாக்குவதை நாம் எப்படி அனுமதிப்பது. பானர்ஜி சொன்னது மாதிரி புளுட்டோனியத்தை ஒரு உருண்டை உருட்டி அவர் வீட்டில் வரவேற்பறையில் வைக்கட்டும். பிறகு நாமே அணுஉலைகளை வரவேற்போம்.

31. அப்படியானால் 13,500 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலையை மூடுவதுதான் தீர்வா? இத்தனை கோடி ரூபாய்களை வீணாக்குவதா?

அணு உலையை அனல்மின் உலையாக மாற்றலாம். அணுவிற்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். அவ்வாறு மாற்றிய முன்னுதாரணங்கள் பல வெளிநாட்டில் உண்டு. அப்படி முடியாவிட்டால் உலையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 1,78,000 கோடி. சேதுசமுத்திரத் திட்டத்தில் கடலில் தூர்வாரி பின் அதை மதவாத சக்திகளுக்குப் பணிந்து பாதியிலேயே கைவிட்டதில் வீணானது பல ஆயிரம் கோடி. காமன்வெல்த் விளையாட்டு அரங்கம் நிர்மாணித்ததில் செய்த ஊழல் பல ஆயிரம் கோடி. இந்திய அரசியல்வாதிகள் கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடிகளை ஒப்பிடும்போது இது வெறும் கொசு.

32. நீங்கள் இந்த விபரங்களை அணுஉலை கட்டுமுன்னரே வெளிப்படுத்தியிருக்கலாமே? கட்டும் வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது போராட்டம் நடத்துவது என்ன நியாயம்?

கட்டும்வரை பேசாமல் இருந்ததாக அரசியல்வாதிகள் கூறுவது முழுப்பொய். ஊடகங்கள் பெரிதாக பேசவில்லை அல்லது நமக்குத் தெரியவில்லை என்பதற்காக போராட்டம் நடக்கவில்லை என்று கருதக்கூடாது.

1987லிருந்து தொடர்ந்து போராட்டம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. 1987 செப்டம்பர் 22ல் இடிந்தகரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 1988ல் இந்தியாவுக்கு வந்த இரசிய அதிபர் கார்ப்பசேவுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. 1989-ல் நெல்லையில் ஒரு பெரிய பேரணி நடத்தப்பட்டது. 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பெரிய பேரணியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்து கொண்டார்.

1989 மே 1ம் தேதி தேசிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கன்னியாகுமரி பேரணியில் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.

இந்த கூடங்குளம் அணுஉலையின் அடிக்கல் நாட்டு விழா தொடர் எதிர்ப்பின் காரணமாக மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி, ஆர். வெங்கட்ராமன், கருணாநிதி ஆகியோர் அதில் கலந்து கொள்ள முடியாத அளவிற்குப் போராட்டம் நடைபெற்றது.

ஒருமுறை இசையமைப்பாளர் இளையராசா அணு உலை எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டபோது உடனடியாக அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது.

2002ல் அணுஉலையை நிலவியல் ரீதியாக ஆய்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டு வழக்குத் தொடர்ந்த காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இப்படி அரசின் கடுமையான அடக்குமுறைகளை மீறி தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் வழக்கம்போல் மக்கள் போராட்டங்களை இருட்டடிப்புச் செய்கின்றன.

இடையில் சோவியத் இரசியா உடைந்த காரணத்தால் 10 ஆண்டுகளுக்கு அணுஉலை கட்டும் பணி நிறுத்தப்பட்டது. 2001-ல் இருந்துதான் மீண்டும் கட்டத்தொடங்கினார்கள். அணுமின் நிலையத்தைப் போலவே படிப்படியாக போராட்டமும் வளர்ந்து நிற்கிறது. புகுசிமா விபத்திற்குப்பிறகு மக்களிடையே அணுஉலையின் நாசங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகவே இப்போராட்டங்கள் வலுப்பெற்றன.

33. அந்நிய நாட்டில் சதி காரணமாக நீங்கள் அணுஉலையை எதிர்ப்பதாகவும், உங்களுக்கு வெளிநாட்டுப் பணம் வருவதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் பிரதமர் மன்மோகன்சிங்கும் குற்றம் சாட்டுகிறார்களே?

கூடங்குளம் அணுஉலை இரசிய தொழிற்நுட்பம் என்பதால் அமெரிக்க சதி பின்னணியில் இருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், அமெரிக்க தொழிற்நுட்பத்துடன் நடக்கும் தாராப்பூர் அணு உலையையும் எதிர்த்து இதே போன்று போராட்டங்கள் நடக்கிறதே. அங்கு எந்த நாட்டு சதி பின்னணியில் இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு. உதயகுமாரை அமெரிக்கக் கைக்கூலி என்றே விமர்சிக்கிறார்கள். ஆனால் இதே போன்று மேற்கு வங்கத்தில் ஹரிப்பூரில் ஒரு அணுஉலையை மூடினாரே அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. அவர் பின்னால் எந்த அந்நிய நாடு உள்ளது? அவர் எந்த நாட்டு கைக்கூலி? அவர் எந்த நாட்டிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அதை மூடினார்.

கூடங்குளம் மட்டுமல்ல, மகராசுடிராவின் ஜெய்தாபூரிலும் ஏன் ஆந்திரா, கர்நாடகாவிலும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்கள் நடக்கின்றனவே. அங்கு எந்த அன்னிய சதி உள்ளது. தைரியமிருந்தால் இதே காங்கிரசுக் கட்சி தான் ஆட்சி செய்யும் கேரளாவில் வேண்டுமனால் ஒரு அணுஉலை திறந்து பார்க்கட்டுமே.

வெறும் காசுக்காக வேலை செய்வது அரசியல்வாதிகளின் பாணி. ஆனால் மக்களுக்காக உழைக்கும் போராளிகளை கொச்சைப்படுத்துவதும் மூன்றாந்தர அரசியல் பாணியில் இழிவுபடுத்திப் பேசுவதும் மன்மோகன், நாராயணசாமியின் அரசியல்.

இவ்வளவுக்கும் மன்மோகன், நாராயணசாமியின் கைகளில் அதிகாரம் உள்ளது. ஆட்சி உள்ளது. காவல்துறை உள்ளது. ஏதாவது தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். அதை விட்டு மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்துவது மிகவும் கேவலமான ஒரு செயல்.

34. சில தொண்டு நிறுவனங்கள் தான் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக குற்றம் சுமத்துகிறார்களே?

மக்கள் பங்களிப்பு இல்லாமல் வெறும் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே ஒரு போராட்டத்தை நடத்திவிடமுடியாது. அல்லது காசு கொடுத்து மட்டும் ஒரு எழுச்சியை உருவாக்கிவிட முடியாது. 100 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்தப் போராட்டத்தை மக்கள் அர்ப்பணிப்பு இல்லாமல் யாராலும் நடத்திவிட முடியாது. மேலும் நியாயமான மக்கள் போராட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கக்கூடாதா என்ன?

35. கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை தீவிரமாக எதிர்க்கிறார்கள். ஆனால் வெளி மாவட்ட மக்களோ அணு உலையை ஆதரிக்கிறார்களே?

உண்மைகளை அறிந்த, அறிவியலை அறிந்த எல்லோருமே அணு உலையை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். மத்திய அரசு, காங்கிரசு கட்சி, பிஜேபி, இந்து முன்னணி போன்ற சிலர் தம் கட்சிக்காரர்களை விட்டு ஆதரவுப் போராட்டம் நடத்துகிறார்கள். உண்மைகளை அப்பாவி மக்கள் தெரிந்து கொள்ளா வண்ணம் தடுக்கிறார்கள். மின்வெட்டை அதிகப்படுத்தி, கூடங்குளம் அணு உலை வந்தால்தான் மின்வெட்டுத் தீரும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் மின்வெட்டுப்பிரச்சினை வேறு, அணுஉலைப் பிரச்சினை வேறு. இரண்டையும் தொடர்புப்படுத்திப் பார்க்கக்கூடாது. மின் பற்றாக்குறைக்கு அணு உலை தீர்வு ஆகாது. தவறான மின் பகிர்மானக் கொள்கையாலும், தனியாருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டதாலும் தான் மின்தடைப் பிரச்சினையேயொழிய அணுஉலை திறக்கப்படாமலிருப்பது அதற்குக் காரணம் அல்ல.

மின்சாரம் தயாரிப்பதற்கு பல மாற்று வழிகள் இருந்தாலும் அணு உலை மூலமாகத்தான் நாங்கள் மின்சாரம் தயாரிப்போம். அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மின்தடைதான் என்று மிரட்டுவது அரசின் பிடிவாதத்தைக் காட்டுகிறது.

மக்கள் கேட்பது எங்களின் பிணக்குவியலிலிருந்துதான் மின்சாரம் பெறப்பட வேண்டுமா? எங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அழித்துத்தான் மின்சாரம் தயாரிக்க வேண்டுமா? என்பதுதான்.

நீங்கள் எக்கேடும் கெட்டுப்போங்கள், எங்களுக்குத்தேவை 2 விளக்கு, ஒரு மின்விசிறி என்று பதிலளித்தால் அது சுயநலத்தின் உச்சம்.

36. மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் அரசு ஏன் அணுஉலை வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது?

அதில்தான் அவர்கள் மக்களுக்குச் சொல்லாத உள்குத்து அரசியல் இருக்கிறது. இந்த அணுஉலை மட்டுமல்ல. இது போன்று 80 அணுஉலைகளை வாங்குவதற்கு வெளிநாடுகளோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு. இதில் கைமாறும் இந்திய பணம் எவ்வளவு தெரியுமா? மொத்தம் 8 லட்சம் கோடி. இப்போது தெரிகிறதா இந்த அரசியல்வாதிகள் ஏன் இதில் வெகு ஆர்வமாயிருக்கிறார்கள் என்பது. நம் வரிப்பணம் 8 லட்சம் கோடியைத் தூக்கி அந்நிய நாட்டினருக்குக் கொடுத்துவிட்டு பதிலாக எமனாய் அணுஉலையை நம் தலையில் கட்டுகிறார்கள். இதுதான் இவர்களின் தேசபக்தியின் கதை. அணுஉலை மூடப்பட்டால் அணு வியாபாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்தான் இழப்பேயொழிய மக்களுக்கு அல்ல.

இரசிய, அமெரிக்க தனியார் முதலாளிகளின் இலாபம் முக்கியமா அல்லது மக்களின் உயிரும், சந்ததியின் எதிர்காலமும் முக்கியமா.

37. இது கிறித்தவ மக்களின் போராட்டம் என்றும், சர்ச் பாதிரியார்கள் பின்னணியில் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்களே?

அந்தப்பகுதி கிராமங்கள் பெரும்பாலும் மீனவ கிராமங்கள். அங்கு அதிக எண்ணிக்கையில் கிறித்தவர்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மை. அவர்கள் கிறித்தவர்களாயிருப்பதால் தம் வாழ்வை அழிக்கும் அணு உலையை எதிர்த்துப் போராடக் கூடாது என்கிறீர்களா?

கிறித்தவப் பாதிரியார்கள் பின்னணியில் இல்லை. நேரடியாகவே மக்கள் போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். அதிலென்ன தவறு. இன்னும் கணிசமான அளவில் இந்துக்களும், இசுலாமியாகளும் ஏன் கேரள மீனவ மக்கள் கூட இப்போராட்டத்தில் இருக்கிறார்கள்.

38. இந்து முன்னணி, பிஜேபி ஆகியோர் அணு உலையை ஆதரிப்பதன் மர்மம் இதுதானா?

சரியாகப் புரிந்து கொண்டீர்கள். சேது சமுத்திரத் திட்டத்தை ராமர்பாலம் கடலுக்குள் இருப்பதாகக் கூறி நிறுத்திய கட்சி பிஜேபி. அவர்களுக்கு அணுஉலையைத் திறக்கச் சொல்லிக் கேட்பதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது.

39. அணு உலையை உடனே திறக்க வேண்டும் என்று காங்கிரசுக் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்களே?

ஆமாம். இந்த நாட்டை ஏறத்தாழ 50 ஆண்டுக்காலம் மத்தியில் ஆட்சி செய்த கட்சி காங்கிரசுதான். இத்தனை ஆண்டுகளில் காங்கிரசு, மக்களுக்கான ஒரு போராட்டத்தையாவது நடத்தியிருக்கிறதா? சத்தியமூர்த்தி பவனில் வேட்டி கிழிய சண்டையிடுவதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறார்கள் தமிழக காங்கிரசார். மக்களைப்பற்றி இப்போதென்ன புதிதாக அக்கறை!

40. சி.பி.எம் முதலான கட்சிகள் கூட அணுஉலையை ஆதரிக்கின்றனவே?

ஈழப்பிரச்சினை நடந்தபோது சி.பி.எம். என்ன செய்தது என்பது நாமெல்லோரும் அறிந்ததுதான். ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் சி.பி.எம்.மின் புத்ததேவ் பட்டாச்சார்யா நந்திகிராம், சிங்கூரில் முதலாளி டாடாவிற்கு அனுசரணையாக மக்களை எப்படி இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் என்பதெல்லாம் நாடறிந்த செய்தி. சி.பி.எம். கட்சி மார்க்சியக் கொள்கைக்கு ஒரு தேசிய அவமானம்.

41. அணு உலை எதிர்ப்பாளர்கள் தேசத்துரோகிகள். நாட்டின் வளர்ச்சிக்கு, தொழில் முன்னேற்றத்திற்கு தடை செய்பவர்கள் என்று சொல்கிறார்களே?

இந்த நாட்டை கொள்ளையடித்து, சுரண்டி, இயற்கை வளத்தை வெளிநாட்டினருக்கும், தனியாருக்கும் தாரை வார்த்து அதில் கமிசன், லஞ்சம் பெற்று, அந்தப் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப் பணமாகப் பதுக்கி வைத்திருக்கும் இந்த அரசியல்வாதிகள், தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், தம் சந்ததியரின் நலம் காக்கவும், தம் சொந்த நிலத்தைக் காக்கவும் போராடும் மக்களைப் பார்த்து தேசத் துரோகிகள் என்று சொல்வது மகா அயோக்கியத்தனம்.

அரசியல்வாதிகளில் யோக்கியர் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. நாட்டின் நீர்வளத்தை கொக்கோகோலா, பெப்சி நிறுவனத்திற்கு விற்றவர்கள், அரசு நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்தவர்கள், சுதேசி உள்நாட்டு நிறுவனங்களை கொன்றவர்கள், மான்சான்டோ விதைகளை அனுமதித்து நிலத்தை மலடாக்கியவர்கள் தான் இந்த புதிய உலகப் பொருளாதார மேதைகள். இவர்கள் நாட்டின் தொழில்வளத்தைப் பற்றி கவலைப்படுவதாக கூறுவது, ஆடு நனைகிறதே என்று அழுத ஓநாயின் கதைதான்.

ஏற்கனவே 1,82,000 மெகாவாட் தயாரிக்கப்படும் இந்த நாட்டில் 42% கிராமங்களுக்க மின் இணைப்பு இல்லை. சென்னையின் வெறும் 500 நிறுவனங்கள் மட்டுமே தமிழக மின் உபயோகத்தின் 40%-ஐ செலவு செய்கின்றன. சிறு குறு தொழில்கள், விவசாயத்திற்கு 8 மணி நேர மின் வெட்டு. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம். இதுதான் இந்தியாவின் தொழிற்கொள்கை.

42. இறுதியாக என்னதான் சொல்கிறீர்கள்?

மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் மீது திணிக்கக்கூடாது. அது அராஜகம். சென்ற தலைமுறை நமக்கு விட்டுச் சென்ற இயற்கையை வரும் தலைமுறைக்கு பாதுகாப்பாக விட்டுச் செல்ல வேண்டிய தார்மீகக் கடமை நமக்கு உண்டு. இயற்கையை நஞ்சாக்க யாருக்கும் உரிமை இல்லை. மக்கள் நலனை மறுக்கின்ற அறிவியல் அறிவியலே அல்ல. மக்களுக்காகத்தான் எல்லாமே, அவர்களை அழித்து அல்ல.

மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு அரசுகள் பதில் சொல்லட்டும். ஒரு திறந்த விவாதத்திற்கு அரசுகள் வரட்டும். அதை விட்டுவிட்டு வெளிநாட்டு பணம் என்றும், தேசத் துரோகம் என்றும், அந்நிய சதி என்றும் மூன்றாந்தரக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது மக்கள் பக்கமிருக்கும் நேர்மையை கொச்சைப்படுத்துவதாகும்.

மின்சாரத் தேவைக்கும் அணுஉலைக்கும் சம்பந்தம் இல்லை. இரண்டும் வேறுவேறு பிரச்சினைகள். மக்களுக்கு இதைத் தெளிவாக்க வேண்டியது நம் கடமை.

மின் தடையை நீக்கக் கோரி மக்களோடு இணைந்து நாமும் போராடுவோம். ஆனால் அதற்காக கொலைகார அணுஉலையை அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் மக்கள் நடமாட்டம் இல்லாத ராஜஸ்தான் பாலைவனங்களில் அவர்களது அணு சோதனைகளை நடத்திக்கொள்ளட்டும் அல்லது பாதுகாப்பானது என்ற தைரியமான நம்பிக்கை இருந்தால் டெல்லியில் கொண்டுபோய் வைத்துக்கொள்ளட்டும்.

நன்றி: கீற்று இணையம்

Saturday, March 10, 2012

கண்ணீரை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது!

காலம் கடந்து முடிவெடுப்பது என்பது எத்தனை பெரிய அழிவுக்கு காரணமாக இருந்ததற்கு ஒரே சான்று கருணாநிதியின் நேற்றைய அறிக்கையே.

அந்த அறிக்கையை விடும் போது கூட, உள்ளபடியே இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை குறித்த சிந்தனையோடு அறிக்கை விட்டிருக்கமாட்டார். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஜெயலலிதா ஆதரித்து அறிக்கை விட்டுவிட்டாரே என்ற ஆதங்கத்தில், ஓர் அறிக்கையை தயாரித்து, வெளியிட்டு இருக்கிறார்.

உண்மையிலேயே அவருக்கு இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது செய்து தன் ஆட்சியை இழந்து நின்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர் செய்யவில்லை. பதவி ஆசையினால் மட்டும், அவர் அன்று அப்படி நடந்துக் கொள்ளவில்லை. காங்கிரஸ் சதி செய்கிறது என்று தெரிந்தும் கருணாநிதி, கண்ணிருந்தும் குருடராக கையிருந்தும் கையாலாகாதவராக நடந்துக் கொண்டார்.

காரணம், ஸ்பெக்டரம் ஊழல். அந்த ஊழலை காட்டியே, காங்கிரஸ் தனது காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்டது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கையையோ அல்லது இலங்கை அரசுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் நிதி மற்றும் ராணுவ உதவியையோ கண்டித்து கருணாநிதி குரல் கொடுத்திருந்தால், ஸ்பெக்டரம் வழக்கில் ராசாவையும் கனிமொழியையும் கைது செய்துவிடுவோம் என்று காங்கிரஸ் மிரட்டிக் கொண்டிருந்தது.

அதை நம்பி, கருணாநிதி மோசம் போனார். தன் மகளையும் ஆ.ராசாவையும் காங்கிரஸ் காப்பாற்றும் என்று நம்பி, 40 ஆயிரம் இலங்கைத் தமிழர்களை பலி கொடுக்க கருணாநிதி காரணமாக இருந்தார். கடைசியில், மகளையும் ராசாவையும் சிறையில் காங்கிரஸ் தள்ளியேவிட்டது.

முற்பகல் செய்யின் பிற்பகல் வந்தே தீரும் என்ற வாக்கிற்கு ஏற்ப, கருணாநிதியின் துரோகச் செயலுக்கு, காங்கிரஸ் நயவஞ்சகமாக துரோகம் செய்துவிட்டது.

இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகளை மத்திய அரசு தான் கொடுக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க, அதை தடுக்க வேண்டும் என்று போராட… ஆனால், தி.மு.க. மட்டும் ஏன் அமைதியாக இருந்தது. வைகோ காட்டு கத்து கத்திக்கொண்டிருந்தாரே…. அப்போது கருணாநிதி ஏன் மெளனமாக இருந்தார்.

முதல்வராக இருந்த போது, அவருக்கு கிடைக்காத வீடியோ காட்சிகள் இன்று மட்டும் எப்படி கிடைத்தது? அன்று ஆட்சி அதிகாரம் கையில் இருந்தது. உளவுத்துறை கையில் இருந்தது. இலங்கையில் என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு முதல்வராகவா இருந்தார் கருணாநிதி.

2009ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கொடுமைகளை அன்றைய நாளிதழ்களிலும் டிவிக்களிலும் காட்டப்பட்டதே… அன்று அதை காண கருணாநிதிக்கு கண் இல்லையா. அல்லது தி.மு.க.வைச் சேர்ந்த யாருமே பார்க்கவில்லையா…

தமிழ்நாடு முழுவதும், அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இலங்கையில் நடக்கும் போரை நிறுத்து என்று குரல் எழுப்பிக் கொண்டே இருந்த போது, தி.மு.க. என்ன செய்தது.

ராஜினாமா நாடகத்தை கனி அரங்கேற்றினார்….

மகளின் நாடகத்தை விஞ்சும் வண்ணம் கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார்.

இவர்கள் எல்லாரையும் விட காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், சூப்பர் நாடகத்தை நடத்தி, “கருணாநிதியின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தம்” என்று அறிவித்தார்.

அன்று தான் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டிருந்த கருணாநிதி மட்டும், அன்று காங்கிரஸை எதிர்த்து, இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன் வந்திருந்தால், இன்று இலங்கையில் இருக்கும் நிலையே வேறு.

தமிழக கடலோர எல்லையை மட்டும் திறந்துவிட்டிருந்தால் கூட போதும்… இலங்கை ராணுவத்தை புலிகள் சமாளித்து இருப்பார்கள். இந்திய கடல் எல்லையில் இந்திய காவல் படைகளை பத்திரமாக நிறுத்தி வைத்துவிட்டு, புலிகளையும் அப்பாவி மக்களையும் கொல்ல இலங்கை அரசுக்கு முழு உதவி செய்த காங்கிரஸை விட, காங்கிரஸை ஆதரித்த கருணாநிதி தான் முதல் போர் குற்றவாளியாக சித்தரிக்கப்பட வேண்டும்.

ஆம். அந்த அளவுக்கு மன்னிக்கவே முடியாத நபராக தமிழக அரசியலில் இடம் பெற்றுவிட்டார் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி.

வரலாற்றில் இவர் சாணக்கியர், ராஜ தந்திரி என்றெல்லாம் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர். அந்த அளவுக்கு அவருக்கு இருந்த தகுதிகள் எல்லாம், 2009ம் ஆண்டு அவர் இழந்துவிட்டார்.

குறைந்த பட்சம், அவர் சாணக்கியர் அல்லது ராஜ தந்திரி என்றால், இலங்கைத் தமிழர்களையும் காப்பாற்றி இருப்பார். ஊழலில் சிக்கி இன்று சின்னாபின்னாகி கிடக்கும் மகளையும் காப்பாற்றி இருப்பார்.

2009ம் ஆண்டு துணிச்சலாக, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி, தமிழ்நாட்டில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருந்தால், இலங்கையில் அந்த போர் நிறுத்தப்பட்டிருக்கும். கருணாநிதி மட்டும் களத்தில் இறங்கி இருந்தால், தமிழக தெருக்களில் எல்லாம் தமிழர்கள் கொந்தளித்திருப்பார்கள்.

அட, கருணாநிதி கொந்தளிக்காமல் இருந்தால் கூட மறைமுகமாக இலங்கைத் தமிழர்களின் ஆதரவுக்காக தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தாரா? இல்லையே. அதையும் காங்கிரஸின் பேச்சைக் கேட்டு ஒடுக்கினாரே?

ஒரு வேளை காங்கிரஸை எதிர்த்து, கருணாநிதி போராடி இருந்தால், அதன் பின்னர், கனிமொழியை ஊழலில் கைது செய்திருந்தால் கூட, “காங்கிரஸை எதிர்த்தால், என் மகளையே கைது செய்கிறார்கள்” என்று நீலிக்கண்ணீரும் போலி கண்ணீரும் சிந்திருக்கலாம். அப்போதுதான் இவர் ராஜ தந்திரி… சாணக்கியர்.

அந்த புத்தியும் கூட வேலை செய்யாத அளவுக்கு, கருணாநிதியை சுற்றி இருந்தது இரண்டே இரண்டு தான். ஒன்று அளவுக்கு அதிகமான பணம். இன்னொன்று ஜால்ரா கூட்டம். பணத்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டுமே என்ற சிந்தனையில் இருந்தவருக்கு, கூட இருந்தவர்கள் அடித்த ஜால்ரா சத்தத்தில் வேறு எதுவுமே சிந்திக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

கோடி கோடியாக குவிக்கப்பட்ட பணமும் அவரது மகளையும் காப்பாற்றவில்லை. மக்களுக்கு தேர்தலில் கொட்டிக் கொட்டி கொடுத்தும் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இன்று ஜால்ரா அடிக்கும் கூட்டமும் ஓட்டம் எடுத்ததால், நிறைய சிந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் கருணாநிதி.

அதன் விளைவு தான் “இலங்கையில் இறுதிப் போரின் போது, எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்ட போது, என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்த காட்சிகளை ஒரு முறை பார்த்தாலே, தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்த கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொள்ள முடியும்” என்று அறிக்கை.

அடடா…. தி.மு.க. என்ற இயக்கத்துக்கா இந்த இழிவு… காலம் கடந்து எடுக்கும் முடிவுகளால் என்ன ஆயிற்று என்று யோசிக்காமல் கூட, ஓர் இழிவான அறிக்கையை விடுவதற்கு, 75 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் ஒருவர் முன்வந்திருக்கிறார் என்றால்….

இன்னுமா இந்த ஊர் அவரை நம்ப வேண்டும்.

அவர் விடுவது நீலிக்கண்ணீர்… போலி கண்ணீர்… இல்லையென்றால்!

ஒரு வேளை அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு எதிர்த்துவிட்டால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கி கொள்ளுமா?

அப்படி கருணாநிதி செய்தார் என்றால்… ஒரு வேளை போரில் இறந்த 40 ஆயிரம் அப்பாவி இலங்கைத் தமிழர்களின் ஆன்மா சாந்தி அடையலாம். உலகத்தமிழர்களின் சாபத்திலிருந்து விடபடலாம்.

ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு எதிர்த்து வாக்களித்த பிறகும், அங்கே காங்கிரஸோடு கூட்டாஞ்ச்சோறுக்கு தி.மு.க. தட்டு தூக்கி கொண்டிருந்தால்… சொல்வதற்கு வார்த்தை இல்லை எழுதுவதற்கு வாக்கியம் இல்லை.

ஆனால், ஒன்று கண்ணீரையும் கருணாநிதி இந்த அளவுக்கு கேவலப்படுத்திவிட்டாரே?

நன்றி: தமிழ்லீடர்