காலம் கடந்து முடிவெடுப்பது என்பது எத்தனை பெரிய அழிவுக்கு காரணமாக இருந்ததற்கு ஒரே சான்று கருணாநிதியின் நேற்றைய அறிக்கையே.
அந்த அறிக்கையை விடும் போது கூட, உள்ளபடியே இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை குறித்த சிந்தனையோடு அறிக்கை விட்டிருக்கமாட்டார். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஜெயலலிதா ஆதரித்து அறிக்கை விட்டுவிட்டாரே என்ற ஆதங்கத்தில், ஓர் அறிக்கையை தயாரித்து, வெளியிட்டு இருக்கிறார்.
உண்மையிலேயே அவருக்கு இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது செய்து தன் ஆட்சியை இழந்து நின்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர் செய்யவில்லை. பதவி ஆசையினால் மட்டும், அவர் அன்று அப்படி நடந்துக் கொள்ளவில்லை. காங்கிரஸ் சதி செய்கிறது என்று தெரிந்தும் கருணாநிதி, கண்ணிருந்தும் குருடராக கையிருந்தும் கையாலாகாதவராக நடந்துக் கொண்டார்.
காரணம், ஸ்பெக்டரம் ஊழல். அந்த ஊழலை காட்டியே, காங்கிரஸ் தனது காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்டது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கையையோ அல்லது இலங்கை அரசுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் நிதி மற்றும் ராணுவ உதவியையோ கண்டித்து கருணாநிதி குரல் கொடுத்திருந்தால், ஸ்பெக்டரம் வழக்கில் ராசாவையும் கனிமொழியையும் கைது செய்துவிடுவோம் என்று காங்கிரஸ் மிரட்டிக் கொண்டிருந்தது.
அதை நம்பி, கருணாநிதி மோசம் போனார். தன் மகளையும் ஆ.ராசாவையும் காங்கிரஸ் காப்பாற்றும் என்று நம்பி, 40 ஆயிரம் இலங்கைத் தமிழர்களை பலி கொடுக்க கருணாநிதி காரணமாக இருந்தார். கடைசியில், மகளையும் ராசாவையும் சிறையில் காங்கிரஸ் தள்ளியேவிட்டது.
முற்பகல் செய்யின் பிற்பகல் வந்தே தீரும் என்ற வாக்கிற்கு ஏற்ப, கருணாநிதியின் துரோகச் செயலுக்கு, காங்கிரஸ் நயவஞ்சகமாக துரோகம் செய்துவிட்டது.
இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகளை மத்திய அரசு தான் கொடுக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க, அதை தடுக்க வேண்டும் என்று போராட… ஆனால், தி.மு.க. மட்டும் ஏன் அமைதியாக இருந்தது. வைகோ காட்டு கத்து கத்திக்கொண்டிருந்தாரே…. அப்போது கருணாநிதி ஏன் மெளனமாக இருந்தார்.
முதல்வராக இருந்த போது, அவருக்கு கிடைக்காத வீடியோ காட்சிகள் இன்று மட்டும் எப்படி கிடைத்தது? அன்று ஆட்சி அதிகாரம் கையில் இருந்தது. உளவுத்துறை கையில் இருந்தது. இலங்கையில் என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு முதல்வராகவா இருந்தார் கருணாநிதி.
2009ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கொடுமைகளை அன்றைய நாளிதழ்களிலும் டிவிக்களிலும் காட்டப்பட்டதே… அன்று அதை காண கருணாநிதிக்கு கண் இல்லையா. அல்லது தி.மு.க.வைச் சேர்ந்த யாருமே பார்க்கவில்லையா…
தமிழ்நாடு முழுவதும், அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இலங்கையில் நடக்கும் போரை நிறுத்து என்று குரல் எழுப்பிக் கொண்டே இருந்த போது, தி.மு.க. என்ன செய்தது.
ராஜினாமா நாடகத்தை கனி அரங்கேற்றினார்….
மகளின் நாடகத்தை விஞ்சும் வண்ணம் கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார்.
இவர்கள் எல்லாரையும் விட காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், சூப்பர் நாடகத்தை நடத்தி, “கருணாநிதியின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தம்” என்று அறிவித்தார்.
அன்று தான் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டிருந்த கருணாநிதி மட்டும், அன்று காங்கிரஸை எதிர்த்து, இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன் வந்திருந்தால், இன்று இலங்கையில் இருக்கும் நிலையே வேறு.
தமிழக கடலோர எல்லையை மட்டும் திறந்துவிட்டிருந்தால் கூட போதும்… இலங்கை ராணுவத்தை புலிகள் சமாளித்து இருப்பார்கள். இந்திய கடல் எல்லையில் இந்திய காவல் படைகளை பத்திரமாக நிறுத்தி வைத்துவிட்டு, புலிகளையும் அப்பாவி மக்களையும் கொல்ல இலங்கை அரசுக்கு முழு உதவி செய்த காங்கிரஸை விட, காங்கிரஸை ஆதரித்த கருணாநிதி தான் முதல் போர் குற்றவாளியாக சித்தரிக்கப்பட வேண்டும்.
ஆம். அந்த அளவுக்கு மன்னிக்கவே முடியாத நபராக தமிழக அரசியலில் இடம் பெற்றுவிட்டார் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி.
வரலாற்றில் இவர் சாணக்கியர், ராஜ தந்திரி என்றெல்லாம் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர். அந்த அளவுக்கு அவருக்கு இருந்த தகுதிகள் எல்லாம், 2009ம் ஆண்டு அவர் இழந்துவிட்டார்.
குறைந்த பட்சம், அவர் சாணக்கியர் அல்லது ராஜ தந்திரி என்றால், இலங்கைத் தமிழர்களையும் காப்பாற்றி இருப்பார். ஊழலில் சிக்கி இன்று சின்னாபின்னாகி கிடக்கும் மகளையும் காப்பாற்றி இருப்பார்.
2009ம் ஆண்டு துணிச்சலாக, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி, தமிழ்நாட்டில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருந்தால், இலங்கையில் அந்த போர் நிறுத்தப்பட்டிருக்கும். கருணாநிதி மட்டும் களத்தில் இறங்கி இருந்தால், தமிழக தெருக்களில் எல்லாம் தமிழர்கள் கொந்தளித்திருப்பார்கள்.
அட, கருணாநிதி கொந்தளிக்காமல் இருந்தால் கூட மறைமுகமாக இலங்கைத் தமிழர்களின் ஆதரவுக்காக தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தாரா? இல்லையே. அதையும் காங்கிரஸின் பேச்சைக் கேட்டு ஒடுக்கினாரே?
ஒரு வேளை காங்கிரஸை எதிர்த்து, கருணாநிதி போராடி இருந்தால், அதன் பின்னர், கனிமொழியை ஊழலில் கைது செய்திருந்தால் கூட, “காங்கிரஸை எதிர்த்தால், என் மகளையே கைது செய்கிறார்கள்” என்று நீலிக்கண்ணீரும் போலி கண்ணீரும் சிந்திருக்கலாம். அப்போதுதான் இவர் ராஜ தந்திரி… சாணக்கியர்.
அந்த புத்தியும் கூட வேலை செய்யாத அளவுக்கு, கருணாநிதியை சுற்றி இருந்தது இரண்டே இரண்டு தான். ஒன்று அளவுக்கு அதிகமான பணம். இன்னொன்று ஜால்ரா கூட்டம். பணத்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டுமே என்ற சிந்தனையில் இருந்தவருக்கு, கூட இருந்தவர்கள் அடித்த ஜால்ரா சத்தத்தில் வேறு எதுவுமே சிந்திக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
கோடி கோடியாக குவிக்கப்பட்ட பணமும் அவரது மகளையும் காப்பாற்றவில்லை. மக்களுக்கு தேர்தலில் கொட்டிக் கொட்டி கொடுத்தும் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இன்று ஜால்ரா அடிக்கும் கூட்டமும் ஓட்டம் எடுத்ததால், நிறைய சிந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் கருணாநிதி.
அதன் விளைவு தான் “இலங்கையில் இறுதிப் போரின் போது, எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்ட போது, என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்த காட்சிகளை ஒரு முறை பார்த்தாலே, தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்த கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொள்ள முடியும்” என்று அறிக்கை.
அடடா…. தி.மு.க. என்ற இயக்கத்துக்கா இந்த இழிவு… காலம் கடந்து எடுக்கும் முடிவுகளால் என்ன ஆயிற்று என்று யோசிக்காமல் கூட, ஓர் இழிவான அறிக்கையை விடுவதற்கு, 75 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் ஒருவர் முன்வந்திருக்கிறார் என்றால்….
இன்னுமா இந்த ஊர் அவரை நம்ப வேண்டும்.
அவர் விடுவது நீலிக்கண்ணீர்… போலி கண்ணீர்… இல்லையென்றால்!
ஒரு வேளை அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு எதிர்த்துவிட்டால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கி கொள்ளுமா?
அப்படி கருணாநிதி செய்தார் என்றால்… ஒரு வேளை போரில் இறந்த 40 ஆயிரம் அப்பாவி இலங்கைத் தமிழர்களின் ஆன்மா சாந்தி அடையலாம். உலகத்தமிழர்களின் சாபத்திலிருந்து விடபடலாம்.
ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு எதிர்த்து வாக்களித்த பிறகும், அங்கே காங்கிரஸோடு கூட்டாஞ்ச்சோறுக்கு தி.மு.க. தட்டு தூக்கி கொண்டிருந்தால்… சொல்வதற்கு வார்த்தை இல்லை எழுதுவதற்கு வாக்கியம் இல்லை.
ஆனால், ஒன்று கண்ணீரையும் கருணாநிதி இந்த அளவுக்கு கேவலப்படுத்திவிட்டாரே?
நன்றி: தமிழ்லீடர்
No comments:
Post a Comment