Wednesday, February 24, 2010

கேட்டது கிடைத்ததா?

புதிய ரயில் பட்ஜெட்டை பார்த்தவுடன் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறுபக்கம் வருத்தமாகவும் இருக்கிறது.

முதலில் மகிழ்ச்சி - தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 6 பாசஞ்சர் ரயில்களில் 2 கோவைக்கு (கோவை - பொள்ளாச்சி, கோவை - ஈரோடு), 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 3 கோவைக்கு அல்லது கோவை வழியாக (கோவை - திருப்பதி, கோவை - சென்னை துராந்தோ, மங்களூர் - திருச்சி). இடையில் எங்குமே நிற்காமல் கோவை சென்னை இடையே ஓடப்போகும் துராந்தோவை பகலில் ஓட்டினால் கட்டுபடியாகுமா என்று தெரியவில்லை.

தமிழகத்தில் சென்னைக்கு பிறகு கோவைக்கு இந்த பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தி இருப்பது தெரிகிறது. சில மாதங்களில் நடைபெற இருக்கும் தமிழ் செம்மொழி மாநாடு களைகட்ட தமிழக அரசின் தனிப்பட்ட வேண்டுகோளின் படி இந்த அறிவிப்புகள் இருக்கலாம்.

மற்றபடி "சேலம் - கரூர், திருநெல்வேலி - தென்காசி, திண்டுக்கல் - பொள்ளாச்சி உள்ளிட்ட பாதைகள் இந்த ஆண்டு திறக்கப்படும்" என்ற பலவருட அறிவிப்பு இந்த ஆண்டும் வந்திருக்கிறது.

இதற்கு மேல் சென்னை தவிர்த்த தமிழ்நாட்டின் பல கோரிக்கைகளை பற்றி உருப்படியாக எதுவும் இல்லை. ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டின் போதும் மலையளவு தமிழ்நாட்டின் கோரிக்கைகள் விடுக்கப்படுவதும் அதில் கடுகளவு மட்டுமே நிறைவேற்றப்படுவதும் தொடர்கிறது.

கட்டணங்கள் உயரவில்லை என்று சொல்லிக் கொண்டே சத்தமில்லாமல் சர்வீஸ் சார்ஜ், தத்கல், சூப்பர் பாஸ்ட் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் கோபமூட்டும் விஷயம் தமிழக டெல்டா மாவட்டங்கள் மழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப்பாதை சிறந்த உதாரணம்.

ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க ஆய்வு செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி ரயில் பாதை அமைந்தால் "போட் மெயில்" திரும்பவும் இயங்குமா? ("போட் மெயில்" என்னும் ரயில் ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில் இருந்து கொழும்பு வரை இயக்கப்பட்டது. அதாவது சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரயிலிலும், பிறகு தனுஷ்கோடியில் இருந்து தலை மன்னார் வரை படகிலும், அதன் பின் மன்னாரிலிருந்து கொழும்பு வரை மற்றோரு ரயிலிலும் பயணம் நடைபெறும். பிறகு காலப்போக்கில் அது தனுஷ்கோடியோடு நிறுத்தப்பட்டதும், தனுஷ்கோடி புயலில் சிக்கி இந்த ரயிலோடு அழிந்ததும் வரலாறு. அந்த காலத்தில் சென்னையில் எடுக்கும் ஒரு டிக்கெட்டை வைத்துக்கொண்டு கொழும்பு வரை பயணிக்கலாம் என்பது சுவாரஸ்ய தகவல்)

தலைப்புக்கான பதில் "என்னைக்கு கிடைச்சிருக்கு!"

Sunday, February 21, 2010

ரயில்..!

இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றத்தில் ரயில்வே எனப்படும் புகையிரதம் எனப்படும் தொடர்வண்டித்துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதிய ரயில் திட்டங்கள் பற்றி ஒரு ரயில் ரசிகனின் வேண்டுகோள்கள். ஊர்ப்பாசம் காரணமாக கோயமுத்தூருக்கு தனி கோரிக்கை பட்டியல் கடைசியில்...


தமிழ்நாட்டுக்கு..!

நாட்டிலேயே நிலப்பரப்புக்கு ஏற்ற ரயில் வசதிகள் இல்லாத மாநிலம் தமிழகம் தான். மின்மயமாக்கம், இரட்டை பாதை, அகல பாதை, புதிய ரயில்கள் என்று அனைத்திலும் புறக்கணிக்கபடுவது தமிழ்நாடு என்பது காலங்காலமாக நமது சாபக்கேடு.

* கோலங்கள் தொடர் போல முடிவில்லாமல் இழுத்து கொண்டிருக்கும் விழுப்புரம் - மயிலாடுதுறை, வேலூர் - விழுப்புரம், போத்தனூர் - திண்டுக்கல், திருவாரூர் - காரைக்குடி, விருதுநகர் - மானாமதுரை சேலம் - கரூர், தாம்பரம் - விழுப்புரம், திருவள்ளூர் - அரக்கோணம் (எத்தன...!) போன்ற அகல மற்றும் புதிய ரயில்பாதை திட்டங்களை உடனடியாக முடிக்கவேண்டும்.

* சேது, சோழன், கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திரும்பவும் அதன் பழைய வழித்தடங்களில் இயக்கப்பட வேண்டும்.

* "போட் மெயில்" (Boat Mail) அதன் பழைய வழித்தடத்தில் இயக்க வேண்டும். (போட் மெயில் பற்றிய குறிப்புகள் இன்னோரு பதிவில்)

* திருநெல்வேலி - பெங்களூர் இடையே தினசரி இரவு ரயில். ராமேஸ்வரம் - பெங்களூர் (திருச்சி வழியாக) தினசரி இரவு ரயில்.

* தூத்தூக்குடி / நாகர்கோவில் - ஹைதராபாத் (சென்னை வழியாக) தினசரி ரயில். மதுரை - சென்னை சதாப்தி ரயில்.

* செங்கோட்டை - திருப்பதி (மதுரை, திருச்சி, திருவண்ணாமலை வழியாக) தினசரி பகல் ரயில். சென்னை சென்ட்ரல் - திருவண்ணாமலை (காட்பாடி வழியாக) தினசரி பாசஞ்சர்.

* கோவை, மதுரையில் புறநகர் மின்சார ரயில் சேவை.

* அனைத்து பாதைகளும் மின்மயமாக்கப்பட வேண்டும்.

* சென்னை - பெங்களூர் இடையே ஓடும் ஏதாவது ஒரு ரயிலை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும்.

* சென்னையில் இருந்து பழனிக்கு கோவை அல்லது திண்டுக்கல் வழயாக புதிய ரயில். நாகப்பட்டினம் / மயிலாடுதுறை - நாகர்கோவில் புதிய இரவு ரயில்.

* கன்னியாகுமரியில் காலையில் கிளம்பி சென்னைக்கு மாலை 6 மணியளவில் வந்து சேருமாறு பகல் நேர ரயில் (சென்னையில் இரவு வேலைக்கு செல்லும் இளைஞர்களின் வேண்டுகோள்..!)

இனி கோயமுத்தூருங்க...

* சென்னை, பெங்களூர், மும்பை, தில்லி போன்ற ஊர்களில் இருந்து கேரளா செல்லும் பல ரயில்கள் கோயமுத்தூரை புறக்கணித்துவிட்டு போத்துனூர் வழியாக செல்வது முதலில் தடுக்கப்பட வேண்டும்.

* கோயமுத்தூர் - பெங்களூர் இடையே இரவு நேர தினசரி ரயில், கோவை - ராமேஸ்வரம் இடையே பொள்ளாச்சி, பழனி வழியாக தினசரி ரயில்.

* கோவை - செங்கோட்டை இடையே இரவு ரயில். கோவை - புதுச்சேரி (சேலம், விருத்தாசலம் வழியாக) புதிய ரயில். கோவை - திருப்பதி இடையே வாரம் இருமுறை ரயில்.

* கோவை - ஹைதராபாத் புதிய ரயில். சேலம் / கோவையில் இருந்து மங்களூர், கோவா வழியாக மும்பைக்கு புதிய ரயில்.

* திருவனந்தபுரம் - பாலக்காடு இடையே ஓடும் அமிர்தா எக்ஸ்பிரஸ், கோவை அல்லது மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும்.

* கோவை - பொள்ளாச்சி, கோவை - மேட்டுப்பாளையம், கோவை - பாலக்காடு, கோவை - திருப்பூர் இடையே புறநகர மின்சார ரயில் சேவை.


* கோவையில் உள்ள மற்ற ரயில் நிலையங்களான போத்தனூர், இருகூர், பீளமேடு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, துடியலூர் போன்ற நிலையங்களை மேம்படுத்தி போக்குவரத்து வசதிகளை அதிகபடுத்த வேண்டும்.

* புதிதாக கணபதி, ஒண்டிபுதூர், ஆவாராம்பாளையம், சேரன் நகர், உக்கடம் இன்ன பிற ரயில் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும்.

* கோவை - மதுரை, கோவை - கோழிக்கோடு, கோவை - எர்ணாகுளம் தினசரி பகல் நேர இன்டர்சிட்டி ரயில்கள்.

* கோவை - திருவண்ணாமலை (சேலம், காட்பாடி வழியாக) பயணிகள் ரயில்.

* ஜூன் மாதம் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இருப்பதால் பணிகள் சீக்கிரம் முடிவதுடன் புதிய ரயில்கள், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்

பொதுவாக..

* நெரிசல் நேரங்களில் (தீபாவளி, பொங்கல்) பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகளை தத்கலில் விற்று கொள்ளை லாபம் அடிக்கும் கொடுமையை நிறுத்த வேண்டும்.

* வாயில் வைக்க முடியாத ரயில் உணவுகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

* குறைக்கப்பட்ட ஜெனரல் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதன் தரத்தை உயர்த்த வேண்டும்.

தில்லியில் செயல்படும் சக்திவாய்ந்த வங்காளம், பீகார், மராட்டிய லாபிகளை மீறி தெற்கு ரயில்வேக்கு வரும் நிதியை, சென்னையில் செயல்படும் ஆற்றல் படைத்த மலையாள லாபி அப்படியே கேரளாவுக்கு கடத்திப் போய்விடுகிறது என்பது ஊரறிந்த ரகசியம்.

கேரளாவுக்கு ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் அங்கு இருக்கும் ரயில், ரயில் நிலைய வசதிகளை பார்த்திருப்பார்கள். அதனுடன் தமிழகத்தில் இருக்கும் வசதிகளை ஒப்பிடவே முடியாது.

இனியாவது தமிழக கோரிக்கைகளுக்கு பச்சை கொடி காட்டப்படுமா...?

பி.கு: பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு இதே தளத்தில் அதன் விமர்சனம் வெளியாகும்

Tuesday, February 16, 2010

யாமிருக்க பயமேன்

விஜய் தொலைக்காட்சியில் "யாமிருக்க பயமேன்" என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. பழனியை மையமாக கொண்ட கதை என்று சொல்லப்படுகிறது. நிகழ்ச்சி முன்னோட்டத்திலேயே நவபாஷாணம், சித்தர் மர்மம் என்று எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் கூட்டுகிறார்கள்.

மகாபாரதம், ராமாயணம், கிருஷ்ண லீலை, அம்மன் தொடர்கள் என்று ஒரே கதையை பல சேனல்களில் திரும்ப திரும்ப பார்த்த நமக்கு முருகனைப் பற்றிய தொடர் சற்று வித்தியாசமாக, சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்பலாம். புதிதாக அறிந்தும், தெரிந்தும் கொள்ள நிறைய தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


முன்பு தூர்தர்ஷனில் வரும் ராமாயணம், மகாபாரதம் தொடர்களை அப்படியே தமிழ் டப்பிங் செய்து ஒளிபரப்புவார்கள். அதில் நடிகர்களின் வாய் அசைவுக்கும், வசனத்திற்கும் சம்பந்தமே இருக்காது. அதே போல் நடிகர்களின் முக தோற்றத்திற்கும், கதாபாத்திர இயல்புக்கும் சம்பந்தம் இருக்காது. அது மாதிரி எல்லாம் இல்லாமல் இந்த தொடர் சற்று “Realistic” க்காக இருக்கும் என்று நம்புவோம்.

விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் தென்படும் ஆங்கில மோகம் இதில் இருக்காது என்பது ஒரு ஆறுதல் செய்தி (அப்படி இருந்தால் தமிழ்க் கடவுள் மன்னிப்பாரா என்று தெரியவில்லை!) எல்லாவற்றுக்கும் மேல் விஜய் டிவி இந்த தொடரை கடைசி வரை கொண்டு செல்லும் என்றும் நாம் முருகனை வேண்டிக் கொள்வோம். முருகனுக்கு டி.ஆர்.பி ரேட்டிங்கை கூட்ட தெரியுமா என்று கேட்காதீர்கள்!

நேரம்: இரவு 7.30 மணி. பாவம்! கோவணம் கட்டிய பழனியப்பனுக்கு எதற்கு "ப்ரைம் ஸ்லாட்" என்று நினைத்திருப்பார்கள் போல.

கனகவேல் காக்க..!

Saturday, February 13, 2010

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்


எப்படி இருந்த நான்...!







இப்படி ஆயிட்டேன்...!






நீதி: அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

Thursday, February 11, 2010

ஊமை பாஷை

தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் இல்லாத கால கட்டத்தில் தூர்தர்ஷன் தான் ஒரே பொழுதுபோக்கு. தூர்தர்ஷன் செய்திகள் அக்காலத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் ஞாயிறு மதியத்தில் ஒளிபரப்பாகும் காது கேளாதோருக்கான செய்திகள் (Hearing Impaired News) பற்றி அந்த நாட்களின் தூர்தர்ஷன் நேயர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள் (இன்னும் ஒளிபரப்பாகிறதா என்று தெரியவில்லை? தெரிந்தவர்கள் சொல்லலாம்.!)

தொலைக்காட்சியின் மூலையில் தெரியும் ஒரு சின்ன திரையில் ஒரு பெண்மனி செய்தியை இந்தியிலோ ஆங்கிலத்திலோ வாசிக்க, பெரிய திரையில்(!) சற்று தடித்த பெண்மனி (Sign Language) எனப்படும் ஊமை பாஷையில் செய்தியை வேகமாக விளக்கிக் கொண்டிருப்பார்..

ஆனால் சேனலை மாற்றினால் காது கிழியும் அளவுக்கு காட்டுக் கூச்சல் போடும் இப்போதயை 24 மணி நேர செய்தி சேனல்கள் ஏன் இது போன்ற செய்திகளை இப்போது வழங்குவது இல்லை?

சமூகத்தில் ஒரு அங்கமான காது கேளாத, வாய் பேச முடியாத மக்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே தூர்தர்ஷன் என்ற அரசு நிறுவனம் வழங்கி வந்த ஒரு சேவையை, ஏன் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டபிறகும் இப்போது வழங்க முடியவில்லை?

ஒரே வார்த்தையில் பதில் வரும் வர்த்தக நோக்கு என்று..!

Tuesday, February 9, 2010

உலகம்

சமீபமாக படித்ததில் கவர்ந்தது

"SAVE THE WORLD FROM MEDIA AND MARKETING"

நீண்ட காலமாக பார்த்தும் கவராதது

"இறைவா, நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்"

Monday, February 8, 2010

ஊடக வன்முறை

கடந்த இரண்டு நாட்களாக (சனி, ஞாயிறு) கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடந்தது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட சிலரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடுக்கு ஆரம்பத்தில் இருந்தே அரசு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது (வழக்கம்போல..). பிறகு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கினார்கள்.

மாநாட்டின் அரசியல் நோக்கம் பற்றியோ, ஆளும் அரசின் அடக்குமுறை பற்றியோ விவாதிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பங்களுக்கு உண்டானது. ஆனால் மலேசிய துணை முதல்வர் உள்ளிட்ட பல வெளிநாட்டு தமிழர்கள், பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு பலதரப்பட்ட கருத்துக்களை பறிமாறிக் கொண்ட இந்த மாநாட்டைப் பற்றி தமிழகத்தின் எந்த ஒரு தொலைக்காட்சி, நாளிதழ்களில் ஒரு வரி செய்தி கூட இல்லை. இந்த மாநாடு பற்றி கோவை மக்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உலகம் முழுவதும் 233 நாடுகளில் அகதிகளாக, கொத்தடிமைகளாக, கூலித்தொழிலாளிகளாக பரவியிருக்கும் தமிழர்கள் படும் துயரங்களை புதிதாக நாம் அறிய வேண்டியதில்லை.

இந்த மாநாடுக்கு விளம்பரம் தேடுவதோ, இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட கருதுக்களுக்கு ஆதரவு தேடுவதோ நமது வேலையல்ல.. ஆனால் பிரபலமில்லாத ஒரு நடிகை அவரது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்தாலே அதை செய்தியாக்கும் 24 மணி நேர செய்தி சேனல்கள் என்று சொல்லிக் கொள்ளும் அலைவரிசைகளில் இந்த மாநாட்டைப் பற்றி மூச்சு இல்லை. தினசரிகளிலும் இதே நிலை தான். தெரிந்த விஷயம் தான் என்கிறீர்களா...! அட போங்க..!

Thursday, February 4, 2010

பட்டாம்பூச்சிகள்... பறக்குது... பறக்குது..!

நண்பர் வினோத், நான் அறிந்த வரையில் ஒரு மிகச் சிறந்த புகைப்பட கலைஞர். அவரின் பொறுமைக்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டுகள் சில....





ங்ள்: பா. வினோத்

Monday, February 1, 2010

இது பயண கட்டுரை அல்ல

சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து சேலத்திற்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. வேறு வழியின்றி ஒரு சேலம் அரசுப் பேருந்தில் (முன்னாள் அண்ணா!) ஏறி அமர்ந்தோம். நீண்ட தூரத்திற்கு ஓடும் கோவை அரசுப் பேருந்துகள் (அதாங்க முன்னாள் சேரன்!) அனைத்தும் புது பேருந்துகளாக மாறிவிட்ட நிலையில், சேலம் பேருந்துகள் மட்டும் இன்னும் அரதப் பழசானவையே ஒடிக் கொண்டிருக்கின்றன. ஏன் என்று தெரியவில்லை?

பேருந்தில் இருந்த ஒரு தொலைக்காட்சியில் யாருக்குமே புரியாத அதிக சத்தத்துடன் ஒரு படத்தின் கிளைமாக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் கழித்து அந்த படம் "குணா" என்று அறிந்தோம்.

அது முடிந்த பிறகு 70, 80, 90 களில் வந்த பிரபலமாகாத பாடல்கள் பாதி ஒடுவதும் பின் அது வேறு பாடலின் பாதியில் இருந்து தொடர்வதுமாக இருந்தது. ஆனால் என்ன பாடல் என்றே புரியவில்லை. அந்த அழகில் இருந்தது Audio System. இந்த லட்சணத்தில் காதை கிழிக்கும் சத்தம் வேறு. போகப்போக நடுவில் விளம்பரங்கள் வேறு வர ஆரம்பித்தன. எந்த பேருந்தில் ஏறினாலும் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இல்லை என்பதால் ஆரம்பத்தில் நாம் கண்டு கொள்ளவில்லை. கவனித்த பின் தான் தெரிந்தது பேருந்தில் ஏதோ ஒரு தனியார் தொலைக்காட்சி ஓடுவது போல் தெரிந்தது. ஆனால் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது (5 மணி நேரமும் இதே தான் நடந்து கொண்டிருந்தது).

ஒரு பாடல் ஓடிக் கொண்டிருக்கும், திடீரென்று டி. ராஜேந்தர் நடித்த பிரபலமாகாத ஒரு படத்தின் காட்சி ஓடும். பிறகு யார் நடித்து இருக்கிறார்கள் என்றே தெரியாத ஒரு பாட்டு பாதியில் இருந்து ஓடும்.. இப்படி சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு போய்க் கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் விளம்பரங்கள் மட்டுமே ஒட ஆரம்பித்தது. அதிலும் இதுவரை கேள்விப்பட்டிராத சோப்பு, தேங்காய் எண்ணெய் இன்ன பிற இத்யாதி விளம்பரங்கள்.பயணிகள் அனைவரும் பொறுமையிழந்து தொலைக்காட்சியை அணைக்க சொல்லி சத்தம் போட்டும் ஓட்டுனர் நிறுத்த மறுத்துவிட்டார். ஆமை வேகத்தில் நகர்ந்த நெடிய பயணத்தில் காசு கொடுத்து விளம்பரம் பார்த்த தலையெழுத்தோடு சேலத்தில் வந்து இறங்கிய போது தலைவலி வரவேற்றது.