Friday, April 16, 2010

தேவை கொஞ்சம் சுரணை

அந்தச் செய்தியைப் படித்ததுமே எனக்கு ரத்தம் கொதித்தது.

சென்னையில் பல்லாவரத்தில் இன்னமும் கட்டி முடிக்கப்படாத ஒரு மேம்பாலத்தில் தவறுதலாக சென்ற கார் 50 அடி உயரத்தில் இருந்து ரயில் பாதையில் விழுந்ததில் காரோட்டி திவாகர் என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்த விபத்துக்குக் காரணம், அந்த மேம்பாலம் தொடங்கும் இடத்தில், அதில் செல்லக் கூடாது வேலை இன்னும் முடியவில்லை என்ற அறிவிப்புகளோ, தடுப்பு வேலியோ எதுவும் இல்லை என்பதுதான்.

இப்படி ஒரு விபத்து மேலை நாட்டிலேற்பட்டிருக்குமானால், அந்த மேம்பாலத்துக்குப் பொறுப்பான அமைச்சரே பதவி விலக வேண்டி வந்திருக்கும். நாமோ சுர¬ணையற்ற, பொறுப்பற்ற அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

டாஸ்மாக் மதுக்கடை வாசலில் ஒருவராவது மிதமிஞ்சிய போதையில் தெருவோரம் சுய நினைவற்று விழுந்து கிடப்பதை தினசரி சென்னை சாலைகளில் பார்க்கிறேன். அந்தக் காட்சிக்குப் பின்னால் ஒரு முழுக் குடும்பத்தின் வேதனையும் வலியும் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி முதலமைச்சர் முதல் அதிகாரிகள் வரை யாருக்கும் எந்த சுரணையும் கிடையாது. வருடத்துக்கு 10 ஆயிரம் கோடி வருமானத்தை 13 ஆயிரம் ஆக்கிவிடுவோம் என்ற வெறி மட்டும்தான் அரசுக்கு இருக்கிறது.

சமூக ஆர்வலர் நாராயணன் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடுத்துள்ள பொது நல வழக்கில் தெரிவிக்கும் தகவல்கள் நம் ரத்தக் கொதிப்படி அதிகரிக்கின்றன. தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவை குடி போதையால் நடப்பவை.

சாலை வரிகளாக மட்டும் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய்களை சம்பாதிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 60 ஆயிரம் தமிழர்கள் சாலை விபத்துகளில் செத்தார்கள். மூன்று லட்சம் பேருக்கு மேல் காயமடைந்திருக்கிறார்கள். 2009ல் மட்டும் சராசரியாக தினம் 39 பேர் ! சாவு விகிதம் கடந்த 4 வருடங்களில் 67 சத விகிதம் அதிகமாகியிருக்கிறது. டாஸ்மாக் விற்பனையும்தான்.

பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்துத் தீர்ப்பதற்கு பதிலாக மழுப்புவது, திசை திருப்புவது, வார்த்தை விளையாட்டில் விஷயத்தை மறைப்பது போன்ற உத்திக¬ளையே கருணாநிதி அரசு எப்போதும் பயன்படுத்தி வருகிறது. சட்டமன்ற விவாதங்களையும் அறிக்கைகளையும் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது தெரியும்.

அரசுப் பணிகளிலும் ஆசிரியப்பணிகளிலும் ஓய்வு பெற்றவர்களை மறுபடியும் நியமிப்பதால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதைப் பற்றி சட்டமன்றத்தில் கேட்கப்பட்டபோது, கருணாநிதி பதிலுக்குக் கேள்வி கேட்கிறார். ‘‘எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ?’ ‘‘ பத்தாயிரம் ஓய்வுபெற்றவர்களை நியமித்தால், பத்தாயிரம் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

‘‘ஒரு சிலர் கூட பாதிக்கப்படவில்லை. ஓய்வு பெற்றவருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிப்பதிலே கஷ்டம் இருந்து அதனால் பொது மக்களுக்கு செய்யவேன்டியவற்றில் தாமதமாகாமல் இருப்பதற்காக இடைக்காலத்தில் சிலரை நியமிக்க வேண்டியிருக்கிறது. இதுவும் நீதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு முடிந்து போன கதை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்று சொல்லியிருக்கிறார் கருணாநிதி.

இந்த செய்திக்கு அடுத்த பக்கத்திலே ஒரு செய்தி . தமிழ்நாடு அரசின் குரூப் 2 தேர்வில் வெறும் 1225 காலி டங்களுக்கு நான்கு லட்சம் பேர் போட்டி இடுகிறார்களாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஓய்வு பெற்ற வயதானவர்களை மறுபடி நியமித்தால் எத்தனை இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று விதண்டாவாத கேள்வி கேட்கிறார் முதலமைச்சர்.
(இவர் ஓய்வு பெறாமல் இருப்பதால் பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞருக்கே 58 வயதாகிவிட்டது என்பது இன்னொரு கதை.)

வெளித் தோற்றத்தில் எல்லம் சிறப்பாக செய்வது போன்று ஷோ காட்டுவதில் மட்டுமே அக்கறை இருக்கிறதே தவிர சாராம்சத்தில் எல்லாம் அரைகுறையாகவும் சீர்கேடுகளுடனுமே இருக்கின்றன.

ஒரு பக்கம் அரசு ( பெரியாரைத் தவிர) யார் யாருடைய நூல்களை எல்லாமோ நாட்டுடமையாக்குவதாக சட்டமன்றத்தில் அறிவிக்கிறது. நூல் வடிவமே பெறாத கையெழுத்துப் பிரதிகளைக் கூட நாட்டுடமையாக்குகிறது !
இன்னொரு பக்கம் மூன்றாண்டுகளாக அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதே மர்மக் கதை போலாகிவிட்டது. பதிப்பாளர்களை விண்ணப்பிக்கும்படி அழைக்கும் வருடாந்தர அறிவிப்பு விளம்பரம் 2007க்குப் பிறகு வரவில்லை. 2007க்கான நூல்களை 2009 வரை வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

சுரணையற்ற நிர்வாகம், ஆட்சிமுறை என்பது மாநில அளவிலானது மட்டுமல்ல. மத்தியிலும் அப்படித்தான். டெல்லி கதிர்வீச்சு விபத்து ஓர் அடையாளம். மாயாபுரி தொழிற்பேட்டையில் இரும்புக் கழிவுக் கடையில் கோபால்ட் 60 என்கிற ஆபத்தான கதிரியக்கம் மிகுந்த உலோகம் கழிவுகளுடன் கலந்து வந்திருக்கிறது. அதை உடைத்த தொழிலாளியும் கடைக்காரருமாக மொத்தம் 4 பேர் படு மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

காயலான் கடைக்குக் கதிர்வீச்சுப் பொருள் எப்படி வந்தது ?இப்படிப்பட்ட பொருட்களை வாங்குவது முதல் பயன்படுத்தி வீசி எறிவது வரை ஒவ்வொரு கட்டத்தையும் முழுக்க முழுக்க நிர்வகிக்கும் பொறுப்பு அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்துடையது. அதற்குத் தெரியாமல் ஒரு துகள் கூட நகரக் கூடாது என்பதுதான் விதி.

அணுசக்திப் பொருட்கள் இருக்கும் இடங்கள் மட்டும் இந்தியாவில் 1485. இவற்றிடம் 7850 அணுப் பொருட்கள் இருக்கின்றன. கடந்த 2008&09ல் மொத்தம் 1485 இடங்களில் வெறும் 16 இடங்களில் மட்டும்தான் வாரியம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கண்காணிப்பு சோதனை நடத்தியிருக்கிறது. தொழிற்சாலை ரேடியாலஜி யூனிட்டுகள் மொத்தம் 505. அவற்றில் 39ல் மட்டும்தான் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த வாரியத்தை நம்பித்தான் நம்முடைய கல்பாக்கம், கூடன்குளம் போன்ற அணுசக்தி, அணுகுண்டு உலைகள் எல்லாம் இருக்கின்றன. இங்கெல்லாம் படிப்பறிவற்ற தினக் கூலித் தொழிலாளர்கலை கதிரியக்கத்துக்கு உட்படுத்தினால் அதைப் பற்றி கேட்பார் கூட கிடையாது. படித்த ஊழியர்களே கேட்கும் நிலையில் இல்லை.

இந்த லட்சணத்தில் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் இங்கே அணு உலைகள் ஏற்படுத்த வரும்படி மன்மோகன் அரசு நடைபாவாடை விரித்துக் கொன்டிருக்கிறது. அந்த உலைகளில் விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு ஒரு அளவுக்கு மேல் தரமுடியாது என்று சட்டம் இயற்றும்படி அமெரிக்காவும் பிரான்சும் மன்மோகன் அரசை வற்புறுத்துகின்றன. மன்மோகனும் அதற்கு ஜால்ரா அடித்துக் கொண்டு சட்டம் கொன்டு வருகிறார்.

கருணாநிதியானாலும் சரி மன்மோகனானாலும் சரி, அவர்களிடம் மக்கள் நலன் பற்றிய சுரணையை எதிர்பார்ப்பதே நம் தவறுதான் என்று தோன்றுகிறது. முதலில் நமக்காவது சுரணை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

மக்களின் சுரணை திருமங்கலம் முதல் பெண்னாகரம் வரை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் முற்றிலுமாக அழிந்துபோய்விடவில்லை என்பதை வேலூர் காட்பாடி மக்கள் காட்டியிருக்கிறார்கள். மருத்துவமனைக்கு வேலைக்கு வந்து அட்டென்டென்சில் கையெழுத்து போட்டுவிட்டு வேலை பார்க்காமல் தினமும் சென்னைக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்த டாக்டர்களை ரயிலடிக்கே வந்து முற்றுகையிட்டு போலீசிடம் பிடித்துக் கொடுத்த சுரணையுள்ள மக்களுக்குத்தான் எல்லா பத்மஸ்ரீ பத்மபூஷண் பாரதரத்னா விருதுகளையும் கொடுக்க வேண்டும்.

-ஞாநி (ஓ பக்கங்கள்)

2 comments:

Anonymous said...

நாம் சுரனையற்றவர்கள்தான் என்பதி எந்த மாறுபாடும் இல்லாமல் ஒத்துகொள்கிறேன்.நீங்கள் இந்தியாவில் இருந்துகொண்டு இந்த பதிவை இவ்வளவு தைரியமாக எழுதினீர்களா என்பது தெரியவில்லை.

ஆனால் தினமும் வேதனையை அனுபவிக்கும் தமிழ்நாட்டு குடிமகன் எவனாவது எழுதியிருந்தால்,தலைவர் விரும்புகிறார்களோ இல்லையோ,தலைவரினபிமானத்தினை பெற்று அவரது பெயரை சொல்லி சுரண்டி வாழும் எவனாவது நம் வீட்டுக்கு ஆட்டோவையும்,டாட்டா சுமோவையும் அனுப்பிவைப்பர்கள்.......என்ன செய்வது....மொழியை செம்மொழியாக்கி கொண்டாடுபவர்கள் ,அதனை பேசும் மக்களின் வாழ்க்கை செம்மையடந்ததா என பார்க்க வக்கில்லாதவர்கள் ஆளும் நாட்டில் பிறந்துவிட்டோம்...தட்டி கேட்டால்"அதுதான் சாப்பிட் ஒரு ரூபா அரிசி, பொழுது போக்க ஒரு டி.வி,கிளுகிளுப்பா இருக்க மானாட மயிலாட நிகழ்ச்சி,தேர்தல் வந்தால் க்குவாட்டர் & பிரியானி ஓட்டுக்கு 500-2000 பணம்,,,,,இதை விட என்ன வேண்டும் என வாக்காளனின் சுயமரியாதையை பறித்துகொண்ட பகுத்தரிவு சுயமரியதை முதலாலிகளின் அராஜகத்தினை சாதாரன பதிவாளனாள் எப்படி தாங்கமுடியும்.அதனால்........வாழ்க ஜனநாயக,வளர்க ஜணநாயகவாதிகளின் த்ஹொண்டு என அமைதியாய் சுரனையற்று இருப்பதை த்ஹவிர வேறு வையில்லை.

Unknown said...

இப்படி நாம கோபபட்டு எழுதினாலும் என்ன பயன்??
இந்த மாதிரி பாதாள சாக்கடை குழி மழை நேரத்தில் நிரம்பி இருந்தப்ப அந்ந பகுதியில இருந்த யாரோ ஒருவர் பெரிய குச்சியை நட்டு வைச்சார்.என்னடா இது திடீர்னு நடுரோட்டில் மரம் வளர்ந்து கடக்கு.

அதனால் அந்த பக்கம் போன பல பேர் ஒதிங்கி போனார்கள்.இந்த மாதிரி பல இடத்தில் நானும் பத்திரமா பயணம் செய்ய காரணம் யாரோ ஒருவர்.

அதனால் நம்ம ஏரியாவில் இந்த மாதிரி ஏதோ கல்லோ குச்சியோ தூக்கி குறுக்கபோட்டுரதில் ஒரு சின்ன உதவி செய்யலாமே?!