Monday, May 31, 2010

மொய் விருந்து

நம்வீட்டுத் திருமணத்தின்போது பணமாகவும் பொருளாகவும் மணமக்களுக்கு அன்பளிப்புகள் தரப்படுகிறதல்லவா?.............. அதை நமக்குக் கொடுத்தவர் பின்னொரு காலத்தில் அன்பளிப்புக்கு ஈடான ரொக்கப்பணத்தை திருப்பித் தருமாறு ஒரு அழைப்பிதழ்மூலமாக கேட்பார். அவர்கொடுக்கும் விருந்தை சாப்பிட்டுவிட்டு அவருக்குநாம் கொடுக்கவேண்டிய ரொக்கத்தைக்கொடுத்துவிட்டு வரவேண்டும்........ இதுதான் மொய்விருந்து!

அப்படிக்கொடுக்கும்போது இடைப்பட்ட காலத்திற்கு ஒரு வட்டித்தொகையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அந்த விருந்திற்கு நாம் போகமறந்தால் அல்லது மறுத்தால் கடிதம் மூலமாகவோ, ஆள்மூலமாகவோ அந்தப்பணம் நம்மிடமிருந்து வசூல் செய்யப்படும்.

புதுமையாக இருக்கிறதா? சமீபத்தில் மொய்விருந்து நடத்தியவருக்கு கிடைத்த மொய்ப்பணம் ஒருகோடிரூபாய் என்றால் நம்பமுடிகிறதா?.... 1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறதாம்!

மொய்விருந்து நடைமுறையை ஆவணப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு செய்யப்படுகிறது. கூடுதல் விபரங்கள் தரப்பட்டால் இந்தப்பக்கம் திருத்தியமைக்கப்படும். எவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

ஒரு தாத்தாவும், பாட்டியும்..........
அவர்களுக்குப் பிள்ளையில்லை.
இதுவரை எத்தனையோ பேருக்கு மொய்ப்பணம் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சகாலத்தில் மரணம் வந்துவிடும். மொய்ப்பணம் சும்மா போகலாமா?...
ஒரு பெரிய பந்தல் போட்டார்கள்....... தாத்தாவும் பாட்டியும் மொட்டை அடித்துக்கொண்டார்கள்.....பாட்டிக்கு சிறுவயதிலேயே காதுகுத்திவிட்டதால் பவுன் செலவு மிச்சம். தாத்தாமட்டும் காது குத்திக்கொண்டார். வருகிறவர்களுக்கு ஆட்டுக்கறியுடன் சோறுபோட்டு தங்களுக்கு வரவேண்டிய மொய்ப்பணத்தை திரும்பவும் வசூல் செய்து கொண்டனர். மொய் கொடுக்காதவர்களுடைய வீடுகளுக்கு ஆள் அனுப்பி பணத்தை வாங்கிவரச்செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் மொய்விருந்து பற்றிய தகவல்கள் சுவையானவை.

திருச்சிற்றம்பலம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி வரையிலும்..........அப்புறம்.........நாடியம் தொடங்கி மேற்பனைக்காடு ....கீரமங்கலம் வரையிலும் மொய்விருந்து நடைமுறை மக்களிடம் இருந்துவருவதாக தெரிகிறது.

மொய்விருந்து அழைப்பிதழ்கள் படிக்கச்சுவையானவை. அதில் காணப்படும் விவரங்கள் இப்பகுதியில் வாழும் மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைவெளிச்சம் போட்டுக்காட்டக்கூடியவை. என்னுடைய ஆசிரிய நண்பர் சித்துக்காடு திரு.அ.சண்முகம் அவர்கள் கைநிறைய அழைப்பிதழ்களை அள்ளித்தந்தார். இங்கேயிருக்கும் இரண்டு அழைப்பிதழ்களும் மொய்விருந்து பற்றிய ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தை நமக்குத் தருகிறது. அவர் கூறிய விபரங்கள் மொய்விருந்து பற்றிய நீள்வெட்டுத்தோற்றத்தைத் தருகிறது.
கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டுமல்ல, சைக்கிள் கடை துவக்கம், பெட்டிக்கடை துவக்கம் என்ற நிகழ்ச்சிகளின்போதும் கூட பத்திரிக்கை அடித்து மொய்வாங்கப்படுகிறது. மொய் வாங்கிக்கொள்வதற்காகவென்றே விருந்து நிகழ்ச்சி நடைபெறுவது இங்கே வழக்கமாக உள்ளது.

உங்கள் வீட்டிற்கு மொய்விருந்து பத்திரிக்கை வந்து சேர்ந்தவுடனேயே நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை அந்த விருந்திற்கு நீங்கள் எத்தனை ரூபாய் மொய் செய்யவேண்டும் என்பதை கண்டுபிடிக்கவேண்டியது. அடுத்த வேலை அந்தப்பணத்தைத் திரட்ட அலைந்து திரியவேண்டியதுதான்........
மொய்விருந்து நடைபெறும் இடம் கல்யாண மண்டபமாகவோ, இதற்கென அமைக்கப்பட்ட கீற்றுக்கொட்டகையாகவோ இருக்கும். இதற்கென கீற்றுக்கொட்டகை அமைத்து வாடகைக்கு விடுகிறவர்களும் உண்டு.

மொய்விருந்து பந்தலின் ஒரு பகுதியில் ஐந்தாறு கவுண்டர்கள்......சினிமா கொட்டகை மாதிரி...... 'சேந்தன்குடி, மேற்பனைக்காடு, கீரமங்கலம் ஊரைச்சேர்ந்தவர்கள் இங்கே மொய்செலுத்தவும்' என்று இருக்கும். எந்த ஊரையும் சேராதவர்கள் 'பல ஊர்' என்ற கவுண்டரில் பணம் செலுத்த வேண்டும்.
உங்கள் வீட்டு விசேஷங்களின்போது தேங்காய், பூ, பழம், வெற்றிலை, என்று மரியாதை செய்திருப்பார்கள் இல்லையா?..... அதை 'தட்டு தாம்பாளம் வாங்கிக்கொள்ளப்படும்' என்று அழைப்பிதழில் குறிப்பிடுவார்கள்.
மூன்று நான்கு பேர்கள் கூட்டாகச்சேர்ந்து மொய்விருந்து நடத்துவது உண்டு. செலவினத்தை பகிர்ந்துகொள்வார்கள். வரவினத்தை தனித்தனியாக எழுதிக்கொள்வார்கள். இந்த பந்தல் பொதுப்பந்தல் என்று அழைக்கப்படும்.
பந்தலில் மணல் பரப்பியதரையில்தான் கறிவிருந்து.

உள்ளூர் சலவைத்தொழிலாளி விரித்துப்போடும் சேலையில் வரிசை வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
கையில் கொடுக்கப்படும் வாழை இலையை நாமே வாங்கி பரத்திவைத்துக்கொள்ளவேண்டும்.
வடித்தசோறும் ஆட்டிறைச்சிக்குழம்பும் பரிமாறப்படும். இந்தக்குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை.

ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு. எங்குமே சாப்பிடாமல் நொந்துபோய் வீட்டில் தண்ணீர் சோறும், பச்சை வெங்காயமும் சாப்பிடுபவர்களும் உண்டு.
காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துகொள்ளப்படுகிறது.

மிகச்சில விருந்துகள் மட்டும் சைவ விருந்துகள்.
அசைவம் சாப்பிடாத மிகச்சிலருக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும்.
மொய்ப்பணத்தை நோட்டில் வரவுவைக்கும் பணியில் மிகநெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்.
புத்தககூடுதலுக்கும், இருப்பு கூடுதலுக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் வரவுவைத்தவர் தான் அதை சொந்தப்பணத்தில் இருந்து ஈடு செய்யவேண்டும்.
விருந்து முடிந்தபிறகு தாமதமாக மொய்செய்பவர்களுக்கு 'பின்வரவு' என்று தனியாக பக்கம் திறக்கப்பட்டு எழுதப்படும். பின்வரவு செய்தவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு குறையும். ஏளனப்பேச்சிற்கு உட்படவேண்டியிருக்கும்.
'நீ எனக்கு செய்த மொய் எல்லாம் ஏற்கனவே செய்தாகிவிட்டது. இது புது கணக்குப்பா.......' என்று வரும் பணம் 'புதுநடை' என்ற தலைப்பில் எழுதப்படும்.
அண்மைக்காலத்தில் எதிரியாகிப்போனவன் வீட்டில் மொய்விருந்து என்றால்கூட சேரவேண்டிய மொய்சேர்ந்துவிடும்.

குடும்பத்தகராறா?........இனிமேல் உறவுவேண்டாமா?......பஞ்சாயத்து செய்து உறவு அறுக்கப்படும்போது மொய்ப்பணமும் தீர்க்கப்படும்.
மொய்க்கணக்கிற்குள் சிக்கவிரும்பவில்லையா?......கூப்பிட்ட மரியாதைக்கும் சாப்பிட்ட மரியாதைக்கும் ஏதாவது செய்ய வேண்டுமா?.......வழி இருக்கிறது......"இதை எழுதவேண்டாம்" என்று கொடுத்தால் அதற்கும் ஒரு தலைப்பிட்டு எழுதிக்கொள்வார்கள். பத்து வருடங்களுக்குப்பிறகு நீங்கள் திருத்தணியில் இருந்தால் கூட உங்கள் வீட்டு விசேஷத்தின்போது வந்து நிற்பார்கள்.

ஒரு கிலோ ஆட்டிறைச்சி ஏழுபேரிலிருந்து பத்துபேர்வரை என்றகணக்கிற்குஆடுகள் வெட்டப்படும். எனக்குக் கிடைத்த தகவலின்படி ஒரு விருந்தில் 20,000 பேர்சாப்பிட்டார்களாம்.

பெரிய அளவில் விளம்பரம் செய்து மொய்விருந்து நடத்துவதற்கு முதலீடு தேவைப்படுமல்லவா?...........கவலைப்பட வேண்டியதில்லை.....உள்ளூரில் இருக்கும் அரசு வங்கிகளின் மேலாளர்களின் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள் .........விருந்து முடிந்த பிறகு ஒரு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் ஒரே ஊரில் பலமொய்விருந்துகள் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். இதற்காக அவர்கள் கடன்வாங்கி மொய்செய்வது அதிகரித்து வருகிறது. இந்தக்கடனை அடைப்பதற்காகவே பெரும்பாலோரின் மொய்விருந்து வசூல் பயன்படுகிறது என்கிற தகவல் சிந்திக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வுகளின் போது ஊர்பஞ்சாயத்துகூடி மொய்விருந்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.
மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், லேவாதேவி, புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள்.

பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன.

நன்றி: மு.குருமூர்த்தி (http://thanjavure.blogspot.com)

Friday, May 28, 2010

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் கதை - 3

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது.

பிரதமர், ஆளும் கட்சி மற்றும் மத்திய அரசாங்கம்:

ஒரு சில பத்திரிக்கைகள் சொல்லுவது உண்மையானால்:

இந்தியாவை ஆளும் மந்திரிசபையில் ஒரு முக்கியமான துறையின் ஒரு முக்கியமான மந்திரி இந்தியாவின் முக்கியமான வளங்களில் ஒன்றை தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தன் கட்சித் தலைவரின் குடும்பத்தாருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுகிறார். எதுவுமே நடவாதது மாதிரி நான் எல்லாமே பிரதமருக்குத் தெரிவித்தே நடந்து கொண்டேன் என்றும், தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்றும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும், பிரதமருக்குத் தெரியாமல் எதுவுமே நடந்து விடவில்லை என்றும் ஆணவத்துடனும், திமிருடனும், அலட்சியத்துடனும் யாரும் தன்னை அசைத்து விட முடியாது என்ற நம்பிக்கையுடனும் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிக்கும் ஊழல்களை இந்த மந்திரி இன்று வரை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்றே பத்திரிக்கை தகவல்களில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

மந்திரிசபையில் உள்ள மந்திரிகளின் செயல்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பேற்று அவர்களை வழி நடத்த வேண்டிய பிரதமரோ இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருந்த பொழுதிலும், அன்றாடம் பத்திரிகைகளும், எதிர்கட்சியினரும் அவரிடம் மீண்டும் மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்டுக் கொண்ட போதும், அவற்றையெல்லாம் காணாதவர் போல கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டு செயல் படுகிறார் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

தனக்குக் கீழே செயல் படும் மந்திரிகளின் ஊழல்களை கண் கொண்டு பார்க்க மாட்டேன், காது கொண்டு கேட்க்க மாட்டேன், வாய் கொண்டு பேச மாட்டேன் என்று காந்தியின் மூன்று குரங்குகள் போல அமைதி காக்கிறார் பிரதம மந்திரி. அதைவிடப் பெரிய தவறாக ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு இது: எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ஊழல் மந்திரி தவறு செய்யும் பொழுதெல்லாம் தனக்குக் கீழேயுள்ள புலனாய்வு அமைப்பு தன் கடமையைச் செய்ய விடாமலும் அதே பிரதமர் தடுத்து வருகிறார்.

பிரதம மந்திரியின் ஆளும் கட்சியோ தன் கட்சி உறுப்பினர்கள் தவறு செய்து மாட்டிக் கொள்ளும் பொழுது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதுமானது, கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுக்கு அது பொருந்தாது என்று நினைக்கிறது. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது ஒன்றே அதன் குறியாக இருக்கிறது. அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளது.

காங்கிரஸின் அதிகாரபூர்வ பேச்சாளர் சிங்வி, ராஜா மீது எவ்வித குற்றசாட்டுக்கும் ஆதாரமே இல்லையே, எதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழுப்பூசணிக்காயையும் கொஞ்சம் கூட மனசாட்சியும் நேர்மையும் இன்றி சோற்றில் மறைக்கிறார்.

நாடு முழுவதும் தீவீரவாதமும், நக்சல் பயங்கரமும் நடந்தாலும் அவற்றையெல்லாம் அடக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல், தீவீரவாதிகளிடமும், பயங்கரவாதிகளிடமும் மென்மையாக நடந்து கொள்வதன் மூலம் அடுத்த தேர்தலில் தன் ஓட்டு வங்கியைத் தக்க வைப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தன் ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக அதன் மந்திரிசபையின் முக்கிய மந்திரி ஒருவர் அடிக்கும் கொள்ளையையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.

ஆக பயங்கரவாதிகளிடம் மட்டும் இன்றி கொள்ளைக்காரர்களிடமும் காங்கிரஸ் கட்சி அனுசரணையாக இருக்கவே விரும்புகிறது. இப்படியாகப் பட்ட ஒரு கட்சியையும், பிரதமரையும் நம்பி ஓட்டுப் போடும் மக்களும் இருக்கும் வரை இந்த தேசத்திற்கு விமோசனமே கிடையாது.

அரசு இயந்திரங்கள்:

ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற ரீதியில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர் கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே அரசு இயந்திரத்தை இந்த காங்கிரஸ் அரசால் பயன் படுத்தி வருகிறது. ஆ.ராஜாவை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று தடுக்கும் அதே பிரதமரே, குஜராத்தில் மோடியின் அரசாங்கம் மீது அதே சிபிஐ அமைப்பை ஏவி விட்டுப் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.

தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள்:

ஊடகங்கள் சொல்லுவதைப் பார்த்தால், பொதுத்துறை நிறுவனங்களான டாடா போன்ற மக்கள் நம்பிக்கை பெற்ற பெரு நிறுவனங்கள் கூட நீரா ராடியா போன்ற இடைத்தரகர்களை வைத்துச் செயல் பட்டது அவர்கள் பெற்ற நன் மதிப்பை குலைத்து விட்டது என்று தெரிகிறது.

ஆளும் கட்சியிடம் தங்கள் நிறுவனங்களுக்கான சலுகைகளைப் பெற இடைத் தரகர்களைப் பயன் படுத்துவது சகஜமான ஒரு காரியம். என்றாலும் கூட பிரதமரின் உரிமையில் கூடத் தலையிடும் கீழ்த்தரமான வேலைகளை அத்தனை பெரு நிறுவனங்களும் செய்து வருகின்றன என்பது இந்த ஊழல் விசாரணை மூலமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ராஜாவின் அராஜகங்களை எதிர்த்து எஸ்டெல் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கல் முறைகேடானது என்று வழக்குத் தொடர்ந்தது.

ஆனால் அந்த நிறுவனத்தையும் மிரட்டி வழக்கு வாபஸ் வாங்க வைக்கப் பட்டது. அந்த நிறுவனத்தின் பிற லைசென்சுகளை ரத்து செய்யப் போகிறோம் என்று ராஜா நோட்டீஸ் அனுப்பியதால் வேறு வழியின்றி அந்த நிறுவனமும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது. இருந்தாலும், ராஜா மிரட்டியதால் மட்டுமே வாபஸ் வாங்க நேர்ந்தது என்ற உண்மையை அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள்:

எதிர்க்கட்சிகளின் நிலையோ இன்னும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. 1 லட்சம் கோடி ரூபாய் என்பது பிரமாண்டமான ஒரு ஊழல். இந்த ஊழலை பிரதான எதிர்க்கட்சியான பாஜக எப்படி கையாண்டிருக்க வேண்டும்? அது நினைத்திருந்தால் பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்து இந்த 2ஜி ஏலமே நடக்க விடாமல் செய்திருக்கலாம். அத்வானி சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்திருக்கலாம். ஆனால் அதை எதையுமே செய்யாமல் சம்பிரதாயமான பலவீனமான ஒரு எதிர்ப்பையே இன்று வரை காட்டி வருகிறது.

60 கோடி ரூபாய் போஃபோர்ஸ் ஊழலின் பொழுது வானமே இடிந்து விழுந்து விட்டது போல ருத்ரதாண்டவம் ஆடிய இடதுகளும் இன்ன பிற கட்சிகளும் அதை விட ஆயிரம் மடங்குக்கும் மேலான இந்த ஊழலில் லேசாக முனகுவதும் அவ்வப்பொழுது பிரதமருக்கு லெட்டர் போடுவதும் மட்டுமே தங்கள் கடமை என்று ஒதுங்கிக் கொள்கின்றன.

நாடு தழுவிய போராட்டம் எல்லாம் கிடையாது. நாளைக்கு தமிழ் நாட்டில் பிச்சையாகக் கிடைக்கும் நான்கு எம் எல் ஏ சீட்டுக்களும் இரண்டும் எம் பி சீட்டுக்களும் பஞ்சம் வந்து விடுமோ என்ற அச்சம்தான் காரணம் என்று பொதுமக்கள் எண்ணுகிறார்கள்.

தமிழ் நாட்டில் திமுக வின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக மட்டுமே இந்த ஊழலை தன் வாழ்க்கைப் பிரச்சினையாகக் கருதி பாராளுமன்றத்திலும் வெளியிலும் போராடி வருகிறது. அதுவும் ஊழல் செய்தது திமுக என்பதினால் மட்டுமே இந்த எதிர்ப்பு.

இதே ஊழலை லல்லுவோ, முலாயமோ செய்திருந்தால் அதிமுக கவலைப் பட்டிருக்காது.

ஜெயலலிதா இந்த ஊழலை கடுமையாக எதிர்த்து வருகிறார். அறிக்கைப் போர் நடத்தி வருகிறார். இருந்தாலும் அவரது முந்தைய ஊழல்கள் காரணமாக அவர் மீது யாருக்கும் நம்பிக்கை வருவதில்லை. இவர் மட்டும் என்ன யோக்கியமா என்ற கேள்வி உடனே எழுந்து விடுகிறது. ஜெயலலிதா தனது கூடா நட்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாகச் செய்ய நேர்ந்த ஒரு சில ஊழல்கள் இந்த மாபெரும் ஊழலுடன் ஒப்பிடும் பொழுது வங்கிக் கொள்ளையின் முன்னால் ஒரு சிறிய பிக்பாக்கெட் திருட்டுப் போன்றது. ஆனால் அவரது பெயர் கெட்டதும், அவர் மீதான நம்பிக்கை போனதும் போனதுதான்.

அரசியலில் செய்யும் சிறு தவறுகள் கூட ஒருவரது அரசியல் எதிர்காலத்தையே அழித்து விடும் என்பதை ஜெயலலிதா இன்று வரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஊடகங்கள் தரும் இந்தச் செய்திகளின் காரணமாக கீழ்க்கண்ட கருத்து பொது மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது:

“சுயநல காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் அதே நேரத்தில் ஆட்சியில் இருக்கும் திமிர் காரணமாக தாங்கள் எந்த ஊழலையும் செய்யலாம், எந்தக் கொலை பாதகங்களையும் செய்யலாம், யாரும் இந்தியாவில் இவர்களைத் தட்டிக் கேட்க உரிமையில்லை என்ற ஆணவத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியும் அவரது கட்சியினரும் அவரது குடும்பத்தாரும் செயல் பட்டு வருகிறார்கள்.”

தனது கொள்ளையை மறைக்க, தன் குடும்பத்தைப் பாதுகாக்க எவ்வளவு கீழ்த்தரமாகவும் தான் நடந்து கொள்ளலாம் என்பதை மீண்டும் மீண்டும் கருணாநிதி நிரூபித்தே வருகிறார் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அவரிடமிருந்து நேர்மையையும், கண்ணியத்தையும், நாட்டுப் பற்றையும், உண்மையையும் இந்த வயதில் கூட எதிர்பார்க்க முடியவில்லை என்றால் இவை என்றுமே அவரிடம் இருந்ததில்லை என்பது மேலும் உறுதியாகிறது. இனிமேலும் இவற்றை நாம் இவரிடம் எதிர்பார்க்க முடியாது.

ஒரு காலத்தில் மாநில சுயாட்சி கேட்டுப் போராடிய அதே கருணாநிதி, ஒன்றிணைந்த இந்தியாவை எதிர்த்த அதே கருணாநிதி, இன்று அதே ஒருங்கிணைந்த இந்தியாவின் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்களைக் கொள்ளை அடிக்க முடிந்திருப்பது இந்திய தேசிய உணர்விற்குக் கிடைத்த மாபெரும் அடி. இந்தக் கொள்ளையின் முழுப் பயனும் இவரது குடும்பத்திற்கும் கட்சிக்குமே சென்றிருக்கிறது என்பது வெள்ளிடைமலை. ராஜா ஒரு கருவி மட்டுமே என்பதை விபரம் தெரிந்த அனைவரும் நன்கு அறிவர்.

கருணாநிதி ஊழல் செய்வது இது முதல் முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல. சர்க்காரியா விசாரணையின் பொழுது கருணாநிதி செய்த ஊழல்கள் எல்லாம் நிரூபிக்கப் பட்டன. பின்னர் இதே காங்கிரஸ் கூட்டணியால் அவை மன்னிக்கவும் பட்டன.

அப்பொழுது கருணாநிதி கேட்டார் “தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?” என்று. புறங்கையை நக்கி, முழங்கை வரை நக்கி, முழுக்கையையும் நக்கி இன்று ஒட்டு மொத்த தேனையும் குடித்து விட்டு வெறும் புறங்கையில் வழியும் தேனை மட்டும் மக்களுக்கு எச்சில் காசாக, பிச்சைக் காசாக, ஓட்டுப் போட லஞ்சப் பணமாக எறிந்து கொண்டிருக்கிறார். புறங்கையை நக்கியதெல்லாம் அந்தக் காலம்; இப்பொழுது முழுத் தேனையுமே கடத்தி விடுகிறார்கள்.

இப்படிக் கொள்ளையடிக்கப் பட்ட பணத்தைக் கொண்டுதான் கருணாநிதியால் தமிழ் நாட்டில் ஒரு நாலு கோடி வாக்காளர்களுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முடிகிறது. இந்த ஊழல் மூலம் கிட்டிய ஆயிரக்கணக்கான கோடிகளில் வெறும் ஒரு 4000 கோடி ரூபாய்களை மட்டுமே தமிழ் நாட்டு மக்களுக்கு வாக்கரிசியாக அளித்து அவர்களின் ஓட்டுக்களை இவர் எளிதாகப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட முடியும். மீண்டும்.

இந்த ஊழலில் கிடைத்த வருவாயில் இருந்து ஒரு சிறிய தொகையை எடுத்து மீண்டும் மக்களுக்குக் கொடுக்கும் லஞ்சமாக முதலீடு செய்து இதை விட பெரிய ஊழலில் இதை விட பெரிய தொகையை அறுவடை செய்து விடுவார்கள். இதை விட பெரிய ஊழலைச் செய்து இதை விட அதிகமாகக் கொள்ளையடிக்கலாம். இது ஒரு விபரீத சுழற்சி. இது போன்ற பெரும் ஊழல்கள் மாபெரும் ஜனநாயகப் படுகொலையில் முடிந்து தேர்தலைக் கேலிக் கூத்தாகச் செய்து விடும்.

இன்று இதை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சிக்கே இந்த ஊழல்கள் எமனாக முடியும்.

தலித்துகள்:

தங்களது சுயநலக் கொள்ளைகளுக்கு அரசியல்வாதிகள் தலித்துகளை கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். தங்களுக்குக் கிடைக்கும் தண்டனைகளையும், தாங்கள் பெற வேண்டிய தாக்குதல்களையும் இந்தக் கேடயங்கள் அனுபவிக்கும்படி செய்து விடுகின்றனர். கிள்ளுக் கீரை போல தலித்துகளை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம்.

அதனால்தான் இந்த ஊழலில் ராஜாவைக் காக்கும் பொருட்டு மிகக் கேவலமான, அசிங்கமான ஒரு காரியத்தையும் இந்தக் கருணாநிதி செய்துள்ளார். அதுதான் “தலித் என்பதினால் ஆதிக்கச் சக்திகள் ராஜாவை குற்றம் சாட்டுகிறார்கள்” என்று மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்வது.

கருணாநிதி சொல்வது உண்மையானால் ஏன் ஜெயலலிதாவின் மீது டான்சி முறைகேட்டில் வழக்குப் போட்டார்கள்? ஏன் நரசிம்ம ராவை குற்றம் சாட்டினார்கள்? எதனால் ராஜீவ் காந்தியை போபர்ஸ் ஊழலில் துரத்தித் துரத்தி அடித்தார்கள்? சசி தரூர் ஏன் பதவி விலகினார்? இவர்கள் எல்லாம் உயர் ஜாதி அரசியல்வாதிகள் அல்லவா? இவர்கள் எல்லோரும் தலித் அல்லவே? தலித் என்பதற்காக பாலகிருஷ்ணனுக்கு தலைமை நீதிபதி பதவி கிட்டாமல் போனதா? மீரா குமாருக்கு சபாநாயகர் பதவியை யாராவது எதிர்த்தார்களா?

கருணாநிதி பரப்பும் இந்த அவதூறை முதலில் தலித்துக்கள் எதிர்த்துப் போராட வேண்டும். அவர்களுக்கு இழைக்கப் பட்ட பெருத்த அவமானம் இந்தக் குற்றச்சாட்டு.

பத்திரிக்கைகள்/தொலைக்காட்சிகள்:

இந்த விஷயத்தில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நடந்து வரும் விதம் அரசியல்வாதிகளின் செயலை விடக் கேவலமாக இருக்கின்றது. முக்கியமாகத் தமிழகப் பத்திரிகைகள் இந்த ஊழலைக் கண்டு கொள்ளவேயில்லை. எந்த தினசரிகளிலும் இது குறித்த முழு விபரமோ செய்தியோ வெளியிடப் படுவதில்லை.

தமிழ் பத்திரிகைகளையும், டிவிக்களையுமே நம்பி தங்கள் பொதுப் புத்தியை வளர்த்துக் கொள்ளுபவர்களாகத்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். இவர்களை அறியாமையில் இருந்து மீட்க வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூணோ இந்தக் கொள்ளையை மூடி மறைப்பதன் மூலம் இந்தக் கொள்ளைக்குத் துணை போய்க் கொண்டிருக்கின்றது.

சென்னை விமான நிலையத்தில் ராஜாவைக் கேள்வி கேட்ட பெண் நிருபர்களை ராஜாவும் அவரது அடியாட்களும் பிடித்துத் தள்ளி தாக்கியிருக்கிறார்கள்.

இருந்தாலும், தமிழக அரசின் அச்சுறுத்தல்களுக்கும் அராஜகங்களும் பயந்து நடுங்கிக் கொண்டும், அரசு வீசும் எலும்புத் துண்டுகளான அரசு விளம்பரங்களுக்கும் ஆசைப் பட்டுக் கொண்டும் நம் பத்திரிகைகள் இந்த ஊழலை ஒட்டு மொத்தமாக மூடி மறைத்து விட்டன என்பதே உண்மை.

தமிழ் மக்களின் இதயத் துடிப்பு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் விகடன் குழுமத்தின் ஜீனியர் விகடன் பத்திரிகையில் இந்த ஒட்டு மொத்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் வெளியிடாமல் இதில் சம்பந்தப் பட்டுள்ள கனிமொழி, ராஜாத்தி அம்மையார் ஆகியோரின் பெயர்களை மறைத்து விட்டு மலிவான ஒரு கட்டுரையை மட்டும் வெளியிட்டு தன் தாழ்ந்த தரத்தை மேலும் தாழ்த்திக் கொண்டிருக்கிறது என்று மற்ற ஊடகங்களோடு ஒப்பிடுபவர்கள் எண்ணுகிறார்கள்.

ஒரு நரசிம்மராவுக்கு இரண்டு கோடி ரூபாய்கள் கொடுக்கப் பட்டது என்ற விவகாரத்திலும், ராஜீவ் காந்திக்கு 60 கோடி லஞ்சம் கொடுக்கப் பட்டது என்ற ஊழலிலும், ஜெயலலிதாவுக்கு நூறு செருப்புக்கள் இருந்தன என்பதைக் காட்டுவதிலும், நித்யானந்தாவின் அந்தரங்கங்களையும் காட்டுவதில் பேரார்வம் காட்டிய நம் தமிழகப் பத்திரிகைகள் ஊழல்களுக்கு எல்லாம் தாயான இந்த 1 லட்சம் கோடி ரூபாய் ஊழலைப் பொருத்தவரை தங்களது சகல அங்கங்கங்களையும் பொத்திக் கொண்டு இருக்கின்றன. இது இந்த ஊழலுக்கு நம் பத்திரிகைகளும் விலை போன கொடுமையைத்தான் காட்டுகின்றன.

இந்திய அளவில் இந்துத்துவ தீவீரவாதத்தை (?!) அழிக்க அவதாரம் எடுத்துள்ள செக்யூலரிஸ்டுகளான பரக்கா தத் என்ற டெலிவிஷன் பத்திரிகையாளரும், வீர் சங்வி என்ற பத்திரிகையாளரும் இந்த ஊழலில் ராஜாவை மந்திரியாக நியமிக்கும் பொருட்டு கனிமொழியின் சார்பாக தரகு வேலை செய்திருப்பதாக சிபிஐ விசாரணை உறுதிப் படுத்துகிறது. நரேந்திர மோடியைத் தூக்கில் போட வேண்டும் என்று டெலிவிஷனில் காட்டுக் கூச்சல் போடும் பரக்கா தத்தின் நேர்மை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கேவலம் காசு வாங்கிக் கொண்டு தரகு வேலை செய்யும் ஒரு நான்காம் தர பெண்மணிதான் இவ்வளவு நாட்களும் செக்குலார் வேடம் போட்ட இந்த பரக்கா தத் என்பது இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. இருந்தாலும் எந்தவித வெட்கமோ அவமான உணர்வோ தார்மீகப் பொறுப்போ இல்லாமல் ஒரு கேவலமான ப்ரோக்கர்களாக, காசு வாங்கிக் கொண்டு ஆளை அமர்த்தித் தரும் தரகர்களான பரக்கா தத்துகளும், வீர் சங்விகளும் இன்னமும் தங்களை இந்து வெறியில் இருந்து பாரதத்தைக் காக்க வந்த பரமாத்மாக்களாகக் காட்டிக் கொண்டு டெலிவிஷனில் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதையும் இந்திய மக்கள் பார்த்து கை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இணைய ஊடகங்கள்:

தமிழ் நாட்டின் பத்திரிகைகளும், டிவிக்களும் தான் கடும் மொளன விரதம் அனுஷ்டிக்கின்றன என்றில்லை; தமிழ் மக்களின் அறிவு ஜீவிக் குரலாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் பெரும்பாலான வலைப்பதிவர்கள் கூட இந்த விஷயத்தைப் பற்றி வாய் திறப்பதில்லை.

நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டும் என்று கதறிய தமிழ் வலைப்பதிவர்கள், பார்வதியை சிகிச்சைக்கு அனுமதிக்காததற்குக் கூச்சல் போட்ட தமிழ் வலைப்பதிவர்கள், ஒரு சினிமா வெளிவந்தால் அடித்துப் பிடித்துக் கொண்டு விமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதையைப் போய் எழுதித் தொலையும் தமிழ் ப்ளாகர்கள், அறிவு ஜீவித் தனம் என்ற போர்வையில் இனவெறியைப் பரப்பும் வலைப் பதிவர்கள், தமிழ் நாட்டின் முதல்வரும் அவர் குடும்பமும் ஒரு தமிழ் நாட்டு மந்திரி மூலமாக 1 லட்சம் கோடி கொள்ளையடித்தது பற்றி வசதியாகக் கண்டு கொள்ளவேயில்லை.

இதை விடக் கொடுமை தமிழில் கொஞ்சம் சிந்தித்து எழுதக் கூடிய ஒன்றிரண்டு வலைப்பதிவர்கள்கூட இதில் ராஜா ஊழல் செய்திருக்க எந்த வித முகாந்திரமுமே இல்லை என்று ஊருக்கு முன்னால் ராஜாவுக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கி விட்டிருந்தார்கள்! இன்று இவ்வளவு விஷயங்கள் வெளி வந்த பின்னால் முகத்தை எங்கே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இட்லி வடை என்ற பதிவர் ஒருவர் மட்டும் செஸ் போட்டிகளுக்கு நடுவே இந்த ஊழல் சம்பந்தமான ஏதோ நாலு பத்திரிகைச் செய்திகளைப் போட்டு ஒப்பேத்தியிருக்கிறார். மற்றவர்களுக்கு எல்லாம் இப்படி ஒரு ஊழல் நாட்டில் நடக்கவேயில்லை.

தமிழ் ப்ளாகர்களுக்கு எல்லாம் இன்னும் நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டுமா அல்லது கழுவில் ஏற்ற வேண்டுமா என்றே இன்னும் தீர்மானம் செய்து முடியவில்லை! இதுவே ஒரு ஜெயலலிதா ஒரு லட்சம் வாங்கியிருந்தால் இன்று தமிழ் இணைய உலகமே பற்றி எரிந்திருக்கும்.

இந்திய பொது மக்கள்:

இறுதியாக இந்திய பொது மக்களையே நான் இந்த ஊழல்கள் அனைத்திற்கும் காரணமான குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டுவேன். கொள்ளை போவது தங்கள் சொத்து என்பதை அறியாமலேயே இந்தக் கயவர்களுக்குப் போய் மீண்டும் மீண்டும் தங்களது ஓட்டுக்களைப் போட்டு தங்களுக்குத் தாங்களே மக்களும் கொள்ளி வைத்துக் கொள்கிறார்கள். கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொள்கிறார்கள். ஜனநாயகம் என்னும் யானை தன் தலையில் தானே சகதியை அள்ளிக் கொட்டிக் கொள்கிறது.

ஆக மத்தியிலும் மாநிலத்திலும் தங்களை ஆளும் கட்சிகள் தங்களது பணத்தை, அதுவும் 1 லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்து விட்டு தங்களை வளப்படுத்திக் கொண்ட அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் மீண்டும் அதே கொள்ளைக்காரர்களிடம் காசு வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஓட்டுப் போடத் தயாராகி வருகிறார்கள். ஒரு ஓட்டுக்காகக் இவர்களுக்கு கொடுக்கப் படும் பிச்சைக்காசு இவர்களிடமிருந்தே திருடப் பட்ட பணம் என்பதே தெரியாமல் அற்பப் பணத்திற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும் தங்கள் எதிர்காலத்தையும் தன்மானத்தையும், பாதுகாப்பையுமே அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ராஜா தன் சொந்த ஊரான பெரம்பலூருக்குச் சென்றிருந்த பொழுது கிராம மக்கள் எல்லாரும் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் நாள் முழுவதும் இல்லை என்று அவர் காரை மறித்துப் போராடியிருக்கிறார்கள். கோடிக் கோடியாகக் கொள்ளையடிப்பவரின் சொந்த மக்களுக்குக் குடிக்க நீரில்லை, மின்சாரம் இல்லை. கடும் கோடை வெப்பத்தில் நீரில்லாமல் மின்சாரம் இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜா தனது ஏ சி சொகுசுக் காரில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க, போராடிய மக்களை போலீசார் அடித்து விரட்டியிருக்கிறார்கள். தகுதியில்லாத கயவர்களுக்கு ஓட்டுப் போட்டால் இதுதான் நடக்கும் என்பதை மக்கள் இனியாவது உணர வேண்டும். இனியாவது மக்கள் திருந்த வேண்டும்.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையே எந்தவித பொது அறிவும் இன்றி விழிப்புணர்வும் இன்றி, சமூக அக்கறையும் இன்றி, தங்கள் எதிர்காலம் குறித்த உணர்வு இன்றி, தங்கள் சந்ததியினர் குறித்த எதிர்கால பொறுப்பு இன்றி, தேசத்தின் மீது அக்கறையின்றி, சுயநலமும் அறிவின்மையும் மேலிட மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் இந்த போக்கு ஒன்றே இது போன்ற ஊழல்களின் ஊற்றுக் கண், அடிப்படை. அவர்கள் விழித்துக் கொள்ளாத வரை ராஜாக்கள் இந்தியாவைச் சுரண்டுவது நிற்கப் போவதில்லை.

பாராட்டுதலுக்கு உரிய சிலர்:

இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலாகவே மிகுந்த பொறுப்புணர்வுடனும், பத்திரிகையாளருக்குரிய கடமையுணர்வுடனும், தேசத்தின் மீது உண்மையான அக்கறையுடனும் இந்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் புலனாய்வு செய்து நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவித்த ஒரே பத்திரிகை கல்கத்தா மற்றும் டெல்லியில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான “தி டெய்லி பயனீர்” மட்டுமே.

அதன் புலனாய்வுப் பிரிவு பத்திரிகையாளரான கோபிகிருஷ்ணன் தான் இந்த ஊழலை உலகத்திற்கு அம்பலப் படுத்தியவர். இதுதான் உண்மையான புலனாய்வு முயற்சி.

பயனீர் பத்திரிகை உடனடியாக இந்த ஊழல் குறித்தான பதிவுகளை நீக்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நீரா ராடியாவின் வக்கீல் நோட்டீஸ் விட்டுள்ளார். பயனீர் ஆசிரியர், “நாங்கள் சொல்வது சத்தியம், கோர்ட்டில் சந்திக்கத் தயார், மிரட்டலுக்குப் பணிய முடியாது” என்று அறிவித்து விட்டார்.

ஆட்சி தந்த ஆணவமும், செல்வாக்கும், ரவுடிகளின் துணையும், அரசு இயந்திரங்களும், பணமும் கொண்ட மாபெரும் ஆதிக்க சக்தியான ஒரு ஆ.ராஜாவை ஒரு சிறிய பத்திரிகையாளரான கோபிகிருஷ்ணன் அச்சமின்றி துணிவுடன் இந்த அளவு எதிர்த்துப் போராடி உண்மையை வெளிக் கொணர்ந்தது இன்றைய சூழ்நிலையில் மாபெரும் ஒரு சாதனையே. பயனீர் நாளிதழ் வெகுவாகப் பாராட்டப் பட வேண்டிய சேவையை இந்தியாவுக்குச் செய்துள்ளார்கள். அவர்களது துணிவுக்கும், கடமையுணர்வுக்கும் ஒட்டு மொத்த தேசமும் கடன் பட்டுள்ளது. இவர்களைப் போன்றவர்கள் இருப்பதினால்தான் இந்திய ஜனநாயகத்தின் மீது நமக்கு இன்னமும் ஒரு நம்பிக்கை இழை மிச்சம் இருக்கின்றது. வாழ்க அவர்கள் பணி.

(இந்தக் கட்டுரையும்கூட பெரும்பாலும் பயனீர் பத்திரிகையின் கட்டுரைகளின் அடிப்படையிலேயே எழுதப் பட்டுள்ளது. பயனீர் பத்திரிகையைப் பாராட்டி உங்கள் கருத்துக்களை அனுப்பி அவர்களை இந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவரும் ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பயனீர் பத்திரிகையின் இணைய முகவரி: http://www.dailypioneer.com.

திரு. ஜே. கோபிகிருஷ்ணன் அவர்களின் வலைப் பக்கத்தில் இந்த ஊழல் சம்பந்தமான அனைத்து கட்டுரைகளையும் விரிவாகப் படித்தறியலாம். அவருடைய வலைப்பதிவு இங்கே. ராஜாவின் ஊழலைத் தவிர அன்புமணி ராமதாஸின் ஊழல், இந்திய ராணுவ ஊழல்கள் போன்ற பல்வேறு ஊழல்களை அம்பலப் படுத்திய அவரது புலனாய்வு கட்டுரைகள் பல அவரது வலைத் தளத்தில் படிக்கக் கிட்டுகின்றன.)

ஹெட்லைன்ஸ் டுடே டி வி, நாட்டை விலை பேசும் தரகியான நீரா ராடியாவோடு ராஜாவும் கனிமொழியும் தனித்தனியாக நடத்திய உரையாடல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பதிவு செய்தது மத்திய அரசின் பொருளாதார உளவுப் பிரிவு.

இவர்களது தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்த டேப்புக்களை இந்த டி வி எப்படியோ பெற்று வெளியிட்டு விட்டது. இந்த உரையாடல்களை வெளியிடக் கூடாது என்று நீரா ராடியா கோர்ட்டுக்குப் போய் அவரது மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. ராஜா அப்படிப் பேசவேயில்லை என்று மறுக்கிறார்; ஆனால் ராடியாவோ நாங்கள் பேசியதை எப்படி வெளியிடலாம் என்று கேட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்!

சுயநலக் காரணங்களுக்காகவே இருந்தாலும் கூட, அதிமுக மட்டும் எதிர்க்காமல் போயிருந்தால் இந்த ஊழல் நடந்தது கூட எவருக்கும் தெரியாமல் போயிருந்திருக்கும். அந்த வகையில், அதிமுகவின் எதிர்ப்பு செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.

இந்த ஊழலை எதிர்த்து நீதி மன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி. எதிர்க்கட்சியான பாஜக செய்ய வேண்டிய வேலையை தனி நபராக ஒரு சுவாமி செய்திருக்கிறார். அவரது கடந்த கால தவறுகளினால் அவர் மீதும் பலருக்கும் இன்று நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் கூட, அவரது போராட்டங்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

எனது நோக்கம் என்ன?

எனது இந்தக் கட்டுரையின் நோக்கமே இந்திய மக்களிடம் ஒரு சிறிய விழிப்புணர்வை ஒரு மிகச் சிறிய அளவில் ஒரு சிலரிடமாவது உருவாக்குவது மட்டுமே.

சங்கை ஊதிக் கொண்டேயிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் இவர்கள் காதும் கேட்காமலா போய் விடும் என்ற ஒரே நம்பிக்கையினால் மட்டுமே கோபிகிருஷ்ணன்களும், பயனீர்களும், தமிழ் ஹிந்துக்களும் இன்றும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

என்ன செய்யப் பட வேண்டும்?

மன்மோகன் சிங்கை பிரதமராகக் கொண்டு சோனியாவால் ஆட்டுவிக்கப் படும் இந்த ஆட்சி இருக்கும் வரை ராஜா தண்டிக்கப் படப் போவதில்லை. அவர் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மீட்கப் படப் போவதும் இல்லை.

ஆனால் என்றாவது ஒரு நாள் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, இந்த தேசத்தின் மீது உண்மையான பற்று கொண்ட ஒரு அரசு வருமானால், இந்த ஊழலுக்கு முதல் காரணமான தரகர் நீரா ராடியா, ஆ.ராஜா, அவர் கொள்ளையடித்து கப்பம் கட்டிய அவரது கட்சித் தலைவர், அவரது துணைவி, மகள், பிற குடும்பத்தினர், ராஜாவுக்கு உதவிய மற்ற தரகர்கள், பத்திரிகையாளர்கள் பரக்காதத், சங்வி, ராஜாவுக்கு உதவிய அரசு அதிகாரிகள், இவர்கள் அனைவரையும் விட இந்த ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருந்த அரசியல்வாதிகள் அனைவரும் விசாரிக்கப் பட்டு அவர்களது உடந்தைகள், ஊழல்கள் இந்த நாட்டு மக்களுக்கு அறிவிக்கப் பட்டு, மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட வேண்டும்.

அமெரிக்கா போன்ற தேசங்களில் இவை போன்ற ஊழல்கள் வெளியில் வந்து விசாரிக்கப் பட்டு குற்றம் நிரூபிக்கப் படும் பொழுது சம்பந்தப் பட்ட குற்றவாளிகளுக்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான கடும் தண்டனை அளிக்கப் படுகிறது. அதே போன்ற தண்டனைகள் இந்தியாவிலும் நடைமுறைக்கு வரவேண்டும். அதற்கான அரசியல் மாற்றத்தை மக்கள் உருவாக்க வேண்டும். இந்தக் குற்றவாளிகளுக்கு மக்களின் சக்தியினால் மட்டுமே தண்டனை அளிக்க முடியும். அதைச் செய்வது மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது.

ஒரு வேளை எதிர்கட்சிகளின், கோர்ட்டின் வற்புறுத்தலுக்கு இணங்கி வேறு வழியின்றி ராஜா பதவியிறங்கினாலோ அல்லது வேறு துறைக்கு மாற்றப் பட்டாலோ கூட அடுத்த ஆட்சி இவரது குற்றத்தை நிரூபித்து இவருக்கும் கூட்டாளிகளுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும். இவர் கொள்ளையடித்த பணத்தை உலகின் எந்த மூலையில் ஒளித்து வைத்திருந்தாலும் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து இந்தியாவின் அடிப்படை வசதிகளை, கல்வியை, கட்டுமானங்களை வலுப்படுத்தப் பயன் படுத்த வேண்டும்.

இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நம் அனைவரிடமும் ஓட்டுரிமை என்னும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம் இருக்கிறது, அதைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளைக்காரர்களைப் பூண்டோடு ஒழிக்க உறுதி பூணுவோம். இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் அதற்கு ஒரு ஊக்கியாக விழிப்பூட்டும் நிகழ்வாக இருக்கட்டும். இந்தக் கெடுதியில் இருந்தும் கூட ஒரு நன்மை மலரட்டும்.

இன்று இந்தியாவுக்கு ஆண்டிமுத்து ராஜா ஏற்படுத்தியுள்ள இழப்பு 1 லட்சம் கோடி ரூபாய்கள். இந்தப் பணம் “நம் ஒவ்வொருவரது உழைப்பின் பயன்” என்பதை அறிவோம். நம் வீட்டுச் சொத்து கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது அவசியம். கொள்ளையர்களை இனம் கண்டு தண்டிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

பாடுபட்டு வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இன்று கொள்ளையர்கள் கைகளில் சிக்கிச் சீரழிகின்றது. நம் தேசத்தின் வளங்கள் அனைத்தும் சூறையாடப் படுகின்றன. இயற்கை வளங்களிலும், பொருளாதாரத்திலும், தார்மீக கோட்பாடுகளிலும், நேர்மை நீதி நியாயங்களிலும், அறவுணர்வுகளிலும் திவாலாகிப் போன ஒரு தேசத்தையா உங்களது குழந்தைகளுக்கு விட்டு விட்டுப் போகப் போகிறீர்கள்?

-விஸ்வாமித்ரா

நன்றி: தமிழ்ஹிந்து.காம்

Tuesday, May 25, 2010

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் கதை - 2

ஸ்பெக்ட்ரம் அலைப்பரவல் சம்பந்தேமேயில்லாமல் பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப் பட்டது என்று ஒரு சில ஊடகங்கள் சொல்வதைப் பார்த்தோம்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் எந்தவொரு பாமரனுக்கும் எழும் சில அடிப்படைக் கேள்விகளையும் அதற்கு ஊடகங்கள் தரும் பதில்களையும் கீழே காணலாம்:

1. ஏன் தொலைத் தொடர்பு சம்பந்தப்பட்ட ஒரு உயர் தொழில்நுட்ப வளமான ஸ்பெக்ட்ரம் அலைப்பரவல் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விற்கப் படாமல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்கப் பட்டன?

நியாயமான கேள்வி. இந்த நிறுவனங்களுக்கும் ஸ்பெக்ட்ரத்திற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. இருந்தாலும் இந்தக் கம்பெனிகளுக்கு அரசாங்கம் தனது அரிய வளம் ஒன்றை தானம் செய்தது போல 2001ல் நிர்ணயிக்கப் பட்ட விலைக்கு விற்றிருக்கிறது.

ஏன்?

ஏனென்றால் இந்த நிறுவனங்கள் எல்லாம் மந்திரி ராஜாவின் மற்றும் அவரது கட்சித் தலைவரின் உறவினர்களின் பினாமி நிறுவனங்கள் என்று சொல்லுகின்றன ஊடகங்கள். இதை பயனீர் பத்திரிக்கையும் (The Pioneer), அதன் பிறகு அரசு உளவு அமைப்பான சிபிஐயும் கண்டு பிடித்திருக்கின்றனர். ஆக ஆதாயம் இல்லாமல் ஆண்டிமுத்து ராஜா இந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்கவில்லை என்கின்றனர் இவர்கள்.

அவர்கள் கூற்றுப்படி, அரசு வளத்தைக் குறைந்த விலைக்கு தனக்கும் தனக்கு வேண்டப் பட்டவர்களுக்கும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். கடைத்தேங்காயை எடுத்துத் தனக்குத் தானே உடைத்துக் கொண்டிருக்கிறார்.

2. அப்படி இவரது பினாமி கம்பெனிகளுக்கு விற்றதால் இவருக்கு என்ன லாபம்?

நல்ல சந்தேகம்.

2001ல் முடிவு செய்யப் பட்ட விலையின் அடிப்படையிலேயேதான் ஸ்பெக்ட்ரம் விற்கப் பட வேண்டும் என்று இவர் பிடிவாதமாக பல எதிர்ப்புக்களையும் மீறி முடிவு செய்யும் பொழுதே மத்திய மந்திரி சபை சுதாரித்துக் கொண்டு இவரைக் கட்டுப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால், லேசான சில எதிர்ப்புக்களுடன் இவர் தொடர்ந்து தன் விற்பனையை மேற்கொள்கிறார்.

அப்படி மேற்கொள்ளும் பொழுது திட்டமிட்டு குறிப்பிட்ட சில கம்பெனிகளுக்கு மட்டுமே இந்த விற்பனையை செய்து முடித்து விடுகிறார். ஏனென்றால் இவர் விற்ற நிறுவனங்களுக்கும் இவருக்கும், இவரது கட்சித் தலைவரின் குடும்பத்தினருக்கும் தொடர்புகள் இருக்கின்றன என்று ஊடகங்கள் சொல்லுகின்றன. அடிப்படையில் இவை யாவுமே இவரது மறைமுகமான நிறுவனங்களே அல்லது இவருக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே என்பதை சிபிஐ இப்பொழுது கண்டு பிடித்திருக்கிறது என்பதையும் இந்த ஊடகங்கள் மறக்காமல் சொல்லுகின்றன.

பண்டோராவின் பெட்டி போல ஆரம்பம் எது, முடிவு எது, குற்றம் செய்தவர்கள் யார் என்பவற்றைத் தெளிவாகச் சொல்ல முடியாதபடி வலைப் பின்னல்களாக மிகக் கச்சிதமாக இந்த ஊழல் நடந்திருக்கிறது.

இவர் உரிமைகளை விற்றதாகச் சொல்லப்படும் சில கம்பெனிகளின் வண்டவாளங்களைப் பார்க்கலாம்.

முதலில் ஸ்வான் என்னும் கம்பெனிக்கு 13 வட்டாரங்களுக்குரிய ஸ்பெக்ட்ரம் பங்குகள் 1537 கோடி ரூபாய்களுக்கு விற்கப் பட்டிருக்கின்றன என்கின்றன தகவல்கள். அந்த ஸ்வான் நிறுவனமோ தன்னை ஒரு கட்டிட நிறுவனமாக பதிவு செய்துள்ளது. ஏற்கனவே அனில் அம்பானி வசம் இருந்த இந்த நிறுவனத்தை இன்னொருவர் மூலமாக வாங்கி, இந்த ஸ்பெக்ட்ரத்தை வெறும் 1537 கோடி ரூபாய்களுக்கு முதலில் அரசிடம் இருந்து இந்தக் கம்பனியார் வாங்குகிறார்கள். வாங்கிய கையோடு எலிஸாட் என்றொரு மத்திய கிழக்கு நிறுவனம் ஒன்றிற்கு 4500 கோடி ரூபாய்க்கு 100% மேல் லாபம் வைத்து விற்கிறார்கள். பின்னர் அந்தக் கம்பெனியோ வேறு ஒரு நிறுவனத்திற்கு இன்னும் அதிக விலைக்கு வாங்கிய பங்குகளை விற்கிறது!

இதைப் போலவே இன்னும் சில வட்டாரங்களுக்கான உரிமை யுனிடெக் என்றொரு மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்கப் பட்டிருக்கிறது. அந்த நிறுவனமோ அரசிடம் இருந்து 22 வட்டாரங்களுக்கு 1651 கோடி ரூபாய்களுக்கு வாங்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமையை டெல்நார் எனப்படும் நார்வே கம்பெனி ஒன்றிற்கு 6120 கோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கிறது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன.

இந்த பரிவர்த்தனையில் கிடைத்த கொள்ளை லாபம் பல்வேறு இடைத்தரகு கம்பெனிகள் மூலமாக கடத்தப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுக்கு மாற்றப் பட்டிருக்கின்றது.

அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன.

இந்தத் தகவல்களின் சாரம் என்ன ?

நீங்கள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறீர்கள். அதற்கு மத்திய அரசு உடந்தையாகவோ அல்லது மறைமுக கூட்டாளியாகவோ இருந்திருக்கிறது.

நம் சொந்தப் பணம் நூறு ரூபாய்கள் பிக்பாக்கெட் அடிக்கப் பட்டால் கூட கிடந்து பதறும் பொதுஜனம், திருடியவனைப் பிடிக்கத் துடிக்கும் பொது மக்கள், தங்கள் பொதுப்பணம் 1 லட்சம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப் பட்டிருந்தும் கொஞ்சம் கூட சுய பிரக்ஞை இன்றி , சுய உணர்வு இன்றி, கவலை இன்றி, விழிப்புணர்வு இன்றி கொள்ளையடிக்கும் அதே அரசியல்வாதிகளைத் துதி பாடி, புகழ்ந்து, பாராட்டித் திரிகிறார்கள்.

இப்படி ஒரு நாட்டின் மக்கள் இருந்தால் அந்த நாடு எங்கனம் உருப்படும்?

3. 2ஜி குறைந்த விலைக்கு விற்கப் பட்டிருக்கிறது என்பது எப்படி உறுதியாகத் தெரியும்?

இப்பொழுது 3ஜி ஸ்பெக்ட்ரத்திற்காக முறையான ஏலம் நடந்து வருகிறது. கோர்ட், மற்றும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பினால் ராஜாவின் விருப்பத்தை மீறி இந்த 3ஜி ஏலம் வேறு ஒரு மந்திரி குழுவின் தலைமையில் நடந்து வருகிறது. அதன் விற்பனை நிலவரத்தின் படி 2 ஜி விற்பனை அடிமாட்டு விலைக்கு விற்கப் பட்டிருப்பது உறுதிப் பட்டு விட்டது.

சந்தை நிலவரப்படி அரசாங்கமே நேரடியாக உண்மையான தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலம் விட்டால், 1000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட 2ஜி அலைவரிசைக்கு ஈடான 3ஜி அலைவரிசையை கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கலாம் என்பதைத்தான் தற்பொழுது நடை பெறும் 3 ஜி ஏலம் உறுதிப் படுத்துகிறது.

அதன் மூலம் அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

2ஜி மோசடி விற்பனைக்கும் 3 ஜி ஏல விற்பனைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும்.

ஆக நியாயமான முறையில் பல்வேறு வட்டாரங்களுக்கான 2ஜி ஸ்ப்கெட்ரம் உரிமை ஏலத்தில் விடப் பட்டு விற்கப் பட்டிருக்குமேயானால் 3ஜி ஸ்பெக்ட்ரத்திற்கு கிடைத்த அதே அமோக விலை கிட்டியிருக்கும் என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் இப்பொழுது உறுதியாகியிருக்கிறது என்கின்றன இந்த ஊடகங்கள்.

இப்பொழுது மீண்டும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப் பட்ட நிறுவனங்களின் ஜாதகங்களை நாம் அலசலாம்.

ஸ்பான் நிறுவனத்தின் பின்னணி என்ன? அது எப்படி தனக்குக் கிடைத்த லாபத்தை யார் கண்களிலும் படாமல் ஒளித்து வைக்கிறது?

முதலில் ஸ்பான் எனப்படும் நிறுவனம். இந்த நிறுவனத்தை யார் துவக்கியது? பின்னால் யார் வாங்கினார்கள் ? இதன் முதல் கட்ட முதலீடு என்ன? இவர்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்குவதற்குத் தேவையான பணம் எங்கிருந்து வந்தது? அதற்கு முறையான கணக்குக் காட்டப் பட்டுள்ளதா? வரி கட்டப் பட்டுள்ளதா? எவ்வளவு நாட்கள் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள்? இவர்கள் பின்ணணி என்ன? ஸ்பெக்ட்ரத்தை வாங்கியவுடன் அந்த உரிமையை யாருக்கு விற்றார்கள்? அந்த விற்பனையின் லாபத்திற்கு வரி கட்டப் பட்டதா அந்த லாபப் பணம் எங்கு சென்றது? யாருக்குப் போனது ? எந்தக் கணக்கிற்கு சென்றது?

இந்தக் கேள்விகளையெல்லாம் ஆராயும் பொழுது இந்த மொத்த விற்பனையினால் ஏற்பட்ட லாபப் பணம் அனைத்துமே கனிமொழி, ராஜா, கருணாநிதியின் துணைவியான ராஜாத்தி அம்மாள் ஆகியோர்களுக்குச் சென்றிருப்பதாக சி பி ஐ கண்டுபிடித்துள்ளதாக சிபிஐ வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆவணங்களை மேராமன் என்ற பதிவில் நீங்கள் நேரடியாகப் படிக்கலாம். தளம் இங்கே.

இதை எப்படி நிகழ்த்தினார்கள் என்பதைச் சொல்லும் இந்தத் தகவல்களைப் படிக்கும் பொழுது நமக்குத் தலை சுற்றுகிறது. ஒரு சின்ன வட்டத்தை மட்டும் இங்கு கவனிக்கலாம்.

ஸ்வான் என்ற நிறுவனத்தை முதலில் யார் என்றே தெரியாது என்று ராஜா மறுத்திருக்கிறார். அவர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள். எனக்குத் தெரியவே தெரியாத நிறுவனங்கள். அவர்கள் முதலில் வந்தார்கள், ஆதலால் நான் முதலில் கொடுத்து விட்டேன் என்று ஒன்றுமே தெரியாத அப்பாவி போல, வாயில் விரலைக் கொடுத்தால் கடிக்கக் கூடத் தெரியாத அப்பாவிச் சிறு குழந்தை போல ராஜா பேசியிருக்கிறார். ஆனால் ஸ்வான் நிறுவனத்தின் பங்குதாரர்களைத் தேடினால் அது சுற்றிச் சுற்றி ராஜாவுக்கு நெருங்கியவர்களிடம் வந்து முடிகிறது என்கின்றன இந்தத் தகவல்கள்.

அந்த ஊடகத் தகவல்களின் கூற்றுப் படி, ஸ்வான் நிறுவனத்தை 2006லேயே ஷாகித் பால்வா என்பவர் ராஜாவின் கட்டளையின் பெயரில் வாங்கியிருக்கிறார். அதன் உரிமையாளர்களாக மொரீஷியஷில் உள்ள பாரட் இன்வெஸ்ட்மெண்ட்ஸின் உரிமையாளர்களான டைகர் டிரஸ்டீஸ். அதன் உரிமையாளர்கள் இந்தியப் பெருங்கடல் தீவு ஒன்றில் உள்ள ஸீப்ரா இன்வெஸ்ட்மெண்ட்ஸ். இப்படி வனவிலங்குகளின் பெயர்களில் போலியாக வெளிநாடுகளில் பதிவு செய்யப் பட்ட ஃபோர்ஜரி நிறுவனங்களின் பெயர்களில் இந்த ஸ்வான் நிறுவனத்தின் உரிமை போய்க் கொண்டேயிருக்கிறது.

நம் தொன்மக் கதைகளில் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி உள்ள ஒரு குகையில் உள்ள கிளியிடம் ராட்சதனின் உயிர் இருப்பது போலவே ராஜா விற்பனை செய்த இந்த போலிக் கம்பெனிகளின் உண்மையான உரிமையாளர்கள் கண்டு பிடிக்கவே முடியாத பல்வேறு அடையாளங்களில் மர்மமான பெயர்களில், தூர தேசங்களில் உள்ள தீவுகளில் ஒளிந்திருக்கிறார்கள். அவர்களின் கணக்கு யாவுமே இறுதியில் ராஜாவின் அல்லது அவரது எஜமானர்களின் கணக்காக இருக்கவே செய்யும் என்பதை யாரும் எளிதில் கண்டு பிடித்து விட முடியாது.

ஒரு நேர்மையான அரசாங்கம் முறையாக விசாரிக்குமானால் இந்த வெளிநாட்டுக் கணக்குகளில் கடத்திச் செல்லப் பட்டுப் பதுக்கி வைக்கப் பட்டுள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் வெளிவரும். அதன் உண்மையான உரிமையாளர்களின் பெயரும் வெளி வரும். அது வரை இவர்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது.

ஸ்வான் கம்பெனியை சையத் ஜலாலுதீன், முகமது காதீர் என்ற இரு கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ‘ஜென் எக்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரால் வாங்குகிறார்கள். அந்த நிறுவனத்திற்கும் துபாயைச் சேர்ந்த இடிஏ என்ற நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளது. (இடிஏ நிறுவனத்திலும் கீழக்கரைக் காரர்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.)

அந்த நிறுவனத்திற்கு தமிழ் நாட்டின் புதிய சட்டசபை, மேம்பாலங்கள் போன்ற எண்ணற்ற கட்டுமான காண்டிராக்டுகள் வழங்கப் பட்டுள்ளன என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக ஸ்வான் நிறுவனம் தான் விற்ற லாபத்தை தனது எண்ணற்ற துணை நிறுவனங்கள் மூலமாகக் கடத்திக் கடத்தி இறுதியில் யாருமே கண்டுபிடித்து விட முடியாத வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்து விடுகிறது. வெட்ட வெட்ட முளைக்கும் மயில் ராவணன் கதை போலத் தோண்டத் தோண்ட ஒரு கம்பெனியின் பின் இன்னொரு கம்பெனியாக முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. திட்டமிட்டு மிகத் திறமையாக இந்த ஊழலைச் செய்திருக்கிறார்கள். இதற்கு உடைந்தையாக பல்வேறு இடைத்தரகர்களும் செயல் பட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது. இந்திய அரசின் பட்ஜெட்டையே தொடும் அளவுக்குப் பணம் கையாடல் செய்யப் பட்டிருக்கிறது. இதை ஒருவர் கூடவா கண்டு பிடிக்கவில்லை? எதிர்க்கவில்லை? ஒரு அரசு ஏஜென்சி கூடவா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை? நடவடிக்கை எடுக்கவில்லை?

நியாயமான கேள்விகள்தான்.

2008ல் இந்த பரிவர்த்தனை நடந்தது. நடப்பதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகளும், பயனீர் போன்ற பொறுப்பான பத்திரிகைகளும், சுப்ரமணியன் சுவாமி போன்ற சிலரும், இந்த ஊழலின் ஆரம்ப கட்ட நிலையிலேயே அரசாங்கத்திற்குத் தங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

ஆனால் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு இவர்களின் எதிர்ப்புக்களை சட்டையே செய்யவில்லை. சும்மா, மேம்போக்காக எல்லாம் முறையாக வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதோடு சரி.

அரசிடம் முறையிட்டால் நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த எதிர்கட்சிகள் இந்தியாவின் பல்வேறு அமைப்புகளிடம் முறையிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக டெல்லி ஹைக்கோர்ட் இந்த ஊழலை விசாரித்து சினிமாக் கொட்டகைகளில் டிக்கெட் விற்பது போல 2ஜி ஸ்பெக்ட்ரத்தை விற்றிருக்கிறார்கள் என்று கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் காம்ப்ட்ரோலர் ஜெனரல் அமைப்பு ஸ்பெக்ட்ரம் விற்பனையை விசாரித்து அரசுக்கு 25000 கோடி வரையிலான பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தன் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. ஏன் காங்கிரஸ் எம் பிக்கள் கூட இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி சகல தரப்புகளிலும் வந்த அனைத்துக் கண்டனங்களும் கூட, இந்த ஊழலின் மையப் புள்ளியான ராஜாவை அசைக்கவே முடியவில்லை. ஏனென்றால் ராஜாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிபூரண ஆசிகளும் பாதுகாப்பும் இருக்கின்றன என்று மறைமுகமாகக் குற்றம் சாட்டுகின்றன ஊடகங்கள்.

பல முறை ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் மன்மோகன் சிங் மொளனம் சாதித்து வருகிறார்.

இந்தியாவின் தலைமை கண்காணிப்பு அலுவலரான (சீஃப் விஜிலென்ஸ் ஆபீசர்) பிரத்யுஷ் சின்ஹா, 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் மாபெரும் முறைகேடும் ஊழலும் அரசுக்கு பெரும் பொருள் இழப்பும் லஞ்ச லாவண்யங்களும் நடந்திருப்பதாக பல முறை சொல்லியிருக்கிறார்.

ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி என்னென்ன குற்றங்கள் நடந்திருக்கின்றன ?

ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அடிப்படை விலையை சந்தை நிலவரத்திற்கு மாறாக மிகக் குறைவாக 2001ல் இருந்த விலை நிலவரத்தில் நிர்ணயம் செய்தது முதல் குற்றம்.

அப்படி குறைந்த விலைக்கு விலை வைத்து அவற்றை தனக்கு வேண்டிய போலிக் கம்பெனிகளுக்கு விற்றது இரண்டாவது குற்றம்.

அப்படி ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமையை வாங்கிய டுபாக்கூர் கம்பெனிகள் வாங்கிய உடனேயே பத்து மடங்கு கூடுதல் விலை வைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றது மூன்றாவது குற்றம்.

அப்படி நடந்த பரிவர்த்தனைகளை எல்லாம் கண்டு கொள்ளாமலும், மறைத்தும், அவர்களுக்குச் சாதகமாகச் செயல் பட்டதும் நான்காவது குற்றம்.

இந்த குற்றங்கள் மூலமாக நாட்டுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது ஐந்தாவது குற்றம்.

என்று குற்றசாட்டுக்களை அடுக்கடுக்கடுக்காக அடுக்குகிறார் இந்தியாவின் தலைமை விஜிலென்ஸ் ஆஃபீசர் சின்ஹா. இந்தக் குற்றங்களுக்கு எல்லாம் பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணியில் சிவிசி ஈடுபட்டுள்ளது என்கிறார் சின்ஹா.

இப்படி ஒரு மாபெரும் ஊழல் தங்கள் கண்முன்னே நடப்பது பொறுக்காத தலைமைக் கண்காணிப்பாளர் இந்த சந்தேகத்துக்கிடமான மறைமுகமாக நடந்த பரிவர்த்தனையை சிபிஐ விசாரித்து இதில் யார் யார் எல்லாம் சம்பந்தப் படுத்தப் பட்டனர், யார் யார் எல்லாம் பயன் பெற்றார்கள் என்று கண்டுபிடிக்குமாறு உத்தரவு தெரிவித்திருக்கிறார். அந்தக் கட்டளையை ஏற்று சிபிஐ தனது விசாரணையைத் துவங்கி தன் கண்டுபிடிப்புகளை அளிக்கும் நேரத்தில், தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்காமல் இருக்குமாறு பிரதம மந்திரியாலேயே சிபிஐ தடுக்கப் பட்டிருக்கிறது என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆக இந்தியாவின் நீதிமன்றம், தலைமைக் கணக்காயர், ஊழல்களைக் கண்காணிக்கும் தலைமைக் கண்காணிப்பாளர், எதிர்க்கட்சிகள், பொறுப்பான சில பத்திரிகைகள் இவை அனைத்தும் தங்கள் சந்தேகங்களையும், கண்டனங்களையும், விசாரணை முடிவுகளையும் வெளியிட்டுள்ளன. இதில் நிச்சயமாக மாபெரும் ஊழல் நடந்திருக்கிறது என்பதை நிரூபித்து ஊழலுக்குக் காரணமான மந்திரி ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும், மீண்டும் பாராளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும், நீதிமன்றத்திலும், அரசாங்க உத்தரவுகளிலும், சிபிஐ விசாரணைகளிலும் வேண்டுகோள்கள் வெளியிட்டுக் கொண்டேயிருந்த போதிலும் எருமை மாட்டின் மீது பெய்த மழை போல இவை அனைத்தையும் கண்டு கொள்ளாமல் பிடிவாதமாக மத்திய அரசு அசாதாரணமான ஒரு மொளனத்தைச் சாதித்து வருகின்றது.

இது ஏன் இப்படி என்பதை நாம் பிறகு பார்க்கலாம்.

சி.பி.ஐ விசாரணைகள், கண்டுபிடிப்புகள்:
இந்தியாவின் தலைமைக் கண்காளிப்பாளரின் உத்தரவின் பேரில் சி பி ஐ இந்த வழக்கை எடுத்துக் கொண்டு தனது விசாரணையைத் துவக்கியிருக்கிறது. 2008க்குப் பிறகு தொடர்ந்து இந்த ஊழலில் சந்தேகப் படுபவர்களையெல்லாம் சி பி ஐ ரகசியமாக உளவு பார்த்திருக்கிறது, அவர்களின் தொலைபேசிகளையெல்லாம் ஒட்டுக் கேட்டிருக்கிறது. இதற்கான உள்துறையின் உத்தரவையும் சட்டபூர்வமாகப் பெற்றே செயல் பட்டிருக்கிறது.

சிபிஐ, இந்திய வருமான வரித்துறையின் விசாரணைப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் மற்றும் மத்திய அரசின் நேரடி வரி ஆணையம் (செண்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்ஸஸ்) ஆகியோருக்கு இடையே நடந்த மிக ரகசியமான கடிதப் போக்கு வரத்துக்களும், ஆதாரங்களும் கொண்ட ஆவணங்கள் இப்பொழுது கசிந்து இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. அந்த ஆவணங்களில் இந்தியாவின் அனைத்துத் தலைமை புலனாய்வு நிறுவனங்களும் சேர்ந்து நடத்திய ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளும் பல அதிர்ச்சி தரும் உண்மைகளும் காணக் கிடைக்கின்றன. அவை மத்திய மந்திரி ராஜா மற்றும் இந்த ஊழலில் பயனடைந்த அனைத்து பயனர்களையும் இனம் கண்டு குற்றவாளிகளாக அடையாளம் காண்கின்றன. அந்த ஆவணங்கள் இங்கே.

அந்த ஆவணங்களில் காணப்படும் முக்கியமான கண்டுபிடிப்புக்களை இங்கு முதலில் சுருக்கமாகப் பட்டியலிட்டுக் கொள்ளலாம்:

1. இந்த கிரிமினல் குற்றங்களில் முக்கிய நபராக நீரா ராடியா எனப்படும் சக்தி வாய்ந்த இடைத்தரகர் அடையாளம் காணப் படுகிறார். நீரா ராடியா நோயிஸிஸ் கன்சல்ட்டசன்சி, வைஷ்ணவி கன்சல்ட்டன்ஸி என்ற பெயர்களில் பல்வேறு பொதுத் தொடர்பு நிறுவனங்களை நடத்தி வருபவர். இந்த நிறுவனங்கள் அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே இடைத்தரகர்களாகச் செயல் பட்டு தங்கள் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு தேவைப் படும் சலுகைகளை அரசாங்கத்திடம் இருந்து பெற்று தருகின்றன. அதற்காக பெரும் தொகைகளை தங்கள் வாடிக்கையாளர்களிடம் பெற்று அரசு அதிகாரிகள் மந்திரிகளுக்கு லஞ்சமாக அளிக்கும் பணியைச் செய்து வருபவை.

2. இடைத்தரகர் நீரா ராடியா மந்திரி ராஜாவுக்கு நெருக்கமாகச் செயல் பட்டிருக்கிறார். ராஜாவை இந்தத் துறைக்கு மந்திரியாக தேர்வு செய்ய பிரதமரை வற்புறுத்தி ராஜாவுக்குத் தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தந்ததில் இருந்தே நீரா ராடியாவின் சேவைகள் துவங்குகின்றன. ராஜாவின் ஃபோன்களை ஒட்டுக் கேட்டதன் மூலமாக இது போன்ற அவரது பல்வேறு பங்களிப்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

3. ராஜாவின் நெருக்கமான நண்பராக இருந்த இந்த பெண்மணி ராஜாவுக்கு அந்தத் துறையையே பெற்றுத் தரும் அளவுக்குச் செல்வாக்கு உடையவராக இருக்கிறார். தனக்கு வேண்டிய ஊழல் ராஜாவை அந்தத் துறையின் மந்திரியாக நியமித்த பின், அதே ராஜா மூலமாக ஸ்பெக்ட்ரம் 2ஜி விற்பனையிலும் தலையிட்டு தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கும் ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமையினை அடிமாட்டு விலைக்குப் பெற்றுத் தருவதில் உதவியிருக்கிறார்.

4. ராஜாவுக்கும் ராடியாவுக்கும் நடந்த உரையாடல்களை ஒட்டுக் கேட்டதன் மூலமாக ராஜாவுக்கும், ராடியாவுக்கும் ஸ்பெக்ட்ரம் 2ஜி விற்பனையினால் பயனடைந்த ஸ்வான் என்ற கம்பெனியில் தொடர்புகள் இருப்பதும் அந்த கம்பெனியில் பங்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளன.

5. தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறைக்கு மந்திரியாக வர விடக் கூடாது என்று டாடா நிறுவனத்தின் சேர்மன் ரத்தன் டாடா ராடியாவிடம் கேட்டுக் கொண்டதும் பதிவாகியுள்ளது. மாறனை வரவிடாமல் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார் டாட்டா.

ஆக யார் மந்திரியாக வர வேண்டும் அல்லது வரக் கூடாது என்பதைத் தீர்மானம் செய்யும் முக்கியமான முடிவெடுக்கும் சக்தியாக ராடியா விளங்கியிருக்கிறார் என்பது இந்த சம்பாஷணையை ஒட்டுக் கேட்டதன் மூலம் தெரிய வருகிறது என்கின்றன இந்த ஆவணங்கள்.

6. இந்த ஆவணங்கள் தரும் அடுத்த அதிர்ச்சி எதிர்பாராதது. தயாநிதி மாறனை டெலிகாம் துறை மந்திரியாக்காமல் விலக்கி வைத்தால் அதற்கு கைமாறாக கருணாநிதியின் துணைவியான ராஜாத்தி அம்மாளுக்கு டாட்டா நிறுவனம் ஒரு மாபெரும் கட்டிடத்தைச் சென்னையின் மத்தியில் கட்டித் தர வாக்குறுதி அளிக்கிறது. இந்தப் பேரத்தை ராடியா ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினம் என்பவர் மூலமாக நடத்தியுள்ளார். அதாவது பிரதமர் முடிவெடுக்க்க் கூடிய ஒரு விஷயத்தை யாரோ ஒரு இடைத்தரகர் தீர்மானித்து அதற்காக கமிஷனையும் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. இந்த விஷயம் இப்பொழுது அப்பட்டமாக அரசாங்கத் துறையின் கண்டுபிடிப்பு மூலமாகவே வெளிக் கொணரப் பட்டிருக்கிறது.

7. திமுக வில் யார் யாருக்கு எந்தெந்த மந்திரிப் பதவி பெற வேண்டும் எந்தெந்தத் துறை பெற வேண்டும் என்பதை திமுகவில் ராஜாவின் சார்பாக நீரா ராடியாவும், கனிமொழியின் சார்பாக நீரா ராடியாவும், பத்திரிகையாளர் வீர் சங்வியும், தொலைக்காட்சி பிரபலமான (என்.டி.டி.வி) பர்க்கா தத்தும் இடைத்தரகர்களாகச் செயல் பட்டு அந்தந்த துறைகளைப் பெற்றுத் தந்துள்ளார்கள் என்கின்றன இந்தத் தகவல்கள்.

பிரதமர் தனது மேலான நிர்வாகத் திறன், திறமைகளை அடையாளும் காணும் திறன் கொண்டு மத்திய மந்திரிகள் அனைவரையுமே தேர்ந்தெடுக்கிறார் என்று அப்பாவித்தனமாக பொதுமக்களாகிய நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஒரு வேளை சோனியா சொல்படி முடிவு எடுப்பார் என்றும் நினைத்தோம். ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது சில ப்ரோக்கர்கள் சொல்படியும் முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன என்பது. எவ்வளவு கேவலமான ஒரு விஷயம் இது?

8. ராஜாவுக்கும், கனிமொழிக்கும், ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினத்திற்கும் மிக நெருக்கமானவராக இருந்து வந்திருக்கிறார் நீரா ராடியா என்கின்றன இந்த ஆவணங்கள்.

9. இந்த ஊழலில் ராஜாவின் நம்பிக்கைக்குரிய ஆட்களாக பத்திரிகையாளர் வீர் சங்வி, அருண் தாஸ் மற்றும் சுனில் அரோரா என்னும் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரியும் செயல் பட்டிருக்கிறார்கள்.

10. ராஜாவுக்கு மந்திரி பதவி பெற்றுத் தந்ததுடன் நில்லாமல் ஸ்பெக்ட்ரம் ஊழலை நடத்தியதிலும் இந்த ப்ரோக்கர் ராடியா முக்கிய பங்காற்றியிருக்கிறார். யுனிடெக் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் 2ஜி விற்றதிலும் பின்னர் ஸ்வான் நிறுவனத்தில் பங்குதாராராக இருந்ததிலும் இரு நிறுவனங்களுக்கும் கிட்டிய பணத்தை வெளிநாட்டு அக்கவுண்டுகளுக்கு திறமையாக மாற்றுவதிலும் இந்த நீரா ராடியா முக்கியமான பங்காற்றியிருப்பதில் இருந்து ராஜாவுடன் ஒரு கூட்டளியாகவே இந்த நீரா ராடியா செயல் பட்டிருப்பது தெளிவாகியிருக்கிறது என்கின்றன ஊடகங்கள்.

11. டாட்டா கம்பனி, யுனிடெக் நிறுவனத்திற்கு 250 கோடி ரூபாய்களை நீரா ராடியா மூலமாக வழங்கியுள்ளது என்பதும் இந்தத் தகவல்களின் மூலம் தெரிய வருகிறது.

12. ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழலைத் தவிர இன்னும் பல்வேறு பெரும் ஊழல்களிலும் பணப் பரிவர்த்தனைகளிலும் உலகளாவிய மோசடி வர்த்தகங்களிலும் தனக்கு காங்கிரஸ் அரசில் இருக்கும் செல்வாக்கைக் கொண்டு நீரா ராடியா நிகழ்த்தியிருப்பதாக சிபிஐ மற்றும் வருமான வரித்துறைகளின் புலனாய்வு ஆவணங்கள் பட்டியலிட்டிருக்கின்றன. அதற்காக நீரா ராடியாவை 300 நாட்கள் தொடர்ந்து கண்காணித்தும் அவரது ஃபோன்களை ஒட்டுக் கேட்டும் இந்த குற்றங்களையெல்லாம் கண்டுபிடித்துள்ளனர்.

ஆக ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றம் ஏதோ பொழுது போகாத பத்திரிகைகளோ, எதிர்கட்சிகளோ வீணாக ஆதாரம் இல்லாமல் சுமத்திய குற்றங்கள் அல்ல என்பது உறுதியாகிறது. இந்த ஊழலும், கிரிமினல் குற்றங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட நம்பிக்கைக்குரிய ஆதாரபூர்வமான இடங்களில் இருந்து, அரசுப் புலனாய்வு நிறுவனங்கள் மூலமாகவே உறுதி செய்யப் பட்டுள்ளன.

நமக்கு வரும் கேள்வி இவ்வளவு தெரிந்தும் ஏன் மத்திய அரசும், பிரதமரும் ஊமையாக இருக்கிறார்கள் என்பது தான்.

கிராமங்களில் “யோக்கியன் வருகிறான் எதற்கும் சொம்பை எடுத்து உள்ளே வை” என்றொரு பழமொழி உண்டு. இவனோ வீட்டில் இருக்கும் சொம்பைக் கூடத் திருடிக் கொண்டு போய் விடும் அயோக்யன். இவன் வரும் பொழுது நம் சொம்பைக் கூடப் பத்திரப் படுத்திக் கொள்வது அவசியம் என்று அர்த்தம். ஆனால், ஊரில் எல்லோரும் இவனைத்தான் பெரும் யோக்யன் என்று சொல்கிறார்கள். இவன் தான் ஊரிலேயே யோக்யன் என்றால் ஊரில் இருக்கும் மிச்ச பேர்கள் இவனை விட அயோக்யர்கள் என்றுதானே அர்த்தம்.

ஒரு ஊருக்குப் போய் இந்த ஊரிலேயே யோக்யன், நல்ல மனிதன் யார் என்று கேட்டார்களாம், அதற்கு ஒருவர் சொன்னாராம், அந்தக் குடிசை வீட்டின் கூரையில் உட்கார்ந்து கொண்டு வீட்டிற்கே கொள்ளி வைக்கிறானே தீயை வைக்கிறானே அவன் தான் இந்த ஊரிலேயே பெரிய யோக்யன், நல்ல மனிதன் என்று சொன்னாராம்.

அப்படியானால் அவனை விட அந்த ஊரில் உள்ள ஆட்கள் எல்லாம் இன்னும் மோசமான அயோக்யர்கள் என்று அர்த்தம். ஊடகங்கள் தரும் தகவல்கள், மற்றும் சிபிஐ வெளியிட்டதாகச் சொல்லப்படும் ஆவணங்களைப் படித்தவர்களுக்கு பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை உத்தமர், அப்பழுக்கற்றவர், எளியவர், கறை படியாதவர் என்று யாராவது சொன்னால் இந்த இரு கதைகளும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.

இந்தத் தகவல்களின்படி இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் செய்த தவறுகள் என்ன? குற்றங்கள் யாவை?

1. முதலில் தனது மந்திரி சபையில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை பிரதமர் மட்டுமே முடிவு செய்ய முடியும், செய்ய வேண்டும். ஆனால் மன்மோகனைப் போன்ற பலவீனமான ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தியின் கட்டளைகளுக்கு அடி பணிந்தே ஆகவேண்டுமே அன்றி தன்னிச்சையாக தனது அமைச்சரவையைத் தேர்ந்தெடுத்து விட முடியாது, அதற்கான ஆதரவும் அவருக்குக் கிடையாது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

கிடைக்கும் தகவல்களின்படி பார்த்தால் ஒருவிதத்தில் பிரதமர் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் நடை பெறுவதற்கு மறைமுகமான ஒரு வினையூக்கியாக இருந்திருக்கிறாரோ என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது. முதலில் கட்சித் தலைவரான சோனியா சொல்படி தன் மந்திரி சபையைத் தேர்ந்தெடுப்பதே தவறு என்னும் பொழுது, யாரோ ஒரு ப்ரோக்கரான நீரா ராடியாவின் உத்தரவுப் படி யாருக்கு எந்தத் துறையை வழங்க முடிவு செய்திருக்கிறார் என்பதே மிகவும் அதிர்ச்சி தரும் தகவல்.

பிரதமரான தனது அடிப்படை உரிமையைக் கூட காற்றில் பறக்க விட்டது திரு மன்மோகன் சிங் அவர்களது முதல் குற்றம். இந்த முதல் குற்றமே இந்தியாவை உண்மையில் ஆள்வது யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

2. சரி. கூட்டணி அரசியலில் ஏராளமான அழுத்தங்கள் உண்டு என்று ஒப்புக் கொள்வோம். அப்படி ஒரு அழுத்தத்திற்குப் பணிந்து ஒரு ஊழல் அரசியல்வாதியைத் தன் மந்திரி சபையின் ஒரு முக்கியத் துறையின் மந்திரியாகத் தேர்ந்தெடுத்து விட்டாலும் கூட அந்த மந்திரியின் செயல்பாடுகளையும், மோசடிகளையும் கண்டு கொள்ளாமல் இருந்ததும், கோர்ட்டும், பாராளுமன்றமும், தலைமைக் கணக்காளரும், தலைமை விஜிலென்ஸ் கமிஷணரும், பத்திரிகைகளும், நேர்மையான மூத்த அரசியல்வாதிகளும் மீண்டும் மீண்டும் மீண்டும் ராஜாவைக் குறித்து புகார் செய்த பொழுதெல்லாம் அவர்கள் புகார்களையெல்லாம் புறம் தள்ளியது இரண்டாவது பெரிய குற்றம்.

3. அப்படியே கூட்டணி அரசியலின் அழுத்தங்களினால் ஆ.ராஜாவின் ஊழல்களைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சில விஷயங்கள் மத்திய அரசே ராஜாவின் ஊழல்களுக்குத் துணை போனதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள். இது மூன்றாவது முக்கியக் குற்றம்.

ராஜாவின் செயல்பாடுகள் மத்திய அரசின் முழு ஆதரவும் இல்லாமல் நடந்தேயிருக்காது என்பது இப்பொழுது சி பி ஐ இன் விசாரணையைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. கசியும் தகவல்களின்படி, சீஃப் விஜிலென்ஸ் கமிஷனரின் உத்தரவுப் படி சிபிஐ யின் டிஐஜி ஆன வினித் அகர்வால் என்பவர் நேர்மையாகச் செயல் பட்டு, சந்தேகத்துக்கு இடமான குற்றவாளிகளின் டெலிஃபோன்களை ஒட்டுக் கேட்டு உளவு பார்த்து, ராஜாவையும் ராடியாவையும் கனிமொழியையும் இந்தக் ஊழலின் முக்கிய குற்றவாளிகள் என்பதை கண்டு பிடிக்கிறார்.

தனது ஊழல்களை ஒரு நேர்மையான அதிகாரி கண்டுபிடித்து விட்டார் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் ராஜாவும் அவரது கட்சித் தலைவரும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்கின்றனர். சிபிஐ அதிகாரிகளின் கட்டுப்பாடு நேரடியாக பிரதமரின் கீழ் வருகிறது. குறுகிய காலகட்டத்தில் உடனடியாக அந்த சிபிஐ அதிகாரி மஹராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றல் செய்யப் படுகிறார்!

இதுதான் ஊடகங்கள் முன்வைக்கும் திரைக்கதை.

இதை விட ஒரு குற்றவாளி தப்ப வேறு எப்படி உதவ முடியும்? ஆக குற்றவாளியை விசாரித்த அதிகாரியைத் தன் கடமையைச் செய்ய விடாமல் தடுப்பதும் ஒருவகையில் குற்றத்துக்குத் துணை போன குற்றம் தானே? திருடன் திருடினால் குற்றம்; அவனைப் பிடிக்க வரும் காவல்துறையினரை தடுத்தால், அப்படித் தடுப்பவரும் குற்றவாளி தானே? இப்படிப் பட்ட ஒருவரையா இந்திய மக்கள் இன்னமும் தூய்மையானவர் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்?

மேலும் ஒவ்வொரு முறை ராஜாவின் கூட்டாளிகளும் ப்ரோக்கர்களும் கைது செய்யப் படும் பொழுதும் விசாரிக்கப் படும் பொழுதும் மத்திய அரசு தலையிட்டு அவர்களை விடுவிக்கச் சொல்லி சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் குறுக்கிட்டிருக்கிறது என்கின்றன ஊடகங்கள்.

உதாரணமாக வேறொரு சம்பவத்தையும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் தபால் துறை அதிகாரியான போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பாலி என்பவர் தபால்துறை இடத்தில் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு கட்டிடம் கட்ட அனுமதி தந்த ஊழலில், அப்படி அனுமதி அளித்தற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகளினால் கைது செய்யப் பட்டார். லஞ்சம் கொடுக்க வந்தவர் மந்திரி ராஜாவின் ஏஜெண்ட் என்பதும் ராஜாவின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகளை அந்த அருண் டால்மியா கையாளுகிறார் என்ற விபரமும் சிபிஐ வசம் கிட்டியுள்ளன. மந்திரி ராஜாவின் உதவியாளரான சந்தோலியா என்பவர் தான் அந்த இரண்டு கோடி ரூபாய் லஞ்சப் பணத்தை மந்திரியின் சார்பாகக் கொடுத்து அனுப்பியவர் என்ற விபரமும் சிபிஐக்குக் கிட்டியது.

இந்த அருண் டால்மியா தன்னுடன் எப்பொழுதுமே சில அழகிகளை வைத்திருப்பவர். அந்த அழகிகளைக் கூட்டிக் கொண்டு மந்திரி ராஜாவை பல முறை சந்தித்திருக்கிறார் என்ற உண்மையும், அந்த ப்ரோக்கர் டால்மியாவின் சிபாரிசின் படி ஒரு சீனக் கம்பெனி தயாரித்த டெலிகாம் உபகரணங்களை வாங்குவதற்கு மந்திரி உத்தரவு இட்டிருக்கிறார் என்ற உண்மையையும் சிபிஐ ஆட்கள் விசாரித்து அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்றன செய்திகள்.

சீனாவில் செய்யப் பட்ட டெலிகாம் நிறுவனத்தின் பொருட்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விளைவிக்கலாம் என்ற நிலையில், இந்தியாவை உளவு பார்க்க அந்தக் கருவிகள் உபயோகிக்கப் படலாம் என்ற எச்சரிக்கை இருக்கும் பொழுதே சீன கம்பெனியின் ஏஜெண்டான அழகிகளுடன் அலையும் அருண் டால்மியாவால் ராஜாவை சீனக் கருவிகளை வாங்கும் ஆர்டரைப் பிறப்பிக்க முடிந்திருக்கிறது.

அருண் டால்மியா வீட்டை சோதனையிடுகையில் அவருக்கும் ராஜாவுக்கும் இருந்த “நெருக்கம்” ஃபோட்டோ ஆதரங்களாக சிபிஐயிடம் சிக்கியுள்ளன என்கின்றன ஊடகங்கள். இந்தக் கைதின் தொடர்பாக மந்திரியின் தனிச் செயலாளரான சந்தோலியாவை விசாரிக்க சிபிஐ முடிவு செய்யும் பொழுது, அவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து விசாரணையை மேலும் தொடர வேண்டாம் என்ற உத்தரவு வருகிறது. அவர்களும் கேசை அப்படியே இழுத்து மூடுகிறார்கள்.

ஆக, கிடைக்கும் செய்திகளின் படி பார்த்தால், மந்திரி ராஜாவுக்கு சிக்கல் ஏற்படும் பொழுதெல்லாம் மத்திய அரசே ஆபத்பாந்தவராக “அராஜகரட்சகராக” தோன்றி காப்பாற்றிக் கொண்டேயிருந்திருக்கிறது!

இந்தத் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் பொதுமக்களுக்குக் கேள்விகள் எழுகின்றன. இவற்றையெல்லாம் மதிப்பிற்குரிய பிரதமர் திரு, மன்மோகன் சிங் ஏன் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்? முறைகேடாக தன் பதவியைப் பயன் படுத்தி ஒரு கிரிமினலைக் காப்பாற்றும் அளவுக்கு ஒரு பிரதமர் போகிறார் என்றால் அவர் எப்படி நேர்மையான ஒரு பிரதமராக இருக்க முடியும்? தன் பிரதமர் பதவியை, நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக இந்த அளவு முறைகேடுகளுக்கு ஒருவர் துணைபோகிறார் என்றால், அவர் எப்படி அப்பழுக்கற்றவராக இருக்க முடியும்? அவரை இன்னும் எப்படி மிஸ்டர் க்ளீன் என்று மக்கள் நம்புகிறார்கள்?

புரியவில்லை.

இந்தத் தகவல்கள் உண்மை என்று நீங்கள் நம்பினால், இனிமேலும் தயவு செய்து யாரும் இந்த ஊழலுக்குத் துணை போகும், தன் உரிமையை ஒரு தரகருக்கு விட்டுக் கொடுக்கும் மனிதரை நேர்மையானவர், தூய்மையானவர், அப்பழுக்கற்றவர் என்று மட்டும் யாரும் அழைத்து விடாதீர்கள்.

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்” என்ற பாரதியாரின் குமுறலும் ஆத்திரமுமே இவரைப் பிரதமராகக் கொண்டுள்ள நம் பாவத்தை நினைத்தால் ஏற்படுகிறது.

“படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோ என்று போவான்” என்றான் பாரதி. அவனைப் போலவே சாதாரண பொதுமக்களும் நொந்து போய் நிற்கிறார்கள்.

ஊழல்களுக்கு எல்லாம் தலையாய இந்த ஊழலை, 1 லட்சம் கோடி என்ற பிரமிக்க வைக்கும் ஊழலை பொதுவாக நம் அரசாங்கமும், ஆளும் கட்சியும், பிரதமரும், எதிர் கட்சிகளும், பத்திரிகை/டிவி களும் பொதுத்துறை நிறுவனங்களும் கடைசியாகப் பொதுமக்களும் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதைக் காணும் பொழுது எந்தவிதமான ஒரு நாடு இந்தியா என்பது குறித்த ஒரு பிம்பம் கிட்டுகிறது.

இந்த ஊழல்களை இந்தியாவின் தூண்களான பல பிரிவினரும் எதிர் கொண்ட விதத்தையும் பார்த்து விடலாம்.

மேலே தொடருங்கள்.

(தொடரும்)

Sunday, May 23, 2010

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் கதை - 1

இந்தியாவின் பிரதமர் யார்?

இந்தக் கேள்விக்கு ஒன்றாம் கிளாஸ் பிள்ளைகளாக இருந்தால் மன்மோகன் சிங் என்று பதிலளித்திருப்பார்கள். ஆனால் அது தவறு என்பது நாட்டு நடப்பை ஓரளவுக்காவது அறிந்த எந்தவொரு இந்தியனுக்கும் தெரிந்ததுதான்.

இந்தக் கேள்விக்கு, “சோனியா காந்தி” என்று பதிலளித்தால் ஐம்பது மார்க் கொடுக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் இந்தியாவின் பிரதமர் ”நீரா ராடியா” என்று நீங்கள் பதிலளித்திருப்பீர்கள் என்றால் உங்களுக்கு நூறு மார்க்குகள் நிச்சயம் வழங்கலாம்.

”நீரா ராடியா யார்?” என்பதை அறியாதவர்கள் மேலே படியுங்கள்.

காங்கிரஸ் காரர்களுக்கு சுயராஜ்யம் என்பது பிறப்புரிமையாக இருந்ததோ இல்லையோ; ஆனால் ஊழலும், கொள்ளையும் மட்டுமே காங்கிரசின் அதிகாரபூர்வ கொள்கையாக பிறப்புரிமையாக இன்று வரை இருந்து வருகிறது. காங்கிரசின் இந்தப் பிறப்புரிமைக்குப் பங்கம் வராமல் நம் மக்களும் சலிக்காமல் அக்கட்சிக்கு ஆதரவளித்து வருகிறார்கள். யதா பிரஜா, ததா ராஜா.

மாநிலக் கட்சிகள் வலுப்பெற ஆரம்பித்து மத்தியில் கூட்டணி ஆட்சியே யதார்த்த நிலையாக மாறிப் போய்விட்டது. இது ஆரம்பித்த வேளையில் இருந்து இந்தக் கொள்ளையடிக்கும் பிறப்புரிமையில் பிற மாநிலக் கட்சிகளும் உரிமை கோரவும், பங்கு கேட்கவும் ஆரம்பித்தார்கள். விளைவு: லல்லு யாதவ்களின் மாட்டுத் தீவன ஊழல்களும், முலாயம் யாதவ்களின் பல நூறு கோடி ஊழல்களும், கருணாநிதிகளின் தனி ஆவர்த்தன ஊழல்களும் - காங்கிரஸ் கலாச்சாரம் பிற கட்சிகளிடமும் ஆழமாக வேரூன்றிப் பரவ ஆரம்பித்தது.

இங்கே கொள்ளையடிக்கப்படும் பணம் வெளிநாடுகளில் சேமிக்கப்படுகிறது. ஸ்விஸ் போன்ற நாடுகள் நோகாமல் பணக்கார நாடுகளாக வளர்ந்து கொண்டு போக இந்தியாவில் இன்றைக்கும் ஒரு வேளை சோற்றிற்கு வழியில்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. உலக வரலாற்றிலேயே, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலம் தொடங்கி, ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து கொள்ளையடிக்கப் பட்டு வரும் ஒரே நாடு இந்தியாவாக மட்டுமே இருக்க முடியும். இந்தக் கொள்ளை இப்போதும் தொடர்கிறது.

இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.

ஊழல்களின் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் இந்த ஊழலின் கதாநாயகனும் ஒரு ராஜாதான். ஆபாசகரமான இந்த ஊழலின் நாயகன் ஆ.ராசாவேதான் என்று ஒரு சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சொல்லுவதன் அடிப்படையில், அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களைக் கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இந்தியாவில் இது வரை அரசாங்க நிலத்தை விற்று ஊழல் செய்திருக்கிறார்கள். நிலக்கரியை வைத்து ஊழல் செய்திருக்கிறார்கள். தண்ணீரை விற்று ஊழல் செய்திருக்கிறார்கள். மண்ணெண்ணெயை வைத்து ஊழல் செய்திருக்கிறார்கள். அரிசி, பருப்பு, எண்ணெய், ஜவுளி, வீடு, கார், பஸ், விமானம், தொலைபேசி, ராணுவம், மனிதர்கள், பெண்கள், சிறுவர்கள், மதங்கள், என்று உண்பது, உடுப்பது, படுப்பது, நின்றது, நடந்தது, பறப்பது, ஊர்வது, மிதப்பது என்று சகல விதமான உயிருள்ள உயிரற்ற படைப்புக்கள் அனைத்தையும் வைத்து ஊழல்கள் நடைபெற்று வந்தேயிருக்கின்றன. இப்பொழுது கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அலைகளை வைத்து ஒரு மாபெரும் ஊழல் அரங்கேறியிருக்கிறது. அதுதான் இந்த மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழல்.

இந்த ஊழல் உலக ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஊழல். ஏனென்றால் இந்த ஊழலின் மதிப்பு மொத்தமாக ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேலானது. ஒரு லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்கள் என்பது கூட நமக்கெல்லாம் தெரியாதுதான். 1 போட்டு பக்கத்தில் 12 சைபர்களை கை வலிக்கப் போட்டால்தான் இந்த ஒரு லட்சம் கோடிகள் என்ற கணக்கு வரும் என்று பொருளாதார மேதைகள் கம்ப்யூட்டரிடம் கேட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

முதலில் எப்படி இந்த ஒரு லட்சம் கோடியை கொள்ளையடித்தார்கள், யார் அடித்தார்கள் என்பவை பற்றி ஊடகங்கள் சொல்லுவதைப் பார்க்கலாம். ஒரு லட்சம் கோடி வருமானம் வரும் அளவுக்கு அது என்ன ஆகப் பெரிய விஷயம் என்பதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?

வானொலி, தொலைக்காட்சி, செல் ஃபோன் என்று அனைத்து விதமான கம்பியில்லாத தொலைத் தொடர்புகளுக்கும் மின்காந்த அலைகளே ஊடகமாகச் செயல் பட்டு வருகின்றன. இந்த மின்காந்த அலைகளின் அலை நீளம், வகை ஆகியவற்றை வைத்து பகுத்து பல்வேறு தொடர்புகளுக்கு பயன் படுத்தி வருகிறார்கள். அதாவது, வானொலியின் ஷார்ட் வேவ், மீடியம் வேவ், எஃப் எம் போல, தொலைக்காட்சிகளுக்குரிய அலைவரிசைகள் போல, செல் ஃபோன்களின் பயன்பாட்டிற்கும் மின்காந்த அலைவரிசைகளே பயன்படுத்தப் படுகின்றன.

இதில் வெறும் ஒலிகளை மட்டும் அனுப்பக் கூடிய பிரிவில் வரும் அலைப் பரவல்களை 2ஜி ஸ்பெக்ட்ரம் என்றும், தகவல், பேச்சு, படங்கள் போன்ற அனைத்து விதமான தகவல் பரிமாற்றங்களையும் பரிமாறக் கூடிய அலைப் பரவல்களை 3ஜி ஸ்பெக்ட்ரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இப்படி பல்வேறு வகையில் உபயோகமாகும் அலைவரிசைகளை அரசாங்கமே கட்டுப் படுத்தி யார், யார் எந்தெந்த அலைவரிசையை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பதை பிரித்து வழங்கி நிர்வாகித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட அலை அதிர்வெண்ணை செல்ஃ போன் மூலமான தகவல் தொடர்புக்கு மத்திய அரசாங்கம் ஒதுக்குகிறது. ஒதுக்கப்பட்ட அந்த அலைப் பரவல்களில், சிலவற்றை பயன்படுத்தத் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெறுகின்றன. பெற்ற பயன்பாட்டு உரிமையின் அடிப்படையில் தத்தம் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குகின்றன.

அந்த அலைப்பரவல்கள் மூலமாக தனியார் நிறுவனங்களும், அரசாங்கத்தின் பொது நிறுவனங்களும் தொலைத் தொடர்பு சேவைகளை தத்தம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். (இது குறித்த மேலதிக அறிவியல் தகவல்களை பத்ரி அவர்களின் வலைப்பதிவில் படித்துக் கொள்ளலாம். வலைப்பதிவு இங்கே.)

இந்த அலைப்பரவல்களை கணக்கு வழக்கு இல்லாமல் எல்லோரும் இவற்றைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில், எப்பொழுது தேவை (demand) ஆதாரத்தை (supply) விட அதிகமாகிறதோ, அப்பொழுது அளவில் குறைந்த வளங்களை ஏதாவது ஒரு பொது அடிப்படையில்தான் பயனர்களுக்கு வழங்க முடியும். அதுதான் எந்தவொரு இருப்பு/தேவை சமானத்திற்குமான அடிப்படையே. அதன்படி மின்காந்த அலைப்பரவல் வளமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்தான் இயங்க முடியும்; இவற்றை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறுவனங்கள் மட்டுமே இயக்க முடியும்.

நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது எந்தவொரு அரசாங்கமும் அந்த வளங்களை, ஏலத்தின் அடிப்படையில் யார் அதிக விலையை அரசுக்குக் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் வழங்க முடியும். வழங்க வேண்டும். அப்படித்தான் எந்தவொரு அரசாங்க வளங்களுமே பிரித்து வழங்கப் படுகின்றது. அதன்படி இந்த அலைப்பரவல்களை வேண்டுபவர்களுக்கு அரசாங்கம் ஏலத்தின் அடிப்படையில் பிரித்து வழங்க முடிவு செய்தது. அங்குதான் இந்த ஊழலுக்கு அஸ்திவாரமும் போடப் பட்டது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு உதாரணம் பார்க்கலாம். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஒரு பெரிய அளவிலான நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலம் சென்னையின் மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ளது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த நிலத்தை பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு வேண்டும் என்று கோருகிறார்கள். பலத்த போட்டி நிலவுகிறது. ஆனால் இருப்பதோ பத்து ஏக்கர் நிலம் மட்டுமே. இருக்கும் பத்து ஏக்கர்களுக்கோ ஆயிரக்கணக்கான கட்டுமான வியாபாரிகளும், பெரு நிறுவனங்களும் போட்டி போடுகிறார்கள். அரசாங்கத்திற்கோ அந்த நிலம் விற்பதன் மூலமான வருவாய் தேவைப் படுகிறது. ஏனெனில், வருவாயை வைத்து அரசாங்கம் நிறைய மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ளலாம். மக்களுக்கு அந்த வருவாயையை தக்க விதத்தில் பயன் படுத்தலாம். அப்படியானால் அரசாங்கம் யாருக்கு அந்த நிலத்தை பிரித்து வழங்க வேண்டும்?

அரசாங்கத்தின் ஆட்சியாளர்களுக்கா? அவர்களது உறவினர்களுக்கா? அதிகாரிகளுக்கா? அல்லது எந்த நிறுவனம் அதிகம் ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் தருகிறதோ அந்த நிறுவனங்களுக்கா? யாருக்குத் தர வேண்டும்? எப்படித் தர வேண்டும்? எலிமெண்டரி ஸ்கூல் பையனிடம் இந்தக் கேள்விவைக் கேட்டால் கூட மிக எளிதாக விடையைச் சொல்லி விடுவானே? நிலத்தின் மதிப்பை ஏலத்துக்கு விட்டு யார் அதிக விலைக்குக் கேட்கிறார்களோ அவர்களுக்கே அந்த நிலம் விற்கப் பட வேண்டும் என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?

இந்த ஒரு எளிய விடை இந்திய அரசாங்கத்திற்கு, அதிலும் உலகப் புகழ் பெற்ற பொருளாதார மேதையான மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் இயங்கும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் போகுமா? தெரியாமல் போய் விட்டது என்றுதான் அதிகாரபூர்வ அரசு அறிக்கைகள் சொல்கின்றன; அவரும் சொல்கிறார். கறைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரரான மிஸ்டர் உத்தமரான அப்பழுக்கற்ற தூய்மையாளரான திருவாளர் மன்மோகன் சிங்கனார் அவர்கள் தலைமையில் உள்ள அரசாங்கம் இது போன்ற ஒரு விற்பனையில் எந்தவித சந்தேகத்திற்கும், எந்தவித ஊழல்களுக்கும், எந்தவித முரண்பாடுகளுக்கும், எந்தவித லஞ்சங்களுக்கும், எந்தவிதமான சிபாரிசுகளுக்கும் இடமில்லாமல் அரசுக்கு அதிக பட்ச வருமானம் உள்ள வழியைத்தானே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன?

மன்மோகன் சிங் அவர்கள் தலைமையிலான ஊ பி ஏ (ஊழலைப் பின்பற்றும் ஏஜென்ஸி) செய்த ஒரு மாபெரும் அயோக்யத்தனத்தால் இன்று இந்தியாவுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு.

ஸ்பெக்ட்ரம் என்பது ஏன் ஒரு பெரும் விலை மதிப்புள்ள ஒரு வளமாகிறது?

ஸ்பெக்ட்ரம் எனப்படும் கம்பியில்லாத தொலைத் தொடர்பு, வலைப் பின்னல்களுக்கான ஊடகம். அரசாங்கத்தின் கட்டுப்பாடில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அளவுள்ள ஒரு வளம். நீர்வளம், நில வளம், விவசாய வளம், மனித வளம், கனிம வளம், மின் வளம், கடல் வளம், வன வளம், மலை வளம், நதி வளம் போல இதுவும் ஒரு வளம். ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு வளம். இந்தியாவின் வான் வெளி எப்படி கண்ணுக்குத் தெரியாத ஒரு வளமோ அதே போல வான்வெளியில் விரிந்திருக்கும் இந்த அலைப் பரவல்களும் ஒரு வளமே.

இந்த வளத்தை பெற உலக அளவிலும், இந்திய அளவிலும் பெரும் தொலைத் தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்குள் பலத்த போட்டி நிலவுகிறது. ஏன் பலத்த போட்டி? உலகத்திலேயே மிக அதிக அளவு செல் ஃபோன் பேசும் பயனர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள்.

இன்று இந்தியாவில் ஒரு மிகப் பெரிய நடுத்தர வர்க்கம் உருவாகி வருகிறது. அவர்களது வாங்கும் திறனும், சக்தியும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. செல் ஃபோன் பயன்பாடு என்பது இன்று வெறும் நடுத்தரவர்க்கத்தினரால் மட்டும் பயன் படுத்தப் படும் ஒரு சந்தை என்பதையும் தாண்டி கீழ் நடுத்தர மக்களிடம் பரவலாகப் புழங்கும் ஒரு சாதனமாகவும் மாறி வருகிறது. அதன் பயன்பாடும், அது பயன் படுத்தப் படும் விதமும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டும் புதிய பரிமாணங்களை அடைந்தும் வருகிறது.

ஆக இந்தியாவின் பல கோடிக்கணக்கான செல் ஃபோன் பயனர்களும் அவர்களின் பயன்பாடுகளும் அவை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான சந்தையும் உலக அளவில் பெரு நிறுவனங்களைக் கவர்ந்து அவர்கள் அனைவரையும் இந்தியச் சந்தைக்கு இழுத்து வருகிறது.

செல் ஃபோன் என்பது பேசுவதற்கு மட்டுமே பயன்படும் ஒரு தொலைபேசி சாதனமாக மட்டும் இன்று பயன் படுவதில்லை. இணையம், புகைப்படம், பங்கு வர்த்தகம், இணைய வர்த்தகம், பொழுது போக்கு என்று பல்வேறு விதமான செயல் பாடுகளுக்கும் செல்ஃ போன் என்ற ஒரே சாதனம் இன்று பயன் படுத்தப் பட்டு வருகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைக்கு ஒரு ஃபோன் விகிதம் செல்ஃபோன் வைத்திராத இந்தியர்களே கிடையாது என்ற நிலைக்கு இதன் சந்தை பெருத்து வருகிறது.

கிராமங்களில் விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் கூட செல்ஃபோன் பயன் படுத்தி வருகிறார்கள். இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் செல் ஃபோன் கோபுரங்கள் ஊடுருவி வருகின்றன.

செல் ஃபோன் சாதனம், அதில் பேசும் நிமிடங்களுக்கான கட்டணங்கள், அதில் இறக்கப் படும் விளையாட்டு மென்பொருள்கள் மற்றும் இசைகளுக்கான சந்தைகள், அதன் மூலம் செய்யப் படும் விளம்பரத்திற்கான சந்தை, வாங்கப் படும் பொருட்கள், பிற பயன்பாடுகள் என்று செல்ஃபோன் மூலமாக விளையும் உபரி வணிகத்தின் பெருக்கம் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ளவை.

பல கோடிக்கணக்கான செல் ஃபோன் பயனர்கள் இன்று இந்தியாவில் உருவாகி வருகிறார்கள். கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்தும் எந்தவொரு பொருளின் வியாபார மதிப்பும் பல கோடி மதிப்புள்ளவையாகவே இருக்கும்.

இவை அளிக்கும் மிகப் பெரிய உலகளாவிய வர்த்தக வாய்ப்பும் அவை ஏற்படுத்தும் சந்தைகளும் அதனால் விளையும் லாபங்களும் பிரமிக்கத் தக்கவை. ஆகவே இந்த செல்ஃபோன்களுக்குத் தேவைப் படும் அலைவரிசைகளின் உரிமைகளைப் பெறுவதிலும் உலக அளவில் பெரும் போட்டி நிலவி வருகிறது.

ஆக இந்த அலைப் பரவல் வளத்தினை உரிய முறையில் ஏலம் மூலமாக விநியோகித்திருந்தால் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் வரை நிதி ஆதாரத்தைப் நிச்சயமாகப் பெற்றுத் தந்திருக்கும். ஆனால் இது முறைகேடாக, மக்கள் விரோதமாக, அரசுக்குப் பெரும் நஷ்டத்தையும் தனியார்களுக்குப் பெரும் ஊழல் பணத்தையும் பெற்றுத் தரும் விதமாக அமைந்து விட்டது. இந்தியாவில் இதுவரை நடந்த அத்தனை ஊழல்களின் ஒட்டு மொத்த மதிப்பினைக் கூட்டினாலும் அதை விட பல மடங்கு அதிக அளவில் இதில் பொது மக்களாகிய உங்களுக்குச் சேர வேண்டிய பணம் கையாடல் செய்யப் பட்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு முன்னோட்டம்:

ஸ்பெக்ட்ரம் ஊழலை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால் இதன் பின்ணணியில் அமைந்த அரசியல் சூழ்நிலைகளைச் சுருக்கமாகப் பார்த்து விடலாம்.

சென்ற முறை திரு. மன்மோகன் சிங் தலமையில் அரசு அமைந்த பொழுது காங்கிரஸ் கட்சி, திமுக போன்ற உதிரி மாநிலக் கட்சிகளின் தயவிலேயே ஆட்சியைப் பிடித்தது. அப்பொழுது மத்திய அரசின் மிக முக்கியமான துறையான தொலைத் தொடர்புத் துறை மந்திரிப் பதவியை திமுக வின் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான திரு கருணாநிதி தன் மருமகனின் மகனான தயாநிதி மாறனுக்குப் பெற்றுத் தந்தார்.

தயாநிதி சன் டிவி எனப்படும் மாபெரும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். அப்படி ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் முதலாளி ஒருவரிடம் அந்தத் துறையின் மந்திரிப் பதவிப் பொறுப்பும் அளிக்கப் படுவது நேர்மையான ஒரு செயலாக இருக்காது. Conflict of Interest எனப்படும் நியாயமில்லாத ஒரு பதவி வழங்கலாக அது கருதப் பட்டு நியாயப் படி தயாநிதி மாறனுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப் பட்டிருக்கவே கூடாது. ஆனால் நமது மிஸ்டர் க்ளீன் மன்மோகன் சிங் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டணிக் கட்சியின் நிர்ப்பந்தத்தில் அந்தப் பதவியை தயாநிதி மாறனுக்கே அளித்தார்.

மேலும் தயாநிதி மாறனுக்கு எந்தவித அனுபவமும் இல்லாத நிலையில் மூத்த அனுபவம் உள்ள அரசியல்வாதிகளுக்கு அளிக்கப் படும் கேபினட் பொறுப்பு மந்திரி பதவி அளிக்கப் பட்டது பலரது கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது. ஆனால் நேர்மை, நியாயம், விதிமுறைகள், அறவுணர்வு போன்ற லட்சியங்கள் கிஞ்சித்தும் இல்லாத காங்கிரஸ் கட்சி அவற்றையெல்லாம் குப்பையில் வீசி எறிந்து விட்டு மாறனுக்கு முக்கியமான துறையை வழங்கியது. உண்மையில் இந்தத் துறையின் மேல் திமுக கண் வைத்ததன் காரணமே, இந்தத் துறையின் மூலமாகச் சாத்தியப் படும் விநியோகமும் அதன் மூலமாக செய்யக் கூடிய பெரும் ஊழலின் சாத்தியக் கூறுகளுமேயாகும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதை இந்தப் பதவிக்காக அக்கட்சி செய்த பெரும் நிர்ப்பந்தங்களும் பேரங்களுமே நிறுவத் தேவையான சாட்சிகளாக அமைகின்றன.

குடும்ப உறுப்பினரான தயாநிதி மாறனுக்கு முக்கியமான துறையைப் பெற்றுத் தந்து விட்டாலும் கூட அவர்கள் குடும்பத்துக்குள் நடந்த சொத்துத் தகராறுகளின் காரணமாக பாதியிலேயே அவரது பதவி பறிக்கப் பட்டு விட்டது. அந்த நேரத்தில் அது வரையில் சுற்றுச் சூழல் துறை மந்திரியாக இருந்த மற்றொரு திமுக மந்திரியான ஆ.ராஜாவிடம் தொலைத் தொடர்புத் துறை அளிக்கப் பட்டது. அதில் இருந்து இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்ச கட்ட கியருக்கு மாறியது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது எப்படி?

ஆ.ராஜா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் மந்திரியாக இருந்த பொழுதே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. லஞ்சம் வாங்கிக் கொண்டு முறை கேடான கட்டிடங்கள் கட்டுவதற்கு சூழல் துறையின் அனுமதியை அளிக்கிறார் என்பது அவர் மீது பல தரப்புக்களில் இருந்தும் எழுந்த முக்கியக் குற்றசாட்டு. “தந்திரமும், தரகும் செழித்து வளர்ந்த தலைநகரில் ராஜாவுக்கு புதிய நண்பர்கள் பலர் சுற்றுச் சூழல் துறையில் உருவாகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் வணிகத்தின் அதிபர்கள்” என்றெல்லாம் புலனாய்வுப் பத்திரிக்கைகள் தெரிவித்தன. பிரதமர் ராஜா மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருந்தன.

இந்தத் தருணத்தில் தமிழ் நாட்டில் மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தாருக்கும் பெரும் உள்குடும்ப யுத்தம் ஒன்று துவங்கியிருந்தது. 60கள் வரையிலும் கூட பணத்தட்டுப்பாட்டில் தடுமாறிய கருணாநிதி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு இப்போது பல்லாயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டி விடுகிறது. சன் டிவி என்னும் ராட்சச தொலைக்காட்சி நிறுவனம் அவர் குடும்பத்தில் இருந்து கிளைகள் பிரிந்து அசுர வேகத்தில் மாநில, மத்திய அரசுகளில் அவரது கட்சிக்கு இருந்த செல்வாக்கின் மூலம் வளர்கிறது. அதன் பாகப்பிரிவினை யுத்தத்தின் நடுவே அப்பாவி இளைஞர்கள் மூவர் மதுரையில் எரித்துக் கொல்லப் பட, சன் டிவி பாகஸ்தர்களில் ஒருவராகிய தயாநிதி மாறனின் பதவி பறிக்கப் பட்டு, அந்தப் பதவி ஏற்கனவே தலைநகர் டெல்லியில் ஊழல் வித்தகராக மாறிவிட்டிருந்த ஆ.ராஜாவிடம் அளிக்கப் படுகிறது.

ஊடகங்கள் சொல்லும் கதையின்படி, சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாகிய ராஜா தன் ரியல் எஸ்டேட் படை சூழ சஞ்சார் பவன் அலுவலகத்தில் தொலைத் தொடர்பு மந்திரியாகிறார். அவரது தரகர்கள் அனைவரும் புதிய துறைக்கு ராஜாவுடன் சேர்ந்தே இடம் பெயர்கிறார்கள். புதிய துறையில் பணம் கொழிக்கும் வாய்ப்புக்களை இனம் காண்கிறார்கள். வனத்துறையில் சில கோடிகள்தான் கிட்டின, இங்கு ஒரு பெரிய தங்கச் சுரங்கமே ஸ்பெக்ட்ரம் விநியோகத்தின் மூலமாக மறைந்து கிடக்கிறது எனக் கண்டு பிடித்துக் கொடுக்கிறார்கள். புதிய துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விநியோகிக்க வேண்டிய தங்கச் சுரங்கம் இருப்பதைக் கண்டறியும் ராஜா அதை கடத்திச் சென்ற திட்டம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல். தங்கச் சுரங்கத்தை வெட்டிக் கொள்ளையடிக்கும் திட்டம் உருவாகிறது.

அப்படி ஏற்கனவே ராஜாவுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு சக்தி வாய்ந்த இடைத் தரகர்தான் ராஜாவின், ஸ்பெக்ட்ரத்தின், ஏன் இந்தியாவின் தலைவிதியையே தீர்மானிக்கும் சகல வல்லமை படைத்த அதிகார பீடமாக மாறுகிறார் என்று ஹெட்லைன்ஸ் சானல் சொல்லுகிறது. அவரைப் பற்றி பின்னால் பார்க்கலாம். முதலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் எப்படி நடத்தப் பட்டது என்பதை பார்த்து விடலாம்.

ராஜாவின் ஊழல்களா? அல்லது ஊழல்களின் ராஜாவா?

1900ம் ஆண்டு சென்னை போட் கிளப் நிலத்தில் ஒரு கிரவுண்டு என்ன விலையில் விற்றதோ அதே விலையை 2010ல் அதே கிரவுண்டுக்கு யாராவது விற்கத் தீர்மானம் செய்வார்களா? செய்தார் ராஜா ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில்!

2001ம் ஆண்டு வெறும் 40 லட்சம் பேர்களே செல்ஃபோன்கள் பயன் படுத்துபவர்களாக இந்தியாவில் இருந்தார்கள். இந்த செல் ஃபோன் பயனர்களின் எண்ணிக்கையின்படி ஒரு விலை 2001ல் தீர்மானிக்கப் பட்டது.

2001ல் 40 லட்சமாக இருந்த செல்ஃபோன் பயனர்களின் எண்ணிக்கை 2008ல் 30 கோடியாக உயர்ந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. பயனர்கள் அதிகரித்துவிட்ட 2008ம் ஆண்டிற்கான விலை, பல ஆண்டுகள் முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகத்தான் இருக்கும். அப்படி, ஒரு சேவையின் தேவை நூறு மடங்கு அதிகரித்திருக்கும் பொழுது அதன் விலை குறைந்தது ஒரு பத்து மடங்காவது அதிகரித்திருக்க வேண்டும் அல்லவா? அதுதான் நடக்கவில்லை என்று பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. ஏன் நடக்கவில்லை? மேலே படியுங்கள்.

ஸ்பெக்ட்ரம் வரிசைகளை 2008ம் ஆண்டில் விற்க வேண்டிய அடிப்படை விலையாக 2001ல் நிர்ணயத்த குறைந்த விலையையே முடிவு செய்கிறார் ராஜா. டிராய் அமைப்பும், பத்திரிகைகளும், பிரதமர் அலுவலகமும் இந்த குறைந்த விலை நிர்ணயத்தை மாற்றச் சொல்லியும் பிடிவாதமாக அந்தக் குறைந்த விலையே அடிப்படை விலை என்று ராஜா நிர்பந்தித்து விடுகிறார் என்பது ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

அவர்களது கூற்றுப்படி, விலையைக் குறைவாக நிர்ணயித்ததும் அல்லாமல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வரிசைகளை ஏலம் மூலம் விற்பனை செய்யாமல் மிகவும் ரகசியமாக, சந்தேகம் தரும் வகையில், முறையான நெறிமுறைகளைப் பின்பற்றாமல், முறைகேடாக, யாருக்கும் அறிவிக்காமல் பெரிய நிறுவனங்கள் யாரும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்காமல், ராஜாவே இந்த விற்பனையை தனியாக நடத்தி முடித்து விடுகிறார்.

அதாவது ஏலத்திற்கு விடாமல் யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே ஸ்பெக்ட்ரம் என்று அறிவித்து விடுகிறார். ஒரு சில ஊர் பேர் தெரியாத, திடீரென்று முளைத்த, ரியல் எஸ்டேட் கம்பெனிகள்தான் முதலில் வந்தன என்று அறிவித்து விடுகிறார். அந்த சந்தேகத்திற்கு உரிய ரகசியமான கம்பெனிகளுக்கே ஸ்பெக்ட்ரம் எல்லாம் சொந்தம் என்று சொல்லி, முன்கூட்டியே சதித் திட்டம் போட்டு வைத்திருந்த குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரெம் வரிசைகளை விற்று விட்டு, அதற்குப் பின்னால் முறையாக வந்த பெரும் நிறுவனங்கள் அனைத்திற்கும் பெப்பே காட்டி விடுகிறார் ராஜா.

“சரி இதனால் அரசுக்கு என்ன நஷ்டம்? விற்பனைதான் நடந்து விட்டதே? காசுதான் வ்ந்து விட்டதே?” என்று அப்பாவித்தனமாக நீங்கள் யாரேனும் கேட்கலாம். ஒரு சில ஊடகங்கள் கசியவிடும் குற்றச்சாட்டு உண்மையானால், உங்களது புரிதல் ஏன் சரி இல்லை என்பதையும் இப்படி பின்வாசல் வழியாக செய்த விற்பனை மூலமாக அரசுக்கு எப்படி ஒரு பெரும் இழப்பு ஏற்பட்டது என்பதையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1. முதலில் அரசிற்குச் சொந்தமான, தேவை மிக அதிகம் உள்ள ஒரு மாபெரும் வளத்தை, அந்த வளத்தைப் பெற கடும் போட்டிகள் நிறைந்த ஒரு சூழலில், அதன் அடிப்படை விலையைத் தற்கால தேவையைப் பொருத்தே நிர்ணயித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் உள்நோக்கத்துடனும் சதித்திட்டத்துடனும் 2001ல் குறைந்த பயனர்கள் இருந்த சூழலில் தீர்மானிக்கப் பட்ட விலையை நிர்ணயித்தது ராஜாவின் முதல் குற்றம்.

2. இரண்டாவதாக, அப்படியே குறைந்த பட்ச அடிப்படை விலையை நிர்ணயித்திருந்தாலும் கூட கடும் போட்டி நிலவும் சூழலில் அந்த வளங்களை ஏலம் விடுவதின் மூலமாகவே விற்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி ஏலத்திற்கு விட்டிருந்தால் ராஜா விற்ற அடிப்படை விலையை விட பத்திருபது மடங்கு அதிகமாக அவை விலை போயிருக்கும். அரசுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய்கள் வருமானத்தை ஈட்டித் தந்திருக்கும்.

அப்படி ஏலத்திற்கு விடாமல் தான்தோன்றித்தனமாக ரகசியமான முறையில் அனைத்து நிறுவனங்களையும் போட்டி போட விடாமல் முன்னால் வருபவர்களுக்கே விற்பேன் என்று கள்ள ஆட்டம் ஆடி குறைந்த விலைக்கு விற்று அரசுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுத்தியது ராஜாவின் இரண்டாவது குற்றம்.

3. சரி அப்படி குறைந்த விலைக்கு வைத்து அவர் யாருக்கு விற்றிருக்கிறார் என்று பார்த்தால் அங்குதான் அவரது சகுனி வேலைகள் யாவும் அம்பலத்துக்கு வருகின்றன என்பது ஊடகங்கள் சொல்லும் கதை.

முதலில் சில தில்லு முல்லுகள் செய்து முறையாக இந்தத் தொழிலில் இருக்கும் பெரு நிறுவனங்கள் எவையும் விண்ணப்பம் சமர்ப்பிக்காமல் செய்து விடுகிறார். அதாவது விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய நேரம் காலாவதியாகி விட்டது என்று சொல்லி பெரிய நிறுவனங்களை நிராகரித்து விட்டு தனக்கு வேண்டப் பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே விற்று விடுகிறார். அந்த நிறுவனங்கள் எவை என்று பார்த்தால் நமக்கு அடுத்த கடும் அதிர்ச்சி காத்திருக்கிறது.

ராஜா முதலில் விற்பனை செய்த நிறுவனங்கள் இரண்டு - ஸ்வான் என்ற நிறுவனமும், யுனிடெக் என்ற நிறுவனமும். இந்த இரண்டு நிறுவனங்களும் முதலில் தொலைத் தொடர்பு நிறுவனங்களே அல்ல. ரியல் எஸ்டேட் கம்பெனிகள்.

எந்தவிதமான தொலைத் தொடர்பு கட்டுமானங்களிலும் அனுபவம் இல்லாத, முதலீடு செய்யாத நிறுவனங்கள். அவர்கள் ரியல் எஸ்டேட் துறையிலாவது ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் அவைகள் அதிலும் ஈடுபட்டவை அல்ல. புதிதாக இந்த விற்பனையை வாங்குவதற்காகவே திடீரென்று முளைத்த கம்பெனிகள்.

இவை எங்கிருந்து வந்தன? யார் உருவாக்கினார்கள்? இவைகளுக்கும் ராஜாவுக்கும் என்ன சம்பந்தம்? அவற்றிற்கும் கருணாநிதியின் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் “தி பயனீர்”, “ஹெட்லைன்ஸ் டுடே”, “டைம்ஸ் நௌ” போன்ற ஊடகங்கள் தருகின்றன. அவர்கள் சொல்லும் தகவல்களின்படி இந்த ஊழல் மிகுந்த எச்சரிக்கையுடன், நேரடியாகக் குற்றம் சாட்ட முடியாதபடி வடிவமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் அப்படி என்னதான் சொல்லுகிறார்கள் ?

ஊர் பேர் தெரியாத இரு கட்டிட வணிக நிறுவனங்களுக்கு கடும் தொழில்நுட்ப அனுபவமும் அறிவும் தேவைப் படும் ஒரு புதிய தொழில்நுட்ப வளம் அடிமாட்டு விலைக்கு விற்கப் படுகிறது. ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்ற கதையாக, கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இந்த வளம் விற்கப் பட்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் போன்ற ஒரு உயர் தொழில்நுட்பம் கோரும் வளத்தை சம்பந்தமேயில்லாமல் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு எதற்காக விற்க வேண்டும்?

ஏன் 2008ல் 2001ல் இருந்த விலை வைத்து விற்கப் பட வேண்டும்?

ஏன் தொலைத் தொடர்பிலும் செல்ஃபோன் தொழிலிலும் பழம் தின்று கொட்டை போட்ட உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் எதுவும் இந்த விற்பனையில் கலந்து கொள்ள முடியாமல் துரத்தி அடிக்கப் பட்டன?

ஏன் முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று விற்பனை உத்தி மாற்றப் பட்டது? இது என்ன பள்ளிக்கூடத்தில் வைக்கப் படும் ஓட்டப் பந்தயமா?

ஒரு சில ஊடகங்கள் எழுப்பும் மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒவ்வொன்றாக அதே ஊடகங்கள் தரும் பதிலைக் காணும் பொழுது இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலின் முழு மர்மங்களும் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பித்து, இதில் யார் யார் பங்குதாரர்கள்? யார் யார் கூட்டாளிகள்? யார் யார் குற்றவாளிகள்? என்பவை தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும். அவற்றை ஒவ்வொன்றாக விடுவித்து இந்த உலக மகா ஊழலின் புதிரை விடுவிக்கலாம். சற்று பொறுமையாகவும் ஆழமாகவும் இவற்றைப் படித்து உள்வாங்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்.

இந்த ஊழல் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பெரும் அளவில் பாதிக்கக் கூடியது.

இந்த ஊழல் குறித்து ஊடகங்கள் தெரிவிப்பவை என்ன?

(தொடரும்)

Wednesday, May 19, 2010

தயா டிவியின் தமிழ் காலை


எல்லோரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்க!

தமிழ்நாட்டின் அடுத்த புது வரவு "தயா" டிவி.

தென்னகத்து சிங்கம், மதுரையை 'மீட்ட' சுந்தரபாண்டியண், தமிழ்த்தாயின் தலைமகன், அஞ்சாநெஞ்சன் (அட, போதும் விடுங்கப்பா..!) அண்ணன் அழிகிரி அவர்கள் ஆரம்பிக்க போகும் தொலைக்காட்சி அலைவரிசை "தயா" டிவி. மகன் பெயரில் (தயாநிதி) டிவி ஆரம்பிக்கிறார் என்கிறார்கள் மற்றவர்கள். என் அம்மா பெயரில் (தயாளு) ஆரம்பிக்கிறேன் என்கிறார் அழகிரி.

இதற்கு சன்டிவி தரப்பிலிருந்து கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதாம். (கலைஞர் டிவியிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கலையோ????!!!)

சில நாட்களுக்கு முன்பு அழகிரி மகள் அமெரிக்கா சென்றார், தற்போது மத்திய அமைச்சர்கள் அழகிரியும், தயாநிதி மாறனும் அமெரிக்கா சென்றுள்ளனர், கலைஞர் மகள் செல்வியும் அமெரிக்கா சென்றுள்ளார் (செல்விதான் மாறன், கலைஞர் குடும்பங்களுக்கு மீடியேட்டராக இருப்பவர்).

அமெரிக்காவில் அனைவரும் உட்கார்ந்து அரசியல், குடும்பம், தொழில் என்று பல விஷயங்களை விரிவாக பேசினார்களாம். ஆக 'ஒப்பந்தம்' இறுதி செய்யப்பட்டு "தயா" டிவிக்கு "clearance" கொடுக்கப்பட்டதாம். டிவி தயாரிப்புக்கு உண்டான வேலைகள் மளமளவென்று ஆரம்பித்துவிட்டது.

"சேட்டிலைட் டிவி தந்த சிங்கமே", "அலைவரிசை தந்த அண்ணலே", "புத்தனுக்கு கயா தமிழுனுக்கு தயா"... என்று போஸ்டர் ஒட்ட தயாராகிவிட்டார்கள் உடன்பிறப்புகள்.

சன்டிவி, தினகரன் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனியாக ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்பது கொசுறு செய்தி.


Sunday, May 16, 2010

கல்விக் கடன்

சில தினங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகும் "டீலா நோ டீலா" நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து சங்கரி என்ற பெண்மணி கலந்து கொண்டார். சத்துணவு கூடத்தில் சுமார் 27 ஆண்டுகளாக பணியாற்றும் அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருந்தும் தண்ணீர் வற்றிவிட்டதால் விளைச்சல் இல்லை. கணவருக்கு வேலை இல்லை. ஏழ்மையான குடும்பம். ஆனால் இரு மகள்களையும் நன்றாக படிக்கவைத்து மூத்த மகளுக்கு திருமணத்தையும் முடித்துவிட்டார்கள்.

இளைய மகளை வங்கியில் கடன் வாங்கி எம்.எஸ்.சி, எம்.பி.ஏ வரை படிக்கவைத்துவிட்டார்கள். படிப்பு முடியும் போதே 25,000 ரூபாய் சம்பளத்தில் வேலையும் கிடைக்கும் வாய்ப்பு. மகள் சம்பாதித்து கடனை கட்டிவிடலாம் என்று நிம்மதியாய் இருக்க, அந்த எதிர்பாராத சம்பவம்! தேர்வு முடிந்து வீட்டிலிருந்த மகளுக்கு திடீரென காய்ச்சல். அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டியும் காய்ச்சல் குறையவில்லை. மருத்துவமனையில் அனுமதித்து சில மணி நேரங்களிலேயே உயிர் போய்விட்டது. மூளையில் கட்டி (Brain Tumour)!

வார்த்தைகளில் விவரிக்க முடியாத வேதனை. படிப்புக்காக கடன் வாங்கிய வங்கியில் கடனை திருப்பி கட்ட சொல்லிவிட்டார்கள். "டீலா நோ டீலா" நிகழ்ச்சியில் வரும் பணத்தை வைத்து, அந்தக் கடனை அடைப்பதன் மூலம் என் மகளின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவேன் என்றார் அந்தத் தாய்.

விவசாயத்திற்காக அரசாங்களால் கொடுக்கப்படும் கடன்கள், சம்பந்தப்பட்ட விவசாயி அகால மரணம் அடைந்தால் அந்தக் கடன் அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் தான் இந்த நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை மூலம் கடனாவது தள்ளுபடி ஆகட்டும் என்று தான். விவசாயத்தில் வருமானம் இல்லாததாலும், வருமானம் ஈட்டக் கூடிய குடும்பத் தலைவர் மரணம் அடைந்துவிட்டதாலும், அந்த குடும்பத்தை காப்பாற்ற அரசு, கடன் தள்ளுபடி செய்யும் கொள்கையை வைத்துள்ளது.

இதே "logic" கல்விக் கடனுக்கும் பொருந்தும் தானே?

கல்விக் கடன் பெருபவர்கள் பெரும்பாலும் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். மாணவனோ, மாணவியோ படித்து முடித்து சம்பாதித்து தான் அந்த கடனை கட்ட முடியும். திடீரென்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் அந்தக் குடும்பத்தால் கடனை திருப்பி கட்ட இயலுமா? மகனோ / மகளோ சம்பாதித்து கடனை அடைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, பெற்றோர்கள் கடன் வாங்கி படிக்க வைக்கிறார்கள். கடன் பெற்ற மாணவனோ, மாணவியோ அகால மரணமடையும் போது அந்த கடனை தள்ளுபடி செய்ய ஏன் அரசு முடிவெடுக்கக் கூடாது.

"கடன் தள்ளுபடிக்காக தற்கொலை" என்பதை தடுக்க ஆயுள் காப்பீடு போல தற்கொலை விதிவிலக்கு என்று ஒரு "rider" போட்டுவிடலாம்.


Wednesday, May 12, 2010

நிபந்தனை விதித்து தடுத்த கருணை மிகு அரசியல்!

தமிழகத்தில் வந்து சிகிச்சை பெற நிபந்தனைகளுடன் உட்பட்ட அனுமதியை ஏற்று தமிழகம் வர பார்வதியம்மாள் மறுத்துவிட்டதாகச் செய்தி. 80 வயதைத் தாண்டியவருக்கு நிபந்தனை விதிப்பது மனிதாபிமான உணர்வுக் கொண்டவர்களால் ஏற்க முடியாததுதான் என்றாலும், அரசியல் என்று ஒன்றும், பதவியைக் காத்துக் கொள்வது என்ற மற்றொன்றும் இருக்கும் வரை எல்லாமே இந்த உலகில் நிபந்தனைகளுக்கு உட்பட்டவைதானே? இது தமிழக முதல்வருக்குத் தெரிந்த அளவிற்கு யாருக்குத் தெரியும்? இந்தியத் திருநாட்டில் அரசியல் கலந்த மனிதாபிமானம் கொண்ட ஒரு தலைவரை இவரை விட யார் உளர்? அதனால்தானே ஆட்சிக்கு சோதனை வரும்போதெல்லாம் காங்கிரஸ் தலைவரும், பிரதமரும் தமிழக முதல்வரின் உதவியை நாடியதாக கூறுகிறார்கள்.

பார்வதியம்மாள் வயதானவராக இருக்கலாம், உடல் நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம், மன நிலை கூட அடிக்கடி பாதிக்கப்படும் அளவிற்கு நோய்வாய்ப்பட்டவராக இருக்கலாம், ஆனாலும் அவர் யார்? தன்னால் ஒரு நேரத்தில் பாராட்டப்பட்டு, பிறகு மற்றொரு காலகட்டத்தில் - அரசியல் வசதிக்காக - தூற்றப்பட்ட ஒரு போராளி இயக்கத்தின் தலைவரைப் பெற்றவரல்லவா? அப்படிப்பட்ட ஒரு கிழவியை நிபந்தனையின்றி, நாட்டிற்குள் அனுமதித்தால், அதனால் இந்திய நாட்டின் உள்நாட்டு, அயல்நாட்டு பாதுகாப்பிற்கு ஏதாவது குந்தகம் ஏற்பட்டால் என்ன ஆவது? அது தமிழினத்தின் பெருமைக்கு குந்தகம் ஏற்படுத்திவிடும் அல்லவா? ஏற்கனவே இந்திய நாட்டின் ஈடிணையற்ற பிரதமராகத் திகழ்ந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் தமிழ் மண்ணிற்கு ஏற்பட்ட அவப் பெயர் இன்றுவரை நீங்காதது மட்டுமின்றி, அதனால் ஆட்சியை இழந்து, பதவியை இழந்து மீண்டும் பதவிக்கு வரமுடியாமல் பட்ட இன்னல்கள் எத்தனை?

இவையனைத்தையும் கருத்தில்கொண்டுதான், பார்வதியம்மாளை சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் பரிந்துரைத்ததை ஏற்றுக்கொண்டு, “மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம்” என்று மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது!

சிகிச்சைக்காக வருபவர் எங்கு தங்க வேண்டும்? “மருத்துவமனையில்தான் தங்க வேண்டுமே தவிர, வேறு எங்கும் தங்கக் கூடாது” என்று ஒரு நிபந்தனை!

அது மட்டுமல்ல, “பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களோடு (யாரென்று புரிகிறதா மக்களே) எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்று மற்றொரு நிபந்தனை! தடை செய்யப்பட்ட இயங்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களோடு இணைந்து அந்தக் கிழவி நமது நாட்டிற்கு எதிராக சதி கிதி செய்துவிட்டால் பிறகு தமிழக அரசு என்னாவது? அதன் பிறகு தன்னையே நம்பியுள்ள திக்கற்றத் தமிழினத்தை யார் காப்பது? அதற்காகத்தான் இந்த நிபந்தனை, புரிந்துகொள்ளுங்கள்.

சிகிச்சை பெற பார்வதியம்மாளுக்கு ஒரு யோசனையையும் தமிழக அரசு மிகுந்த மனிதாபிமானத்துடன் கூறியுள்ளது. “அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் அதற்குத் தமிழக அரசு தேவையான எல்லா உதவிகளையும் செய்திடும்” என்று கருணை கசிய கூறியுள்ளார் முதல்வர்.

தனக்கு கழுத்து வலி என்றால் கூட, போரூரிலுள்ள இராமச்சந்திரா மருத்துவமனையுலோ அல்லது அப்பாலோ மருத்துவமனையிலோ சிகிச்சை பெறும் முதல்வர், மிகுந்த காருண்யத்துடன் பார்வதியம்மாளுக்கு ஏராளமான வசதிகளைக் கொண்ட தமிழக அரசின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பினால் அதற்கு தேவையான ‘உதவிகளை’ தமிழக அரசு செய்யும் என்று உறுதியளித்துள்ளார். இதற்கு மேல் மனிதாபிமானம் என்பதற்கு என்னதான் பொருள் உண்டு?

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிபந்தனைகளையெல்லாம் விதித்தது மத்திய அரசு என்று கூற, அதனை விசாலமான மனதுடன் அப்படியே அனைவரும் ஏற்றுக் கொண்டதுதான் விசேடத்திலும் சிறப்பான விசேடம்!

“தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெற சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆராய்ந்து அனுமதியளிக்கலாம் என்று பரிந்துரைக் கடிதம் மத்திய உள்துறைச் செயலருக்கு தமிழக அரசால் 01.05.2010 அன்று அனுப்பி வைக்கப்பட்டது” என்று விதி எண் 120இன் கீழ் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையிலேயே தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.

எனவே தமிழக அரசு பரிந்துரைத்ததற்கு இணங்கவே, “சில நிபந்தணைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம்” என்று மத்திய அரசு எழுதியுள்ளது. ஆக மத்திய அரசு ஒன்றும் நிபந்தனைகளை விதிக்கவில்லை. அடேயப்பா, என்னே சாதுரியம். நாட்டைப் பாதுகாக்க எவ்வளவு எச்சரிக்கை உணர்வு? மத்திய அரசிற்கு, அதுவும் அதன் உள்துறை அமைச்சகத்திற்கே நிபந்தனைகளை பரிந்துரை செய்யும் அளவிற்கு ஒரு முன்னோக்கு. அந்த நிபந்தனைகள் நாட்டைக் காக்க மட்டுமல்ல, அதாவது தடை செய்யப்பட்ட இயங்கங்களோடு பங்கு பெற்றவர்களை மட்டுமே கட்டுப்படுத்துவதற்கு அல்ல, அதற்கும் மேல், பார்வதியம்மாளையே பாதுகாக்கவே இந்த நிபந்தனைகள்! அதைத்தான் நே‌ற்று சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர். என்னே காருண்யம்!

இதையெல்லாம் புரிந்துகொள்ளத் தெரியாத பார்வதியம்மாள், “ஒரு கைதியைப் போல் இருந்துகொண்டு சிகிச்சை பெற விரும்பவில்லை” என்று கூறியுள்ளாராம், சொல்லுகிறது ஆங்கில செய்தி ஒன்று. தமிழக முதல்வரின், தமிழக அரசின் மனிதாபிமான ஆழத்தைப் புரிந்துகொள்ள அவரால் முடியவில்லை என்பது மட்டுமே நமக்கு புரிகிறது.

சென்னையில் ஒரு பழமொழி உண்டு: ‘குரங்கு கிழவியானாலும் பல்டியடிக்க மறக்காது’ என்று. 70 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் என்னவெல்லாம் சந்தித்தவர் தமிழக முதல்வர்! முதல்வர் பதவியின் முக்கியத்துவமும், மத்திய ஆட்சியில் பங்கு பெற்றிருப்பதும் எவ்வளவு முக்கியமென்பதை அறியாதவரா தமிழக முதல்வர்? ஆட்சியும் அதிகாரமும் இல்லையென்றால் தான் ஆழமாக நேசிக்கும் ‘தமிழின’த்தை எவ்வாறு காப்பாற்ற முடியும். அன்றாடம் நடக்கும் சகோதர யுத்தத்தால் சிதறுண்டு போகுமல்லவா? அதுமட்டுமா? தமிழினத்திற்கு எதிராக ஸ்பெக்‌ட்ரம் ஒதுக்கீட்டிலிருந்து ஒன்றா, இரண்டா, எத்தனை அச்சுறுத்தல்கள்? அதையெல்லாம் எதிர்கொள்ள பதவி முக்கியமா, பார்வதியம்மாள் முக்கியமா? எல்லாவற்றையும் அறிந்தும் புரிந்தும்தான் மனிதாபிமானத்தோடு செயல்படுகிறார் தமிழக முதல்வர். நமக்குத்தான் அவருக்கு உள்ள அந்த ‘தமிழின’ பற்றும் பாசமும் இல்லை.

நன்றி: தமிழ்வெப்துனியா.காம்

------------------------------------------

முந்தைய பதிவில் (கீழே) உள்ள முகங்கள் அனைத்தும் அசல் தமிழ் முகங்கள்!

Sunday, May 9, 2010

கீழே உள்ள முகங்களில் ஒரு ஒற்றுமை இருக்கிறது!
















படங்கள் நன்றி: ஒச்சப்பன்

பி.கு. என்ன ஒற்றுமை என்பது இதே தளத்தில் இரண்டு நாட்களில் வெளியாகும்.