Wednesday, May 12, 2010

நிபந்தனை விதித்து தடுத்த கருணை மிகு அரசியல்!

தமிழகத்தில் வந்து சிகிச்சை பெற நிபந்தனைகளுடன் உட்பட்ட அனுமதியை ஏற்று தமிழகம் வர பார்வதியம்மாள் மறுத்துவிட்டதாகச் செய்தி. 80 வயதைத் தாண்டியவருக்கு நிபந்தனை விதிப்பது மனிதாபிமான உணர்வுக் கொண்டவர்களால் ஏற்க முடியாததுதான் என்றாலும், அரசியல் என்று ஒன்றும், பதவியைக் காத்துக் கொள்வது என்ற மற்றொன்றும் இருக்கும் வரை எல்லாமே இந்த உலகில் நிபந்தனைகளுக்கு உட்பட்டவைதானே? இது தமிழக முதல்வருக்குத் தெரிந்த அளவிற்கு யாருக்குத் தெரியும்? இந்தியத் திருநாட்டில் அரசியல் கலந்த மனிதாபிமானம் கொண்ட ஒரு தலைவரை இவரை விட யார் உளர்? அதனால்தானே ஆட்சிக்கு சோதனை வரும்போதெல்லாம் காங்கிரஸ் தலைவரும், பிரதமரும் தமிழக முதல்வரின் உதவியை நாடியதாக கூறுகிறார்கள்.

பார்வதியம்மாள் வயதானவராக இருக்கலாம், உடல் நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம், மன நிலை கூட அடிக்கடி பாதிக்கப்படும் அளவிற்கு நோய்வாய்ப்பட்டவராக இருக்கலாம், ஆனாலும் அவர் யார்? தன்னால் ஒரு நேரத்தில் பாராட்டப்பட்டு, பிறகு மற்றொரு காலகட்டத்தில் - அரசியல் வசதிக்காக - தூற்றப்பட்ட ஒரு போராளி இயக்கத்தின் தலைவரைப் பெற்றவரல்லவா? அப்படிப்பட்ட ஒரு கிழவியை நிபந்தனையின்றி, நாட்டிற்குள் அனுமதித்தால், அதனால் இந்திய நாட்டின் உள்நாட்டு, அயல்நாட்டு பாதுகாப்பிற்கு ஏதாவது குந்தகம் ஏற்பட்டால் என்ன ஆவது? அது தமிழினத்தின் பெருமைக்கு குந்தகம் ஏற்படுத்திவிடும் அல்லவா? ஏற்கனவே இந்திய நாட்டின் ஈடிணையற்ற பிரதமராகத் திகழ்ந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் தமிழ் மண்ணிற்கு ஏற்பட்ட அவப் பெயர் இன்றுவரை நீங்காதது மட்டுமின்றி, அதனால் ஆட்சியை இழந்து, பதவியை இழந்து மீண்டும் பதவிக்கு வரமுடியாமல் பட்ட இன்னல்கள் எத்தனை?

இவையனைத்தையும் கருத்தில்கொண்டுதான், பார்வதியம்மாளை சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் பரிந்துரைத்ததை ஏற்றுக்கொண்டு, “மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம்” என்று மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது!

சிகிச்சைக்காக வருபவர் எங்கு தங்க வேண்டும்? “மருத்துவமனையில்தான் தங்க வேண்டுமே தவிர, வேறு எங்கும் தங்கக் கூடாது” என்று ஒரு நிபந்தனை!

அது மட்டுமல்ல, “பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களோடு (யாரென்று புரிகிறதா மக்களே) எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்று மற்றொரு நிபந்தனை! தடை செய்யப்பட்ட இயங்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களோடு இணைந்து அந்தக் கிழவி நமது நாட்டிற்கு எதிராக சதி கிதி செய்துவிட்டால் பிறகு தமிழக அரசு என்னாவது? அதன் பிறகு தன்னையே நம்பியுள்ள திக்கற்றத் தமிழினத்தை யார் காப்பது? அதற்காகத்தான் இந்த நிபந்தனை, புரிந்துகொள்ளுங்கள்.

சிகிச்சை பெற பார்வதியம்மாளுக்கு ஒரு யோசனையையும் தமிழக அரசு மிகுந்த மனிதாபிமானத்துடன் கூறியுள்ளது. “அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் அதற்குத் தமிழக அரசு தேவையான எல்லா உதவிகளையும் செய்திடும்” என்று கருணை கசிய கூறியுள்ளார் முதல்வர்.

தனக்கு கழுத்து வலி என்றால் கூட, போரூரிலுள்ள இராமச்சந்திரா மருத்துவமனையுலோ அல்லது அப்பாலோ மருத்துவமனையிலோ சிகிச்சை பெறும் முதல்வர், மிகுந்த காருண்யத்துடன் பார்வதியம்மாளுக்கு ஏராளமான வசதிகளைக் கொண்ட தமிழக அரசின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பினால் அதற்கு தேவையான ‘உதவிகளை’ தமிழக அரசு செய்யும் என்று உறுதியளித்துள்ளார். இதற்கு மேல் மனிதாபிமானம் என்பதற்கு என்னதான் பொருள் உண்டு?

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிபந்தனைகளையெல்லாம் விதித்தது மத்திய அரசு என்று கூற, அதனை விசாலமான மனதுடன் அப்படியே அனைவரும் ஏற்றுக் கொண்டதுதான் விசேடத்திலும் சிறப்பான விசேடம்!

“தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெற சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆராய்ந்து அனுமதியளிக்கலாம் என்று பரிந்துரைக் கடிதம் மத்திய உள்துறைச் செயலருக்கு தமிழக அரசால் 01.05.2010 அன்று அனுப்பி வைக்கப்பட்டது” என்று விதி எண் 120இன் கீழ் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையிலேயே தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.

எனவே தமிழக அரசு பரிந்துரைத்ததற்கு இணங்கவே, “சில நிபந்தணைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம்” என்று மத்திய அரசு எழுதியுள்ளது. ஆக மத்திய அரசு ஒன்றும் நிபந்தனைகளை விதிக்கவில்லை. அடேயப்பா, என்னே சாதுரியம். நாட்டைப் பாதுகாக்க எவ்வளவு எச்சரிக்கை உணர்வு? மத்திய அரசிற்கு, அதுவும் அதன் உள்துறை அமைச்சகத்திற்கே நிபந்தனைகளை பரிந்துரை செய்யும் அளவிற்கு ஒரு முன்னோக்கு. அந்த நிபந்தனைகள் நாட்டைக் காக்க மட்டுமல்ல, அதாவது தடை செய்யப்பட்ட இயங்கங்களோடு பங்கு பெற்றவர்களை மட்டுமே கட்டுப்படுத்துவதற்கு அல்ல, அதற்கும் மேல், பார்வதியம்மாளையே பாதுகாக்கவே இந்த நிபந்தனைகள்! அதைத்தான் நே‌ற்று சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர். என்னே காருண்யம்!

இதையெல்லாம் புரிந்துகொள்ளத் தெரியாத பார்வதியம்மாள், “ஒரு கைதியைப் போல் இருந்துகொண்டு சிகிச்சை பெற விரும்பவில்லை” என்று கூறியுள்ளாராம், சொல்லுகிறது ஆங்கில செய்தி ஒன்று. தமிழக முதல்வரின், தமிழக அரசின் மனிதாபிமான ஆழத்தைப் புரிந்துகொள்ள அவரால் முடியவில்லை என்பது மட்டுமே நமக்கு புரிகிறது.

சென்னையில் ஒரு பழமொழி உண்டு: ‘குரங்கு கிழவியானாலும் பல்டியடிக்க மறக்காது’ என்று. 70 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் என்னவெல்லாம் சந்தித்தவர் தமிழக முதல்வர்! முதல்வர் பதவியின் முக்கியத்துவமும், மத்திய ஆட்சியில் பங்கு பெற்றிருப்பதும் எவ்வளவு முக்கியமென்பதை அறியாதவரா தமிழக முதல்வர்? ஆட்சியும் அதிகாரமும் இல்லையென்றால் தான் ஆழமாக நேசிக்கும் ‘தமிழின’த்தை எவ்வாறு காப்பாற்ற முடியும். அன்றாடம் நடக்கும் சகோதர யுத்தத்தால் சிதறுண்டு போகுமல்லவா? அதுமட்டுமா? தமிழினத்திற்கு எதிராக ஸ்பெக்‌ட்ரம் ஒதுக்கீட்டிலிருந்து ஒன்றா, இரண்டா, எத்தனை அச்சுறுத்தல்கள்? அதையெல்லாம் எதிர்கொள்ள பதவி முக்கியமா, பார்வதியம்மாள் முக்கியமா? எல்லாவற்றையும் அறிந்தும் புரிந்தும்தான் மனிதாபிமானத்தோடு செயல்படுகிறார் தமிழக முதல்வர். நமக்குத்தான் அவருக்கு உள்ள அந்த ‘தமிழின’ பற்றும் பாசமும் இல்லை.

நன்றி: தமிழ்வெப்துனியா.காம்

------------------------------------------

முந்தைய பதிவில் (கீழே) உள்ள முகங்கள் அனைத்தும் அசல் தமிழ் முகங்கள்!

No comments: