Saturday, December 17, 2011
Times of India-வின் அடாவடி...!!!
Wednesday, December 14, 2011
அரசுப் பேருந்தில் ஊருக்கு போறீங்களா? இதை கொஞ்சம் படிங்க..!!
Wednesday, November 30, 2011
பாவம் தமிழன்!
Saturday, November 26, 2011
ஏன் இந்த கொலைவெறி?
கொலை வெறிபாட்டு ஏன் ஹிட்டானது ? அதில் அப்படி என்னதான் இருக்கிறது ?
இன்றைக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்புக்கான இணைய தளங்களில் ஒரு பாட்டோ ஒரு பொருளோ ஒரு விஷயமோ ஹிட் ஆவது பெரிய விஷயம் இல்லை. சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பொய்க் கணக்குகளை ஆயிரக்கணக்கில் வைத்திருக்கின்றன. இவையெல்லாம் இளம் ஆண்கள், பெண்கள் பெயரில் உலவுகின்றன. இவற்றில் ‘லேட்டஸ்ட் மாடல் …… ஷூவை பார்த்தியா? அருண் போட்டுகிட்டு வந்தான். ஆவ்சம்’ என்று அகல்யா ஷோபாவுக்கு ஸ்டேட்டஸ் போடுவாள். இதை ஐநூறு பேர் லைக் பண்ணுவார்கள். , அருண், அகல்யா, ஷோபா, லைக் பண்ணும் ஐநூறு பேர் எல்லாரும் கற்பனைப் பாத்திரங்கள். ஃபேஸ்புக்கில் நிஜம் போல உலவுபவர்கள். ஷூ கம்பெனியால் உலவவிடப்பட்டவர்கள். புது ஷூ செய்தி போதுமான அளவு பரப்பப்பட்ட்ட பின்னர்தான் கம்பெனி ஷூவை மார்க்கெட்டுக்கே அனுப்பும் !
இந்த மாதிரி நவீன டெக்னாலஜி சார்ந்த வணிக சாமர்த்தியங்களை தமிழ் வணிக சினிமா அடைந்துவிட்டதா என்று தெரியவில்லை. அதை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பது நிச்சயம்.
கொலைவெறி பாட்டு நாடெங்கும் இளைஞர்களின் தேசிய கீதமாக ஆகிவிட்டடதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. சென்னையில் அது தமிழ்ப்படத்தில் இருக்கும் ஆங்கிலப்பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. வடக்கே ஹிந்தி வானொலி சேனல்களில் ஒலிபரப்பப்படும் முதல் ‘தமிழ்’ப் பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. பாட்டு கேட்கும் இளம் மனங்களில் இடம் பிடிக்க அடிப்படைக் காரணம் கால்தட்டவைக்கும் தாள கதியும் எளிமையான வடிவமும்தான். திரும்பப் பாடிப்பார்க்க வசதியான பாட்டு. உண்மையில் பாட்டு என்றே சொல்ல முடியாது. தாளத்துக்கேற்ப பேசுதல்தான். உச்சாடனம், ஓதுதல் என்பதன் பல்வேறு வடிவங்களாக ராப், ரெகெ போன்றவை உருவாகி வந்திருப்பதன் இன்னொரு தொடர்ச்சி இது.
பாடலின் விஷயம்தான் நம் ஆழ்ந்த கவனத்துக்குரியது. கல்யாணப்பரிசு காலத்திலிருந்து சினிமாவில் இருக்கும் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருத்தன்’ தீம்தான். ஆனால் அறுபது வருட முந்தைய தமிழ்க் காளைக்கும் இன்று தனுஷ் மூலம் சித்திரிக்கப்படும் தமிழ்க் காளைக்கும் கடுமையான வேறுபாடு இருக்கிறது.
இன்று தனுஷ் காட்டும் இளைஞன் விடலையாக, பொறுக்கியாக, ஒரு சமூகப் புல்லுருவியாக இருக்கிறான்.ஆடுகளம் படத்தில் தனுஷ் ஏற்ற பாத்திரம் அவன் குடும்பத்துக்கு எந்த விதத்திலும் பயன்படாத ஒரு மனிதன் பற்றியது. விதவைத்தாய் வறுமையில் புலம்பிக்கொண்டே இருக்கிறாள். அவள் பேசினாலே, “ஸ்பீக்கரை ஆஃப் பண்ணு” என்று விடலை மொழியில் வாயை மூடச் சொல்லுகிறான். தொடர்ந்து பேசும் தாயிடம் வாயை மூடாவிட்டால், ‘கொன்னே போடுவேன்’ என்று கர்ஜிக்கிறான். செவத்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் துரத்தித்துரத்தி மிரட்டி மிரட்டிக் காதலிக்க வைக்கிறான்.முப்பது நாற்பது வயதைக் கடந்தவர்களுக்குத்தான் இந்த படத்தின் சேவல் சண்டை பண்பாட்டு அடையாளம். தனுஷ் என்ற கதாநாயகனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் 14 முதல் 20 வரையிலான எண்ணற்ற இளைஞர்களுக்கு பொறுக்கித்தனமும் பெண் சீண்டலும்தான் படத்தின் செய்தி.
குடும்பப் படமாக, அதாவது குடும்பத்தோடு சென்று கண்டு களிக்க ஏற்றவையாக சென்ற வருடம் பாராட்டப்பட்ட இன்னொரு படம் களவாணி. விமல் நாயகனாக நடித்த இந்தப்படத்தின் நாயகப்பாத்திரம் இன்னொரு பொறுக்கி. துபாயிலிருந்து அப்பா அனுப்பும் பணத்தை அம்மாவிடமிருந்து ஏமாற்றிப் பிடிங்கிக் கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் ஊர் சுற்றி வந்து பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் சைக்கிளைத் தடுத்துப் பிடித்துத் தன்னைக் காதலிக்கும்படி மிரட்டுபவன். இந்தப் படமும் விமலுக்கு பதில் தனுஷ் நடித்திருக்கக்கூடிய ஒரு படம்தான்.
இரு படங்களிலும் பொறுக்கி கதாநாயகர்களால் காதலிக்கும்படி மிரட்டப்பட்ட நாயகிகள் அடுத்த கட்டத்தில் தாமே மனமுவந்து காதலிக்கிறார்கள்.இதுதான் விடலை மனங்களுக்குக் களிப்பூட்டும் செய்தி.
இந்த வரிசையில்தான் ‘கொலைவெறி’பாடலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. செவத்த பெண் ஏமாற்றிவிட்டாள். கறுத்த பையன் புலம்புகிறான். வெள்ளை நிலா கறுப்பு வானத்தில் இருப்பது போல நாம் இருக்க முடியாதா என்று ஏங்குகிறான்.
தன் காதலை ஏற்காதவளைக் கொலை வெறி பிடித்தவள் என்று வர்ணிக்கிறான்.
கொலை வெறி பாடல் வந்திருக்கும் அதே சமயத்தில் வெளியாகியிருக்கும் இன்னொரு தனுஷ் பாடிய பாடல் என் காதல் அது கண்ணீருல.. இதில் பிரபலமான வரிகள் : அடிடா அவளை உதைடா அவளை என்பவைதான். எதற்கு அடிக்கவேண்டும்? உதைக்க வேண்டும்? இவனைக் காதலிக்க அவள் மறுத்துவிட்டதற்குத்தான். விடலை மனங்களுக்கு இன்னொரு செய்தி. உனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கவேண்டாம். அவள் எதற்கு இருக்க வேண்டும்? அடி உதை கொல்லு… தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் ஊற்றுவது தொடர்ந்து நடக்கும் கொடுமையான வன்முறை.
இரு பாடல்களிலும் குடிப்பதும் போதையும் இந்த சோகத்துக்கு மருந்தாக ஆறுதலாக சொல்லப்படுகிறது. இருபதாயிரம் கோடி ரூபாய் விற்பனையை நோக்கி தமிழக அரசின் மது வியாபாரம் படுவேகமாக ‘வளர்ந்து’ கொண்டிருக்கும் நிலையில், ப்ளஸ் டூவிலேயே போதை அடிமைகள் உருவாகிக் கொண்டிருப்பதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எந்த சமூகத்திலும் விடலைகள் இருப்பார்கள். பொறுக்கிகள் இருப்பார்கள். அவர்களை மன முதிர்ச்சியும் பக்குவமும் உடையவர்களாக ஆக்கவே கல்வியும், கலைகளும் ஒரு சமூகத்தால் பயன்படுத்தப்படும். மாறாக அவர்களை ஊக்கப்படுத்துவதை நியாயப்படுத்துவதை கதாநாயக பாத்திரங்களாக்கிக் கொண்டாடுவதை ரசிப்பதை செய்யும் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.
இன்றைய தமிழ் சமூகத்தில் வளரிளம்பருவத்தில் இருக்கும் பையன்களுக்கும் பெண்களுக்கும் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கு பதில் கொலைவெறியோடு அதிகரிப்பதையே கொலைவெறி பாடல் கலாசாரம் செய்கிறது. ஆண்-பெண் உறவு எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதே விடலைப்பருவத்தில் புரியாத சிக்கலாக பலருக்கு இருக்கிறது. செவத்த பெண்ணுக்காக ஏங்கும் கறுத்த பையன் என்ற பிம்பம் இருவருக்கும் ஆபத்தானது. செவப்பும் கறுப்பும் உடல் நிறமும் பிரதான விஷயங்களே அல்ல. மன்ம்தான் முக்கியம், அறிவுதன முக்கியம். அன்புதான் முக்கியம் என்ற பார்வைக்கு பதில் உடல் சார்ந்து மட்டுமே இவை இளம் மனதைத் தூண்டுகின்றன.நம் சமூகத்தின் நிறவெறியின் இன்னொரு வடிவமே கொலை வெறி பாட்டு.
இப்படிப்பட்ட பாடல்கள் ஹிட் ஆவது பற்றி வியாபாரிகள் மகிழ்ச்சியடையலாம். எதிர்காலத் தமிழகம் பற்றி சிந்திக்கும் ஒருவரும் மகிழ்ச்சியடையமுடியாது. பொறுக்கியாக நடிக்கும் தனுஷோ,நடிக்கவைக்கும் ஐஸ்வர்யா, வெற்றிமாறன்களோ தங்கள் அன்றாட நிஜ வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும், உடையவர்களாக வாழ்வதினால்தான் அவர்களால் ‘தொழிலை’ ஒழுங்காகச் செய்யமுடிகிறது. ஆனால் அவர்கள் உலவவிடும் பாத்திரங்கள் தமிழகத்தின் பள்ளிகளிலும், தெருக்களிலும் ஏராளமான இளம் மனங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அலைக்கழிப்பிலிருந்து வழிநடத்த நம்மிடம் முறையான கவுன்சிலிங் அமைப்புகள் எதுவும் இல்லை. வழி காட்டக்கூடிய ஊடகங்களே அவர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம். நாய் விற்ற காசு குரைக்காது என்பதுதான் அரசு முதல் படைப்பாளிகள் வரை தாரக மந்திரமாகிவிட்டது.
- ஞாநி (ஓ பக்கங்கள்)
Tuesday, August 30, 2011
தூக்கு - ஒரு சட்டப்பார்வை
Sunday, August 28, 2011
ராஜீவ் காந்தி படுகொலை - புரியாத புதிர்!!
Sunday, July 31, 2011
இதுக்கு பேருதான் விஞ்ஞான ஊழல்!!
வருமானவரித்துறையை ஆட்டிப்படைப்பதன் மூலம், தி.மு.க.,வினர், குறிப்பாக, கருணாநிதி குடும்பத்தினர் எப்படியெல்லாம் பயனடைந்தனர் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேர்மையான வருமானவரித்துறை அதிகாரிகள், இதுகுறித்து வெளியிட்ட தகவல்கள்:
தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய அமைச்சராவதற்கு, கனிமொழி சிபாரிசு செய்தார் என்பது ஊரறிந்த ரகசியம். இதேபோல், நிதித் துறை பொறுப்பை கையில் வைத்திருப்பவரை சிபாரிசு செய்தவர், தி.மு.க., தலைவரின் மற்றொரு மகளான செல்வி. இவர் சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்துடன், அவருக்கு நிதித் துறை பொறுப்பு பெற்றுத் தரப்பட்டது.இவர் ஒரு வழக்கறிஞர் என்றாலும், தகுதியின் அடிப்படையில், அவருக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. திருவல்லிக்கேனி பெல்ஸ் சாலையில், இவர் மெஸ் ஒன்றை நடத்தி வந்தார். இவரை வைத்து, தி.மு.க.,வினர் எப்படி எல்லாம் பயன் அடைந்துள்ளனர் என்பது, மிகவும் சுவராசியமான தகவல்.
வருமான வரித் துறையை, பணம் சம்பாதிப்பதற்காக, இவர் பயன்படுத்திக் கொண்டார். இவரின் உத்தரவு படி, சில இடங்களில் சோதனை நடத்தப்படும். மேலும், வேறு சில இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கும்போது, இவரது உத்தரவு படி, திடீரென நிறுத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.சி.பி.ஐ., மற்றும் புலனாய்வு அமைப்புகள், இதுகுறித்து விசாரணை நடத்தினால், வருமானவரித்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவது நிச்சயம். காரணம், மந்திரியின் வாய்மொழி உத்தரவு மூலம் தான், சோதனைகள் நிறுத்தப்படுகின்றன.
சோதனை நடத்துவதற்கான வாரண்ட், வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரலிடம் இருந்து பிறப்பிக்கப்படுகிறது. சோதனை நடத்தச் செல்லும் இடம், நபர் பற்றிய விவரங்கள் அனைத்தும் முன் கூட்டியே காண்காணிக்கப்பட்டு, தயார் செய்யப்பட்ட பின்னரே, சோதனை நடத்த உத்தரவிடப்படுகிறது.அப்படி இருக்கும்போது, அமைச்சரிடம் இருந்து வரும் போனின் மூலம், சோதனையை எப்படி நிறுத்த முடியும்? ஆனாலும், ஓய்வு பெற்றதற்கு பின், தமிழகம், கேரளாவில் வங்கி தீர்ப்பாயம் போன்ற முக்கிய பதவி வேண்டும் என்ற ஆசையில், அதிகாரிகள் பலிகடா ஆகி விடுகின்றனர்.
தி.மு.க., தலைவருக்கு பின்னரோ அல்லது காங்கிரசுடனான, தி.மு.க.,உறவு முறிந்து விட்டாலோ, வருமான வரித் துறை, தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என கருதி, தி.மு.க.,வினர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாருக்குமே சந்தேகம் ஏற்படாத வகையில், எந்த வழியிலாவது, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பணத்தை கொண்டு வருவது மற்றும் வரித் தொடர்பான நடவடிக்கைகள் போன்ற முயற்சிகளை செய்கின்றனர். இதன்மூலம், நிதித் துறை, விஞ்ஞானப்பூர்வமாக, கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தின் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர், தன் பதவிக் காலத்தின்போது, அவரது மகன் திருமணத்தை நடத்தினார். திருமணத்துக்கு முன், கட்சியில் உள்ள தன் விசுவாசிகளுக்கு, பல லட்ச ரூபாய்களை விநியோகம் செய்தார். பணத்தை கொடுத்த கையோடு, திருமணத்தின்போது, இந்த பணத்தை, டி.டி.,யாகவோ, பரிசு காசோலையாகவோ, திரும்பச் செலுத்தும்படியும், அவர்களிடம் அறிவுறுத்தினார். வருமான வரித் துறை விசாரணையில் இருந்து, தப்பிக்கும் நோக்கத்துடன் தான் அவர் இப்படிச் செய்தார்.
அதேபோல், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், வரி தொடர்பான பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதற்காக, விவசாய பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ளார். விவசாயத்தின் மூலம், அதிக பணம் கிடைத்ததாக, முறைகேடாக சம்பாதித்த பணத்தை, கணக்கில் கொண்டு வருவது தான் அவரது திட்டம். முறைகேடாக சம்பாதித்த பணத்தின் மூலம், பெரும்பாலான தி.மு.க.,வினர், இன்ஜினியரிங் கல்லூரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளை, பினாமிகள் மூலமாகவோ, சொந்தமாகவோ நடத்தி வருகின்றனர்.
தொழில் கல்வி நிலையங்களுக்கு சொந்தமான அறக்கட்டளைகள், பல கைகளுக்கு மாறுகின்றன. இவ்வாறு மாறும்போது, பணமும் கை மாறுகிறது. அறக்கட்டளை கைமாறுவது தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும்போது, அதுபற்றி தகவல், வருமான வரித் துறையினருக்கு தெரியாமல் இருக்காது.
ஆனால், என்ன செய்வது?
அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளுக்கும் குடும்பங்கள் உள்ளன. அதிகாரிகளின் குழந்தைகளின் கல்வி, மிகவும் முக்கியமானது. கட்சிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம், விரும்பத் தகாத, தொலைதூர இடங்களுக்கு மாற்றப்படுவதை அதிகாரிகள் விரும்புவது இல்லை. ரூபாய் ஏழு அல்து எட்டு விலையுள்ள வாரப் பத்திரிகைக்கு, 15 ரூபாய் மதிப்புள்ள இலவசங்கள் தரப்படுகின்றன. இதன்மூலம், விற்பனை அதிகரித்துள்ளதாக கூறி, பணத்தை கணக்கில் கொண்டு வருகின்றனர். சரி... இலவச பொருட்களையாவது விலை கொடுத்து வாங்கினார்களா என்றால் அதுவும இல்லை. மிரட்டல் நடவடிக்கைகள் மூலம், தொழிற்சாலைகளில் இருந்து, இலவசங்கள் பெறப்பட்டன.
இதே நிறுவனத்தால் நடத்தப்படும் நாளிதழ், அதிகம் விற்பனை செய்யப்படுவதாக காட்டப்படுகிறது. இதன் மூலம், கணக்கில் காட்டப்படாத பணத்தையும், முறைகேடாக சம்பாதித்த பணத்தையும், கணக்கில் கொண்டு வருகின்றனர். உதாரணமாக, நாளிதழின் விற்பனை ஒரு லட்சம் பிரதிகள் என்றால், விலையை குறைத்து விற்பதால், பல லட்சம் பிரதிகள் விற்பனையாவதாக கூறி, பெருமளவு பணத்தை, தினமும் கணக்கில் காட்டுகின்றனர்.
திரைப்பட தயாரிப்பு விவகாரத்திலும், தி.மு.க.,குடும்பத்தினர் இதே வழிமுறைகளைத் தான் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு வாரமும், திரைப்படங்கள் வெளியாவதை அடுத்து, அவற்றை வெளியிடுவதற்காக, பெரிய அளவில் தியேட்டர்கள் முன் கூட்டியே, "புக்' செய்யப்படுகின்றன. பெரிய அளவு விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. கொள்ளையடித்த பணத்தை வெள்ளையாக்கும் நோக்கத்துடன் தான் இவைகள் செய்யப்படுகின்றன.
இவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு, "கால்ஷீட்' கொடுக்காத நடிகர், நடிகைகளின் வீடுகளில், அமைச்சரின் உத்தரவின் பேரில், சோதனை நடத்தப்படுகிறது. திரைப்படத் துறையை அழிக்க வேண்டும் என்பது, தி.மு.க.,வின் நோக்கம் இல்லை... ஆனால், இவர்களில் செயல்களால் அது தான் நடந்தது . இதனால் கொந்தளித்த, சினிமா துறையினர் அனைவரும், தி.மு.க., படு தோல்வி அடைய காரணமாக இருந்தனர். "எந்திரன்' திரைப்படம் தயாரிப்பு மற்றும் வெளியீடு விவகாரத்திலும் இது தான் நடந்தது. இதன்மூலம், அவர்களின் கறுப்பு பணம், வெள்ளையாக்கப்பட்டது.
இதுபோன்ற நிதி ஆதாரங்கள் உருவாக்கப்படுவதன் மூலம், விமான நிறுவனத்தை தங்களுடன் இணைத்துக் கொள்வதோ, வேறு நிறுவனங்களை கையகப்படுத்துவதோ, அவர்களுக்கு எளிதாகி விடுகிறது.இவர்களின் கட்சியை சேர்ந்தவரே, நிதித் துறை இணை பொறுப்பு வகிக்கும்போது, இவர்களை எதிர்த்து யார் கேள்வி கேட்க முடியும். கட்சிக்காகவும், கட்சியை சார்ந்தவர்களுக்காகவும் தான், அவர் வேலை பார்க்கிறார். இதற்காக, அரசின் பணம், அவருக்கு சம்பளமாகவும் கிடைக்கிறது.கடந்த ஏழு ஆண்டுகளாக, அவர் பதவி வகித்து வருகிறார். இந்த கால கட்டத்தில், அமைச்சகத்துக்காக அவர் என்ன செய்துள்ளார்? அவரின் பங்கு என்ன? குறிப்பிட்ட, "டிவி' குழுமம் தான், இதனால் பெரிய அளவில் பயன் அடைந்துள்ளது."சன் டிவி' செயல் இயக்குனர் மீது சேலத்தைச் சேர்ந்த ஒருவர் போலீசில் மோசடி புகார் கொடுத்தார். அடுத்த சில நாட்களில் அவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தி.மு.க., ஆட்சியில் இருந்த வரை யாருமே இந்த குடும்பத்தினர் செயல்களை எதிர்த்து போலீஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது. காரணம், போலீஸ் இயந்திரம் முழுவதும் இவர்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
வருமானவரித்துறையில் நேர்மையான, மனச்சாட்சிக்கு பயந்த அதிகாரிகள் உள்ளனர். நடக்கும் செயல்களை எல்லாம் அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அமைச்சர் பதவி இழந்தாலோ, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி முறிந்தாலோ, இழந்த கவுரவத்தை மீட்கவும், துன்புறுத்திய மந்திரியை பழிவாங்கவும், வருமானவரித்துறைக்கு அதிக வேலை வந்து விடும்.இவ்வாறு, வருமானத்துறையில் உள்ள, பல நேர்மையான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tuesday, June 21, 2011
ஐபில் கிரிக்கெட்டும் ஸ்பெக்ட்ரம் ஊழலும்!
Sunday, June 5, 2011
திமுக தோற்றது ஏன்?
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு என்றுமே தோல்வி இல்லை. 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்திருப்பதற்கு காரணம் தி.மு.க. தான் என்று சொன்னது தி.மு.க.வை அல்ல. திரு.மு.கருணாநிதி என்பவரைத்தான். அவரது பெயரை சுருக்கினால் தி.மு.க. தானே!
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி திருக்குவளை மு.கருணாநிதி என்று சுருங்கிப் போனதால் வந்த விளைவுதான் இந்த படுதோல்வி.
உடனே, தி.மு.க.வின் உடன்பிறப்புகளுக்கு ரத்தம் கொதிக்கலாம். கட்சியை வளர்த்ததே கலைஞர்தான். அவரைப் போய் சொல்லுகிறாயே என்று வாயில் வந்ததை எல்லாம் வெளியே துப்புவதற்கு முன்பு....
கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு, துப்புங்கள்.
தி.மு.க. 1949ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அதை உருவாக்கிய ஐம்பெரும் தலைவர்கள் அறிஞர் அண்ணா. நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், மதியழகன், ஈ.வி.கே.சம்பத். இந்த ஐந்து பேர் தான் கட்சியை தொடங்கியவர்கள். அதில் பேராசிரியர் அன்பழகனும் இல்லை. கலைஞர் கருணாநிதியும் இல்லை. கட்சி தொடங்கப்பட்ட சில நாட்கள் கழித்து தான் தி.க.விலிருந்து விலகி, தி.மு.க.வில் கருணாநிதி தன்னை இணைத்துக் கொண்டதாக திராவிட வரலாற்றில் தெளியவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க.வை தனக்குப் பிறகு கட்டி காப்பாற்ற கருணாநிதி வருவார் என்றும் அண்ணா நினைத்திருக்க மாட்டார். தி.மு.க. மீது அழியாத கறையை கருணாநிதி ஏற்படுத்துவார் என்பதையும் அண்ணா நினைத்திருக்க மாட்டார்.
கலைஞர் கருணாநிதி. 14 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்தவர். கருணாநிதி ஒரே நாளில், தி.மு.க.வின் கோபுர உச்சிக்கு வந்துவிடவில்லை. ஆனால், தி.மு.க. என்ற கோபுரம் கட்டிய ஒவ்வொரு கற்களிலும் கருணாநிதி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.
தி.மு.க. தொடங்கிய போது, அவர் ஒரு சாதாரண தொண்டர். தி.க.வில் பற்றுக் கொண்டவர். பெரியார் நடத்தும் குடியரசு இதழில் வேலை பார்த்தவர். பின்னர் சினிமா பக்கம் சென்று கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தவர்.
தி.மு.க.வின் முதல் கூட்டம் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் நடந்த போது, சேலம் மார்டன் தியேட்டர்ஸில் கருணாநிதி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் அவருடம் இருந்த கவிஞர் கண்ணதாசனும், தி.மு.க.வின் முதல் கூட்டத்தை பார்க்கவும் அண்ணாவின் பேச்சை கேட்கவும், ரயில் ஏறி வந்தனர். கூட்டம் முடிந்ததும் அன்று இரவு, பத்தோடு பதினொன்றாக அண்ணாவை சந்தித்துவிட்டு வந்தவர்தான் கருணாநிதி. சில நாட்களில் அவருக்கு தி.மு.க.வின் பிரசாரக் குழுவில் இடம் கிடைத்தது. காரணம், திராவிடக் கழகத்தில் மேடைப் பேச்சாளராக வலம் வந்தவர் என்பதை அண்ணா அறிந்திருந்தார்.
கட்சியில் இணைத்துக் கொண்ட பிறகு, தி.மு.க.வில் அண்ணாவை அடுத்து பம்பரமாக வேலை செய்தவர் கருணாநிதி மட்டுமே.
அண்ணாவைப் போல அடுக்கு மொழியில் பேச...
அண்ணாவைப் போல கரகர குரலில் பேச...
அண்ணாவைப் போல மக்களின் அன்றாட பிரச்னைகளை நுணுக்கமாக பேச...
கருணாநிதியால் மட்டுமே முடிந்தது.
அண்ணாவின் கூட்டத்துக்கு கூடும் கூட்டத்திற்கு அடுத்தபடியாக, கருணாநிதிக்கு கூட்டம் கூட தொடங்கியது. கட்சியின் ஐம்பெரும் தலைவர்கள் எல்லாரும் சென்னையை மையமாக கொண்டு அரசியல் செய்தார்கள். ஆனால், கருணாநிதி மட்டும் தான் தமிழ்நாட்டின் எல்லா பகுதிக்கும் சென்று அரசியல் செய்தார். சினிமாவுக்கு வசனம் எழுதி புகழ் பெற்றிருந்தால், அவருக்கு மற்ற தலைவர்களை விட வரவேற்பு இருந்தது மறுக்க முடியாத உண்மை.
தி.மு.க.வில் சோழ மண்டல தளபதியாக இருந்தாலும், அண்ணாவின் தம்பிகளில் ஆறாவது ஏழாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. ஒரே வருடம் தான், 1950வது வருடத்திலேயே, அண்ணாவின் தளபதியாக மாறினார் கருணாநிதி. சில நேரத்தில் அண்ணாவை கூட நெருங்க முடியாது. எந்த நேரத்திலும் கருணாநிதியை அணுகிவிடலாம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் கருணாநிதி கெட்டிக்காரர்.
கூட்டத்துக்கு கூட்டம் வசூல் வேட்டை நடத்தி, அண்ணாவை மெய் சிலிர்க்க வைப்பார். கட்சிக்குள் பிரச்னை வரும்போது, அண்ணாவிடம் சொல்லாமலே சமாளித்துவிட்டு, பிறகு அண்ணாவிடம் சொல்லுவார். கிட்டத்தட்ட அண்ணாவுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் தான் ஒரு தூதராக, பாலமாக தன்னை காண்பித்துக் கொண்டார்.
முதல் முறையாக தி.மு.க. தேர்தலில் போட்டியிடப் போகிறது. அக்கூட்டத்தில் அண்ணாவுக்கு முன்பாக பேசி, அரங்கத்தை அதிர வைத்தார். அதுதான், கருணாநிதியை, கட்சிக்கு யார் என்று காட்டியது. அக்கூட்டத்தில், கருணாநிதியை அண்ணா வானாளவ புகழ்ந்து தள்ளிவிட்டார்.
அப்படி என்ன பேசிவிட்டார்.
வாழ்வு மூன்று எழுத்து.
வாழ்வுக்கு தேவையான பண்பு மூன்று எழுத்து.
பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து.
அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து.
காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து.
வீரம் செல்லும் களம் மூன்று எழுத்து.
களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து
அந்த வெற்றிப்பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் அண்ணா மூன்று எழுத்து.
-இதுதான் அன்றைக்கு ஹைலைட்.
அரசியலில் இருந்துக் கொண்டே, சினிமாவுக்கு அவர் எழுதிய வசனங்கள் அவரை இன்னும் பிரகாசிக்கச் செய்தன.
1957ம் ஆண்டு நடந்தத் தேர்தலில், கருணாநிதி போட்டியிட்டத் தொகுதி குளித்தலை. அவர் எதிர்பார்த்த தொகுதி, நாகப்பட்டினம். ஆனால், அவர் சளைத்தாரா. குளித்தலையில் தி.மு.க. தலைகள் என்று கணக்கெடுத்தால், பத்து கூட தேறாது. அத்தேர்தலில் தி.மு.க. 15 தொகுதிகளில் தேறியது. அதில் ஒருவர் கருணாநிதி.
அன்றிலிருந்து 2011 வரை அவரது தனிப்பட்ட தேர்தல் வாழ்க்கையில் தோல்வியே இல்லை. தேர்தல் பணியில், பிரசாரத்தை விட எல்லா வழிமுறைகளையும் கையாளக் கற்று கொண்டிருந்தார் கருணாநிதி. 1959ம் ஆண்டு சென்னையில் நடந்த மாநகராட்சித் தேர்தலில், தி.மு.க. 90 இடங்களில் போட்டியிட்டது. இதில் 20 முதல் 25 பேர் ஜெயிக்கலாம் என்று அண்ணா கருதியிருந்த நேரத்தில், கருணாநிதியும் கண்ணதாசனும் களத்தில் இறங்கி 45 பேரை ஜெயிக்க வைத்தனர். ஆனால், கருணாநிதிக்கு மட்டும் அண்ணா கனையாழி பரிசளித்தார்.
சில வருடங்களில், இந்தி போராட்டம். இந்திய அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எத்தனையோ பேர் தீக்குளித்தனர். ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தனர். அவர்கள் எல்லாரையும் விட கருணாநிதிக்கு தான் பெரிய பெயர் கிடைத்தது.
இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கருணாநிதிக்கு பாளையங்கோட்டை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த பாளையங்கோட்டை சிறை தண்டனை தான் கருணாநிதிக்கு தி.மு.க.வில் பெரும் வரவேற்பை கொடுத்தது. அண்ணாவின் முதல் தளபதியாக வலம் வரத்தொடங்கினார்.
ஆனால், அண்ணாவுக்கு இணையாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள மாட்டார். ஏன் தெரியுமா. அண்ணாவுக்கு இணை என்று தன்னை நினைத்து அரசியலில் தோற்றுப் போனவர் சம்பத். அந்த பாடத்தை கருணாநிதி உணர்ந்திருந்தார்.
கட்சியில் தனக்கு எதிர் கோஷ்டிகள் எக்கசக்கமாக இருந்தாலும், அவர்களை எதிரியாக பாவிக்காமல், அவர்களை கோபித்துக் கொள்ளாமல் சாதுர்யமாக இருந்து பழகி, அண்ணாவிடம் நல்ல தொண்டனாகவே முன்னிறுத்திக் கொண்டவர் கருணாநிதி. அண்ணாவும், கருணாநிதியிடம் கோபத்தை காண்பித்தாலும், அவரை அரவணைத்துக் கொள்வார்.
காரணம், நிதி வசூலிப்பதில் கருணாநிதிக்கு இணை கருணாநிதி. நிதி வசூலிக்க கருணாநிதி போகாத இடம் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களுக்கு சென்று கூட்டத்தை கூட்டி வசூலித்துவிடுவார். தேர்தல் நிதியா... பத்து லட்சம் அண்ணா கேட்டால், 11 லட்சத்தை தருவார் கருணாநிதி.
1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. கருணாநிதிக்கு பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத்துறை கிடைத்தது. கட்சியில் மட்டுமல்ல, அரசு அதிகாரத்திலும் கருணாநிதியின் வேகம், மற்ற அமைச்சர்களை கிடுகிடுக்க வைத்தது.
1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அறிஞர் அண்ணா கண் மூடினார். தி.மு.க. தொடங்கிய நாளிலிருந்து அண்ணாவுக்கு அடுத்த தலைவராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். அவர்தான் கட்சியின் பொதுச் செயலாளர்.
'தம்பி வா... தலைமையேற்க வா..: என்று அண்ணாவே நாவலரை அழைத்தவர். ஆனால், அவரா அடுத்த முதல்வராக வந்தார். கருணாநிதி களத்தில் குதித்தார். வென்றார். முதல்வரானார். 45 வயதுதான், தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, அதுவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்த முதல் முதல்வர் கருணாநிதி.
அன்று முதல் கட்சியின் நாடியும் அவரே. நரம்பும் அவரே. எல்லாமும் அவரே. அவர்தான் தி.மு.க.வின் உயிராகவும் மாறினார். ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து, மக்களையும் கவர்ந்தார். தி.மு.க. உறுப்பினர்கள் என்று அல்லாது, தி.மு.க. அபிமானிகள் என்ற கூட்டத்தை உருவாக்கவும் செய்தார். அரசு ஊழியர்கள், பொதுமக்களில் பலர் தி.மு.க. ஆதரவாளர்களாக மாற்றியத்தில் கருணாநிதிக்கு பெரும் பங்குண்டு.
ஆனால், அண்ணாவிடம் பாடம் படித்த கருணாநிதி, அண்ணா வழி நடக்கவில்லை. பெரியார் போல நடந்து கொண்டார்.
பெரியார் எந்த பொறுப்பையும் யாருக்கும் தரமாட்டார். அதனால், அடுத்த நிலை தலைவர்கள் உருவாகவே முடியவில்லை. அதன் காரணமாகத்தான், கருணாநிதி தி.க.விலிருந்து விலகி அண்ணா ஆரம்பித்த தி.மு.க.வுக்கு வந்தார்.
ஆனால், அண்ணா எப்படி நடத்தினார். எல்லாருக்கும் பொறுப்புக் கொடுத்தார். எல்லாரையும் அரவணைத்தார். அதனால் தானே, கருணாநிதி வளர் முடிந்தது. முதல்வராக முடிந்தது. தனது அதிகார முடிவால், தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆரை தூக்கி எறிந்தார்.
1977ம் ஆண்டு ஆட்சி பொறுப்பு போனதும், கட்சியை கலகலக்கவில்லை. கட்டுக்கோப்பாய் தி.மு.க. இருந்தது. கட்சியை தாங்கிப்பிடித்தவர் கருணாநிதி மட்டுமே. 1977ம் ஆண்டில், கருணாநிதியை விட்டு எம்.ஜி.ஆரை நோக்கி ஓடியவர்கள் பலர். தான் முதல்வராக வருவதை தடுத்த நாவலர் கூட எம்.ஜி.ஆர். பக்கம் சென்றுவிட்டார்.
14 வருடங்கள் கழித்து, 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. இரண்டு ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார் கருணாநிதி. மீண்டும் 2001ல் தோல்வி. 2006ல் மீண்டும் ஆட்சி.
இப்படி தி.மு.க.வை ஆறுமுறை அரியணை ஏற்றி, அதில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. இச்சாதனையை எந்த அரசியல் தலைவரும் நிகழ்த்தியது கிடையாது.
72 ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இருக்கிறார்.
ஐந்து முறை முதல்வராக இருந்தவர்.
அரசியல் சாணக்கியர் என்று மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்டவர்.
தி.மு.க.வை ஆரம்பித்த போது, மேடைக்கு எதிரே இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தவர் கருணாநிதி. ஆனால், 1969ம் ஆண்டுக்கு பிறகு நாற்பது ஆண்டுகளாக தி.மு.க.வின் காவல் தெய்வம் கருணாநிதி மட்டுமே. கருணாநிதியின் அரசியலும் தமிழ்நாட்டின் வரலாறும் ஐம்பது ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்தவை. அவர் இல்லாமல் அந்த ஐம்பது
ஆண்டு கால வரலாற்றை தமிழ்நாட்டில் எழுதவே முடியாது.
எத்தனை சறுக்கல்கள்... எத்தனை இடையூறுகள்... இப்படி ஒரு சோதனைகள் வேறு எந்த தலைவருக்காவது நிகழ்ந்திருந்தால், அவர் அரசியலை விட்டு வெளியேறி இருப்பார் அல்லது வெளியேற்றப்பட்டு இருப்பார்.
ஆனால், கருணாநிதி அரசியலில் வெளியேறவும் இல்லை. வெளியேற்றவும் முடியவில்லை. காரணம், அவரது தன்னம்பிக்கை. அவரது திறமை.
தி.,மு.க.வின் எல்லா பெருமைக்கும் காரணமான கருணாநிதியே, இன்று தி.மு.க.வின் சிறுமைக்கு காரணமாகி இருக்கிறார் என்றால் அது தவறேதும் இல்லை.
2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
இதற்கு என்ன காரணம் என்று விவாத மண்டபத்தில் கேள்வி எழுப்பி இருந்தோம்.
1. ஊழல்
2. மின்வெட்டு
3. விலைவாசி உயர்வு
4. குடும்ப ஆட்சி
5. ரவுடியிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து
6. கனிமொழி.
ஆனால், தி.மு.க.வின் இந்த அளவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு, மேற்கூரிய ஆறு காரணிகள் சிறு சிறு கூறுகள் மட்டுமே.
தி.மு.க.வின் படுதோல்விக்கு முழு காரணம் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி மட்டுமே என்று தமிழ் லீடர் கருதுகிறது.
எத்தனை பெரிய அரசியல்வாதி. 70 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை கலக்கிக் கொண்டிருப்பவர். ஐந்து முறை அரசாங்க இயந்திரத்தை இயக்கியவர். இவருக்கா தெரியாது, 2011ம் ஆண்டில் நடக்கும் தேர்தலில் தி.மு.க. தோற்கப் போகிறது என்பது கருணாநிதிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததுமே, தி.மு.க. கொண்டு வந்த நலத்திட்டங்கள் எல்லாம் நல்லத்திட்டங்கள். இலவச டிவி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கேஸ் ஸ்டவ், கலைஞர் மருத்துவ திட்டம்.... இப்படி வந்த திட்டங்களால் தி.மு.க.வை யாரும் தோற்கடிக்க முடியாது என்ற நினைப்பு வந்தது தப்பில்லை.
ஆனால், தி.மு.க. தோற்கடிக்கப்பட்டுவிட்டதே எப்படி?
கருணாநிதி என்ற தி.மு.க.வின் தூண் தான் இந்த தோல்விக்கு ஒட்டு மொத்த பொறுப்பு!
கருணாநிதி என்பவர் தமிழ்நாட்டின் மன்னர். அவர் ஆட்சியை எப்படி நடத்த வேண்டும். தனது ஆட்சிக்கு பங்கம் வரக்கூடாது. குறிப்பாக தனக்கும் தனது குடும்பத்துக்கும் அவச்சொல் வந்துவிடக்கூடாது என்று கருதி ஆட்சி புரிந்திருக்க வேண்டும்.
சாணக்கியரின் நீதி நூல் எனப்படும் அர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது.
பாகம்:1- அத்தியாயம் 17:
அருகிலுள்ள எதிரிகளிடம் இருந்தும் தூரத்திலுள்ள எதிரிகளிடம் இருந்தும் தன்னை காத்துக் கொள்ளும் மன்னனே நாட்டை காப்பாற்றத்தக்கவன். முதலில் மனைவியிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் மன்னன் தன்னை காத்துக் கொள்ள வேண்டும்.
-இது கருணாநிதி அறியாதவரா?
அதே அத்தியாயத்தில், "மன்னன் தன் பிள்ளைகளை அவர்கள் பிறந்தது முதலே, கண்காணிக்க வேண்டும். ஏனென்றால், அரச குமார்கள் நண்டு போன்றவர்கள். பெற்றவர்களையே விழுங்கிவிடுவார்கள். அரச குமார்களை இஷ்டம் போல இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்குமாரு செய்வது உயிருடன் கொல்வதற்கு சமம், என்கிறார் சாணக்கியர்.
-அதுதான் இன்று தி.மு.க.வில் நடந்துக் கொண்டிருக்கிறது.
பாகம்-8- அத்தியாயம்-4:
மக்களிடம் கலகம். அரச குடும்பத்தில் கலகம் இரண்டில் அரச குடும்பத்தில் கலகமே கொடியது. மக்களிடையே ஏற்படும் கலகத்தில் அவர்கள் தலைவனை வசப்படுத்திக் கொள்வதின் மூலமாகவும் கலகத்துக்கான காரணங்களை ஆராய்ந்து அதை விலக்குவதாலும் கலகத்தை ஒழித்துவிட முடியும். கலக்கார மக்கள் தங்களிடம் பரஸ்பரம் உள்ள பகையால், மன்னனுக்கு உதவியே செய்வார்கள்.
ராஜ குடும்பத்தில் கலகம் ஏற்பட்டால், அது மக்களின் துன்பத்துக்கும் அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடும். இந்த கலகத்தை நீக்குவதற்கு இருமடங்கு சிரமப்பட வேண்டியிருக்கும் என்கிறார் சாணக்கியர்.
இன்று தி.மு.க.வுக்கு என்ன நடந்தது. தி.மு.க.வுக்கு அவப்பெயர் எப்படி வந்தது. முழுக்க முழுக்க குடும்பத்தால் தான். அந்த குடும்பத்தால், நடக்கும் கூத்துக்கள் ஒவ்வொன்றையும் கருணாநிதி அனுமதித்ததால்...
ஒரு தலைவன், ஒரு வாரிசை கொண்டு வரலாம். ஆனால், கருணாநிதியின் எத்தனை வாரிசுகள் அரசியலில் கோலோச்சின.
ஸ்டாலின். இவரை மக்கள் ஏற்றுக் கொண்டதாகவே வைத்துக் கொள்வோம்.
ஸ்டாலினுக்கு தலைவராக தகுதி இருக்கிறதோ இல்லையோ, அவரை தலைவராக்க முயற்சிகள் நடந்தன.
ஆனால், ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி வெளிப்பட்ட போது, அவரை அடக்கி வைத்திருக்க வேண்டும். அடுத்து பேரன் தயாநிதி மாறனுக்கு மத்தியில் பதவி. அதன் பின்னர், கனிமொழிக்கு எம்.பி. பதவி. அடுத்து அழகிரிக்கு மத்தியில் பதவி. இப்படி குடும்பத்தினரை கொண்டு வந்து தி.மு.க.வை அழிக்க முற்பட்டது சரியான செயல்பாடா?
கட்சியில் கருணாநிதியை யாராலும் எதிர்க்க முடிந்ததா? அவருக்கும் இருக்கும் துணிச்சலும், சாதுர்யமும் யாருமே எதிர்க்க முடியவில்லை. எதிர்த்தவர்கள் எல்லாம் செல்லாக் காசாக்கியவர் தானே கருணாநிதி.
ஆனால், அழகிரி எதிர்த்த போது என்ன செய்தார் கருணாநிதி.
தயாநிதி மாறன் எதிர்த்த போது என்ன செய்தார் கருணாநிதி.
குடும்பத்தினர் எதிர்த்த போது, மண்டியிட்ட காரணம் என்ன?
கண்கள் பனித்தது: இதயம் இனித்தது. ஆனால் அதிகாரமும் ஆட்சியும் மக்களுக்கு கசந்ததே? அது புரியாமல் போனதே கருணாநிதிக்கு.
இதைவிட ஓர் உண்மை கருணாநிதிக்கு புரியாமல் போனதை ஏற்கவே முடியாது.
அதுதான் 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்.
2006ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுக்குள் நடந்த இடைத்தேர்தலில், பணத்தை வாரி இறைத்து தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த பாணியை கடைப்பிடித்து, 2009ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகள் 28. அ.தி.மு.க. 12 தொகுதிகளை பிடித்தது.
தமிழ்நாட்டில் இருக்கும் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 12 தொகுதிகளை பிடித்தது மட்டுமல்ல... வடசென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய ஆறு தொகுதிகளில் தி.மு.க. பெற்ற வாக்கு வித்தியாசங்களை கருணாநிதி அலசி ஆராயவில்லையா?
இந்த ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க.வைவிட சற்று கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் தான் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. குறிப்பாக வடசென்னையில் 19 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசம். மத்திய சென்னையில் 33 ஆயிரம் வாக்கு வித்தியாசம். ஸ்ரீபெரும்புதூரில் 24 ஆயிரத்து 675 ஓட்டுக்கள். நாகப்பட்டினத்தில் 46 ஆயிரத்து 745 ஓட்டுக்கள். சிவகங்கையில் 2 ஆயிரத்து 851 ஓட்டுக்கள்.
இந்த ஆறு தொகுதிகளில் தே.மு.தி.க. வாங்கி ஓட்டுக்கள் இங்கே மாறி இருந்தால், அ.தி.மு.க. 18 தொகுதிகளை வெற்றி பெற வாய்ப்பு. அப்படிப் பார்த்தால், 2009ம் ஆண்டு நடந்தத் தேர்தலில் தி.மு.க. 22, அ.தி.மு.க. 18 என்ற நிலை ஏற்பட்டிருக்கும். இது தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றி இல்லை.
அடுத்து, 2010ம் ஆண்டு பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவு என்ன சொன்னது?
தி.மு.க. : 77,669
பா.ம.க. : 41,285
அ.தி.மு.க.: 26,787
தே.மு.தி.க: 11406
-இதுதான் கட்சிகளின் ஓட்டு பெற்ற நிலவரம்.
அதாவது, தி.மு.க. பெற்ற ஓட்டுக்களை விட எதிர்கட்சிகள் வாங்கிய ஓட்டுக்களை சேர்த்துப் பார்த்தால், 79 ஆயிரத்து 478 ஓட்டுக்கள் வருகின்றன. ஆளும் கட்சிக்கு எதிராக, எண்ணற்ற நல்லத்திட்டங்களை செய்தும், கிட்டத்தட்ட 80 ஆயிரம் ஓட்டுக்கள் எதிராக விழுந்திருக்கின்றன.
இதிலே இன்னொரு விஷயம்தான் முக்கியம். பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு தி.மு.க. செய்த செலவு 46 கோடி ரூபாய். எல்லா நலத்திட்டங்களையும் செய்து 46 கோடி கொடுத்து பெற்ற வெற்றி. இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரியாதது அல்ல.
இந்த நிலைமையில் ஸ்பெக்டரம் ஊழலுடன், குடும்ப சுமை கொண்ட அரசியல் நடத்திக் கொண்டிருந்த கருணாநிதிக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று வெறி பிடித்தது போல பேட்டிக் கொடுக்கிறார் என்றால், அவரை என்னவென்று சொல்வது?
இதையெல்லாம் அறிந்துக் கொள்ள முடியாத சாணக்கியரா நீங்கள் கருணாநிதி?
119 தொகுதிகளில் போட்டியிட்டு, 110 இடங்களை பிடித்துவிடுவோம் என்று உளவுத்துறை சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த சாணக்கியரா நீங்கள் கருணாநிதி?
உங்களை சுற்றி இருந்த அமைச்சர்களே, நம்பிக்கை இல்லாத சூழலிலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்துடும் என்று நீங்கள் உங்களையே தேற்றிக் கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்ட சாணக்கியரா நீங்கள் கருணாநிதி.
சாணக்கியராக இருந்த நீங்கள், 2006ம் ஆண்டு முதல் சறுக்கத் தொடங்கிய விளைவுதான் இது.
அதுவும், பதவி ஆசையில் சக்கர நாற்காலியில் அமர்ந்த போதே நீங்கள் கட்சியிலிருந்து ஒதுங்கி இருந்தால், உங்களை யாரும் ஏமாற்றி இருக்க மாட்டார்கள்.
நீங்களும் ஊழல் குடும்பத்தின் தலைவன் என்ற அவப்பெயர் பெற்றிருக்க மாட்டீர்கள்.
என்ன செய்வது?
அறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சி தி.மு.க. அழியக் கூடாது என்று நினைத்தால்,
முதலில் நீங்கள் தலைவர் பதவியை தூக்கி எறியுங்கள்.
இரண்டாவது கட்சியில் பதவியில் இருக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றுங்கள்.
வேண்டுமானால், ஸ்டாலினை மட்டும் வைத்துக் கொள்ள கட்சியிடம் அனுமதி கேளுங்கள்.
இதை செய்யாவிட்டால், தி.மு.க.வுக்கு, 2016ம் ஆண்டு நடக்கும் அடுத்தத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை இல்லை! இல்லை!
கடைசியாக,
இத்தேர்தலில் தி.மு.க. இன்னொரு பாடத்தையும் உணர வேண்டும். தி.மு.க.வில் உறுப்பினர்கள் இல்லாமல் அபிமானிகளாக வந்த பொதுமக்கள் ஏராளம் ஏராளம். அந்த ஏராளத்தில் இருக்கும் வாக்கு வங்கி என்பது சாதாரணமானது அல்ல. அவர்கள் எல்லாம் தி.மு.க.வை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்றால், தி.மு.க.வில் இருக்கும் குடும்ப ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்பது தான் பெரும்பாலான வாசகர்களின் கருத்துக்களாக இருந்தது.
நன்றி: தமிழ்லீடர்