இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றத்தில் ரயில்வே எனப்படும் புகையிரதம் எனப்படும் தொடர்வண்டித்துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதிய ரயில் திட்டங்கள் பற்றி ஒரு ரயில் ரசிகனின் வேண்டுகோள்கள். ஊர்ப்பாசம் காரணமாக கோயமுத்தூருக்கு தனி கோரிக்கை பட்டியல் கடைசியில்...
தமிழ்நாட்டுக்கு..!
நாட்டிலேயே நிலப்பரப்புக்கு ஏற்ற ரயில் வசதிகள் இல்லாத மாநிலம் தமிழகம் தான். மின்மயமாக்கம், இரட்டை பாதை, அகல பாதை, புதிய ரயில்கள் என்று அனைத்திலும் புறக்கணிக்கபடுவது தமிழ்நாடு என்பது காலங்காலமாக நமது சாபக்கேடு.
* கோலங்கள் தொடர் போல முடிவில்லாமல் இழுத்து கொண்டிருக்கும் விழுப்புரம் - மயிலாடுதுறை, வேலூர் - விழுப்புரம், போத்தனூர் - திண்டுக்கல், திருவாரூர் - காரைக்குடி, விருதுநகர் - மானாமதுரை சேலம் - கரூர், தாம்பரம் - விழுப்புரம், திருவள்ளூர் - அரக்கோணம் (எத்தன...!) போன்ற அகல மற்றும் புதிய ரயில்பாதை திட்டங்களை உடனடியாக முடிக்கவேண்டும்.
* சேது, சோழன், கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திரும்பவும் அதன் பழைய வழித்தடங்களில் இயக்கப்பட வேண்டும்.
* "போட் மெயில்" (Boat Mail) அதன் பழைய வழித்தடத்தில் இயக்க வேண்டும். (போட் மெயில் பற்றிய குறிப்புகள் இன்னோரு பதிவில்)
* திருநெல்வேலி - பெங்களூர் இடையே தினசரி இரவு ரயில். ராமேஸ்வரம் - பெங்களூர் (திருச்சி வழியாக) தினசரி இரவு ரயில்.
* தூத்தூக்குடி / நாகர்கோவில் - ஹைதராபாத் (சென்னை வழியாக) தினசரி ரயில். மதுரை - சென்னை சதாப்தி ரயில்.
* செங்கோட்டை - திருப்பதி (மதுரை, திருச்சி, திருவண்ணாமலை வழியாக) தினசரி பகல் ரயில். சென்னை சென்ட்ரல் - திருவண்ணாமலை (காட்பாடி வழியாக) தினசரி பாசஞ்சர்.
* கோவை, மதுரையில் புறநகர் மின்சார ரயில் சேவை.
* அனைத்து பாதைகளும் மின்மயமாக்கப்பட வேண்டும்.
* சென்னை - பெங்களூர் இடையே ஓடும் ஏதாவது ஒரு ரயிலை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும்.
* சென்னையில் இருந்து பழனிக்கு கோவை அல்லது திண்டுக்கல் வழயாக புதிய ரயில். நாகப்பட்டினம் / மயிலாடுதுறை - நாகர்கோவில் புதிய இரவு ரயில்.
* கன்னியாகுமரியில் காலையில் கிளம்பி சென்னைக்கு மாலை 6 மணியளவில் வந்து சேருமாறு பகல் நேர ரயில் (சென்னையில் இரவு வேலைக்கு செல்லும் இளைஞர்களின் வேண்டுகோள்..!)
இனி கோயமுத்தூருங்க...
* சென்னை, பெங்களூர், மும்பை, தில்லி போன்ற ஊர்களில் இருந்து கேரளா செல்லும் பல ரயில்கள் கோயமுத்தூரை புறக்கணித்துவிட்டு போத்துனூர் வழியாக செல்வது முதலில் தடுக்கப்பட வேண்டும்.
* கோயமுத்தூர் - பெங்களூர் இடையே இரவு நேர தினசரி ரயில், கோவை - ராமேஸ்வரம் இடையே பொள்ளாச்சி, பழனி வழியாக தினசரி ரயில்.
* கோவை - செங்கோட்டை இடையே இரவு ரயில். கோவை - புதுச்சேரி (சேலம், விருத்தாசலம் வழியாக) புதிய ரயில். கோவை - திருப்பதி இடையே வாரம் இருமுறை ரயில்.
* கோவை - ஹைதராபாத் புதிய ரயில். சேலம் / கோவையில் இருந்து மங்களூர், கோவா வழியாக மும்பைக்கு புதிய ரயில்.
* திருவனந்தபுரம் - பாலக்காடு இடையே ஓடும் அமிர்தா எக்ஸ்பிரஸ், கோவை அல்லது மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும்.
* கோவை - பொள்ளாச்சி, கோவை - மேட்டுப்பாளையம், கோவை - பாலக்காடு, கோவை - திருப்பூர் இடையே புறநகர மின்சார ரயில் சேவை.
* கோவையில் உள்ள மற்ற ரயில் நிலையங்களான போத்தனூர், இருகூர், பீளமேடு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, துடியலூர் போன்ற நிலையங்களை மேம்படுத்தி போக்குவரத்து வசதிகளை அதிகபடுத்த வேண்டும்.
* புதிதாக கணபதி, ஒண்டிபுதூர், ஆவாராம்பாளையம், சேரன் நகர், உக்கடம் இன்ன பிற ரயில் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும்.
* கோவை - மதுரை, கோவை - கோழிக்கோடு, கோவை - எர்ணாகுளம் தினசரி பகல் நேர இன்டர்சிட்டி ரயில்கள்.
* கோவை - திருவண்ணாமலை (சேலம், காட்பாடி வழியாக) பயணிகள் ரயில்.
* ஜூன் மாதம் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இருப்பதால் பணிகள் சீக்கிரம் முடிவதுடன் புதிய ரயில்கள், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்
பொதுவாக..
* நெரிசல் நேரங்களில் (தீபாவளி, பொங்கல்) பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகளை தத்கலில் விற்று கொள்ளை லாபம் அடிக்கும் கொடுமையை நிறுத்த வேண்டும்.
* வாயில் வைக்க முடியாத ரயில் உணவுகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
* குறைக்கப்பட்ட ஜெனரல் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதன் தரத்தை உயர்த்த வேண்டும்.
தில்லியில் செயல்படும் சக்திவாய்ந்த வங்காளம், பீகார், மராட்டிய லாபிகளை மீறி தெற்கு ரயில்வேக்கு வரும் நிதியை, சென்னையில் செயல்படும் ஆற்றல் படைத்த மலையாள லாபி அப்படியே கேரளாவுக்கு கடத்திப் போய்விடுகிறது என்பது ஊரறிந்த ரகசியம்.
கேரளாவுக்கு ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் அங்கு இருக்கும் ரயில், ரயில் நிலைய வசதிகளை பார்த்திருப்பார்கள். அதனுடன் தமிழகத்தில் இருக்கும் வசதிகளை ஒப்பிடவே முடியாது.
இனியாவது தமிழக கோரிக்கைகளுக்கு பச்சை கொடி காட்டப்படுமா...?
பி.கு: பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு இதே தளத்தில் அதன் விமர்சனம் வெளியாகும்
1 comment:
appadiye konjam gavanm intha on-line reservation pathi detaila ezhuthalame
Post a Comment