Monday, April 12, 2010

கடன்காரன்

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. தமிழக வட மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்கிறார்கள். தமிழகம் எங்கும் அமல் படுத்தப்படும் மின் வெட்டுக் காரணங்களால் ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.14 ஆயிரத்து 353 கடன் மட்டும்தான் உள்ளது. இது ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடும் போது பரவாயில்லை என்கிற தொனியில் தெரிவித்திருக்கிறார்.

தமிழக பட்ஜெட் விவாதத்தின் போது பதிலளித்துப் பேசிய அன்பழகன், அமெரிக்காவின் கடன் ரூ.12.67 லட்சம் கோடி ஆகும். தமிழகத்தில் 2009 இறுதியில் மொத்த கடன் பொறுப்புகள் ரூ.89,140 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது மராட்டியத்தில் ரூ.1 லட்சத்து 79,727 கோடியாகவும், ஆந்திரத்தில் 1 லட்சத்து 9,757 கோடி ரூபாயாகவும், கர்நாடகத்தில் ரூ.79 ஆயிரத்து 644 கோடியாகவும், கேரளாவில் ரூ.70 ஆயிரத்து 117 கோடியாகவும் உள்ளது. கேரளத்தில் ரூ.70 ஆயிரம் கோடி இருக்கும் போது தமிழகத்தில் ரூ.89 ஆயிரம் கோடி என்பது பரவாயில்லை.தனி நபர் கடனை பொறுத்தவரை, மராட்டியத்தில் ஒரு நபருக்கு ரூ.18,575ம், ஆந்திரத்தில் அது ரூ.16,494 ஆகவும், கர்நாடகத்தில் ரூ.15,103 ஆகவும், கேரளத்தில் ரூ.23,991 ஆகவும் உள்ளது. தமிழகத்திலோ அது ரூ.14 ஆயிரத்து 353ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும். தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது. தமிழகத்தில் தனி நபர் கடன் பொறுப்பு மிகவும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே தமிழகம் கடன் நிலைமையில் மோசமாக இல்லை. இது தீர்க்க முடியாத கடனும் அல்ல என்றார்.

சரி சாதாரண தமிழன் ஒவ்வொருவனும் இவ்வளவு கடன் பட்டிருக்கிறான் என்றால் எதன் பேரில் இவர்கள் இத்தனை கடன்களை வாங்கினார்கள். தமிழக மக்களின் வாழ்க்கையே நாளுக்கு நாள் மோசமடைந்து செல்லும் போது இந்தியாவின் கோடீஸ்வரக் குடும்பங்களில் ஒன்றாக கருணாநிதியின் குடும்பம் மாறிக் கொண்டிருக்கிறது. மக்களின் பெயரால் கடன்களை வாங்கி தங்களையும் தங்களின் வாரிசுகளையும் வளப்படுத்திக் கொள்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள்.

நன்றி: இனியொரு

1 comment:

Unknown said...

articaluku thaguinth mathri thalipugal nalla iruku