கடந்த 1996ம் ஆண்டு தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது, அரசியல்வாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது, "எங்களுக்கு என்ன செய்தீர்கள்' என்று மட்டுமே கேட்டு வந்த மக்கள், இந்தத் தேர்தலில், "எங்களுக்கு எவ்வளவு தருவீர்கள்' என்றும் கேட்கத் துவங்கியிருப்பது, புதிய கலாசாரமாக உருவாகியுள்ளது.
கடந்த 1991-96ம் ஆண்டு வரை தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி நடந்து வந்தது. அப்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில், "கட்-அவுட்' கலாசாரம், வளர்ப்பு மகன் திருமணம், ஆடம்பரம் போன்றவை தலை தூக்கி இருந்தன. இதனால் பொதுமக்களிடம், அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.க., மீது கடும் அதிருப்தி நிலவியது. இதன் எதிரொலியாக, 1996ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட நெடுஞ்செழியன் போன்ற மூத்த தலைவர்கள் கூட, தொகுதி மாறி வேறு தொகுதிகளில் போட்டியிட்டனர். பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். வேட்பாளர்களை ஊருக்குள்ளேயே நுழையவிடாமல், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மக்களின் எதிர்ப்பு, தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது. அ.தி.மு.க., வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
அந்த நிலைமை இப்போது ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில், ஏற்கனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ஆளுங்கட்சி எடுத்து வைத்திருந்தது. ஐந்தாண்டுகளும் வழங்கப்பட்ட நலத் திட்டப் பணிகள் அனைத்தும், மக்களைச் சென்றடையும் போது, உள்ளூர் எம்.எல்.ஏ.,க்களின் பங்கேற்பும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டது. அதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது. எம்.எல்.ஏ.,க்கள் அடிக்கடி தென்படுவதால், மக்கள் மத்தியில் பெரியளவில் வெறுப்பும் எழவில்லை. இதெல்லாம், முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும் தான். அடுத்தடுத்த சம்பவங்கள் அதைத் தக்கவைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சுனாமி போல வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார், மக்களின் மன நிலையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. "எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் அனைவருமே வலுவாக சம்பாதித்து விட்டனர்' என்ற எண்ணம், எல்லாருக்கும் ஏற்படத் தொடங்கியது. இடைத்தேர்தல்களில் வழங்கப்பட்ட பணம், அவர்களின் ஆசையைத் தூண்டிவிட்டது. "ஓட்டுக்கு நோட்டு வாங்குவது தங்கள் உரிமை' என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு, தற்போது விபரீதத்தில் முடிந்திருக்கிறது.
இந்தத் தேர்தல் பிரசாரத்தில் நடந்த சில சம்பவங்களும், 1996 நிலைமை திரும்புகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கின்றன. திருவாரூரில், முதல்வர் மகள் செல்வி பிரசாரத்தின் போது, ஒரு முதியவர், "எங்களுக்கு என்ன செய்தீர்கள், உங்களுக்கு ஓட்டு போடுவதற்கு' என நேரடியாகவே கேட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில், அமைச்சர் சுப.தங்கவேலனை பொதுமக்கள் ஊருக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்காக, தங்கள் சாலையையே வெட்டி திருப்பி அனுப்பியுள்ளனர். விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பிரசாரம் சென்ற போது, ஊருக்குள் நுழைய விடாமல், கிராம எல்லையிலேயே பொதுமக்கள் தடுத்துள்ளனர். சென்னை மயிலாப்பூரில், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பிரசாரம் மேற்கொண்ட போது, ஒரு மூதாட்டி, "ஆமா, தேர்தல் அப்ப வருவீங்க; ஓட்டு வாங்கிட்டு போவீங்க; அதுக்கப்புறம் இந்தப் பக்கமே வரமாட்டீங்க... உங்களுக்கு எதுக்கு ஓட்டு போடணும்' என, திட்டி அனுப்பியுள்ளார்.
இதே போல், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிடும் சேகர்பாபு எம்.எல்.ஏ., ஒரு மூதாட்டியிடம் ஓட்டு கேட்டுள்ளார். அப்போது அந்த மூதாட்டி, "இத்தனை ஆண்டு அந்தம்மாட்ட பதவிகளை அனுபவித்தாய். இப்போது, சம்பாதிப்பதற்காக தி.மு.க., பக்கம் வந்துவிட்டாயா' என, நேரடியாகவே கேட்டுள்ளார். இதுமட்டுமின்றி, பல்வேறு கிராமப்புறங்களில், ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் மக்கள், நேரடியாகவே பணம் கேட்கத் துவங்கிவிட்டனர். அவ்வாறு கொடுக்கப்படும் தொகை போதாது எனக் கூறி, "சம்பாதிச்சல்ல... இவ்வளவு குடு' என தொகையைச் சொல்லி கேட்கத் துவங்கிவிட்டனர். இது போன்ற சம்பவங்கள், அரசியல்வாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. மக்களின் எதிர்(பார்)ப்பைப் போக்கும் வகையில், கூடுதல் பணம் கொடுத்து, அதைச் சரிக்கட்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். "என்ன செய்வீர்கள்' என்று கேட்ட காலம் போய், "எவ்வளவு தருவீர்கள்' என்று கேட்கும் காலம் வந்துவிட்டது, காலத்தின் கோலம் தான்.
-தினமலர்
No comments:
Post a Comment