Saturday, April 9, 2011

அவினாசி தொகுதி நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் பாதியும், கோவை மாவட்டத்தில் பாதியும் பிரிந்து கிடக்கும் தொகுதி இது. ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவின் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வருகிறது. காங்கிரஸ் நடராஜன், அதிமுக கருப்பசாமி மோதுகிறார்கள். பாஜகவும் களத்தில் உள்ளது. அனைவரும் புதுமுகங்கள். பெரும்பாலும் கிராமங்களை மையமாக கொண்ட தொகுதி. நிலத்தடி நீரை நம்பிய விவசாயமே பிரதான தொழில். கடந்த இரண்டு தேர்தல்களில் அதிமுகவே வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த தொகுதியை பொறுத்தவரை அனைத்து கட்சிகளுமே ஒவ்வொரு தேர்தலிலும் புதுமுகங்களுக்கே வாய்ப்பு தருகின்றன. குறிப்பாக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாலிங்கம் (2001), பிரேமா (2006) இருவருமே மிக சாதாரண பின்னணி கொண்டவர்கள். தற்போது போட்டியிடும் கருப்பசாமி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அவராலேயே நம்ப முடியவில்லை. இவர் ஒரு கூலித் தொழிலாளி. நூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தாலும் கூட, அ.தி.மு.க.,வின் அடி மட்ட தொண்டனாகிய கருப்பசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கருப்பசாமியிடம், ஜெ., ஏழு நிமிடம் கேள்வி கேட்டுள்ளார். பதிலளிக்கும் முன், சாஷ்டாங்கமாக அவரை விழுந்து வணங்கியுள்ளார் கருப்பசாமி. 1980ல் இருந்து கட்சியில் இருப்பதையும், ஏழு முறை சிறை சென்றதையும், விலாவாரியாக விவரித்துள்ளார். "எனக்கு சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, உங்களை பார்த்ததே பெரும் பாக்கியம்" என்று கருப்பசாமி கூறியது ஜெ.,வின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

திமுக அரசின் இலவச டிவி, கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச அடுப்பு போன்றவை நிறைய "ரீச்" ஆகியிருக்கிறது. கொமுகவுக்கும் கணிசமான செல்வாக்கு உண்டு. இளைஞர் காங்கிரசின் "வைப்ரேஷனும்" இந்த தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் பகுதிகளில் உண்டு.

பல ஆண்டு கோரிக்கையான அவினாசி - அத்திக்கடவு குடிநீர் திட்டத்துக்கு எந்த முயற்சியும் எடுக்காதது ஆளுங்கட்சிக்கு பெருத்த பின்னடைவு. நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு போய் பருவ மழையும் சரிவர பெய்யாததால் விவசாயமே அழியும் சூழல், இருக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்ய நினைத்தாலும் விவசாய கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்துக்கும், திருபூருக்கும் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். மேலும் கள் இறக்க திமுக அரசு அனுமதி தராதது, மீறி கள் இறக்கியவர்களை காவல்துறை ஒடுக்கியது போன்றவை விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவினாசியில் பெருகி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல், தேசிய நெடுஞ்சாலையில் பெருகி வரும் விபத்துக்கள் போன்ற பிரச்சனைகளுடன் விதவிதமான கலர் பேருந்துகளில் அதிக கட்டணம் போன்றவை கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொங்கு வேளாள கவுண்டர் சமூகமும், தலித் சமூகமும் தான் இந்த தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கின்றன. காலங்காலமாக அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வந்த கவுண்டர் சமூகம், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் கொமுகவுக்கு ஆதரவளித்தது. ஆனால் இந்த தேர்தலில் கொமுக திமுக அணியில் சேர்ந்தது பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தேமுதிகவும் தலித் மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ளது.

பொதுவான ஆட்சிக்கு எதிரான மனநிலையும், என்றைக்குமே அசைக்க முடியாத நிரந்தர அதிமுக ஓட்டு வங்கியும், பெருவாரியான மக்கள் ஆதரவுடன் மற்ற கொங்கு தொகுதிகளை போல அவினாசியும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பது பறைசாற்றப்படும்.

பின் குறிப்பு: 2009 நாடாளுமன்ற தேர்தலில், இந்திய தேர்தல் வரலாற்றில் அவினாசி தொகுதியில் இதுவரை அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு செல்லாத இடங்களுக்கு கூட பணம் தண்ணீராய் பாய்ந்து ஆறாய் ஓடியது. எல்லா புகழும் ராசாவுக்கே. இந்த தேர்தலில் இன்று வரை மக்களும், கட்சித் தொண்டர்களும் பொன்மகள் வருவாளா? பொருள் கோடி தருவாளா? என்று "இலவு காத்த கிளி போல" காத்து கிடக்கிறார்கள்.

No comments: