Tuesday, April 26, 2011

கட்சியாவது வெங்காயமாவது...!

கீழ்வேளூரில் போட்டியிடும் தி.மு.க அமைச்சர் மதிவாணனிடம் நக்கீரன் நிருபர் செல்வகுமார் கேட்கிறார்,” நிலைமை எப்படி இருக்குண்ணே?”.

அதற்கு அந்த அமைச்சர்,”நல்லாவே இருக்கு. ஆனா நாம் தமிழர் இயக்கத்து தம்பிகள்….எனக்கு எதிராக் களமிறங்கி கேன்வாஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்க தலைவர் சீமான், தி.மு.கவை எதிர்த்து வேலை செய்யச் சொல்லவில்லை. காங்கிரஸ் மட்டும்தான் அவங்க குறி. இங்க மட்டும் எனக்கு எதிரா ஏன்?” என்று வருத்தப்பட்டாராம்.

உடனே நக்கீரன் நிருபர் நாம் தமிழர் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான தஞ்சை வழக்கறிஞர் நல்லதுரையிடம் இது குறித்து விசாரிக்க அவர் அதிர்ச்சியானாராம். அதன்படி,”தி.மு.கவுக்கு எதிராக பிரச்சாரம் பண்ணும்படி எங்க தலைமை உத்தரவிடவில்லை. இதை மீறி பிரச்சாரம் செய்த இயக்கத்தவர் யார்னு விசாரித்து நடவடிக்கை எடுப்போம். நாங்க கட்டுப்பாடான இயக்கம்” என்றாராம்.

நல்லா கவனிங்க, இந்த மதிவாணன் ஒரு சாதாரண தி.மு.க தலைவரோ, இல்லை வெறும் எம்.எல்.ஏவோ இல்லை. அவர் அமைச்சர். கூட்டணி தர்மத்தின்படி அவர் சீமான் கட்சியை கடுமையாக எதிர்த்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவரோ அதற்கு மாறாக “காங்கிரசைத்தானே தோக்கடிக்கணும்னு சொன்னீங்க, பின்ன ஏன் என்னை எதிர்க்கிறீங்க”ன்னு பாசத்தோடு அந்த தம்பிகள் குறித்து வருத்தப்பட்டால் என்ன பொருள்?

இவ்வளவிற்கும் சீமான் சில இடங்களில் கருணாநிதி ஆட்சியையும் விமரிசித்திருக்கிறார். அது கொஞ்சமா, கூடுதலா என்பது பிரச்சினையல்ல. இல்லை கருணாநிதி கூட தம்பி சீமான் தன்னை எதிர்க்காதற்கு நன்றி என்றா சொன்னார்? இவ்வளவிற்கும் இந்த சீமானை உள்ளே போட்டு ஐந்து மாதங்கள் அடைத்தவரே அவர்தானே? எதன் பொருட்டு இந்த கைது? எல்லாம் காங்கிரசு பெருச்சாளிகளை குளிர்விக்கத்தானே? அது போல இந்த கைதுக்காக சீமானும் கருணாநிதி மீது கோபம் கொள்ளவில்லையா என்ன?

கூட்டிக் கழித்து பார்த்தால் தேர்தலென்பது யதார்த்தத்தில் கட்சிகள், கூட்டணிகள் என்று கூட நடப்பதில்லை. அந்தெந்த தொகுதியில் ஜெயிப்பதற்கு தேவையென்றால் சொந்தக் கட்சியைக்கூட எதிர்ப்பார்களோ, தெரியவில்லை.

இதில் நக்கீரனுக்கு வந்த சோதனை என்ன? அ.தி.மு.கவிற்கு ஒரு ஜூ.வி போல தி.மு.கவிற்கு ஒரு நக்கீரன். அண்ணன் சீமானோட தம்பிகளால் ஒரு தி.மு.க அமைச்சருக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக உடனே சீமான் கட்சிக்காரரிடம் போட்டுக் கொடுக்கிறார்கள். ஏன்? தி.மு.க வெற்றிபெற வேண்டுமென்ற விருப்பமும், அதையொட்டிய கருத்துக் கணிப்பும் பலித்தால்தானே அடுத்த ஐந்து வருடங்கள் குப்பை கொட்ட முடியும்?

சரி இதில் கட்டுப்பாடான நாம் தமிழர் தம்பிகள் ஏன் அங்கே கட்சி முடிவுக்கு மாறாக தி.மு.கவை எதிர்க்க வேண்டும்? ஒரு வேளை அண்ணன் சீமானை விட இனவுணர்வு கொண்டு துரோகமிழைத்த தி.மு.கவையும் எதிர்க்க வேண்டும் என்று ஓவர் ஸ்மார்ட்டாக பணி செய்தார்களா? அப்படியெனில் அவர்கள் முதலில் சீமானையல்லவா குறுக்கு விசாரணை செய்திருக்க வேண்டும்? இல்லை அந்த ஊர் அ.தி.மு.க தலைவர்கள் இந்த தம்பிகளை கவனித்தோ இல்லை கன்வின்ஸ் செய்தோ இறக்கினார்களா?

திருச்சியில் அமைச்சர் நேரு போட்டியிடுகிறார். சாதி, பண, அரசியல் என எல்லா செல்வாக்கிலும் லீடிங்கில் இருப்பவர். அவரது தம்பி ராமஜெயம் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயாவிற்கு எதிராக தி.மு.க வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து தீவிரமாக வேலை செய்தாராம். உடனே திருச்சி மாவட்ட அ.தி.மு.க பெரும்புள்ளிகள் அவரிடம் ” அண்ணே நாங்க மட்டும் அமைச்சர் நேருவுக்கு எதிராக வேலை செய்யல. அது மாதிரி நீங்களும் ஸ்ரீரங்கத்துல எங்க தலைவிக்காக கம்னுதானே இருக்கணும், ஏம்ணே?” என்றார்களாம். என்ன எழவு அண்டர்ஸ்டேண்டிங் இது?

கரூர் தொகுதியில் அமுல்பேபி ராகுல்காந்தியின் அருளால் போட்டியிடும் பேறுபெற்றவர் ஜோதிமணி. காட்டன் சேலையில் கதர் காங்கிரசு வஸ்திரத்தோடு தெரு தெருவா பெரியவங்க கால்ல விழுந்து “எப்படியாவது என்ன ஜெயிக்க வச்சுருங்க”ன்னு பாடுபட்ட இந்த அம்மணி சீமானுக்கு ஒரு கடிதம் எழுதினாராம். ” அண்ணே நான் உங்க தங்கச்சி மாதிரி, என் தொகுதிக்கு வந்து எதிர்த்து பிரச்சாரம் செய்யாதீங்கண்ணே”ன்னு அதில் உருகியிருந்தாராம். என்ன இருந்தாலும் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை சென்டிமெண்டுக்கு தனி மவுசு உண்டில்லையா?

அதே போல கரூருக்கு வந்த அண்ணன் சீமானும் “தங்கச்சி நீ காங்கிரச விட்டுவெளிய வந்தீன்னா உன்ன நானே ஜெயிக்க வப்பேன். காங்கிரசு ஈழத்தமிழரின் இரத்தம் குடித்த பகைவர்கள்”னு விளக்கம் அளித்து பேசியிருக்கிறார். இதுல நால்லா பாருங்க! சீமான் காங்கிரசை தீவிரமாக எதிர்க்கிறார். அதில் முக்கியமாக சோனியா காந்தியை வறுத்தெடுக்கிறார். அந்த சோனியாவின் புத்திரன் போட்ட பிச்சை சீட்டில் நின்று கொண்டு புத்திரனது அம்மாவை கிழிக்கும் அண்ணனிடம் பாசமுள்ள தங்கையாக ஜோதிமணி கெஞ்சுகிறார் என்றால்…? ஏசுவே ஏசுவே இது என்ன அரசியல்?

தி.மு.க நட்சத்திர பேச்சாளர் வெற்றிகொண்டான் முன்னர் ஒரு கூட்டத்தில் பேசும்போது,” போன தேர்தல்ல பி.ஜெ.பியை ஆதரிக்க வேண்டியிருந்தது. இந்த தேர்தல எதிர்க்க வேண்டியிருக்கு. இப்படியே போன தலைவா அடுத்த வாட்டி ஜெயலலிதா கூட கூட்டணி கீட்டணி வச்சிராத” என்றார். ஆனால் அப்படி கூட்டணி ஏற்கனவே இருக்கத்தானே செய்கிறது?

தி.மு.க ஆட்சியில் மிடாஸ் தொழிலுக்கு எந்த இடையூறும் இல்லை. சுமங்கலியிலும் ஜெயா டி.வி நன்றாகவே தெரிகிறது. ஜெயாவின் பாதுகாப்புக்கும் ஒரு குறையுமில்லை. அதே போல நாளை புரட்சித் தலைவி வந்தால் கருணாநிதி, சன்.டி.வியின் தொழில்களுக்கு எந்த பங்கமும் வராது. அரசியல் வேறு, தொழில் வேறு!

உள்ளூர் அளவிலும் இந்த புரிந்துணர்வு தி.மு.க, அ.தி.மு.க தலைவர்களிடம் இருக்கிறது. ஆளும்கட்சியாகவே இருந்தாலும் சாலை ஒப்பந்தங்கள், மணல் கொள்ளை, சுயநிதி கல்லூரி போன்றவற்றில் எதிர்க்கட்சியினரும் தொழில் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் பொதுக்கூட்டம், அறிக்கை, மாநாடு என்ற விவகாரங்களில் மட்டுமே ஏதோ கொஞ்சம் மோதிக் கொள்கின்றனர். மற்ற நேரங்களில் ‘சமாதான சகவாழ்வுதான்’.

மக்கள் இந்த இரண்டு கட்சிகளையும் ஏதோ ஜென்ம பகைவர்கள் போல எண்ணிக் கொண்டிருக்கும் போது இரு கழகங்களின் பெருச்சாளிகளும் ஒற்றுமையாக ஊர் வயலை நாசம் செய்து வருகின்றன. பெருச்சாளிகளின் தொழில் ரகசியத்தையும், ஒரே அலைவரிசையையும் மக்கள் உணரும்போது மட்டுமே இந்த திரைமறைவுக் கூட்டணியின் மோசடி அகற்றப்படும். அது வரை மாறி மாறி செட்டப் வழக்காடு மன்றம் போல கேட்டு இரசிப்பதுதான் மக்களது தலையெழுத்தா?

நன்றி: வினவு

No comments: