Sunday, April 3, 2011

கருணாநிதி, ஜெயலலிதா - சில கேள்விகள்?

ஜெயலலிதாவுக்கு 15 கேள்விகள்:


1. உங்களை விட்டால் கட்சியில் வேறு தலைவரே இல்லையே? இப்படி ஒரு கட்சி நடத்துவது சரியா?

2. சட்டமன்றக் கூட்டத்துக்கே நீங்கள் போகவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஒழுங்காக வேலை பார்க்காத உங்களை ஏன் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் ?

3.யாருமே நெருங்க முடியாத தலைவராக உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களைச் சந்திக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாகத் தனியே வாழ வேண்டியதுதானே?

4. அ.தி.மு.க.வை சசிகலா குடும்பம்தான் ஆக்கிரமித்து நடத்திக் கொண்டிருக்கிறது. இதை மாற்ற ஏதாவது திட்டம் உண்டா?

5. கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் இஷ்டப்படி கூட்டணிகளை உடைப்பது உங்கள் வழக்கம். இந்த அணுகுமுறை மாறுமா?

6. இலவசங்கள் தவிர, உங்கள் பத்தாண்டு ஆட்சியில் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் தொடர்பாக ஏதாவது உருப்படியான நடவடிக்கைகள் செய்தது உண்டா?

7. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகளைக் கண்டித்து எத்தனை போராட்டங்களை நீங்கள் தலைமை ஏற்று நடத்தினீர்கள்?

8. ஒரு பெண்ணாக இருந்தும் ஏன் பெண்களுக்கு 33 சதவிகித சீட் தரவில்லை?

9. சக மனிதனை - பெண்ணாக / ஆணாக இருந்தாலும் - காலில் விழச் செய்து புகைப்படம் எடுத்து வெளியிடும், அருவருப்பான கலாசாரத்தை / மன நிலையை எப்போது விடப் போகிறீர்கள்?

10. காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் எவ்வாறு திசை திருப்பப்பட்டது? அதைத் தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?

11. மாதம் முழுவதும் கூலி வேலை செய்யும் வயது வந்த பெண்களின் வலி உங்களுக்குத் தெரியுமா? பள்ளி / ரேஷன் கடை மூலம் வயது வந்த ஏழைப் பெண்களுக்கு நாப்கின்களை இலவசமாக (அ) குறைந்த விலைக்கு வழங்கும் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த சிந்திக்காதது ஏன் ?

12. மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கும் இலவசங்களை தி.மு.க.வுக்குப் போட்டியாக நீங்களும் அறிவிப்பது ஏன்?

13. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது மக்களைத் திரட்டிப் போராடி ஈழ பொதுமக்களைக் காப்பாற்ற முயலாதது ஏன்?

14. (மக்களின் உணர்வு அறிந்தும்) இனியாவது ஊழலற்ற ஆட்சி தருவேன் என்ற உறுதிமொழி உங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லாமல் போனது ஏன்?

15. கருணாநிதி குடும்ப அரசியலை இவ்வளவு வசைபாடும் நீங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கட்சியிலும் ஆட்சியிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு இருக்காது என உறுதி கூற முடியுமா?


கருணாநிதிக்கு 20 கேள்விகள்:


1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்குப் பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூஜைக்குச் செல்வதாகச் செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள். நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

4. முதல்வராகச் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

6. உங்கள் குடும்பப் பிரச்னையில் மூன்று பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதை நினைக்கும்போதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

7. தமிழக அரசுக்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, அதற்குப் பதில் ஏற்கெனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன்? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? இது விஷயத்தில் என்னைப் பின்பற்ற வேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?

10. கூவத்தைத் தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்தப் பணம் என்னவாயிற்று? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள்? ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள்? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?

13. மின் வெட்டைத் தடுக்க ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்குச் சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்னையை எப்படிக் கையாண்டிருப்பீர்கள்?

15. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து நீக்கியது ஏன்?

16. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவிகளை வாரிசுகளுக்கு வாங்குவதற்குத் தவிர நீங்கள் தில்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

17. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றுக்கு ஓடோடிச் செல்லும் நீங்கள், எத்தனை முறை இறந்துபோன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னீர்கள்?

18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி?

19. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, திரைப்படத் துறை முழுமையான ஆக்கிரமிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்று உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?

20. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை?

இருவருக்கும் பொதுவாக 8 கேள்விகள்:

1. விவசாயம் லாபமில்லாத் தொழிலாகப் போய்விட்டது. தனியார் தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. அவை சில காலம் கழித்து, பிளாட்டுகளாக மாறி வருகின்றன. விவசாயக் கூலியும், இடுபொருட்கள் செலவும் அதிகரித்துவிட்டன. விவசாய விளைபொருட்களின் விலையை விவசாயி தீர்மானிக்க முடியவில்லை. பதுக்கல் வியாபாரிகளே அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?

2. முன்பெல்லாம் உள்கட்டமைப்பு மூலதனச் செலவுகளுக்குப் பட்ஜெட்டிலிருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது உலக வங்கியிலிருந்தும், நபார்டிலிருந்தும் கடன் வாங்கும் வழக்கம் வந்துவிட்டது. இது ஒரு நல்ல போக்கா?

3. பத்திரப் பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை இந்த நான்கு துறைகளில்தான் அதிகம் லஞ்சம் புழங்குகிறது. இதைக் கணிசமாகக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

4. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ?

5. சட்டமன்றத்தில் ஜால்ரா பேச்சுகளை அடியோடு ஒழித்துவிட்டு அசல் பிரச்னைகளைப் பற்றி ஆழமான விவாதங்களை நடக்கச் செய்யாமல் உங்கள் கட்சியினரைக் கெடுத்து வைத்திருப்பதை எப்போது மாற்றுவீர்கள்?

6. தலைமையை வைத்துத்தான் தொண்டர்கள் இருப்பார்கள். அப்பழுக்கற்ற அரசியல்வாதி, கண்ணியமான அரசியல்வாதி என்ற நற்பெயரைச் சம்பாதிக்க ஏன் இதுவரை முயற்சிக்கவில்லை?

7. ஆயிரக்கணக்கான குடும்பங்களை அரசு மதுக்கடைகள் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி உங்களுக்கு அக்கறையே கிடையாதா?

8. இவ்வளவு தவறையும் பண்ணிவிட்டு மறுபடியும் மறுபடியும் மக்கள் முன்னாடி வந்து நிற்பதற்கு உங்களால் எப்படி முடிகிறது?

- ஞாநி (ஓ பக்கங்கள்)

No comments: